Wednesday, February 4, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 5

என்ன இவ்வளவு பொருட்கள் கொண்டு போக வேண்டுமா? என்று மலைப்பாக உள்ளதா? அதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. உங்களிடம் பணம் தாராளமாக இருந்தால், பிரவேட் டூரிஸ்ட் ஹஜ் சர்விஸ் மூலமாக போகலாம். அதற்கு, குலுக்கல் எல்லாம் இல்லை. சமைக்கவும் தேவையில்லை. மூன்று நேரம் இந்திய உணவுகள், டீ, காபி எல்லாம் அவர்களே தந்து விடுவார்கள். ஆனால், ஒரு ஆளுக்கு 2,00,000 ரூபாய் கட்டணம். அதில் அந்நிய செலாவணி பணமெல்லாம் கையில் தர மாட்டார்கள். அதற்கு தனியாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், அதிகம் சாமான்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. துணிமணிகள் மட்டும் கொண்டு சென்றால் போதும். கட்டணம் மிக அதிகம் என்பதால், பிரைவேட்டாக செல்ல யாரும் விரும்புவதில்லை. பெரும் பணக்காரர்கள், குலுக்கலில் சீட் கிடைக்காத ஒரு சிலர் மட்டுமே பிரைவேட் ஹஜ் சர்வீஸ் மூலமாக போகிறார்கள்.

அப்புறம் நம்ம கதைக்கு வரலாம். இப்போ எல்லா சாமான்களும், லிஸ்ட் போட்டு வாங்கி ஆகிவிட்டது. அப்போ மூடி போட்ட அலுமினிய பக்கெட் ஒன்று கொண்டு செல்லனும் என்று சொன்னார்கள். இது குளிக்க மற்றும் துணி துவைக்க தேவைப்படும் என்றும், திரும்பி வரும் போது பேரிச்சம்பழங்களை அதில் போட்டு வந்துவிடலாம் என்றும் சொன்னார்கள்.

சரியென்று, நாங்கள் ஒரு அலுமினிய வாளியும் அதற்கு தட்டு மூடியும் 350 ரூபாய்க்கு வாங்கி, இரண்டிலும் மூன்று ஓட்டைகள் போட்டு, இறக்கை வைத்த முயல்காது நட்டு போல்ட்டினால், அதை டைட் செய்தோம், திருப்தியாக இருந்தது.

பெரிய சூட்கேஸ் ஒன்றில் எல்லா சமையல் பொருட்கள், பாத்திரங்கள் அடுக்கி விட்டோம். ஊறுகாய், உப்புக் கண்டம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்ற வீட்டில் செய்த பொருட்களை அலுமினிய வாளியில் போட்டு டைட் செய்தோம். மற்ற சூட்கேஸ்கள், ஹேண்ட் லக்கேஜ் எல்லாம் பேக் செய்தாயிற்று. இப்ப எல்லாம் ரெடி.

ஹஜ் போகும் பயணிகளுக்கு ஹஜ்ஜில் என்னென்ன செய்யனும் என்று அவ்வப்போது ட்ரைனிங் வகுப்பு நடக்கும். ஏற்கனப்வே பல முறாஇ போய் வந்தவர்கள் யாராவது அதற்கு ஏற்பாடு செய்வார்கள். அதில் எங்கள் ஊரிலிருந்து செல்லுபவர்கள் அனைவரும் ஒன்று சேர்வார்கள். அப்போ, ஒருவருக்கொருவர் பேகிங், மற்றும் கொண்டு செல்லும் சாமான்கள் பற்றி டிஸ்கஸ் செய்து கொள்வோம். ஒருவருக்கு தெரியாததை ஒருவர் சொல்ல, இது ரொம்ப உதவியாக இருக்கும். அப்போ நான் ஒருவரிடம் சொன்னேன் பெருமையாக, ‘எங்க வீட்டில் எல்லா பேகிங்கும் ரெடி, நாளைக்கே ப்ளைட்னாலும் நாங்க தயார்’ என்று. அவ்வளவு தான், அதற்கு பின் குளறுபடி ஆரம்பித்தது.

தேதி வந்ததும், நாங்கள் எல்லா வீட்டுக்கும் சென்று சொல்லி வந்தோம். ஞாயிற்றுக் கிழமை ப்ளைட். வெள்ளி காலை 10 மணிக்கு சென்னை ஹஜ் கமிட்டியில் ஆஜராகி நம் டாகுமெண்ட்களை பெற்றுக் கொள்ளனும் என்று சொல்லியிருந்தார்கள். நாங்கள் வியாழன் மதியம் ட்ரைனில் புறப்படுவதாக ஏற்பாடு. அதனால், அதற்கும் முதல் நாள் இரவு வீட்டில் 250 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்தோம்.

அழைப்பு எல்லாருக்கும் வைத்தாயிற்று. விசாரிக்க ஒவ்வொருவராக வந்து சென்று கொண்டிருந்தனர். அப்போ ஒருவர் சொன்னார், என்ன உங்க அலுமினிய வாளி ரொம்ப சிறிசா இருக்கே என்று. அப்போ எங்கம்மா சொன்னார், ‘ஆமாம் ஒரு வாளி போதாது, இன்னொன்று வேண்டும்; அதுவும் நாங்கல்லாம் ப்ளாஸ்டிக் வாளி தான் கொண்டு போனோம் என்று. சரியென்று போய் ஒரு மூடி போட்ட ப்ளாஸ்டிக் வாளி வாங்கி வந்தோம். அதற்கும் மூன்று ஓட்டை போட்டு முயல்காது நட்டு போட்டு, அதிலும் கொஞ்சம் பொருட்கள் போட்டு பேக் செய்தோம்.

2 நாள் கழித்து இன்னொருவர் வந்தார். அவர் வந்து ப்ளாஸ்டிக் வாளியை தூக்கி பார்த்துவிட்டு, வாளி ஓக்கே, ஆனா கைபிடி தாங்காது. அலுமினிய வாளி தான் பெஸ்ட் என்றார். எங்கம்மாவும் அதை வழிமொழிந்தார். சரியென்று நாங்கள் போய் இன்னொரு அலுமினிய வாளி, அதுவும் கொஞ்சம் பெரிதாய் ( முதலில் வாங்கியது சிறிதாய் போய்விட்டது, என்று சொல்லி விட்டார்களே) 400 ரூபாய்க்கு மூடியுடன் வாங்கி வந்தோம். அதற்கும் காது குத்தி தோடு மாட்டி விட்டோம். அதாங்க, நட்டு போல்ட்டு. இப்ப பிளாஸ்டிக் வாளியில் இருந்து எல்லாம் இதற்கு மாற்றிவிட்டு பிளாஸ்டிக் வாளியை தூக்கி பரணில் வைத்து விட்டோம். அப்பாடா என்றிருந்தது.

எல்லா சூட்கேஸ் மற்றும் வாளியில் மார்க்கிங் பேனாவால் எங்க நம்பர், என் கணவர் பெயர், ஊர் மற்றும் இந்திய போன் நம்பர் எழுதினோம். பிறகு எல்லா லக்கேஜையும் நைலான் கயிறு கொண்டு டைட்டாக கட்டிவிட்டோம்.

கதை முடிந்ததென்று நினைக்கிறீர்களா? இனிதான் ஆரம்பமே! நாங்கள் போவதற்கு 4 நாள் முன்பு ஹஜ்ஜுக்கு போனவர் அங்கு மக்காவிலிருந்து போன் செய்தார். அவர் சொன்ன விஷயம் இது தான். ‘ யாரும் அட்டைப் பெட்டி, மற்றும் வாளி கொண்டு வரக் கூடாது. அடுக்குவதில் சிரமம் இருப்பதால், பஸ்ஸில் ஏற்ற மாட்டார்களாம். அது போக ஒரு லக்கேஜ் 23-24 கிலோவை தாண்டக் கூடாது. விதிமுறையை மீறினவர்களின் லக்கேஜ் எல்லாம் ஒரு ஓரமாக மலை போல் குவிக்கப்பட்டிருக்கிறது. என்ன ஆகுமென்று தெரியவில்லை” என்று பதட்டத்துடன் கூறினார். இன்னொருவர் போன் செய்து மீண்டும் இதே விஷயத்தை வலியுறுத்த எங்களுக்கு மண்டையை பிச்சிக்கலாம் போல் ஆயிடிச்சு.

நாங்கள் உடனே போய் ஒவ்வொன்றாக எடை பார்த்தோம். ஒன்று 37 கிலோ, இன்னொன்று 32 என இப்படியாக மொத்த அலவ்டு எடை சரியாக இருந்தும் இண்டிவிஜுவல் எடை கூடுதலாக இருந்தது. 2 வாளியும் அப்போ கொண்டு போகக் கூடாது. அந்த பொருட்களும் வேறு பேகுக்கு மாற்றியாகணும். என்ன செய்வது, விதியேனு போய், மேலும் 4 பேகுகள் வாங்கி வந்தோம். ஒரு பெரிய பேக்கில் பக்கெட்டை அப்படியே தூக்கி உள்ளே வைத்து விட்டேன்(ஐடியா). மற்ற எல்லாம் பிரித்து ரீ பேக்கிங் செய்தோம். ஹும்... என்ன செய்வது?!

விருந்து நல்லபடியாக முடிந்தது. அடுத்த நாள் பிள்ளைகளுடன், பிறந்த மண்ணைவிட்டு பிரியாவிடை பெற்று சென்னை கிளம்பினோம். சென்னை சென்றதும் அங்கு ஹஜ் கமிட்டியில் உள்ளவர்கள் சொன்னார்கள், பேகின் உள்ளேயும் வாளி வைக்கக் கூடாது. ஸ்கேனிங்கில் தெரிந்தால், தூக்கி போட்டு விடுவான் என்று(வாளி என்ன போதைப் பொருளா?).

அப்புறம் யாராவது ஒன்று சொல்லிவிட்டால் நமக்கு தாங்குமா என்ன? அதிலும் எங்கம்மா வேறு 400 ரூபாய் வாளி, கஸ்டம்ஸில் விடாவிட்டால், வேஸ்டாகி விடும், என்று அவர் பங்குக்கு சொல்லி புண்ணியம் தேடிக் கொண்டார். பிறகென்ன, பிரித்து கொட்டி சென்னையிலும் ரீ பேக்கிங் தான். அந்த வாளியை, எங்களை வழியனுப்ப வந்த என் பெற்றோரிடம் திருப்பி அனுப்பி விட்டேன். ஆக மொத்தம் இப்போ, காது குத்திய மூன்று வாளியும் பரணில் தூங்குது.

பிரியா விடை பெற்று பிரிந்தது, சென்னையிலிருந்து கிளம்பியதும் அடுத்து சொல்கிறேன்.

8 comments:

Anonymous said...

Suhaina.. simply super //காது குத்திய மூன்று வாளியும் பரணில் தூங்குது// your sense of humor is amazing
ila

Anonymous said...

சுஹைனா,

இது நல்ல தமாஸ்.ஹ ஹா

Anonymous said...

சுஹைனா படிக்க படிக்க அடுத்த பதிவை எதிர்பாக்க வைக்கறீங்க ... நல்ல எழுத்து நடை வாழ்த்துகள்

Anonymous said...

சுஹைனா படிக்க படிக்க அடுத்த பதிவை எதிர்பாக்க வைக்கறீங்க ... நல்ல எழுத்து நடை வாழ்த்துகள்

ஹாஷினி

Anonymous said...

இலா, கவின், ஹாஷினி, அப்புறம் பெயர் தெரியாத என் ananymous தோழி(இதுவும் ஹாஷினி தானே), உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா.

afrine said...

சுஹைனா இந்த பதிவை ரொம்ப நகைச்சுவை உணர்வோடு எழுதியிருக்கீங்க. ரொம்ப பிடிச்சிருக்கு

rasia said...

ஆமாம்ப்பா எனக்கும் புன்னகை பூத்தது!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//காது குத்திய மூன்று வாளியும் பரணில் தூங்குது.//

காது குத்துக்கு ஊர்கூட்டிச் சடங்கு செய்யல்லையா?
கற்பனை செய்து சிரித்தேன். இந்த நகைச்சுவை உணர்வே தங்கள் எழுத்தில் பலம்.
மிகுதி படிப்பேன்.