Monday, April 20, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 33

மதினா கிளம்ப இன்னும் 4 நாட்கள் இருந்த நிலையில், நான் எப்படியாவது ஹஜ்ருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிட வேண்டும் என்று மிக ஆவலாக இருந்தேன். முன்பே பல முறை கேட்டும் மச்சான், கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சம்மதிக்கவில்லை. கூட்ட நெரிசிலில், அவ்விடத்தில், சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட நேரிடுவதுண்டு.

பல முறை முட்டி மோதி பார்த்தும், முடியாமல் திரும்பி விட்டோம். அதே போல ‘ஹதீம்’ என்னும் லாட வடிவ அமைப்பினுள் சென்று தொழுதால், காபாவுக்குள் சென்று தொழுவதற்கு ஒப்பாகும். ஏனெனில், அதுவும் காபாவின் ஒரு பகுதியாகும். இந்த ஹதீமுக்குள் யாரும் போக முடியாதவாறு, அடைத்து வைத்திருந்தார்கள். சற்று கூட்டம் குறைந்ததும், அதை திறந்து விட்டார்கள். நாங்கள் இருவரும் முட்டி மோதி, உள்ளே சென்று, மழைநீர் கீழே விழுவதற்கான தங்கத்தாலான வடிகால், மீஜாபே ரஹ்மத்துக்குக் கீழே நின்று துவா செய்தோம். ஒருவர் முதுகின் மேல் ஒருவர் சஜ்தா செய்யும் அளவுக்குக் கூட்டம், இருந்த நிலையிலும், எப்படியோ இரண்டு ரக்அத் தொழுது விட்டோம்.

கடைசி சில நாட்களில் கூட்டம் குறைந்து விட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது, சற்று திருப்தியாக துவா செய்தோம். ஆனால் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொடுவது தான் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

மாமனார் இதுவரை காபாவைக் கூட தொட்டிருக்கவில்லை. ஆனால், மனம் நிறைய ஆசை இருந்தும், தொட முடியும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை. காலை நேரம் லுஹருக்கு சற்று முன்பாக அவரை ஹரமுக்கு அழைத்துச் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக காபாவை நெருங்கினோம். சரியாக, அப்போ லுஹருக்கான பாங்கு சொல்லவும், இரண்டாவது வரிசையில் நின்று தொழுவதற்கு மாமனாருக்கும் மச்சானுக்கும் தொழுக இடம் கிடைத்தது. பெண்களுக்கு இடம் கிடைத்தாலும், அங்கிருக்கும் அரபிகள் பெண்களை முன்வரிசையில் நின்று தொழ அனுமதிக்க மாட்டார்கள். அதனால், நான் சற்று பின் நின்று கொண்டேன்.

சரியாக தொழுகை முடிந்ததும், ஒரு கூட்டம் சாப்பாட்டுக்கு செல்ல களைந்து விடும். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, மாமனாரை காபத்துல்லாஹ்வை தொட வைத்தேன். ஹதீமுக்கு அடுத்து இருக்கும் சுவர் தான், எளிதாக தொட முடியும். அவ்விடத்தை ஆசை தீர தொட்டு, அவர் பரவசமடைந்தார்.

அடுத்த நாள், நானும் மச்சானும் எப்படியாவது ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டு விட வேண்டும் என்ற ஆசையில், ஹரமில் தங்கிக் கொண்டோம். நடு இரவு, 2 மணியளவில், கூட்டம் கொஞ்சம் அசரும். ஆனால், நாம் நினைப்பது போலவே எல்லாரும் நினைப்பதால், சில சமயங்களில் அதிகக் கூட்டமும் காணப்படும்.

நானும் மச்சானும் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட க்யூவில் நின்றோம். அங்கு காபாவை சுற்றி, ஸ்லோப்பிங் படி போல் மார்பிள்ஸ் கற்கள் பதித்திருக்கிறார்கள். அந்த படி மேல் நான் ஏறி நின்று கொண்டேன், கீழே நிற்கும் மச்சானின் தோள்பட்டையை ஆதரவாக பற்றியபடி. இதே போல, எனக்கு முன்பாக நாலைந்து பெண்கள், தத்தமது, கணவரின் தோளில் கைவைத்தபடி. பிடித்திராவிட்டால், பேலன்ஸ் கிடைக்காது.

க்யூ நகர, நகர எனக்கு பயம் வந்து விட்டது. காரணம், முத்தமிட சென்ற பெண்கள், பலரும் நசுக்கியதால், அலறி அடித்தபடி, வெளியே வந்து விழுகிறார்கள். அதைப் பார்த்ததும் என் கைகளெல்லாம் சில்லிட்டு விட்டது. பேசாம போய்விடலாமானு, மெதுவா மச்சானிடம் கேட்கிறேன். வந்தது வந்தாய், எப்படியாவது தொட்டு விடு, என்று அவர் சொல்ல, நெருங்கிட்டேன்.

தலையை உள்ளே விட்டா, அப்படியே அமுக்கிடுவாங்கன்னு, சும்மா இரண்டு கையாலயும் தொட்டு முத்தமிட்டேன். அட, நல்லா பாருன்னு பின்னால இருந்து மச்சான் சொல்ல, சற்று குனிந்து உள்ளே பார்த்தேன். முதலில் கருநிறமாக தெரிந்தது, பின் சற்று செந்நிறமாக தெரிந்தது. லேசாக ஒரிரு கீறல் தெரிந்தது. கூட்டம் நெருக்க, அபயக் குரல் எழுப்பும் அகதி போல, இரு கைகளையும் வெளியே நீட்டினேன். இரு பெண்கள் என் இரு கைகளையும் இழுத்து மேலே போட்டார்கள். ஏதோ பெரிய சாதனை செய்தது போன்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது.

ஒரு வழியா வெளியில் வந்தேன். மச்சான் நான் நசுங்கி விடாமல் இருக்க என்னை ஃபாலோ பண்ணியதால், வரிசையில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். அப்புறம், மீண்டும் வரிசையில் நின்று அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள்.

பின், மிகுந்த பிரயாசையுடன், காபாவின் தங்கக் கதவைத் தொட்டேன். இறைவனின் வீட்டின் கதவைத் தட்டுவது போன்ற ஃபீலிங்குடன், கதவைப் பிடித்தபடி துவா செய்தேன். காபாவில் அஸ்வத் கல் இருக்கும் மூலைக்கும் தங்கக் கதவுக்கும் இடையேயான நாலடி இடத்துக்கு முல்தஜிம் என்று பெயர். நம் ப்ரார்த்தனை நிறைவேறும் இடங்களில் இதுவும் ஒன்று. அவ்விடத்தில் நம் வலது கன்னத்தை அச்சுவரில் வைத்தபடி துவா செய்தால் நிச்சயம் கபூலாகும் என்று நபிகள் நாயகம்(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.

கீழே படத்தில், தங்கக் கதவையும், முல்தஜிம் பகுதியையும் பார்க்கலாம். ஹஜ்ருல் அஸ்வத் கல், மனிதத் தலைகளால் மறைக்கப்பட்டுள்ளது. காபாவின் திரையில் ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று நெருக்கமாக அரபியில் எழுதப்பட்டிருப்பதை க்ளோசப்பில் பார்க்கலாம்.
ஹஜ் முடிந்து சில நாட்களில், கட்டுமானப் பணிகள் ஆரம்பம் ஆவதால், ஒரு சில இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விடுகிறது. அதில் சஃபா மர்வா குன்றும் ஒன்று. அவ்விடத்துக்கு மறைப்பு ஏற்படுத்தப் படுகிறது. அதாவது, குன்று இருக்கும் இடத்துக்கு மட்டும் தான், முழுப்பகுதிக்கும் சேர்த்து அல்ல. அதனால் சயீ செய்வது பாதிக்காது. அதே போல இரண்டாவது மாடிக்கும் செல்ல சிறிது நாட்களுக்குப் பின் அனுமதிக்கவில்லை. நாம் கடைசியில் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தால், எடுக்க முடியாமல் போயிருக்கும்.

கடைசி சில நாட்களில், எல்லா பொருட்களின் விலையும் சற்று குறைந்து காணப்படும் என்பதால், மேலும் கொஞ்சம் ஷாப்பிங் செய்தோம், என்றாலும், வெரைட்டி இருக்காது, பல பொருட்கள் ஸ்டாக் தீர்ந்திருக்கும்.

ஹஜ் முடிந்த சில நாட்களில், அங்கு பெரிய காம்ப்ளக்ஸ் கடைகளில், நம்மூர் ஆடித் தள்ளுபடி போல் தள்ளுபடி போடுகிறார்கள். தள்ளுபடி போகவே, ஒரு சில பொருட்களைத் தவிர மீதியெல்லாம் நம்மூருக்கு பார்க்கும் போது, விலை அதிகமாகத் தான் இருக்கும். பின் தாவூது போன்ற சூப்பர் மார்க்கட்டுகளைத் தவிர்த்து விட்டு, முக்கில் இருக்கும் மளையாளர் கடைகளில் பொருள் வாங்குபவர் புத்திசாலி.

எல்லாப் மளிகை, காய்கறி பொருட்கள் எல்லாம் அப்படியே நம்மூர் போல இரண்டு மடங்கு என்று கொண்டால், சரியாக இருக்கும் கணக்கு. பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி போன்றவற்றை, அப்படியே, ஒயர் பையில் 4,5 கிலோ இருக்கும் முழு அளவையும் எடுத்து பிரித்துக் கொண்டால், சீப்பாக இருக்கும். முட்டையின் விலை ஒரு ரியாலுக்கு இரண்டு, ஒரு கிலோ ஃப்ராஜன் சிக்கன் சுமார் 15 ரியால், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 10 ரியால் என்பதாக விலை இருக்கும்.

குபூஸ் என்ற ரொட்டிகள் ஒரு ரியால் அல்லது அரை ரியாலுக்கு கிடைக்கும். அங்கு கிரேவி வாங்கினால் ரொட்டி இரண்டு ஃப்ரீயாக தருவார்கள். அதனால், அதை சரியாக கேட்டுவிட்டு, தேவைப்பட்டால் கூடுதலாக ஆர்டர் பண்ணினால், வேஸ்ட் ஆகாது.

அடுத்து வரும் ஒரு அட்வென்சருடன், மக்கா பயணத்தை முடித்து நாம் மதினா செல்வோம்.

-சுமஜ்லா.

2 comments:

Biruntha said...

நீங்கள் கூறிய அந்த மக்கள் நெரிசலை தொலைக்காட்சியில் பார்த்துப் பயந்திருக்கின்றேன். மூச்சு விடக்கூட முடியாதவாறு அதிக நெரிசலாக இருக்கும். அந்த சன நெருக்கடியில் தொழுகை செய்து மீண்டு வருவதென்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த நெருக்கடியிலும் இறையருளால் உங்கள் விருப்பங்கள், வேண்டுதல்கள் நிறைவேறிவிட்டன. காபாவை நெருங்கியிருக்காவிட்டால் உங்கள் மாமாக்கு கடைசி வரை ஒரு மனக்கவலை இருந்துகொண்டிருக்கும். எல்லாமே இறையருளால்தான் சாத்தியமாகும்.

அன்புடன்
பிருந்தா

சுஹைனா said...

தொழுகை செய்வது எல்லாம் சுலபம், ஏன் காபாவை தொடுவது கூட, ஹஜ் முடிந்த பின் சுலபம் தான். ஆனால் இந்த அஸ்வத் கல்லை முத்தமிடுவது தான் மிகக் கடினம். அதை முத்தமிடுவது கட்டாய கடமை அல்ல, என்றாலும் ஆசையால் ஏற்படும் உந்துதலின் காரணமாக, எல்லாரும் முத்தமிட விரும்புவர்.