Wednesday, March 25, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 25

அடுத்த நாள் முதல் எங்களுக்கான ஃப்ரீ பஸ் சர்வீஸ் ஆரம்பமாகிவிட்டது. ஹரமுக்குப் போக அரை மணி நேரம் ஆனாலும், மிக சுலபமாக ஆகி விட்டது. எங்களுக்கான பஸ் எண்: 11. எந்நேரமும் பஸ் இருந்து கொண்டே இருக்கும். ஒரு பஸ் செல்வதற்குள் அடுத்த பஸ் வந்து விடும். இதனால் நாங்கள் ஹரம் போய் வருவது மிகவும் சுலபமாகிவிட்டது.

நாங்கள் காலை நேரம் போனால், இரவு திரும்பி விடுவோம். மாலை நேரம் போனால், இரவு 10.30 முதல் 3.30 வரை பஸ் கிடையாது என்பதால், ஹரமில் தங்கி விடிய விடிய தவாப், திக்ரு போன்ற அமல்கள் செய்வோம். பின் விடிந்ததும், பஜ்ரு தொழுதுவிட்டு, திரும்பி விடுவோம். 2, 3 நாட்களுக்கொரு முறை தான் மாமனார் வருவார். அதனால் நான் அவருக்கு சமைத்து வைத்து விட்டுப் போய்விடுவேன். சமைக்கும் டேபிள் கட்டிலின் அருகிலேயே இருப்பதால், அவரே டீ போட்டுக் குடித்துக் கொள்வார்.

நாங்கள் இரவு ஹரமில் தங்க நேரிட்டால், 79 ம் கேட் அருகே உள் வளாகத்தில் மதரஸா நடக்கிறது. எனவே அப்பகுதியில் மட்டும் சிவப்புக் கம்பளங்கள் விரித்திருப்பார்கள். ஒரு 2 மணி சுமார் அங்கு சென்று, அக்கம்பளத்தின் ஒரு பகுதியையே சுருட்டி தலையணையாக்கி, சிறிது நேரம் உறங்கி ரெஸ்ட் எடுப்போம். பின் 4.30க்கு எழுந்து தஹஜ்ஜத் என்னும் நடு நிசி தொழுகை தொழுது, கொஞ்சம் நேரத்தில் பஜ்ருக்கான பாங்கு சொன்னதும் பஜ்ரும் தொழுது, பின் கிளம்புவோம். வரும் வழியில் அன்றைய சமையலுக்கான பொருட்கள் வாங்கி வருவோம். முக்கால்வாசி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஹரமில் தங்கிக்கொள்வோம்.

ஒரிரு நாட்களுக்குப் பின் மீண்டும் உம்ரா செய்யக் கிளம்பினோம். இப்போ உம்ரா என்பது, மக்காவில் நுழையும் முன் இஹ்ராம் உடுத்தி நுழைவது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்ப நாம் மக்காவிலேயே இருப்பதால், ஹரமில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இருக்கும் மசூதிக்கு சென்று, இஹ்ராம் உடுத்தி, தொழுது நிய்யத் செய்துவிட்டு திரும்பவேண்டும். அந்த மசூதிக்கு, மஸ்ஜிதே தன்யீம் அல்லது ஆயிஷா மஸ்ஜித் என்று பெயர். நாம் இஹ்ராம் உடையை நமது ரூமிலேயே உடுத்திக் கொண்டும் ஆயிஷா மஸ்ஜித் சென்று நிய்யத் செய்யலாம்.

ஆயிஷா மஸ்ஜித் செல்ல, பஸ்கள் உள்ளது. சிகப்பு கலர் சாப்கோ பஸ்கள் அங்கு செல்கின்றன. அதற்கான கட்டணம் 2 ரியால்கள் தான். ஆனால், ஹஜ் முடிந்து ஒரு வாரம் கழித்தே பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கிறது. அதனால் அதுவரை டாக்ஸியில் கட்டணம் 5 ரியால். சில சமயம் 10 ரியால் கூட கேட்பார்கள். பஸ் போக்குவரத்து ஆரம்பித்து விட்டால், டாக்ஸிக்காரர்களும் 2 ரியால் வாங்கிக் கொள்வார்கள். 79ம் நம்பர் கேட் எதிரில் இருக்கும் சிறு பாதை வழியாக சென்றால், உம்ரா செல்ல டாக்ஸி கிடைக்கும்.

நாங்கள் உம்ராவுக்கு செல்ல டாக்ஸி பிடித்தால், பயங்கரக் கூட்டம். கூட்டத்தின் காரணமாக 10 ரியாலுக்குக் குறைவாக வர மாட்டேன் என்று டாக்ஸிக்காரன் சொல்லிவிட்டான். சரியென்று தலைக்கு 10 ரியால் கொடுத்து ஆயிஷா மஸ்ஜித் போனோம். அங்கு, சென்றதும் கையோடு கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிட்டோம். பிறகு தொழுது நிய்யத் செய்து கொண்டோம். நாங்கள் முதன் முதலில் இந்தியாவிலிருந்து சென்ற போது செய்த உம்ராவை நபிகள் நாயகத்தின் (ஸல்) பேரில் நிய்யத் செய்திருந்தோம். இப்போ இந்த உம்ராவை மாமனாரின் தாய் தந்தை பேரில் நிய்யத் செய்து கொண்டோம். அதாவது இந்த உம்ராவின் நன்மைகளை அவர்களுக்கு சேர்ப்பிப்பது, இதன் நோக்கம்.

அங்கு ஆயிஷா மஸ்ஜித் என்பது மிகப் பெரிய் மஸ்ஜித். அதில் ஆண்களுக்குத் தனியாக, பெண்களுக்குத் தனியாக தொழுகும் இடத்தைப் பிரித்திருக்கிறார்கள். அங்கு டீ கடை மற்றும், ஸ்னாக்ஸ் விற்கும் கடைகள் உண்டு. மச்சான் டீ குடிப்பார், எனக்கு அப்பழக்கம் இல்லாததால், ஒரு ரியாலுக்கு விற்கும் டீ கேக் தான் எனது பேவரிட் எப்போதும். மற்றும், ஃபிங்கர் சிப்ஸ், சீடோஸ் எல்லாமே ஒரு ரியால் தான்.

படத்தில் இருப்பது ஆயிஷா மஸ்ஜித். நிறைய பூனைகள் மேய்வதைக் காணலாம்.

அங்கு, ஆயிஷா மஸ்ஜிதில் நிறைய பூனைகளைப் பார்க்கலாம். ஆனால் ஒரு நாய் கூட பார்க்க முடியாது. பூனைகள் சர்வ சுதந்திரமாக திரியும். இங்கு நம்மூரில் வழிபாட்டுத் தலங்களில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது போல அங்கு யாரையும் பார்க்க முடியாது. கவர்ன்மெண்ட் ஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் போல் தெரிகிறது. நான் முதன் முதலில், பிச்சைக்காரரை பார்த்தது முஜ்தலிஃபா செல்லும் வழியில்.

அவர் பிச்சைக்காரரே அல்ல; அவரும் ஒரு ஹாஜி தான். அதுவும் இந்தியர். காஷ்மீரிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் எல்லார் கையிலும், J & K Bank என்று போட்ட ஜோல்னா பை இருக்கும். அதாவது ஜம்மு காஷ்மீர் பேங்க் என்பதாகும். அந்த ஜோல்னா பை மாட்டிய ஒருவர், எங்களிடம் வந்து, ஏக் ரியால், ஏக் ரியால் என்று கை நீட்டினார். எனக்கோ பயங்கர கோபம். இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடிய இவ்விடத்தில் மனிதர்களிடம் இவர் கையேந்துகிறாரே என்று.

”எந்த இடத்தில் வந்து பிச்சை எடுக்கிறீர்கள்? இறைவனிடம் மட்டுமே கேளுங்கள்” என்று கூறி நான் திருப்பி அனுப்பி விட்டேன். அவர் சென்று அடுத்த ஆள் பார்க்கப் போய் விட்டார். உடனே எனக்குள் ஒரு உறுத்தல். பாவம் ஒரு ரியால் தானே கேட்டார். அதுவும் கேட்பவருக்கெல்லாம் வள்ளலாய் வாரி வழங்குவதாய் இறைவன் வாக்களித்திருக்கும் இவ்விடத்தில், கேவலம் நாம் ஒரு ரியால் தரமாட்டேன் என்று அனுப்பி விட்டோமே, என்று மீண்டும் தூரத்தில் சென்று கொண்டிருந்த அவரை ”Bபையா, பையா” என்று அழைத்து, ஒரு ரியால் கொடுத்தேன்.

மீண்டும் ஒரு முறை J&K Bank பையுடைய இன்னொருவர், ஹஜ்ஜுக்குப் பின் இதே போல பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். அதிலிருந்து, அந்த பை வைத்திருப்பவர் எல்லாமே எனக்குப் பிச்சைக்காரராகவே தெரிய ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தான் என் வேதனை.

நான் பாவப்பட்ட பிச்சைக்காரர்களைப் பார்த்தது சைத்தானுக்குக் கல் எறியும் இடத்தில். அங்கு சின்னஞ்சிறு பிள்ளைகள் கைகள் துண்டிக்கப்பட்டவர்களாக பிச்சை எடுக்கிறார்கள். ஒரு சிறுமிக்கு ஏழு வயது தான் இருக்கும். இரண்டு கைகளும், முழங்கைக்கு மேல் இல்லை. மிகப் பரிதாபமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். ஹாஜிகளும் அவளுக்கு பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்ன தான் பணம் கிடைத்தாலும் கைகளுக்கு ஈடாகுமா? அச்சிறுமியின் எதிர்காலம் எப்படி இருக்கும் இரு கைகளும் இல்லாமல்? இன்னும் இது போல ஒரு கை இழந்தவர்களும், கால்கள் இழந்தவர்களும் ஏராளம். எல்லாருமே கறுப்பர்கள் தான். பெரியவர்கள் எல்லாம் திருடி கை வெட்டப்பட்டவர்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், பச்சிளம் பாலகர்கள்? கண்ணை நோண்டி கையை வெட்டி பிச்சை எடுக்க விடுவதாக கதைகளில் படித்திருக்கிறோமே, அது உண்மையாக இருக்குமா? நினைத்தாலே பகீர் என்கிறது.

நாங்கள் ஆயிஷா மஸ்ஜிதிலிருந்து திரும்பிவர பஸ் கிடைத்தது. ஆளுக்கு 2 ரியால் தான். ஹரம் அருகேயே இறக்கி விட்டார்கள். உம்ராவின் செயல்களான தவாப் முடித்து, சயீயும் முடித்து, முடி களைந்தோம். பிறகு இரவு உணவுக்கு முன் வீடு திரும்பினோம். இது போல மக்காவிலிருந்து கிளம்பும் வரை, மொத்தம் 6 முறை உம்ரா செய்தோம்.

நான் நகை வாங்கிய கதையை அடுத்து எழுதுகிறேன்.

-சுமஜ்லா.

11 comments:

Anonymous said...

உங்கள் பதிவைப் பார்த்ததும் என் மனம் கனத்து விட்டது. இறைவனின் படைப்பில் எத்தனை வகைகள்? நான் ஏதாவது பிரச்சனையால் மனம் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தால், என் அம்மா என்னிடம் கூறும் ஒரே ஆறுதல் இதுதான்" இந்த உலகில் உடல் ஊனமுற்றவர்கள், நோயாளிகள், வறுமையின் நிமிர்த்தம் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி கஸ்டப்படுவோர் ஏராளம் பேர்கள். இவர்களுடன் ஒப்பிடும்போது எமக்கு வரும் பிரச்சனைகள் பிரச்சனையே இல்லை. இந்த நிலையில் எம்மை வைத்திருப்பதற்கு நாம் எப்போதும் இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டே இருக்க வேண்டும்."

நான் நிஜமாகவே கஸ்டப் படுவோரையும் ஏழ்மை வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் இந்தியா வந்திருந்த பொழுதுதான் பார்த்தேன். அக்காட்சிகள் மிகவும் கொடுமையானவை.

உங்களின் அடுத்த பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
பிருந்தா

Anonymous said...

பிருந்தா,

தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்...நீங்கள் எந்த ஊர்? இலங்கை என்றால், அங்கு ஏழ்மை இல்லையா? இலங்கை மிகவும் அழகான பூமி என எங்கோ படித்த நியாபகம்..ஏழ்மை, பிச்சை என்பதெல்லாம் அங்கு இல்லையா?

எனக்கு எப்போதும் இந்த வருத்தம், இந்தியாவில் மட்டும் ஏன் ஏழைகள் அதிகம் உள்ளனர் என்று. அப்போ தானே அரசியல்வாதிகள் இலவசம் அறிவிக்க முடியும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

Anonymous said...

இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றும் இல்லை, கவின்.
நான் இலங்கை தான். ஆனால் நான் மிகவும் சிறிய வயதிலேயே வெளிநாடு வந்ததினால் எனக்கு இலங்கையைப் பற்றி எதுவுமே சொல்லத் தெரியவில்லை. இப்போ பல தமிழ்த்தொலைக்காட்சிகள் இருப்பதனால்தான் அங்கு நடக்கும் யுத்தத்தின் கொடூரமே எங்களால் உணர முடிகின்றது. இதுவரையில் நான் அங்கு போனதில்லை. அதனால்தான் என் கணவர் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள வாழ்க்கைமுறையையும், இங்கு கிடைக்காத பொருட்கள், உணவுகள் என்பவற்றை எனக்குக் காட்டி விளக்கிக் கூறினார். அங்கு எனக்கு நுங்கு, இளநீர் என்பன அடிக்கடி வாங்கித் தருவார். இப்படி இன்னும் பலப்பல...

வெளிநாடுகளிலும் பிச்சைக்காரர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப் பார்க்கும்போது எங்களுக்கு அவர்கள் மேல் பரிதாபமே வராது, ஏனெனில் இங்கு எல்லோருக்கும் அரசாங்க உதவிகள் (பண உதவிகள்) நிறைய உண்டு. அவர்களுக்கு உடல் ஊனம், வேலை கிடைக்கவில்லை என்று எந்த பிரச்சனையிருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் அரசாங்க உதவிகள் உண்டு.

Anonymous said...

ஆனால் இலங்கையில் ஏழ்மை,பிச்சை என்பன மிகக் குறைவென்றுதான் பலர் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இலங்கைத் தமிழர்கள் இந்தியா வந்து திரும்பினால் அங்குள்ள ஏற்றத்தாழ்வுகள், ஏழ்மை, பிச்சை போன்ற விடயங்களைக் கூறிக் கவலைப் படுவதை பலதடவை கேட்டிருக்கின்றேன்.
மன்னிக்கவும், என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகளையே குறை கூறுவேன். ஆனால் பல விடயங்களில் உலகமே இந்தியாவைப் பார்த்து வியக்கின்றது, பயப்படுகின்றது. இளம் சமுதாயத்தினரும் அரசியல்வாதிகளும் நினைத்தால் எவ்வளவோ நல்ல மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது என் கருத்து.

Anonymous said...

நன்றி பிருந்தா..உங்கள் விளக்கத்திற்கு. இவ்வளவு அழகாக தமிழ் வெளிநாட்டில் படித்து கற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். கடைசி 5 வரிகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

Jaleela Kamal said...

அஸ்ஸ்லாமு அலைக்கும் சுகைனா.
உங்கள் எல்லாபதிவும் படித்து கொண்டு தான் வருகிறேன்.
ரொம்ப அருமை, நீங்கள் சொல்வது சரியே கண்ணை நோண்டி, கையை வெட்டி என்பது போல் தான் அங்கு பிச்சை எடுப்பவர்கள்.
அந்த காசு அவர்களை போய் சேருவதில்லை அதற்கு பதில் சாப்பாடாக கொடுத்தால் அவர்கள் சாப்பிட்டு கொள்ளலாம்.
அங்கு கடை போட்டு விற்கும் கருப்பின பெண்களின் நிலையை கவனித்தீர்களா?
ரொம்ப பரிதாபமாக இருக்கும், அங்கு அதிக திருட்டும், பிச்சைகாரர்களும் அதிகம்.

ஜலீலா

Anonymous said...

இங்கு பிச்சை எடுப்பவர்கல் இந்த நாட்டினர் அல்ல
இதற்கென்று ஒரு க்ரூப் உள்ளது மாதம் இவ்வளவு என்று பேசி சோமாலி எத்தியோப்பி போன்ற ஏழை நாட்டு சிறுவ பெரியவர்களை இங்கு கொண்டு வந்து பிச்சை எடுக்க விட்டு பணங்களை அவர்கள் எடுத்து கொண்டு சொற்ப்ப பணம் இவர்களுக்கு கொடுப்பார்கள்
ஜலீலா சொன்னதுபோல சாப்பாடு நாம் வாங்கி கொடுக்கலாம்.ஆனால் பாவம் அவர்கள் கை கால்களை இழந்து பிச்சை எடுக்க சம்மதிக்கிறார்கள்.இடற்க்கு காரணம் அவர்களை பெற்ற கையாலாகத பெற்றோர்களீன் சோம்பேரித்தன்ம் என்றுத்தான் சொல்லனும்

asiya omar said...

நாங்கள் உம்ரா சென்றிருந்தபொழுதும் இந்த கருப்பு பெண்களை பார்த்தேன்,அவர்கள் மருதானி பொடி ,ஹிஜாப் விற்றுக்கொண்டிருந்தார்கள்,மற்றபடி இந்த மாதிரி எல்லாம் பார்க்கலை,ஒரு வேளை ஹஜ் சமயம் மட்டும் இப்படி ஆட்கள் வருவார்களோ!பாவம்.

சுஹைனா said...

கவின் பிருந்தா உங்க பதிவுகள், நானும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது. நன்றி.

நாங்களும் பார்த்தோம், மருதானி மற்றும் புறாக்களுக்கு தீனி விற்கும் கறுப்பினப் பெண்களை. ஆனால் எல்லாருடைய நிலையும் அவ்வாறு இல்லை. நான் முந்திய அத்தியாயத்தில் சொன்ன அதிகம் படித்து கை நிறைய சம்பாதிக்கும் டாக்ஸி டிரைவர் கூட கறுப்பினத்தைச் சேர்ந்தவர் தான்.

மஅபஸ் பஸ்ஸ்டாண்டில் கடை போட்டு விற்பவர் எல்லாரும் அவ்வினத்தினர் தான். பர்தா அணிந்திருந்தாலும், ஒரு சிலரின் மேக் அப் பார்க்க சகிக்காது. அவர்கள் பண்ணும் பந்தா இருக்கே?!(நான் எல்லாரையும் சொல்ல வில்லை)

Jaleela Kamal said...

அங்கு பிச்சை எடுக்கும் பிள்ளைகளை பற்றி பயங்கர மான தகவல் நேற்று கேள்விபட்டேன், அப்படியே ஆடி போய் விட்டேன்.என் உட‌ம்பெல்லாம் ஒரு மாதிரி ஆகி விட்ட‌து.


அங்கு பிச்சை எடுக்கும் பிள்ளைக‌ள் அந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் இல்லை.
இங்கு த‌வ‌ற‌விட்டு செல்லும் பிள்ளைக‌ளாம்.

போன‌ வார‌ம் உம்ரா சென்று வ‌ந்த‌ என் சொந்த‌ கார‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.

அவ‌ருட‌ன் வேலை பார்ப்ப‌வ‌ரின் பிள்ளையை ஒரு முறை ஹ‌ஜ் போன‌ போது கூட்ட‌த்தில் தொலைத்து விட்டு அவ‌ர்க‌ள் எங்கு தேடியும் கிடைக்காம‌ல். நாடு திரும்பி விட்டார்க‌ள்.

இத‌ற்காக‌வே அவ‌ர்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் ஹ‌ஜ் சென்று தேடினார்க‌ளாம்.

க‌டைசியில் ஐந்தாவ‌து வ‌ருட‌ம் அந்த‌ விட்டு சென்ற‌ பிள்ளையை க‌ண்டெடுத்தார்க‌ள் அய்யோ என்னால் சொல்ல‌ முடிய‌லையே இந்த‌ கொடுமையை, கை துண்டிக்க‌ ப‌ட்டு ந‌ல்ல‌ அழ‌காக‌ இருந்த‌ பிளளை ரோட்டில் போட்டு பிச்சை எடுக்க‌ விட்ட‌தால் க‌ருத்து அந்த‌ க‌ருபின‌ ஆட்க‌ள் போல‌ வே ஆகிவிட்ட‌தாம், எப்ப‌டியே வாத‌டி அந்த‌ க‌வர்ன்மென்ட்டில்
போய் வாதாடி பிள்ளை மீட்டு வ‌ந்த்தார்க‌ளாம்..

தோழிகளே யார் ஹஜ் உம்ரா சென்றாலும் பத்து முறை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்புகங்கள்.
குழந்தைகளை உஷாரா பிடிக்கும் படி சொல்லி அனுப்புங்கள்.

ஜலீலா

சுஹைனா said...

ஜலீலாக்கா நீங்க சொன்ன உண்மை உள்ளத்தை உறைய வைக்கிறது. இனி குழந்தையோடு செல்பவருக்கு நிச்சயம் சொல்லி அனுப்புகிறேன்.