Friday, April 24, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 34

ஆயிஷா மஸ்ஜித் அல்லது ஜொஹ்ரானா என்று இரு இடங்களுக்கு சென்று உம்ராவுக்கான நிய்யத் செய்யலாம். ஆயிஷா மஸ்ஜித் சுமார் 10 கி.மீ தொலைவிலும், ஜொஹ்ரானா சுமார் 21 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. ஜொஹரானாவுக்கு 300 நபிமார்கள் இஹ்ராம் கட்டிய இடம் என்ற சிறப்பு இருப்பதால், ஒரு முறையாவது அங்கு செல்ல நாடினோம். ஆனால், மாலையில் அங்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை. டாக்ஸிக்காரர்கள் மிக மிக அதிக தொகை கேட்டதால், வேறு வழியின்றி, ஆயிஷா மஸ்ஜித் சென்று வந்து, உம்ராவை முடித்தோம்.


நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் மேல் மாடியில் ஒரு வட இந்தியரும் அவர் மனைவியும் தங்கி இருந்தார்கள். அதில், அந்த ஆள் மட்டும் தனியாக பஸ்ஸுக்கு நின்றிருந்த போது, ஒரு டாக்ஸிகாரர் வந்து, ஹரமுக்குத்தான் தானும் போகிறேன், நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இல்லை பஸ்ஸிலேயே போய்க்கொள்கிறேன் என்று சொல்லியும் வற்புறுத்தி அழைத்து சென்றிருக்கிறார் கார்காரர்.

காரில் அவர் மனைவியும் வளர்ந்த மகளும் இருந்தார்களாம். காரை, மலைப்பாதையில் ஓட்டி சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி, பெண்கள் அவர் இரு கைகளையும் பிடித்துக் கொள்ள, அந்த ஆள் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த நம்ம மதிப்பில் சுமார் 25,000 ருபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு, அங்கேயே இறக்கி விட்டு விட்டு சென்று விட்டானாம். போலீஸில் புகார் செய்தும் ஒன்றும் பிரயோஜனமில்லை. அதனால் எல்லாரையும் உஷாராக இருக்கும்படி சொன்னார் லாட்ஜ் மேனேஜர்.

கடைசியாக மதினா கிளம்ப இன்னும் ஒரிரு நாள் தான் இருந்தது. எங்க பக்கத்து ரூம் கார பெண், காபாவின் பழைய கால பொருட்கள் இருந்த மியூசியத்தை சென்று பார்த்ததாக சொன்னார். பழைய ஜம்ஜம் கிணற்றில், நீர் சேந்திய வாளி, கயிறு, காபாவின் பழைய திரைகள், முன்பு காபாவுக்கு போட்டிருந்த வெள்ளி கதவு, பழைய புகைப்படங்கள் இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் எல்லாம் அங்கு இருந்ததாக சொன்னார். அதன் பேர் கஸ்வ காபா என்றும் சொன்னார்.

அன்று வியாழக்கிழமை. நாங்கள் இருவரும், உம்ராவுக்கு பஸ் ஏறும் இடத்துக்கு சென்று பஸ்ஸில் ஏறி, அங்கு போக முடிவு செய்தோம். அதன்படி போனால், மக்காவுக்கு வெளியே ஒரு காட்டு பிரதேசம். அங்கு தான் கஸ்வ காபா இருந்தது. அங்கு, பஸ்காரன் எங்களை இறக்கி விட்டு விட்டு போய்விட்டான்.

பெரிய காம்பவுண்ட். கதவு மூடி இருந்தது. உள்ளே ஒரு அரபி கார் ஒன்றை துடைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் நாங்கள் சத்தம் போட்டு, கதவைத் திறக்கும்படி சொன்னால், அவன் எங்களிடம் ஏதோ அரபியில் சொல்கிறான். புரியவில்லை. பக்கத்தில் வந்தால் சைகையில் புரியவைக்கலாம் என்று கையாட்டினேன். அவனோ ஏதோ கத்திவிட்டு, உள்ளே சென்று விட்டான். அதற்குள், நாங்கள் வந்த பஸ் திரும்பி வந்தது. ஏறி சென்று விடலாம் என்று பார்த்தால், பஸ் ஹரமுக்கு போகாது என்று சொல்கிறார்கள். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் இடமான ஆயிஷா மஸ்ஜித் செல்கிறது பஸ் என்று பஸ்காரர் சொன்னார். இஹ்ராம் இல்லாமல், ஆயிஷா மஸ்ஜித் சென்று விட்டால், திரும்ப மக்காவில் அப்படியே நுழைந்து விட்டால், ‘தம்’ ஆக ஆடு அறுக்க வேண்டும். இதென்னடா சோதனை என்று யோசிப்பதற்குள் பஸ்ஸும் போய் விட்டது.

அட்லீஸ்ட் முன்புற தோற்றத்தையாவது ஒரு படம் எடுப்போம் என்று எடுத்துக் கொண்டேன். இதோ அந்த போட்டோ:

ஒரு ஈ காக்கா கூட இல்லை. எனக்கோ பயம் பிடித்துக் கொண்டது. எப்படி திரும்பி செல்வது என்று ஒன்றும் புரியவில்லை. பாலைவனம் என்றால் எப்படி இருக்கும் என்று அப்போ தான் தெரிந்தது. வல்ல நாயனிடம் இருகரமேந்தி துவா செய்தேன்.

சிறிது நேரத்துக்குப் பின் சரக்கு வேன் ஒன்று அவ்வழியாக வந்தது. நான் கையசைத்தேன். சிறிது தூரம் சென்று நின்றது. வேகமாக அதை நோக்கி ஓடினோம். எங்கள் அதிர்ஷ்டம் பாருங்கள், அதை ஓட்டி வந்தது ஒரு மலையாளி. அவரிடம் விஷயத்தை சொன்னோம். வியாழன் மற்றும் வெள்ளி கிழமை லீவு நாள்; அதான் கஸ்வகாபாவை திறக்கவில்லை. அப்படியே வேறு கிழமை என்றாலும் மாலை 6 மணிக்கு தான் திறப்பார்கள் என்றார். அதுமட்டுமல்ல, நாங்கள் நின்றிருந்தது மிகவும் மோசமான இடமாம். அங்கு, ஆளை அடித்து போட்டு, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, பெண்கள் இருந்தால் பலாத்காரம் செய்துவிட்டு போய்விடுவார்களாம். கேட்டவுடன் எனக்கு பயத்தில் விரல்கள் சில்லிட்டு விட்டது.

எங்களை அழைத்துச் செல்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், தான் வேறு இடத்துக்கு செல்வதால், சிக்னல் வரை அழைத்துச் செல்வதாகவும், அங்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால், அங்கிருந்து வண்டி பிடித்து சென்று விடும்படியும் கூறி எங்களை ஏற்றிக் கொண்டார். சிக்னலில் இறங்கும் போது, பணம் கொடுத்ததற்கு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவருக்காக மனதார துவா செய்தேன். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, இறைவனுக்கும் நன்றி சொன்னேன்.

இறங்கிய இடத்தில் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் இருந்தது. அதன் முன்பு, மிக அழகாக, கலர்கலராக செடிகள் வளர்த்து இருந்தார்கள். அந்த சூழ்நிலையிலும், அதை மிகவும் ரசித்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த போட்டோவை கீழே பார்க்கலாம்.


ஹரமுக்கு செல்ல கார்காரர்கள் மிக அதிக தொகை கேட்டார்கள். தொகை கொடுத்தாலும் நம்பி ஏற பயமாக இருந்தது. அப்போ ஒரு கார்காரரிடம் பேரம் பேசி, தலைக்கு 10 ரியால் கொடுத்து ஏறிக்கொண்டோம். அவர் கார் பின் சீட்டில், தொழுகை விரிப்பு கிடந்தது. அதைப் பார்த்ததும், இவர் நல்லவராகத் தான் இருப்பார் என்ற நம்பிக்கை வந்தது. ஒரு வழியாக நல்லபடியாக ஹரம் வந்து சேர்ந்தோம்.

கிளம்ப இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தது. சரியான தேதி, இன்னும் அறிவிப்பு செய்யவில்லை. கடைசியாக கிளம்பும் முன், தவாப் விதா என்னும் பயணத் தவாபு செய்ய வேண்டும். அது ஒரு கட்டாய கடமையாகும். மாதவிடாயை எதிர்பார்த்திருக்கும் பெண்கள், சற்று முன்பாகவே செய்து கொள்ளலாம். அப்படி மாதவிடாய் வந்து செய்யமுடியாமல் போனாலும் குற்றமில்லை. அதனால், நான் இரண்டு நாட்கள் முன்பாகவே செய்து கொண்டேன். வியாழக்கிழமை இரவு, மாமனாரையும் செய்யச் சொல்லி, அவரும் தவாபு விதாவை முடித்து விட்டார். மச்சான் மட்டும் கிளம்பும் அறிவிப்பு வந்தவுடன் செய்து கொள்கிறேன் என்று விட்டு விட்டார். அன்று சனிக்கிழமை, ஹரமில், எங்க பெரியப்பா குடும்பத்தை சந்தித்தோம். அவர்களுக்கு ப்ளைட் டேட் மூன்று நாட்கள் தள்ளிப் போய்விட்டதால், அதை அனுசரித்து, லேட்டாக மதினா கிளம்புவதாக சொன்னார்கள்.

வியாழன் இரவு, ஹரமில் இருந்து ரூமுக்கு இரவு, 10 மணிக்கு தான் திரும்பினோம். எனக்கு ஏனோ திரும்ப மனசே இல்லை. கண்களால் காபாவை விழுங்குவது போல, திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றேன். ரூம் திரும்பியதும் தான் தெரிந்தது, அடுத்த நாள் காலை, 10 மணிக்கு மதினா கிளம்ப வேண்டும் என்று. எங்களை பஸ்ஸில் ஏற்றி மதினா அனுப்புவது, முஅல்லிமின் வேலை. அதற்கான பணத்தை நாம் இங்கே இந்தியாவிலேயே ஒன்றாக கட்டிவிடுவோம். மதினா அங்கிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

மச்சான் இன்னும் தவாபு விதா முடிக்கவில்லை. அதிகாலை எழுந்து சென்று தான் முடிக்கவேண்டும். அன்றிரவே முடிந்தவரை பேக்கிங் செய்தோம். மாமனார், காலை ஹரம் வரவில்லை. அதனால் நானும் மச்சானும் மட்டும் சென்று வர முடிவு செய்தோம். இரவு, துணியெல்லாம் வாஷிங் மெஷினில் போட்டு, துவைத்துக் காய வைத்தோம்.

காபாவின் கடைசி பார்வை அடுத்த அத்தியாயத்தில்....

-சுமஜ்லா.

4 comments:

Biruntha said...

மனிதர்கள் ஆசை மிகுதியால் செய்யும் கொள்ளைகளை நினைக்கக் கஸ்டமாக இருக்கின்றது. அதுவும் இப்படிப்பட்ட இடத்தில் செய்வதால் அவர்களுக்கு கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சியே வருவதில்லையா!?

நாங்கள் மனதார வேண்டினால் எந்த நேரத்திலும் இறைவன் ஏதோ ஒரு உருவத்தில் வந்து எங்களைக் காத்தருள்வான் என்பதை உங்களின் பதிவின் நடுப்பகுதியில் எழுதிய சம்பவம் உறுதிப் படுத்துகின்றது.

எவ்வளவு முயன்றும் மியூசியத்தைப் பார்க்காதது வருத்தமே.

அன்புடன்
பிருந்தா

Thamiz Priyan said...

நல்ல அனுபவங்கள்! நான் மெக்காவிற்கு அருகில் தான் இருக்கிறேன். நேற்று கூட (வியாழன் இரவு) உம்ரா சென்று திரும்பினேன். இந்த ஹஜ் பதிவுகள் முழுவதையும் நேரம் கிடைக்கும் போது படிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்!

Anonymous said...

anbu sumjala,

u told that going to write some adventure in this episode... but u didnt mention about that? i eagerly waited to read it ...
please post it in the net episode..

SUMAZLA/சுமஜ்லா said...

அன்பு பிருந்தா, நீங்கள் சொல்வது சரிதான். படுபயங்கரமான தண்டனை இருந்தும், படுபாதக செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் பிரியரே! இன்ஷா அல்லாஹ், நிச்சயம் முழுவதும் படித்துப் பார்த்து, எங்காவது தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்தி விடுகிறேன்.

anbu ananymous,

we got lost in the middle of the forest doesnot appear to be an adventure it seems; sorry for misguiding you. i am writing my own experiences without any exageration in it. Let me continue so.