Monday, February 9, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 8

இஸ்லாமியர்களின் மூன்று புனித நகரங்களில், முதன்மையானது சவூதி அரேபியாவில் அமைந்துள்ள மக்கா நகரமாகும். இரண்டாவது, மக்காவிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மதினா; மூன்றாவது பாலஸ்தீனத்தில் இருக்கும் ஜெருசலம்.

முதல் புனித நகரத்தை மக்கா அல்லது, மெக்கா என்று குறிப்பிடுகிறார்கள். இதன் பழைய பெயர் பக்கா என்பதாகும். சவூதி அரேபியாவை பாலைவனம் என்று குறிப்பிட்டாலும், மக்காவில், பாலை மணல் வெளிகளைவிட மலைக் குன்றுகள் தான் அதிகம் உள்ளது.

மக்கா நகரின் மையப் பகுதியில் காபா உள்ளது. காபா என்பது சுமார் 25 அடி நீள அகலம் உள்ள சதுரமான கருங்கல் கட்டிடமாகும். அதன் கதவுகள் தங்கத்தால் செய்யப்பட்டது. காபாவின் உட்புறம் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. வருடம் ஒரு முறை, தங்கக் கதவை திறந்து, அந்நாட்டு மன்னர் உள்ளே சென்று க்ளீன் பண்ணுவார் என்று சொல்கிறார்கள்.


படத்தில் காபாவின் திரையை சற்று தூக்கிக் கட்டி இருக்கிறார்கள். திரையின் அடியில் தங்கக் கதவு, மற்றும் மேலே இரட்டை மினாராக்களைப் பார்க்கலாம்.

காபாவின் நான்கு மூலைக்குப் பெயர், ருக்னுல் ஈராக்கி, ருக்னுல், ஷாமீ, ருக்னுல் யமானி, ருக்னுல் ஹிந்த் என்பதாகும். அதாவது எந்த நாட்டை நோக்கி இருக்கிறதோ அந்த நாட்டின் பெயரைக் கொண்டு அமைந்துள்ளது. இதில், ருக்னுல் ஹிந்த் என்பது நமது இந்தியாவை நோக்கி உள்ள மூலையாகும்.

காபாவில் தங்கக் கதவின் இடதுபுறம் உள்ள மூலையில்(ருக்னுல் ஹிந்த்) ஹஜ்ருல் அஸ்வத் என்னும் கருநிறக் கல், வெள்ளிப் பேழை போன்ற கூண்டின் நடுவே வைத்துப் பதிக்கப்பட்டுள்ளது. (படத்தில் உள்ளது)
இது சொர்க்கத்தில் இருந்து இறங்கிய கல் என்பதால், அதைத் தொட்டு முத்தமிட ஒரு கூட்டம் எப்போதும் முண்டியடித்துக் கொண்டிருக்கும். தங்கக் கதவுக்கும், ஹஜ்ருல் அஸ்வத் கல்லுக்கும் இடையிலான 4 அடி சுவருக்கு, முல்தஜிம் என்று பெயர். நம் ப்ரார்த்தனை நிறைவேறக் கூடிய இடங்களில் இதுவும் ஒன்று.

தங்கக் கதவுக்கு எதிரே சுமார் 10,15 அடி தூரத்தில் ஒரு தங்க நிறக் கூண்டு உள்ளது. அதன் பெயர் மகாமே இப்ராஹிம் என்பதாகும். அதனுள் நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் காலடி தடம் உள்ளது. படத்தில் உள்ளது தான் மகாமே இப்ராஹிம்.

தங்கக் கதவுக்கு அடுத்து உள்ள வலது புற மூலையில் ஆரம்பித்து அடுத்த மூலை வரையிலான லாட வடிவ(அரைவட்ட) அமைப்புக்கு ஹதீம் என்று பெயர். ஆளுயரத்துக்கு 2 அடி அகலத்தில் லாட வடிவில் பளிங்கினாலான சுவரால் அது அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் காபாவின் ஒரு பகுதிதான். லாடவடிவ பகுதிக்கு மேலே, காபாவின் சுவரில், தங்கத்தாலான மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் மீஜாபே ரஹ்மத் என்பதாகும். படத்தில் ஹதீம் மற்றும் மீஜாபே ரஹ்மத்தைப் பார்க்கலாம்.

காபத்துல்லாஹ்வை கருநிற வெல்வெட் துணியால் திரையிட்டிருக்கிறார்கள். அத்திரையில் தங்கத்தால் குர் ஆன் வாசகங்கள் நெசவு செய்யப்பட்டிருக்கின்றன. ஹஜ் சமயத்தில் கூட்ட நெரிசலில், அத்திரை கிழிக்கப் பட்டுவிடாமல் இருப்பதற்காக நமக்கு எட்டாத உயரத்தில் சுருட்டி கட்டி விடுகிறார்கள்.

இனி காபாவை சுற்றி, மிக மிக பெரிய கிரவுண்ட்(காலி இடம்) உள்ளது. அக்காலி இடம் முழுவதும் குளிர்ச்சியான மார்பிள்ஸ் பதிக்கப்பட்டிருக்கிறது. அவ்விடத்தில் ஒரு பகுதியில் தான் புனித ஜம் ஜம் கிணறு உள்ளது. ஜம் ஜம் கிணற்றின் கதையை பிறகு எழுதுகிறேன். தற்போது, இக்கிணறை மூடி, குழாய் மூலம் தண்ணீர் சப்ளை ஆகிறது. மஸ்ஜிதின் வளாகத்தில் ஆங்காங்கே ஜம் ஜம் நீர் அருந்த நூற்றுக்கணக்கான பைப்புகள் உள்ளன.

காலி இடத்தை சுற்றிலும் மசூதிக் கட்டிடம். அதில் ஆயிரக்கணக்கான தூண்களுடன் கூடிய, மிகப் பெரிய ஹால்கள். இந்த பிரம்மாண்டமான ஹால்கள் மொத்தம் மூன்று அடுக்கு தற்போது உள்ளது. இன்னமும் கட்டிட பணி நடந்த வண்ணம் தான் இருக்கிறது. அவ்வளாகங்களைக் கடந்தால், மாடாக்குழிகள் போல சுற்றிலும் வாயில்கள். மொத்தம் 99 (மராமத்துப் பணிகள் நடப்பதால், இப்போ 95) வாயில்கள் உள்ளன, உட்புறம் செல்ல. ஆனால், ஒரு சில வாயில்கள் மட்டுமே எப்போதும் திறந்திருக்கும்.

எல்லா வாயில்களுக்கும் பெயரும் எண்ணும் உள்ளது. அதில் 5 தலைவாசல்கள் முக்கியமானதாகும். அது 1ம் நம்பர் கிங் அப்துல் அஜீஸ் கேட்(gate), 79ம் நம்பர் கிங் பஹ்து கேட், 62 ம் நம்பர் அல் உம்ரா கேட், 24ம் நம்பர் பாபு ஸலாம் கேட், 45 ம் நம்பர் அல் ஃபத் கேட் என்பதாகும். இந்த 5 கேட்டுகளுக்கும் மேலே, பெரிய பெரிய உயரமான இரட்டை மினாராக்கள் உள்ளன. மினாராக்கள் என்றால், இஸ்லமிய கட்டிடக் கலையின் சின்னமான உயரமான டூம் வடிவ அமைப்பாகும்.

இந்த வளாகங்கள், உள்ளே இருக்கும் கிரவுண்ட், காபா எல்லாம் சேர்த்த அமைப்புக்கு மஸ்ஜிதே ஹராம் அல்லது ஹரம் ஷரீஃப் என்று பெயர். இந்த ஹரமினுள் ஒரு பகுதியில் பாபு ஸலாம் வாயிலுக்கு உட்புறம் சற்று தூரத்தில் தான் சஃபா என்ற மலைக் குன்று உள்ளது.

படத்தில் இருப்பது தான் சஃபா குன்று. இங்கிருந்து தான் உம்ராவின் போது சயீ என்னும் தொங்கோட்டம் ஆரம்பிக்க வேண்டும்.

அதிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் மர்வா குன்று உள்ளது. மர்வா குன்றின் அருகில் 34 ம் நம்பர் வாயில் உள்ளது. இவ்விரு மலைக் குன்றுகளை எல்லாம் சமப் படுத்தி பளிங்குத் தரை அமைத்து விட்டனர். அடையாளத்துக்கு மட்டும் சிறு குன்று விட்டு உள்ளனர்.

படத்தில் இருப்பது தான் மர்வா குன்று. இதன் அருகில் தான் 34ம் நம்பர் தலைவாசல் உள்ளது. இதற்கு வெளியில் மொட்டை போட நிறைய பார்பர் ஷாப்கள் உள்ளது.

ஹரம் ஷரீபின் வெளியேயும் மார்பிள் தரை அமைக்கப்பட்ட மிக பெரிய காலி இடம் உள்ளது. அக்காலி இடத்தில் ஆங்காங்கே மிக பிரம்மாண்டமான டாய்லட் கட்டிடம் உள்ளது. எஸ்கலேட்டரில் செல்லும் வகையில் 3, 4 ஃப்ளோர்கள் அண்டர் கிரவுண்டில் டாய்லட் கட்டி இருக்கிறார்கள். மிகப்பெரும் கூட்டத்தையும் சமாளிக்கும் வகையில் நூற்றுக் கணக்கான டாய்லட்டுகள். பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. இது தான் ஹரம் ஷரீஃபின் அமைப்பு.

இது தான் ஹரமின் மேப். நடுவில் குட்டியாக சதுர வடிவில் தெரிவது காபா. லாட வடிவில் இருப்பது ஹதீம். ஸ்கேல் போல வலது புறம் நீளமாக இருப்பது தான், சஃபா மர்வாக் குன்றுகளுக்கு இடையேயான தொங்கோட்டம் ஓடும் இடம். இப்படத்தை என்லார்ஜ் செய்து பார்த்தால், தலைவாயில்கள், மற்றும் எஸ்கலேட்டர் உள்ள இடங்கள் ஆகியவை தெரியும்.

இனி மக்கா நகரின் அமைப்பு பற்றி பார்ப்போம்.

மக்கா நகரில் எங்கு பார்த்தாலும், சிறு சிறு மலைக் குன்றுகள். வறட்சியான க்ளைமேட். எப்பவாவது ஒரு முறை மழை வருமாம். ஆனால் பெட்ரோல் வளமிக்க நாடு. தண்ணீருக்கு தான் பஞ்சம். ஒரு ரியால்(13ருபாய்) கொடுத்தால் 3.5 லிட்டர் பெட்ரோல் கிடைக்கும். ஆனால் 3/4 லிட்டர் குடிநீர் தான் கிடைக்கும். எந்த ஹோட்டலிலும் குடிக்க தண்ணீர் தர மாட்டார்கள். வேண்டுமானால், விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டும். ஒரு தண்ணீர் பாட்டிலும்(660ம்ல்) ஒரு ரியால் தான் ஒரு கோக் டின்னும், ஒரு ரியால் தான் என்பதால், எங்கு பார்த்தாலும் காலி கோக் டின்னாகத்தான் இருக்கும்.

ஹரமை சுற்றி உள்ள சாலைகள் முற்காலத்தில் அமைக்கப்பட்டது என்பதால், சற்று சிறியதாக நம்மூர் போல இருக்கும். டிராஃபிக் நெரிசல் அதிகமிருக்கும். ஆனால் சற்று தூரத்தில் இருக்கும் சாலைகள் எல்லாமே நம்மூர் மவுண்ட் ரோடு போல எட்டு பத்து மடங்கு அகலம் இருக்கும். மழை அதிகம் பெய்யாததால் சாலைகள் எளிதில் பழுதாவதில்லை. எங்கு பார்த்தாலும், மேம்பாலங்கள். கார் என்ன தண்ணீரிலா ஓடுது? என நம்மூர் போல அங்கு கேட்டுவிடக் கூடாது. ஏனா தண்ணீர் தான் காஸ்ட்லி அங்கு. அங்கு எல்லாமே கார்கள் தான். டூ வீலரை மருந்துக்குக் கூட பார்க்க முடியாது. வெயில் காலத்தில் டூ வீலரில் போக முடியாத அளவுக்கு, வெயில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், யாரும் அங்கு டூ வீலரை உபயோகப்படுத்துவது இல்லை. கார்கள் சர்வ சாதாரணமாக 150 கி.மீ வேகத்தில் பறக்கின்றன. மலைக் குன்றுகளை உடைத்து உடைத்து, மிகப் பெரும் அடுக்கு மாடி கட்டிடங்களையும், அகலமான சாலைகளையும் அமைத்து வருகின்றது அந்நாட்டு அரசாங்கம்.

(இதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயத்தில்)
-சுமஜ்லா

13 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

சாரிப்பா, எனக்குத் தலைவலி. அதான் பதிவு போட லேட்டாயிடிச்சு. இப்படி எதாவது சில டைம் ஆகும். ஆனா எப்படியும், பதிவு போட்டுடுவேன், தோ இப்ப நைட் 1.30 மணிக்கு போட்டிருக்கிறேனே, அது மாதிரி.

Vijiskitchencreations said...

நல்ல அருமையா விளக்கி எழுதியிருக்கிங்க.
நான் ஏதேச்சையா இன்றைக்கு பார்த்தேன். சொல்லவேயில்லை. தெரிந்து இருந்தால் நானும் முன்பே வந்து படித்து இருப்பேன்.
மேலும் எதிர் பார்க்கும் விக்டரி

Anonymous said...

சுஹைனா,
ரொம்ப தெளிவா இருக்கு உங்க கட்டுரை. படங்களும் சேர்த்ததால் மேலும் அழகு..

அன்புடன்,
கிருத்திகா

Anonymous said...

சுஹைனா,

எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கு. இன்னும் இரு முறை படித்தால் சரியாக விளங்கும் என்று நினைக்கிறேன். அந்த சதுர கட்டிடத்துக்குள்(காபா) என்ன இருக்கும்?

Anonymous said...

சுஹைனா,
எட்டாவது பதிவு மிக அருமை,உம்ரா செய்த போத்து பார்த்ததெல்லாம் நினை வருகிறது.நன்றி.

Anonymous said...

அன்பு கவின்,

காபாவினுள் நடுவே மூன்று தூண்கள் தான் உள்ளது. மற்றபடி எதுவுமில்லை. ஆனால், காபாவிற்கு நேர் மேலே வானத்தில், ஹர்ஷ் என்ற பெயரில் இறைவனின் வீடு உள்ளது. அதன் நேர் கீழே காபா உள்ளது, அதனால் அதையும் இறைவனின் வீடு என்று, அதை நோக்கி வழிபடுகிறோம்.

முழு உலக முஸ்லிம்களும், காபா இருக்கும் திசையை நோக்கித்தான், தொழுகிறார்கள். இந்தியர்களுக்கு மேற்கில் அது அமைந்துள்ளதால், நாங்கள் மேற்கு நோக்கித் தொழுகிறோம்.

ஹரம், காபா போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் தான், பின்னாடி, என் அனுபவங்களை எழுதும் போது, உங்களால் ஃபாலோ பண்ண முடியும். அதற்காகத் தான் விளக்கமாக எழுதியுள்ளேன்.

Anonymous said...

ஒரு ஒரு படத்துக்கு கீழேயே அது என்ன என்பதை குறிப்பிட்டால் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும் என்பது என் கருத்து.

இந்த பதிவு கொஞ்சம் ஒரு தடவை படித்தவுடன் தெளிவாகதது போல ஒரு உணர்வு.

SUMAZLA/சுமஜ்லா said...

ஒரு ஒரு படத்துக்கும் பக்கத்திலேயே அது என்ன என்று குறிப்பிட்டிருக்கிறேனே தோழி. இனி அடுத்தடுத்து என் அனுபவங்களைப் பதியும் போது, நன்றாக புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

Menaga Sathia said...

ரொம்ப நல்ல படத்துடன் அழகா விளக்கிருக்கிங்க.இன்னும் படிக்க ஆவலா இருக்கிறேன்.
மேனகா

Anonymous said...

படங்கள் மூலம் அருமையாக விளக்கியுள்ளீர்கள் சகோதரி சுஹைனா.
எனக்கும் அந்தப் புனித தலத்திற்கு போய் வந்த உணர்வைக் கொடுக்கின்றது. அதற்காக உங்களுக்கு மனமார (வாழ்த்தி) நன்றிகளைக் கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

அன்புடன்
பிருந்தா

Ambu said...

Hi Ashya,

Excellent explanation!! very nice narration...
Gives teh feeling of having visited the place myself in person !!

Cheerz,
Ambu

rasia said...

அஸ்ஸலமு அலைக்கும் சுஹைனா
எப்படி அங்குள்ள வாயில்களின் எண்களைய்யும்,பெயர்களைய்யும் நினைவு வைத்துள்ளீர்கள்?படிக்க ப்ரமிப்பா இருக்கு!

Unknown said...

மிக அருமை....786...என முஸ்லிம்ள் எண்களை எழுதுவது ஏன்...விளக்குங்களேன்...Plz