Tuesday, March 24, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 24

நாங்கள் ரூமுக்குத் திரும்பி ஒரு வழியாக செட்டில் ஆனோம். அதிபா, முஸ்தஃபா, காலித், காமிலா குரூப்பில் இதுவரை 11 பேர் ஒன்றாக சமையல் செய்து வந்தனர். அவரவர் சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் எல்லாமே தனித் தனியாகத் தான் கொண்டு வந்திருந்தனர். எனினும் ஒன்றாக சமைத்துக் கொள்வது என்று முடிவு எடுத்து அதன்படி சமைத்து வந்தார்கள். சைத்தானுக்குக் கல் எறியப் போகும் போது, முஸ்தஃபா செய்த குழப்பம் எல்லாருக்கும் தெரியும். அப்போ முஸ்தஃபா மட்டும், லாட்ஜில் தங்கி விட, மற்ற ஆண்கள் எல்லாரும் எங்களுடன் கல்லெறிய வந்து விட்டார்கள். இதனால், அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டுவிட்டது. அதனால் முஸ்தஃபா மற்றும் அதிபா, அவர்களுடன் வந்திருந்த தாதிமா மூவரும் தனி சமையல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

பொது சமையல் மட்டும் ஒத்துக் கொண்டால் பின்னாடி பிரச்சினை வரும் என்று எனக்கு ஊரில் சொல்லி அனுப்பி இருந்ததால், நான் மட்டும் யாரிடமும் கூட்டு சேர வில்லை. எல்லாரும் பொது கிச்சனில் வைத்து சமைத்துக் கொள்வார்கள். அதுவும், வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில் அடுப்புக்கு க்யூ இருக்கும். அப்போ சிறு சிறு பிரச்சினைகளும் வரும். நான் மட்டும் ஹாயாக ரூமிலேயே இண்டக்‌ஷன் அடுப்பில் சமைப்பதைப் பார்த்தால் எல்லாரும் பொறாமைப் படுவார்கள். சில நேரங்களில் என் அடுப்பிலும் வந்து சமைத்து எடுத்துச் செல்வார்கள்.

ஒரு நாள் பூரா ரெஸ்ட் எடுத்தாச்சு. அப்போ அருகில் இருந்த மஸ்ஜிதுக்கு தொழுகப் போய்விடுவார்கள் ஆண்கள். இனி மீண்டும் ஹரம் செல்ல வேண்டும். எந்த அவசரமும் இல்லாமல் காபாவை தரிசித்து, வேண்டிய மட்டும் மனதில் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஹரமை சுற்றிப் பார்க்க வேண்டும். கொஞ்சம் ஷாப்பிங்கும் செய்ய வேண்டும். ஹஜ் முடியும் வரை எந்த பொருளும் வாங்குவதில்லை என்று நாங்கள் முடிவு எடுத்து இருந்தோம். இனி குழந்தைகளுக்கு எதாவது வாங்க வேண்டும்.

அடுத்த நாள் நாங்கள் ரொம்ப தெளிவாகி விட்டோம். களைப்பெல்லாம் நீங்கி விட்டது. காபாவைப் பார்க்கும் ஆவல் மேலோங்கியது. எங்களுக்கான இலவச பஸ் அடுத்த நாள் முதல் தான் மீண்டும் ஆரம்பம் என்று சொன்னார்கள். சரி இன்று ஒரு நாள் டாக்ஸியில் போய்விடலாம் என்று நானும் மச்சானும் மட்டும் டாக்ஸியில் ஹரமுக்குப் போனோம்.

நாங்கள் காலையிலேயே சாப்பாடு செய்து, டிஸ்போசபிள் டப்பாவில் போட்டு ஹரமுக்கு எடுத்து வந்து விட்டோம். நாங்கள் ஹரம் போய் சேர்ந்தவுடன் மதியம் ஆகிவிட்டது. பொதுவாக உணவுப் பொருட்களை ஹரமின் உள்ளே அனுமதிப்பதில்லை. ஒரு சில சமயங்களில் கூட்ட சமயத்தில் செக் பண்ண மாட்டார்கள்.

நாங்கள் போய் சேர்ந்ததும், லுஹர் தொழுகை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. ஹரமின் வாசலிலேயே விரிப்பு விரித்துத் தொழுதுவிட்டு, அங்கேயே அமர்ந்து லன்ச் சாப்பிட்டோம். அப்போ சிறிது சாதம் கீழே சிந்தி விட்டது. சாப்பிட்டு முடித்ததும், நான் அவ்விடத்தை சுத்தம் செய்யலானேன். அதைப் பார்த்ததும் ஒரு ஊழியர் வந்து, எங்களை நகரச் சொல்லி விட்டு, அவரே க்ளீன் பண்ணினார். ஒரு நிமிடத்தில் இடம் பளிச்சென்று ஆகி விட்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். இதே நம்ம ஊராக இருந்திருந்தால்?

கூட்டம் அதிகமாக இருந்ததனால், ஒரு தவாப் மட்டுமே செய்ய முடிந்தது. அங்கு செல்ஃபில் குர்ஆன்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நான் சென்று எடுத்து ஓதினேன். பின் மீண்டும் வைக்கும் போது தவறி கீழே விழுந்து விட்டது. எனக்கு ஒரே மனசங்கடம். அதற்கு பிராயசித்தமாக தர்மம் கொடுப்பது எங்கள் வழக்கம். சரி பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.


ஹரமில் குர்ஆன்கள் செல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் படத்தில் பார்க்கலாம். போட்டோ எடுத்த தேதியும் நேரமும் கூட இருக்கிறது.

மீண்டும் டாக்ஸி பிடிக்க வந்தால், டாக்ஸி கிடைக்கவில்லை. எங்களுக்கான பஸ் அடுத்த நாள் முதல் தான், ஆனால் ஈராக்கியர் பஸ் இன்று முதலே ஆரம்பம் ஆகி இருந்தது. எல்லா பஸ்ஸும் மஅபஸ்ஸல் ஜின் பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து தான் அவரவர் ஏரியாவுக்கு, தனி தனி பஸ் செல்லும். எனவே, மஅபஸ் செல்ல, நாங்கள் ஈராக்கியர் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். அப்போ ஒருவர், எங்களைப் பார்த்து, இந்தியரா என்று ஆங்கிலத்தில் கேட்டார். ஆம் என்றதும், தான் ஓரிரு மாதத்தில் தன் மனைவியுடன் இந்தியா வரப்போவதாகவும், இங்கு உள்ள ஒரு காலேஜில் சேர்ந்து படிக்கப் போவதாகவும் தெரிவித்தார். என்ன கோர்ஸ் என்று கேட்டேன். இங்கிலிஷ் லிட்டரேச்சர் என்று சொன்னார். பூனாவில் என்று சொன்னதாக ஞாபகம். படித்துவிட்டு, அவர் நாட்டில் லெக்சரராக வேலை பார்க்கப் போவதாகவும் கூறினார். நம்ம நாட்டை நினைத்து சற்றுப் பெருமையாக இருந்தது.

மஅபஸ் ஸ்டாண்டில் இறங்கி, அடுத்து எங்க ஏரியாவுக்குப் போகும் இன்னொரு ஈராக்கியர் பஸ் வந்தது. பொதுவாகவே, எங்கள் பஸ்ஸில் அவர்கள் வருவதும், அவர்கள் பஸ்ஸில் நம்மவர் போவதும் சகஜம். அன்று எங்கள் பஸ் இல்லாததால், பஸ்ஸில் ஏறிய எங்களை நிறத்தைப் பார்த்து இறக்கி விட்டு விட்டார்கள். இன்று ஒரு நாள் எங்களுக்கு பஸ் கிடையாது; நாளை முதல் உண்டு என்று எவ்வளவோ சொல்லியும், நாங்கள் கீழே இறங்கித் தான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். முதன்முறையாக எனக்கு ஈராக்கியர் மேல் ஒரு சிறு வெறுப்பு ஏற்பட்டது.

ஒரு கிழவர் ஹரம் பஸ் ஸ்டாண்டிலிருந்தே எங்களைப் பின் தொடர்ந்து வந்தார். நாங்கள் ஏறினால் ஏறுவதும், இறங்கினால் இறங்குவதுமாக இருந்தார். பார்க்க பாவமாக இருந்தது. 80க்கும் மேல் வயது இருக்கும். கடைசியாக நாங்கள் தலைக்கு 5 ரியால் என்று பேசி, ஒரு டாக்ஸி பிடித்தோம். அந்த கிழவரோ, எல்லா டாக்ஸியிலும் 2 ரியால் தான் தருவேன் என்று பேரம் பேசிக் கொண்டிருந்தார். எங்கள் டாக்ஸியிடம் வந்தார். அவரும் எங்கள் ஸ்டாப்பிங்கான அல் ஹனூஃப் பெட்ரோல் பம்ப் தான் என்று சொன்னார். சரி என்று நான் டிரைவரிடம், அவருக்கான பணத்தை நான் தந்து விடுகிறேன்; அவரையும் ஏற்றிக் கொள்ளுங்கள் என்றேன். அவர் ஏற்றிக் கொண்டார்.

அந்த டாக்ஸி டிரைவர் ஒரு கறுப்பர். நன்றாக இங்கிலிஷ் தெரிந்திருந்தது. அவர் என்னிடம் உரையாடியபடி வந்தார். நாங்கள் அந்நாட்டில் நாணயமே பார்க்கவில்லை; எங்கேயும் பேப்பர் கரன்ஸி தான். எங்கள் பிள்ளைகள் வேறு காசு கொண்டு வர கேட்டிருந்தார்கள். அது பற்றி அவரிடம் கேட்டேன். ஆமாம் இங்கு காசு அதிகம் புழக்கத்தில் இல்லை என்று சொன்னார். அவர் மேலும் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சரியப் படுத்தியது.

அவர், அமெரிக்க க்ரீன் கார்டு ஹோல்டராம். அவருடைய மூன்று குழ்ந்தைகளும் அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்க சிட்டிசனாம். அவர் ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங் படித்து விட்டு, கவர்ன்மெண்ட் சர்வீஸில் உள்ளாராம். அவருக்கு ஒரு மாத சம்பளம், 15,000 ரியால்களாம். கறுப்பராக இருந்தாலும் மக்கா தான் பூர்வீகமாம். மக்காவில் சொந்த வீடு உள்ளது என்றார். இப்போ ஹஜ்ஜுக்காக 15 நாள் லீவாக இருப்பதால் பாஸ் டைமாக கார் ஓட்டுகிறாராம். இந்த நேரத்தில் கார் ஓட்டுபவர்களில் பாதி பேர், இப்படி லீவில் பாஸ் டைமாக கார் ஓட்டுபவர்கள் தான் என்றார்.

வெகு நேரம் என்னிடம் சரளமான ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். அவருடைய சம்பளத்தைப் பார்க்கும் போது, நம்மவராய் இருந்தால் இப்படி கார் ஓட்டுவாரா? கார் ஓட்டுவது இருக்கட்டும், முதலில் என்ன பந்தா செய்வார்கள்? என்று தோன்றியது. அந்த கிழவரை பெட்ரோல் பம்பில் இறக்கி விட்டு விட்டு காசு வேண்டாம்(நாங்கள் கொடுப்பதால்) என்று சொன்னதும் அவர் மகிழ்ச்சியாக போய்விட்டார்.

நான் காரோட்டியிடம் சொன்னேன், குர்ஆன் கீழே விழுந்து விட்டது இன்று. அதான் எதாவது தர்மம் செய்ய நினைத்தேன் என்று. அதற்கு அவர், இது என்ன மூடப் பழக்கம் என்று எனக்கு ஒரு பெரிய லெக்சரே கொடுத்து விட்டார். கடைசியாக இறங்கும் போது, ஒரு காசை கொடுத்து, என் ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். காசுக்கு ஹலாலா என்று பெயர். 100 ஹலாலா சேர்ந்தால் ஒரு ரியால். நான் அவர் வாடகையை கிழவருக்கும் சேர்த்துக் கொடுத்து விட்டு, காசை சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டேன். அப்போ தான் முதன்முதலாய் நான் அவ்வூர் காசு பார்க்கிறேன்.

இறங்கி எங்கள் லாட்ஜினுள் நுழைந்தோம். ஹனூஃப் பெட்ரோல் பம்ப் அருகே எங்க லாட்ஜ் இருப்பது தெரியும். ஆனால், கடைசிவரை, ஏன் இப்போ வரை கூட எங்க லாட்ஜ் பேர், எங்களுக்குத் தெரியாது.

சுவாரஸ்யம் தொடரும்.

-சுமஜ்லா.

8 comments:

Anonymous said...

உண்மையிலேயே நாம் வெளிநாட்டவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது மனிதனுக்குள் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்பதுதான். நாம் ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் ஒவ்வொரு சாதி வகுப்பை ஏற்படுத்தி எவ்வளவு இளிவாக நடத்துகின்றோம். மற்றும் ஏழை பணக்காரன் எனும் பாகுபாட்டின் மூலம் நடக்கும் கொடுமைகள், அடக்குமுறைகளும் ஒரு பக்கம். இது எப்போதுதான் மாறுமோ தெரியாது. வெள்ளைக்காரர்கள் எந்த வித்தியாசமும் பார்க்காமல் தாங்களும் தங்கள் பிள்ளைகளும் விரும்பும் வேலையைச் செய்வார்கள். இங்கு ஒரு மருத்துவரின் மகனும் முடிவெட்டியாகவோ அல்லது மலசலகூடம் சுத்தம் செய்பவர்களாகவோ வேலை செய்வார்கள். இதையிட்டு அவர்கள் எம்மைப் போல் வெட்கப்படுவதில்லை.
முன்பொரு தடவை தொலைக்காட்சியில் பார்த்த உண்மை நிகழ்வொன்று எனக்கு இப்பொழுது ஞாபகத்திற்கு வருகின்றது: பிரிட்டிஷ் இளவரசர் சாள்சின் மூத்த மகன் வில்லியம் என்பவர் பாடசாலை ரீதியாக மேற்கொண்ட சுற்றுலா பயணத்திற்கு தன் பாடசாலைத் தோழர்களுடன் சென்றிருந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கென்று வேலைகள் (உதாரணம்= சமைத்தல், துப்புரவு செய்தல், மலசலகூடம் கழுவுதல் போன்றவை) கொடுத்தார்கள். வில்லியமும் எவ்வித தயக்கமும் இன்றி மலசலகூடம் கழுவும் வேலை முதற்கொண்டு அனைத்தையும் செய்தார். இதே எம்மவர்களில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பையனோ பெண்ணோ அவ்விடத்தில் இருந்தால் கண்டிப்பாக்ச் செய்திருக்க மாட்டார்கள்:-(


அன்புடன்
பிருந்தா

Anonymous said...

அந்தக் கறுப்பின ஓட்டுனர் உங்கள் தர்மம் கொடுக்கும் எண்ணம் தேவையில்லாதது என்று என்ன விளக்கம் கொடுத்திருந்தாலும், உங்கள் சங்கடத்தையும் தர்மம் கொடுக்கும் எண்ணத்தையும் இறைவன் உணர்ந்ததால் தான் அதனை நிறைவேற்ற அந்த வயோதிபரை அனுப்பி வைத்திருக்கின்றார் என்று நான் உணர்கின்றேன். இல்லையென்றால் எதற்கு அந்த வயோதிபர் அவ்வளவு தூரமும் உங்களைப் பின் தொடர வேண்டும்? இவ்வுலகில் எதுவுமே காரண காரியமின்றி நடைபெறுவதில்லை. இது நான் என் வாழ்நாளில் கண்ட உண்மை.

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

மிகவும் ந்ன்றாக உள்ளது

Anonymous said...

பிருந்தா,
நீங்கள் சொல்வது போல, எல்லாமே ஒரு காரண காரியத்தோடு தான் நடக்கிறது. அது மனிதனின் சிறு அறிவுக்கு எட்டாது. அந்த கிழவர், நமது நாட்டுக்காரர்தான்;வடநாட்டுக்காரர். பாவம், அவரிடம் அப்போது பணம் இல்லையோ, இல்லை கொடுக்க மனம் இல்லையோ தெரியவில்லை. எனினும், நாங்கள் அவருக்காக பே பண்ணியது, எங்களுக்கு மனநிறைவைத் தந்ததென்னவோ உண்மை.
பேர் எழுத மறந்த அந்த Anonymous யாருப்பா?
-சுஹைனா.

Anonymous said...

இன்டக்சன் அடுப்பு என்றால் என்ன? electric அடுப்பை தான் அவ்வாறு சொல்கிறீர்களா? காரணமின்றி காரியம் இல்லை. உண்மை.உண்மை.

Anonymous said...

அன்பு சுஹைனா! உங்கள் ஹஜ் அனுபவங்களை விடாமல் தொடர்ந்து படித்து வருகிறேன்.ஹஜ் முடிவு வரை வந்துவிட்டதால் உங்களின் தொடர் கட்டுரை நிறைவடைந்துவிடுமேன்னு சின்னக்குழந்தைபோல நினைக்க வருது :) மேலும் எழுதுங்கள்!அப்புறம் முக்கியமா ஒண்ணு உங்களிடம் சொல்லணும்! அந்த டேக்ஸி டிரைவர் சொன்னது சரிதான்!குர்ஆன் கீழே விழுந்துவிட்டால் பரிகாரமெல்லாம் செய்யவேண்டியதில்லை.அதுவும் மூடப்பழக்கத்தில் ஒன்றுதான்! உங்களுக்கு மனதிற்கு சங்கடமாக இருந்தால் "அஸ்தக்ஃபிருல்லாஹ்!" என்று சொல்லிக்கொண்டால் போதும்.இதில் உங்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தாராளமா சொல்லுங்க, என்னால் முடியும்போது பதில் சொல்றேன்.மற்றபடி பிள்ளைகள் நலமா?

Anonymous said...

இண்டக்‌ஷன் அடுப்பு என்றால், காந்த அலைகள் மூலம் செயல்படுவது. கடந்த ஒரு வருடமாகத்தான் இந்தியாவில் கிடைக்கிறது. மக்காவில், தேடிப்பார்த்தவரை தென்படவில்லை. அதில் கொஞ்சமாவது காந்தம் கலந்துள்ள பாத்திரங்கள் மட்டுமே எடுக்கும். உதாரணமாக ஸ்டைன்லெஸ் ஸ்டீல் மற்றும் இரும்பு. மற்ற பாத்திரங்கள் வைத்தால் எர்ரர் மெசேஜ் காட்டும். பார்க்க :http://en.wikipedia.org/wiki/Induction_cooker

இது பார்க்க அடுப்பு போலவே இருக்காது. என்னவோ விளையாட்டு சாமான் போல அவ்வளவு ஹேண்டியா இருக்கும். ஸ்விட்ச் ஆன் பண்ணிவிட்டு அடுப்பைத் தொட்டாலும் சுடாது. பாத்திரம் வைத்தால் மட்டுமே சூடேற ஆரம்பிக்கும்.

கேஸை விட வேகமாக சமைத்துவிடும். நான் இதற்கென ஒரு செட் பாத்திரங்கள் ஹஜ் செல்லும் போது வாங்கினேன். சிலிண்டர் தீர்ந்து விட்டால், வரும் வரை, எனக்கு இந்த அடுப்பு தான் வரப்ரசாதம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அடுப்பின் மேல் ஒரு சிறு பேப்பரை வைத்து அதன் மேல் ஒரு பாத்திரம் வைத்தால், பாத்திரம் சூடேறும். ஆனால் பேப்பர் அப்படியே இருக்கும். கருகாது. அந்த இடத்தில், சூடு வராது. தீ இல்லாத அடுப்பு இது. அதனால் இதை மேஜிக் அடுப்பு என்றும் சொல்வார்கள்.

அஸ்மா, இன்னும் நிறைய இருக்கு எழுத. மதினாவைப் பற்றி எழுதனும். அப்புறம் சில சுவையான விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக்கணும். நீங்கள் சொன்னதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவரவர், நம்பிக்கையைப் பொறுத்த விஷயம்.

என் பிள்ளைகள் நலம். பையனுக்கு லீவு விட்டாச்சு. ரொம்ப போர் அவனுக்கு. அதான் நேற்று சென்று ஒரு கேரம்போர்டு வாங்கி தந்தோம். இனி ஒரு வாரம் பிரச்சினை இல்லை. ஸ்போக்கன் இங்க்லிஷ் சேர்த்து இருக்கிறோம். க்ளாஸ் ஸ்டார்ட் ஆக இன்னும் 15 நாள் இருக்கு. அதுவரை அவனை சமாளிக்க வேண்டும்.

Anonymous said...

ஹாய் சுஹைனா, எப்படி இருக்கிங்க சாரிப்பா பதில் கொடுக்க முடிய வில்லை, மிகவும் நன்றாக உள்ளது, நீங்க செய்த ஹஜ்ஜை நினைக்கும் பொது சந்தோசமாக இருக்கு,நீங்க பட்ட கஸ்டங்களை நினைக்கும் பொது மனதுக்கு கஸ்டமாக இருக்கு,ஆன சுஹைனா இங்கு எங்க பசங்களுக்கு ஓதிக்கொடுக்கும் ஹஜிரத் ஹஜ்ஜீம் உம்ராஉம் தொடர்ந்து செய்ரார்கள்,எத்தனை என்று அவர்களுக்கு தெரியவில்லை,[ரைஹானா]