Wednesday, June 24, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 1

பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தது போல, ’பே’னு பார்த்துட்டு இருக்கேன், நான். ஜித்தா பன்னாட்டு விமான நிலையம். அந்நிய மண்ணில் காலடி வைத்ததும் ஒரு பரவச உணர்வு, முதல் ஃபாரின் டிரிப் என்பதால். இறை இல்லத்தை காணப் போகும் ஆவல்.

கன்வேயர் பெல்டில் வந்து கொண்டிருந்த லக்கேஜ்களை இழுத்து இழுத்து போட்டுக் கொண்டிருந்தோம். இந்த கடைசியில் ஆரம்பிக்கும் பெல்ட் ஒரு சுற்று சுற்றி அந்த கடைசியில் போய் முடிகிறது. நாங்கள் ரொம்ப புத்திசாலிகள் போல பெல்டின் ஆரம்பித்தில் நின்று கொண்டு ஒவ்வொன்றாக இழுத்து போட்டு, பெல்டின் முடிவில் இருக்கும் ஸ்கேனிங் கவுண்டருக்கு தூக்க முடியாமல் தூக்கி சென்றோம். வழி நெடுக லக்கேஜை தாண்டி தாண்டி செல்ல வேண்டும் என்பதால் சக்கரத்தில் இழுத்து செல்ல முடியவிலை. ஒரு வழியாக கொண்டு வந்து சேர்த்த பிறகு பார்த்தால், ஒருவர் முன்னாடி எடுத்து வைத்த தன் லக்கேஜை மீண்டும் கன்வேயர் பெல்டில் வைத்து விட அதை முடியும் இடத்தில் இருந்த அவர் நண்பர் எடுத்துக் கொண்டார். அட! இப்படி ஒரு வழி இருக்கா? விழி பிதுங்க கஷ்டப்பட்டு சுமந்தோமே!

லக்கேஜை எண்ணினால், ஒரு சூட்கேஸ் மிஸ்ஸிங். அது என் மாமின்(மாமனார்) சூட்கேஸ். அது அவரின் ஹேண்ட் லக்கேஜாக வைத்திருந்தோம். ஆனால், எடை சரியாக இருந்தும், அளவு சற்று பெரியதாக இருந்ததால், அது எங்களிடமிருந்து வாங்கப்பட்டு கார்கோவில் போடப்பட்டது. ஃபிளைட் ஏறும் தருவாயில் இறுதியாக போட்ட பொருளாதலால், இறக்கும் போது முதலிலேயே இறக்கி இருக்க வேண்டும். ஆனால் எங்குமே காணவில்லை. சரி பாதி சாமான்கள் வெளியே போகட்டும், அப்போ தான் கிடைக்கும் என்று உட்கார்ந்து கொண்டோம். சிறிது நேரத்துக்கு பின், மலை போல் குவிந்திருந்த சாமான்களுக்கு அடியில், சிக்கிய சுண்டெலியாக எங்களைப் பார்த்து சிரித்தது, அந்த புளூ கலர் சூட்கேஸ். அதை எடுத்து கன்வேயர் பெல்டில் நான் வைக்க, அந்த கடைசியில் நின்றிருந்த மச்சான் அதை எடுத்துக் கொள்ள, அட! ஷார்ட் கட் மெத்தடை நாமும் பின்பற்றிய மகிழ்ச்சி எனக்கு.

ஒரு ஆளுக்கு கவர்ன்மெண்ட் கோட்டா மூலம், அதாவது ஹஜ் கமிட்டி மூலம் போனால், 35 கிலோ எடுத்து செல்லலாம். அது போக தலைக்கு 10 கிலோ (அதற்காக தலையில் வைத்தெல்லாம் செல்லக் கூடாது) கைப்பை தன்னுடன் விமானத்தில் வைத்துக் கொள்ளலாம். நாங்கள் 3 பேருக்கு 105 கிலோ மொத்தம், மற்றும் 30 கிலோ ஹேண்ட் லக்கேஜ். நாங்கள் அரிசி, பருப்பு, அடுப்பு, துடுப்பெல்லாம் எடுத்து செல்வதால் அந்த எடை வந்து விடும். உடையக் கூடிய பொருட்கள் இருந்தால் ஹேண்ட் லக்கேஜில் போட்டுக் கொள்ளனும். அதிலும் ஒரு சூட்கேஸ் 23-24 கிலோவை தாண்டக் கூடாது என்பது விதி எனவே சூட்கேஸ் பிடிக்கும் அளவுக்கு சாமான்களை அடைக்க முடியாது.

எங்கள் சாமான்கள் கீழ்கண்டவாறு எடை வந்தது.
மாம் துணி சூட்கேஸ் -----------------------------------10(ஹேண்ட் லக்கேஜ்)
எங்கள் இருவரின் துணி சூட்கேஸ் ------------------------17
அடுப்பு, குக்கர், பாத்திரங்கள், மற்றும் சமையல் பொருட்கள்அடங்கிய டிராலி சூட்கேஸ் ---------------------26
அரிசி மற்றும் MTR ரெடிமேல் ஃபுட் அடங்கிய பேக் -----------25
மளிகை சாமான்கள் அடங்கிய டிராலி பேக் ---------------24
தீனி வைத்திருந்த சிறிய பேக் ---------------------------12
சோப்பு, சீப்பு, கண்ணாடி, லொட்டு லொசுக்கு, குரான், மற்றஹஜ் விளக்க புத்தகங்கள் அடங்கிய முதுகில் மாட்டும் பை---8(ஹேண்ட் லக்கேஜ்)
ஆளுக்கு ஒரு செட் துணி, மற்றும் சால்வை, இஹ்ராம் துணி அடங்கிய முதுகில் மாட்டும் பை------------8(ஹேண்ட் லக்கேஜ்)
மொத்த எடை ஹேண்ட் லக்கேஜ் தவிர்த்து --------- 105 கிலோ
அப்பாடா கச்சிதமா 105 கிலோ வந்திடுச்சு எங்களுக்கு, அதுவும் கடைசியில் மனசில்லாமல், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உப்பு, 2 லிட்டர் எண்ணையை வேண்டாமென்று வெளியே எடுத்து வைத்த பின்பு.

ம்... அப்புறம் சாமான்களை தூக்கி ஸ்கேனிங் மெஷினில் போட்டோம். ஒவ்வொன்றாக பெல்ட்டில் நகர்ந்து ஸ்கேனிங் ஆகி வெளியே வந்தது. பிரிக்க சொல்லவில்லை, நல்ல வேளை எந்த பிரச்சினையும் வரவில்லை. ஒரு 30 அடி தூரத்தில் வண்டி நின்றிருந்தது. அப்புறம் என்ன? மீண்டும் சுமக்க வேண்டியது தான் வண்டி வரை.

நம்ம ஊர் குப்பை வண்டி மாதிரி, 4, 5, வண்டிகளை ஒன்றோடு ஒன்றாய் கோர்த்து கொண்டு போய் ஒரு ஹாலில் கொட்டி விட்டார்கள். ஹாலில் நிறைய இருக்கைகள், பாத்ரூம் எல்லாம் இருந்தது. காலைக்கடன்களை முடித்து மீண்டும் சாமான்களை பொறுக்கி எடுத்து நிமிர்ந்தால், வயிற்று கடிகாரம் மணி அடிக்கிறது. டைம் அதிகாலை 4 மணி. ஃபிளைட்டில் கொடுத்த பிரியாணி மற்றும் கேக், கூல்ட்ரிங்க்ஸ் கைவசம் இருந்தது; அதை சாப்பிட்டோம்.

அங்கு இருந்த ரீடெயில் அவுட்லெட்டில், ஆளுக்கொரு மொபைலி கம்பெனி சிம்கார்டு வாங்கி போட்டுக் கொண்டோம். ஊருக்கு போன் செய்து நல்லபடியாக வந்து சேர்ந்த தகவலை சொன்னோம்.
அப்போ இன்னொரு வண்டியில் பல பேருடைய பொருட்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அட, மீண்டும் வண்டி வரை சுமக்கனுமா? பார்த்தேன் தூரத்தில் ஒரு டிராலி காலியாக. அதைக் கொண்டு வந்து எல்லா சாமான்களையும் அதில் ஏற்றினேன். அதைப் பார்த்து மற்றவர்கள், “அட டிராலி எங்க கிடைச்சுது” என்று கேட்டுவிட்டு ஆளுக்கொன்றாய் எடுத்து வரப் போனார்கள். எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு மச்சான் தலைவலிக்குது என்று கூறிவிட்டு ஒரு சோபாவில் போய் தூங்கிவிட்டார்.

35, 35 என்று ஒருவர் ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தார். நான் சாமான்களை டிராலியில் அவரருகில் தள்ளிச்சென்றதும், என் பாஸ்போர்ட்டைப் பார்த்துவிட்டு, உங்கள் முஅல்லிம் (வழிகாட்டி) நம்பர் 27. எனவே சிறுது நேரம் காத்திருங்கள் என்று கூறிவிட்டார்.
மனதில் இனம் புரியாத சந்தோஷத்தோடு, தூக்கத்தை மறந்த விழிகளோடு, இனி வரும் நாட்களின் புதுமைகள் நோக்கி, புதிய ஆசைகளை மனதினில் தேக்கி, நெடுநாள் கனவு நனவாகும் இன்பத்தில், மக்கா செல்லும் பஸ்ஸுக்காக ஜித்தா பன்னாட்டு விமான நிலையத்தில் காத்திருக்கிறேன்.

சுமஜ்லா

6 comments:

இலா said...

சுமஜ்லா பிளாக் நல்லா இருக்கு முகப்பு

Anonymous said...

நன்றி இலா, இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன் முடியவில்லை.

Jaleela Kamal said...

சுஹைனா அஸ்ஸலாமு அலைக்கும்.
ரொம்ப அருமையா சொல்லி கொண்டு போகிறீர்கள்.
அடுத்து வரும் பதிவுகலையும் படிக்க ஆவலாய் உள்ளேன்.
ஜலீலா பானு.

Anonymous said...

ஹாய் சுஹைனா,
புது பிளாக் நல்லா இருக்குபா.வாழ்த்துக்கள்!கீக்கிரம் கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலை முடிந்ததும் உங்கள் அடுத்த பாகங்களை காண ஆவலாய் உள்ளோம்!

மஸ்தூக்கா said...

ஹஜ பயண அனுபவங்கள் கட்டுரை கண்டேன். மிகவும் நன்றாக உள்ளது.
எமது ஹஜ் பயண அனுபவங்களை
நூலாக வெளியிட்டுள்ளேன். எமது வலைப்பதிவிலும் பதித்துள்ளேன். தாங்கள் படித்துப் பார்த்து குறை நிகைளை சுட்டிக் காட்டுங்கள்.
தங்கள் வலைப்பதிவு மிகவும் பயனுள்ளது.
http://tamilmuslimlibrary.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D

எமது பிற வலைப்பதிவுகள்
www.masdooka.blogspot.com
www.tamilmuslimlibrary.blogspot.com

Nassia said...

hi i read all ur 42 blogs . Very interesting.. Hajj seyum aasaiyai adhigarikum vagaiyil ulladhu.. Vaazhthukkal..