மக்கா செல்லும் பஸ்ஸுக்காக காத்திருக்கும் போது மனம் பின்னோக்கிச் சென்றது.
நாங்கள் 2007ம் வருடமே ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் கிடைக்கவில்லை. காரணம், மக்காவில், ஒரு சேர 40,50 லட்சம் மக்கள் ஹஜ் சமயத்தில் கூடுவதால், அதற்கேற்ப சவூதி அரசாங்கம், தங்குமிடம், குடிநீர், சாலைவசதி, போக்குவரத்து போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டுமல்லவா? அதனால், ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நாட்டின் இஸ்லாமியர் ஜனத்தொகை அடிப்படையில் கோட்டா வைத்திருக்கிறார்கள். அதுபோல இந்தியாவிலிருந்து சுமார் 1.5 லட்சம் பேருக்குத் தான் அனுமதி. அதுவும் நம்ம தமிழ் நாட்டுக்கு சுமார் 3500 சீட் தான். எனவே, அதிகம் பேர் விண்ணப்பிக்கும் போது, பாரபட்சம் கூடாதென்று, குலுக்கல் முறையைப் பின்பற்றுகிறார்கள்.
2007ம் வருடக் குலுக்கலில் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஒரு சில நோய் உள்ளவர்களுக்கு ஹஜ்ஜுக்கு செல்ல அனுமதி இல்லை. அதில் இருதய நோயாளியும் ஒருவர். அது எனக்குத் தெரியாமல், நான் டாக்டரிடமிருந்து, ‘இவர் இருதய நோயாளி ஆதலால், பக்கமாக அக்கமடேஷன் தாருங்கள்.’ என்று என் மாமனாருக்கு ஒரு லெட்டர் வேறு வாங்கி அப்ளிகேஷனுடன் அனுப்பி வைத்தேன். அதுவும் கூட சீட் கிடைக்காததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இறைவன் செய்வது எல்லாமே நல்லதுக்குத் தான். மறைவான விஷயம் நமக்குத் தெரியாது. போனவருடம் நாங்கள் சிறு சிறு அறைகள் கொண்ட ஓட்டு வீட்டில்(அதுவும் சொந்த வீடு தான்) குடியிருந்தோம். அப்போ தான் பக்கத்தில் பெரிதாக வீடு கட்ட ஆரம்பித்து இருந்தோம். அவ்வீட்டிலிருந்து கிளம்பி இருந்தால், லக்கேஜ் வைக்கக் கூட சிரமமாக இருந்திருக்கும். மற்றபடி வரும் கெஸ்டை நல்லபடி உட்கார வைத்து உபசரிப்பதென்பது வெகு சிரமமாய்ப் போயிருக்கும். இந்த வருடம் கிடைத்ததால், நாங்கள் புது வீட்டிலிருந்து கிளம்ப, வீடு பெரியதாக இருப்பதால், மிக சவுகரியமாக இருந்தது.
2007ம் வருடம் நாங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸுக்கு விண்ணப்பித்து இருந்தோம். அப்போ கையில் பணம் தாராளமாக இருந்தது. ஆனால் டிக்கட் கிடைக்கவில்லை. ஆனால், இந்த வருடம் வீடு கட்டியதால், பணம் டைட். அதனால் தேர்ட் கிளாஸ், அதாவது அஜீஜியா வகுப்புக்கு விண்ணப்பித்தோம். ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ் என்பதெல்லாம், காபாவிலிருந்து உள்ள தூரத்தின் அடிப்படையில் தானே தவிர மற்றபடி ரூம் வசதி, சவுகரியங்களில் எந்த குறைபாடும் இருக்காது என்று விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஃபர்ஸ்ட் கிளாஸுக்கு கட்ட வேண்டிய கட்டணம் 97,000 ரூபாய் ஒரு நபருக்கு. அதற்கான தங்குமிடத்தின் தூரம் காபாவிலிருந்து அதிகப்பட்சம் சுமார் 3 கி.மீ வரை. செகண்ட் கிளாஸுக்கு, கட்டணம் 95000 ரூபாய். தூரம் சுமார் 5 கி. மீ. அஜிஜியா வகுப்புக்குக் கட்டணம் ரூபாய் 86,500. தூரம் சுமார் 7 கி.மீ. ஆனால் அஜிஜியா வகுப்புக்கு மட்டும் இலவச போக்குவரத்து வசதி உண்டு. மற்ற வகுப்புகளுக்கு இல்லை.
இந்த கட்டணம், மக்காவில் 30 நாட்கள் மற்றும் மதினாவில் 10 நாட்கள் தங்குமிட வாடகை, போகவர ஃபிளைட் டிக்கட், கையில் தரப்படும் அந்நியச்செலாவணித் தொகை எல்லாம் சேர்த்தது. எந்த வகுப்பாக இருந்தாலும் சரி, போகும் போது ஏர்போர்ட்டிலேயே, அந்நிய செலாவணிக்காக 2100 ரியால் ( ஒரு ரியால் = 13 ரூபாய்) நம் கையில் கொடுத்து விடுவார்கள். அதுவே ஒருவருக்கு, செலவு போக மீதியாகும். வேண்டும் சாமான் வாங்கிக் கொள்ளலாம். மேற்கொண்டு பணம் கொண்டுப் போவதென்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
நாங்கள் 3 பேருக்கு மொத்தம் 30,000 மிச்சம் என்பதாலும், இலவச போக்குவரத்து உண்டு என்பதாலும் அஜிஜியாவைத் தேர்ந்தெடுத்தோம். 2007ம் வருடம் மொத்தம் வந்த சுமார் 6000 அப்ளிகேஷனில் இருந்து சுமார் 3500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இந்த வருடமோ மொத்தம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்கள். ஆனால் அதே 3500 பேருக்குத் தான் அனுமதி. எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை. ஹஜ்ஜுக்கு வைத்திருந்த பணத்தை ஷேர் மார்கட்டில் போட்டு அது வேறு பாதியாகக் குறைந்து போயிருந்தது. சீட் கிடைத்தாலும் பணம் கட்ட முடியுமா தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் என்று ஒருவன் இருக்கிறானே !
ஒரு நாள் என் தம்பி போன் செய்தான். அக்கா ஹஜ் குலுக்கல் ரிசல்ட் வந்திருச்சு என்றான். என் நம்பர் TN 363-3-0 என்பதை சொல்லி நெட்டில் பாருடா என்றேன். சரி பார்க்கிறேன், கிடைத்திருந்தால் எனக்கு என்ன தரே? என்று கேட்டான். உன் எதிர்காலம் சிறப்பா அமைய இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன் என்று கூறினேன். அப்போ முதலில் அதைச் செய், உனக்குக் கிடைத்து விட்டது என்றான். உடனே நான் சந்தோஷ மிகுதியில் பெருங் குரலில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். நான் அழும் சப்தம் கேட்டு என்னவோ ஏதோவென்று ஓடிவந்த என் மாமனாருக்கும், விஷயம் தெரிந்ததும் ஆனந்தத்தில் கண்ணீர் வந்து விட்டது. உடனே என் கணவர் மற்றும் பெற்றோருக்கு போனில் தெரிவித்தேன். எல்லோரும் உணர்ச்சி மிகுதியால் ‘லப்பைக்’ என்னும் புனித மந்திரத்தை ஓத ஆரம்பித்தோம்.
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்லப்பைக் லாஷரீகலக லப்பைக்இன்னல் ஹம்த வந்நிஃமத்த லகவுல் முல்க்லாஷரீகலக்.”
இதன் பொருள் “ஆஜராகிவிட்டேன், இறைவா உன் சந்நிதியில் ஆஜராகி விட்டேன்” என்பதாகும்.
இறைஇல்லமாம் காபா என்றழைக்கப்படும் காபத்துல்லாவை, பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் கட்டி முடித்தபின், இறை கட்டளைப்படி, அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்கள். அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மட்டுமல்லாது, இன்னும் பிறக்காத ஆன்மாக்களும் கேட்கும்படி இறைவன் செய்தானாம். அப்போ யாரெல்லாம் அந்த அழைப்புக்கு லப்பைக் என்று பதிலளித்தார்களோ, அவர்களெல்லாம் ஹஜ் செய்வார்கள் என்பது இஸ்லமியர்களின் நம்பிக்கை.
‘லப்பைக்’ என்ற அந்த புனித மந்திரத்தை நான் வாய்விட்டு உணர்ச்சி ததும்ப ஓதினேன். பிறகு எங்கள் ஊரில் அப்ளிகேஷன் போட்ட எல்லாருக்கும் போன் செய்து யார், யாருக்கு கிடைத்திருக்கிறது என்று விசாரித்தேன். பல பேருக்குக் கிடைக்கவில்லை. அதுவும் எங்கள் ஏரியாவில் 50,60 பேர் விண்ணப்பித்து இருந்தும், எங்களுக்கு மட்டுமே கிடைத்திருந்தது. மனம் இறைவனுக்கு நன்றி செலுத்தினாலும், பணம் எப்படி ரெடி பண்ணுவது என்ற கவலையும் உடன் இருந்தது.
27, 27 என்று ஒருவர் கத்தியதும், அட ! நம்ம முஅல்லிம் நம்பர் என்று தூங்கும் மச்சானை எழுப்பி, எங்கள் லக்கேஜுகளை முஅல்லிமின் வண்டியில் ஒப்படைத்து விட்டு, மக்கா செல்லும் பஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அப்பொழுது மணி அதிகாலை 5.30.
சுமஜ்லா
14 comments:
தொடர்ந்து எழுதுங்கள். வரவேற்கிறோம்
fine
படித்தேன், ரசித்தேன்
சுஹைனா அஸ்ஸலாமு அலைக்கும்.
அடுத்து வரும் பதிவுகலையும் படிக்க ஆவலாய் உள்ளேன்.
ஜலீலா பானு.
இன்று மாலைக்குள் அடுத்தது போட்டு விடுகிறேன். நான் ப்ளாக் தொடங்குவது குறித்து எழுதலாம் என்று இருக்கிறேன். www.sumazla.blogspot.com பாருங்கள்.
எல்லாம் நன்மைக்கே
சுஹைனா உங்கள் புனித பயண்ம் கட்டுரை மிகவும் அருமை அடுத்து பதிவு காண ஆவல்
சுஹைனா ரொம்ப கொண்டு போறீங்க. ஹஜ் பற்றி படிப்பது சந்தோஷமா இருக்கு. அடுத்த பதிவை விரைவில் ப்ளாகில் போடுங்க
ரொம்ப நல்ல கொண்டு போறீங்க
welldone suhainaa,best of luck..../ ALLAHH BLESS ALL.
from raihana.uk
Maasha Allah.
continue yr pilgrim message.
Allah qabool yr Haj as "Hajjen mabroor"
pray for us.
வாழ்த்தளித்த உள்ளங்களுக்கு நன்றிப்பா.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)!சுஹைனா!நலமா? முதலில் அறுசுவையில் உங்களுடன் பேசுவதற்கு ஒரு பதிவு கொடுத்திருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லையென நினைக்கிறேன். உங்களின் ஹஜ் பற்றிய அனுபவ விளக்கங்கள் அருமையாக உள்ளன. நீங்கள் விளக்கியுள்ள ஒவ்வொரு கட்டமும் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும், ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கும், மொத்தத்தில் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக அமையும், இன்ஷா அல்லாஹ்! உங்கள் பணி தொடர இறைவனை இறைஞ்சுகிறேன். எங்களுக்கும் ஹஜ் பாக்கியம் விரைவில் கிடைப்பதற்கு துஆ செய்யுங்கள்!வஸ்ஸலாம்!
By, அஸ்மா.
நிச்சயம் துவா செய்கிறேன் அஸ்மா. எதிர்ப்பு வந்த நேரத்தில் என் எழுத்தைப் படிக்க இத்துணை பேரா என்று சந்தோஷமாக உள்ளது.
//“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்லப்பைக் லாஷரீகலக லப்பைக்இன்னல் ஹம்த வந்நிஃமத்த லகவுல் முல்க்லாஷரீகலக்.”
இதன் பொருள் “ஆஜராகிவிட்டேன், இறைவா உன் சந்நிதியில் ஆஜராகி விட்டேன்” என்பதாகும்.//
அருமை
Post a Comment