Friday, March 13, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 20

நாங்கள் முஜ்தலிஃபாவில் இருந்து மினா நோக்கி செல்கிறோம். அப்பொழுது மேப்பை பார்க்கிறேன். அதில் எங்க டெண்ட்டுக்கு செல்ல 2 பாதை இருந்தது. அதில் ஒரு பாதையில் தான் கூட்டம் அதிகம் இருந்தது. சரி அந்த பாதையில் செல்லலாம் என்று நாங்கள் முடிவு செய்து அதில் உள்ளே நுழைய முற்பட்டோம். அங்கு சில அரபிகள் நின்று கொண்டு உள்ளே நுழைபவர்களின் உடமைகளை வாங்கி, ஒரு ஓரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு முதலில் புரியவில்லை. பின்பு தான் தெரிந்தது, அது சைத்தானுக்கு கல் எறிய செல்லும் பாதை; அதனால், உடமைகள் எடுத்துச் செல்வது நெரிசலில் கேடாக முடியும் என்பதால் அவ்வாறு செய்கின்றனர் என்று.

ஓரத்தில் வீசி எறியும் உடமைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. திரும்பி வரும் போது, தேடி எடுத்துக் கொள்ள வேண்டியது தான். கிடைத்தால் உண்டு, கிடைக்காவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது.

நான் இது தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். ஒரு அரபி, என் கையில் இருக்கும் போர்டபிள் சேரை பிடுங்குகிறார். இது ஏதுடா வம்பு? நாம் திரும்பி வேறு பாதையில் போய் விடலாம் என்று பார்த்தால், அவர் சேரை விடுவதாக இல்லை. பலம் கொண்ட மட்டும், என் கையில் இருந்து இழுக்கிறார். நான் இழுக்க, அவர் இழுக்க, அங்கு ஒரு டக் ஆஃப் வாரே நடந்தது. அவர் கவனம் சிறிது வேறு புறம் திரும்பியதும், நான் வேகமாக அவர் கையில் இருந்து விடுவித்து, வந்த வழியே திரும்பி, வேறு பாதையில் நடக்க ஆரம்பித்தேன். மச்சானும் நானும் எங்கள் உடமைகளை எங்கே இங்கேயும் பிடுங்கிக் கொள்வார்களோ என்று, அவற்றை மறைத்தபடி நடக்கிறோம்.

நல்ல வேளை, ஒரு வழியாக பாதி தூரம் வந்து விட்டோம். அதன் பிறாகு அங்கும் பிதுங்கும் அளவுக்கு நெரிசல் அதிகமாகி விட்டது. ஒரு சிலர், வழி தவறியும் விட்டனர். எங்களிடம் மேப் இருந்ததால் தப்பித்தோம். வழி தவறிவர்களை அழைத்துச் செல்வதற்கென்று இந்திய ஹஜ் கமிட்டி சார்பாக நீல நிற சட்டை போட்ட வாலிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள், வயோதிகர்களை, கைபிடித்து பத்திரமாக அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு வழியாக நடந்து நடந்து, எங்கள் டெண்ட்டை அடைந்ததும் அப்பாடா என்று இருந்தது. சுமார் மணி காலை 11 இருக்கும் அப்போது. கையில் உணவு எதுவும் இல்லை. அங்கு ஒரு கடையில் முட்டை ரொட்டி கிடைத்தது. அதாவது மைதா ரொட்டியில் ஒரு முட்டை ஊற்றி, சுட்டுத் தருவார்கள். அதற்கு க்ரேவியெல்லாம் இல்லை. விலை 5 ரியால். மச்சான் சென்று ஆளுக்கொன்று வாங்கி வந்தார்கள். பசிக்கு அமிர்தமாக இருந்தது அது.

உண்ட களைப்பில் சற்று இளைப்பாறினோம். பிறகு எழுந்து லுஹர் தொழுதுவிட்டு, டெண்ட்டில் வைத்துப் போயிருந்த பூரி எடுத்து சாப்பிடலாம் என்று பார்த்தால், சூடாக துணியில் கட்டி இருந்ததால், வேர்த்த நீர் விழுந்து கெட்டு போனது போல இருந்தது. MTR foods இருந்தது. ஆனால் அதை சாப்பிட பிடிக்கவில்லை. மீண்டும் மச்சான் சென்று 10 ரியால் கொடுத்து, சாதம் வாங்கி வந்தது. குஸ்கா போன்ற சாதம், அதில் கோழி இறைச்சி ஒரு துண்டு. எனக்கு அது பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு முட்டைரொட்டி சாப்பிட்டு விட்டு, சைத்தானுக்கு கல் எறிய கிளம்பினோம்.

நாங்களும், எங்க ரூம் மேட்டான விருத்தாசலத்துக்காரர்களும் ஒன்றாக சென்றோம். மாமனார் வரவில்லை. வயோதிகர்கள் வர முடியாவிட்டால், அவர்கள் கற்களை, வேறொருவரிடம் கொடுத்தனுப்பி விடலாம். அவர் கற்களை எங்களிடம் கொடுத்து விட்டார். நாங்கள் போக 2 கி.மீ, வர 2 கி.மீ என நடக்கனும். வாகன வசதி ஏதும் கிடையாது. வாகனங்களை உள்ளே விட்டால், நெரிசல் அதிகமாகி விடும் என்று உள்ளே அனுமதிப்பதில்லை. மாமனார் உடன் இல்லாததால், நாங்கள் சுலபமாக நடந்து விட்டோம்.

மாலை 3 மணி என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. அங்கு காபா இருக்கும் திசையை குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்திசையை நோக்கி நமது இடது புறம் இருக்குமாறு நின்று, கற்கள் எறிய வேண்டும். பெரிய நீண்ட வட்டமான மூன்று கல் தூண்கள். சின்ன, நடு மற்றும் பெரிய சைத்தான்கள். முதலில் வருவது சின்ன் சைத்தான், அடுத்தது நடு சைத்தான் அடுத்தது பெரிய சைத்தான். அதற்கு ஜம்ரத் என்று பெயர்.

இன்று ஒரு நாள் பெரிய சைத்தானுக்கு மட்டும் கற்கள் எறிய வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் மூன்று சைத்தானுக்கும் எறியனும். நாங்கள் கடைசியில் இருந்த பெரிய ஜம்ரத்தை நோக்கி நடந்தோம். ஒரு ஜம்ரத்தில் இருந்து அடுத்தது, சுமார் ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கிறது. நாங்கள் நெருங்கி, “ பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று சொல்லி, ஒவ்வொரு கற்களாக எறிந்தோம். கற்கள் தொட்டிக்குள் விழ வேண்டும். வெளியே விழுந்து விட்டால், மீண்டும் எறியனும். அதற்குத் தான் கூடுதலாக கற்கள் பொறுக்கிக் கொள்ளணும்.

நாங்கள் கற்கள் எறிந்ததும், மச்சான் மாமனாருக்காக கற்களை எறிந்தார். அவ்வளவு தான். இனி திரும்பினோம். திரும்பும் வழியெல்லாம், காலையில் பிடுங்கி வைக்கப்பட்ட உடமைகள் மலை போல குவிந்திருந்தன. பலரும் அதை மீண்டும் எடுத்துச் செல்ல வில்லை, அல்லது மிஸ் பண்ணி விட்டார்கள் போலும்.

இனி குர்பானி கொடுக்க வேண்டும். எங்கள் குர்பானி, அடுத்த நாள் காலை 8 மணிக்கு கொடுக்கப்பட்டு விடும். இது போல பணம் கட்டாதவர்கள், மினாவிலிருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கும் ஆட்டுப் பண்ணைக்கு சென்று ஆடு வாங்கி அறுக்கணும். விருத்தாசலக்காரர் ஆட்டுப் பண்ணைக்கு சென்றார். அவரிடம் எல்லாரும் சேர்ந்து கூட்டாக நபிகள் நாயகம்(ஸல்) பேரில் குர்பானி கொடுக்க பணம் கொடுத்து விட்டோம்.

இரவு உணவு அதே முட்டை ரொட்டி தான். விடிந்ததும், நாங்கள் எங்க ரூமுக்கு சென்று உணவு சமைத்து சாப்பிட்டு, முடி களைந்து, பிறகு ஹரம் சென்று தவாப் ஜியாரா முடித்து வரலாம் என்று கிளம்பினோம். இன்று மூன்று சைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும். அதற்கான நேரம் மதியம் லுஹரிலிருந்து அசர்வரை; பெண்கள் மற்றும் வயோதிகர்களுடன் செல்பவர்களுக்கு அடுத்த நாள் காலை பஜ்ர் வரை உள்ளது.

எங்களுடன் வந்த முஸ்தபாவிடம் வீல் சேர் இருந்தது. அதனால், அதில் மாமனாரை வைத்துத் தள்ளிக் கொண்டு நாம் நடந்தே நமது லாட்ஜுக்கு சென்று விடலாம் என்று அவர் கூறினார். லாட்ஜ் அங்கிருந்து ஒரு 2.5 கி.மீ இருக்கும். வாகனம் பிடிக்க வேண்டும் என்றால் ஒரு 1.5 கி.மீ நடக்கணும். சரி மேற்கொண்டு ஒரு கி.மீ தானே, என்று நாங்கள் மாமனாரை வீல் சேரில் தள்ளிக் கொண்டு எங்க ரூம் மேட்ஸ் ஒரு 15 பேர் குரூப்பாக நடக்க ஆரம்பித்தோம். முஸ்தஃபா எங்களுக்கு வழிகாட்டினார். அதன் படி நடந்தோம்.

அங்கு மினாவின் மஸ்ஜிதான மஸ்ஜிதே கைஃப்ஃபில் இருந்து, வலது புறமாக இருக்கும் குகை பாதை வழியாக வந்தால், அஜீஜியா வந்து விடும். குகை மட்டுமே அரை கி.மீ தூரமாகும். எனினும் அப்போ வாகன போக்குவரத்தை நிறுத்தி இருந்ததால், சுலபமாக நடக்க முடிந்தது. அதுவும் குகை சற்று பள்ளாமாக இருந்தது. அதனால் வீல் சேரை தள்ளுவது எளிதாக இருந்தது. எங்க ரூம் மேட்ஸ், காலித்தும் யாஸரும் மாறி மாறி வீல் சேரை தள்ள, நாங்கள் எளிதாக எங்கள் லாட்ஜை அடைந்தோம்.

மீதி அடுத்த பதிவில்...

-சுமஜ்லா.

5 comments:

Anonymous said...

ஒரு படியாக எல்லா வேண்டுதல்களும் கூடுதலாக நிறைவேற்றிய ஒரு மனநிம்மதியை இத்தருணத்தில் அடைந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். உங்கள் வாழ்நாளில் ஏங்கிக் கொண்டிருந்த இத்தருணங்களில்/முக்கிய கடமைகளில் பலவற்றை நிறைவேற்றிய ஆனந்தப் பெருமூச்சும் விட்டிருப்பீர்கள். பல சிரமங்களை நேர்கொள்ள வேண்டி வந்தாலும் இறைவனிற்கு வேண்டுதல்கள் செய்யும்பொழுதும் அவை எல்லாவற்றையும் முடித்த பின் ஆறுதலாகச் சிந்தித்துப் பார்க்கும் பொழுதும் அவை எல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றும். எதையும் நாம் கஸ்ரப் படாமல் சுலபமாக அடைய முடியாது, அப்படி அடைந்தால் எங்களுக்கு இறைவனின் அருமை தெரியாது. என்ன பிரச்சனையும் சிக்கல்களும் வந்தாலும் நாம் முழுநம்பிக்கையுடன் எம் இலக்கில் அவதானமாக இருந்தால் இறையருளால் நாம் எம் இலக்கைச் சென்றடையலாம் என்பதை உங்கள் பயணத்தின் போது உணரமுடிகின்றது. எல்லாம் இறைவன் செயல்.

அன்புடன் பிருந்தா

SUMAZLA/சுமஜ்லா said...

ஆமாம் பிருந்தா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை; எனினும், இன்னொரு பெரிய குழப்பம் உள்ளது உங்களிடம் பகிர்ந்து கொள்ள. அடுத்த பதிவில் போடுகிறேன்.
-சுஹைனா.

Anonymous said...

அங்கு டெண்டில் தானே தங்கியுள்ளீர்கள்..பிறகு லாட்ஜ் என்று வேறு சொல்கிறீர்களே...அது என்ன..இதை 2 பாகமாக சொல்லியிருக்கலாமோ? குர்பானி தான் கொடுக்க ஏற்கனவே பணம் கட்டியுள்ளீர்கள் பிறகு விருதாசலத்துக்காரர்களிடம் மீண்டும் எதற்கு கொடுத்துள்ளீர்கள்?

Anonymous said...

மக்கள் விட்டுச் சென்ற பொருள்களை அரசாங்கம் அப்புற படுத்துமா?

Anonymous said...

ஹாய் கவின்,
அங்கு டெண்ட்டில் தான் தங்கியிருந்தோம். நான் லாட்ஜ் என்று சொல்வது நாங்கள் மக்காவில் தங்கியிருந்த லாட்ஜை. மினாவில் டெண்ட்டில் இருந்து, மக்காவில் காபா சென்று தவாப் செய்யணும். அதற்கு வழியில் தான் எங்கள் ரூம். அதனால், அங்கு சென்று முடிகளைந்து, குளித்து, இஹ்ராம் களைந்து புத்தாடை உடுத்தினோம். பிறகு தான் ஹரம் சென்றோம். அதைத் தான் அப்படி எழுதினேன்.

அப்போ குர்பானி கொடுக்க பணம் கட்டியது எங்களுக்காக, இப்போ கொடுப்பதாக சொன்னது, முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்காக. இது கட்டாயமல்ல். அவர்களின் மேல் உள்ள பிரியத்தில் கொடுப்பது. மேலும் அவர்கள் தங்கள் உம்மத்துக்காக(தன்னைப் பின்பற்றும் மக்களுக்காக) 100 ஒட்டகம் அறுத்து குர்பானி கொடுத்துள்ளார்கள். அதனால், நாங்களும் எங்கள் நபிக்கு கொடுக்க பிரியப்பட்டோம்.

சரியான கேள்வி. ஆம் மக்கள் விட்டு சென்ற பொருட்களை அரசாங்கம் அப்புறப்படுத்தும். அதற்காக உலகம் முழுவதும் இருந்து, பல்லாயிரம் ஊழியர்களை தற்காலிக பணிக்கு அமர்த்துகிறார்கள்.
-சுஹைனா.