Friday, February 13, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 11

முதன்முதலாக, மூவரும் ஹரமுக்குப் போனோம். முதல் உம்ராவை முடிக்க வேண்டும், இப்பொழுது. முதலில் காபாவை ஏழு முறை சுற்ற வேண்டும். கூட்டம் குறைவாக இருந்தால், சுற்று சிறியதாக இருக்கும். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால், காபாவிலிருந்து, கொஞ்சம் தூரம் தள்ளி சுற்றுவதால், சுற்று பெரியதாக இருக்கும். ஏழு சுற்று சுற்றி முடித்தால், கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டர் ஆகி விடும். பிறகு சயீ என்னும் தொங்கோட்டம் ஓடினால், மீண்டும் 3.5 கிலோ மீட்டர் ஆக மொத்தம் 5 கிலோ மீட்டர் நடக்கணும்.

நடக்க இயலாதவர், மற்றும் வயோதிகர்களுக்கு, வீல் சேரில், சுற்ற காபாவை சுற்றி உள்ள வளாக மாடியில், தனிப்பாதை உண்டு. ஆனால், அங்கு நடந்து சுற்றினால், சுற்று மிகவும் பெரியதாக இருக்கும்.

வீல் சேருடன், நிறைய கூலி ஆட்கள், ஹரமில், பாபு ஸலாம் வாசலுக்கு வெளியே இருப்பார்கள். கூலி கொடுத்தால், அவர்கள் தங்களுடைய வீல் சேரிலேயே நம்மை உட்காரவைத்து, அவர்களே தள்ளி, நம் உம்ராவை பூர்த்தி செய்ய வைத்து விடுவார்கள்.

நான், மாமுவிடம் சொன்னேன். ‘உங்களால், சுமார் 5 கி.மீ, எல்லாம் நடக்க முடியாது. அதனால், கூலி ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று. ஆனால், அவர் ஆர்வக் கோளாறால், இல்லை நான் நடக்கிறேன் என்று சொல்ல, மூவரும் ஹரமின் உள் வாசலில், இறங்கினோம்.

அங்கு கூட்டம் அதிகம் உள்ள நாட்களில், தொழுக இடம் கிடைக்காது என்று ஒரு அரை மணி நேரம் முன்பே இடம் பிடித்து மக்கள் உட்கார்ந்து கொள்வர்கள். உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும், காபாவை நோக்கித் தான் தொழுக வேண்டும். இங்கு இந்தியாவுக்கு, மேற்கு திசையில் காபா இருப்பதால், மேற்கு நோக்கித் தொழுகிறோம். ஆனால், அங்கு காபாவின் முன் நாற்புறமும் தொழுகலாம் என்பதால், காபாவை சுற்றி, சுற்றி ரிங் போல வட்டமாக அமர்ந்திருப்பார்கள். அதாவது concentric circles ஆக solar system போல. அதில் ஒவ்வொரு சர்கிளையும் சஃப்(row) என்போம். காபாவுக்கு நெருக்கமாக உள்ளது முதல் சஃப், அடுத்தது, இரண்டாவது சஃப், இறுதியில் உள்ளது கடைசி சஃப். இப்படி, பல சஃப்ஃபில், மக்கள் அமர்ந்திருந்ததைத் தாண்டித் தாண்டி கஷ்டப்பட்டு, நாங்கள் மூவரும் காபாவை நோக்கி முன்னேறினோம். இதில் இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். நாம் காபாவை ஆண்டிக் க்ளாக் வைஸில் சுற்றணும். இருந்தாலும் முதல், சுற்றை ருக்னுல் ஹிந்த் எனப்படும் ஹஜ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்டிருக்கும் மூலை இருகும் திசையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

காபாவின் சுற்றுப் பாதையில், சுமார் முப்பதடி தூரம் வரை 24 மணி நேரமும் மிகவும் கூட்டமாக இருக்கும். எனவே, முப்பதடி தள்ளித் தான் நாம் சுற்ற முடியும். இல்லாவிட்டால் போட்டு நசுக்கி விடுவார்கள். ஹஜ்ருல் அஸ்வத் இருக்கும் திசைக்கு அடையாளமாக, அதற்கு நேர் எதிர்புறம், இருக்கும் வளாகச்சுவரில், பச்சை ட்யூப் லைட், அடையாளத்துக்குப் போட்டிருப்பார்கள்.(படத்தில் இருப்பது தான் பச்சை லைட்.) அந்த பச்சை விளக்கு யுனீக்காக(unique) இருப்பதால், யாராவது, தவாப் (காபாவை சுற்றுவதற்குப் பெயர்) சுற்றும் போது தொலைந்து போய்விட்டால், அவ்விடத்துக்கு வந்து விடும்படி மூவரும், ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம்.

இஹ்ராம் உடையில் தவாப் செய்யும் போது, ஆண்கள் தனது வலது தோள்புஜம் வெளியில் தெரியுமாறு(இழ்திஃபா செய்தல்) மேல் வஸ்திரத்தைப் போட்டுக் கொள்ளணும். ஆண்கள் மட்டும் முதல் மூன்று சுற்று மட்டும் சற்றுக் குதித்து குதித்து ஓடணும். இதற்கு ரமல் என்று பெயர். பெண்களுக்கு ரமல் இல்லை.

பல சஃப்களைத் தாண்டித் தாண்டி, மிகவும் கஷ்டப்பட்டு, ஹஜ்ருல் அஸ்வத் இருக்கும் மூலைக்குச் சென்றோம். உம்ராவுக்காக தவாப் சுற்றுவதாக நிய்யத்துச் செய்து கொண்டு, ஹஜ்ருல் அஸ்வத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கி, ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூறிவிட்டு முதல் சுற்றை ஆரம்பித்தோம். நெரிசலில், தொலைந்து போய் விடாமல் இருக்க, ஒருவர் தோள் பட்டையில் ஒருவர் கைவைத்து, ரயில் பெட்டி போல சுற்றுகிறோம்.

முதல் சுற்று முடிவதற்குள், எல்லாரும் போட்டு நம்மை நசுக்க மாமனார், கொஞ்சம் திணறிப் போய்விட்டார். இரண்டவது, சுற்றில் இன்னும் கொஞ்சம் கஷ்டமாகிவிட, அவரால் முடியவில்லை.’என்னால முடியல, நாளைக்கு நான் உம்ரா பண்ணிக்கிறேன்’ என்று அவர் சொல்ல, சரியென்று அவரை அழைத்துப் போய், பாதுகாப்பான ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு வந்தோம்.

அதற்குள் மஃரிபு தொழுகைக்கான பாங்கு(மைக்கில் அரபியில் ஓதி, தொழுகைக்கு கூப்பிடுவது), சொன்னதால், தொழுதோம். தொழுதுவிட்டு மீண்டும் சுற்ற ஆரம்பித்தோம். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், சற்று தூரத்தில், நெரிசல் இருக்காது. ஆனால் எல்லாரும் சுற்று சிறியதாக இருக்க வேண்டும் என்று காபாவின் அருகில் செல்ல முயற்சிப்பதால், நெரிசலில் சிக்க நேரிடுகிறது.

தவாப் சுற்றும் போது, ஒவ்வொரு சுற்றிலும், ஹஜ்ருல் அஸ்வத் இருக்கும், திசை வந்ததும், அதை நோக்கி, இரு கைகளையும் உயர்த்தி, ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று சொல்ல வேண்டும். அதன் பெயர் ‘இஸ்திலாம்’ ஆகும். ஆரம்பிக்கும் போது ஒன்றும், முடித்தபின் ஒன்றுமாக, ஏழு சுற்று கொண்ட ஒரு தவாபுக்கு மொத்தம் எட்டு முறை இஸ்திலாம் செய்யணும்.இந்த வீடியோவில் தவாப் சுற்றுகிறார்கள். இது ஹஜ் முடிந்து பல நாட்களுக்குப் பின் எடுத்ததால், இதில் கூட்டம் குறைவாக இருக்கிறது. இதில் நான் ஓதும் துவாவை ஓதிக் கொண்டே தான் தவாப் சுற்றுவோம்.

நாங்கள் ஏழு சுற்று முடித்துவிட்டு, 2 ரக் அத் (ரக் அத் என்றால் தடவை என்று பொருள்) தொழுதுவிட்டு, ஜம் ஜம் நீர் பைப்பை நோக்கி சென்றோம். புனித நீரை ஆசையாக வயிறு நிரம்ப குடித்தோம். பின் மாமு இருக்கும் இடத்துகு சென்று அவரிடம் சொல்லிவிட்டு, சயீ என்னும் தொங்கோட்டம் ஆரம்பிக்கச் சென்றோம். தொங்கோட்டம் என்று சொன்னாலும், ஓடுவதல்ல. நடப்பது தான்.

சயீ ஆரம்பிக்கும் முன், மீண்டும் ஒரு முறை, ஒன்பதவது முறையாக, ஹஜ்ருல் அஸ்வத்தை நோக்கி, இஸ்திலாம் செய்துவிட்டு, சஃபா, என்ற மலைக் குன்றிலிருந்து, இஸ்திலாம் ஆரம்பித்தோம். மலைக்குன்று என்றதும், என்னவோ, ஏதொ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். பார்க்குகளில், ஃபௌண்டைனுக்கு, சிறு குன்று இருக்குமே, அது போலத்தான் இதுவும் இருக்கும். இது, ஹரமின் வளாகத்துக்குள்ளேயேதான் இருக்கு. பாபு ஸலாம் வாசல் வழியாக வந்தால், சயீ செய்வோரைத் தாண்டித் தான் உள்ளே வரமுடியும். அல்லது, அண்டர்கிரவுண்ட் வழியாக வரலாம்.

சஃபாவில் அடையாளத்துக்காக கொஞ்சம் கற்பாறைகள் விட்டுவிட்டு, மார்பிள்ஸ் தளம் போட்டு விட்டார்கள். நாங்கள் சஃபாவிலிருந்து, மர்வா நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இடைப்பட்ட தூரம் அரைக் கிலோ மீட்டர். ஒரு 200 அடி நடந்ததும், மேலே ஒரு பச்சை லைட் அடையாளம் இருக்கும். அவ்விடத்துக்கு மீளரைன் என்று பெயர். அதிலிருந்து ஒரு 300 அடி தூரத்தில் இன்னொரு பச்சை லைட் இருக்கும். அவ்விடத்துக்கு அஃளரைன் என்று பெயர். மீளரைனிலிருந்து அஃளரைன் வரையிலான இடைப்பட்ட தூரத்தை, ஆண்கள் மட்டும் நடக்காமல் ஓடிக் கடக்க வேண்டும். இப்படியாக நாங்கள் மர்வாவை அடைந்தோம்.

இப்படத்தில், எல்லாரும் சயீ செய்கிறார்கள். இஹ்ராம் உடையில் இருப்பதைக் காணலாம். மேலே மீளரைன் பச்சை லைட் அடையாளத்தைக் காணலாம்.
கீழே மக்கள் சயீ செய்வதால், மேலே ஒரு பாலம் கட்டியுள்ளார்கள், ஹரமுக்குள் போக.

மர்வாக்குன்று என்பது, சஃபாவைவிட ரொம்ப உயரம் குறைவு. இங்கேயும் அடையாளத்துக்காக சிறுபகுதி விட்டுவிட்டு, மார்பிள்ஸ் தரை போட்டு விட்டார்கள். அடையாளத்துக்காக விட்டிருக்கும் கற்பாறைகள், உடைந்து விடாமல், இருக்க மெழுகு போன்ற ஒன்றால் பூசி இருக்கிறார்கள். ஒரு சிறு கல்லைக் கூட பெயர்க்க முடியாது.

மர்வாவில் நின்று, காபாவை நோக்கிக் கரமேந்தி துவா செய்து விட்டு, மீண்டும் நாங்கள் சஃபாவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். போய் சேர்வது ஒன்று, திரும்பி வருவது இரண்டு, என மொத்தம் ஏழு சுற்று முடித்து, ஏழாவது சுற்றின் முடிவில், மர்வா வாசலின் வழியாக வெளியே வந்தோம். மொத்தம் 3.5 கிலோ மீட்டர்கள்.

மர்வா வாசலின் அருகில் டாய்லட் இருக்கிறது. சற்று தள்ளி பார்பர் ஷாப் உள்ளது. அங்கு போய், 5 ரியால் கொடுத்து, மச்சான் மொட்டை போட்டுக் கொண்டார். நான் கையோடு கொண்டு சென்றிருந்த கத்தரிக் கோலால், நுனியில், ஒரு அங்குலம் வெட்டிக் கொண்டேன். இப்போ எங்க உம்ரா முடிந்தது. பின் ஹரமுக்குள் சென்று இஷா (இரவு நேரத் தொழுகை) தொழுதோம்.

பிறகு இருவரும், மாமு இருக்கும் இடத்துக்கு வந்து அவரையும் அழைத்துக் கொண்டு, வெளியில் வந்தோம். பசிக்கு ஏதாவது இங்கேயே சாப்பிட்டு செல்லலாம் என்று பார்த்தால், ஒன்றுமே புரியவில்லை. ஒரு கடையில், ரொட்டியில், உருளைக் கிழங்கு, இன்னும் என்னென்னவோ, போட்டு சுற்றி, 2 ரியால் என்று விற்றார்கள். அதை ஆளுக்கு ஒன்று வாங்கி சாப்பிட்டுக் கொண்டே டேக்ஸி பிடிக்க சென்றோம்.

அஜிஜியா என்றால், ஒரு டேக்ஸிக்காரனும் வர தயாராக இல்லை. தலைக்கு இவ்வளவு பணம் என்பதால், ஏழெட்டு பேர் என்றால் வருகிறார்கள். நாங்கள் மூன்று பேர் என்பதால், வரமாட்டேன் என்று போய்விடுகிறார்கள். மிக நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின் தலைக்கு 10 ரியால் கொடுத்து, லாட்ஜ் வந்து சேர்ந்தோம். அலுப்பு தீர ஒரு குளியல் போட்டுவிட்டு, நூடில்ஸ் செய்து சாப்பிட்டோம். கால் வலி, டயர்ட்னஸ் எல்லாம் சேர்ந்து கொள்ள விரைவில் தூங்கிப்போனோம்.

மீண்டும் சந்திப்போம்.

-சுமஜ்லா.

6 comments:

Anonymous said...

வணக்கம் சுஹைனா,
உங்கள் புதிய பதிவை தற்பொழுது தான் படித்தேன். நீங்கள் அங்கு செய்த பிரார்த்தனைகளை ஞாபகத்தில் வைத்து ஒவ்வொன்றாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அங்கு போகாதவர்களுக்கும் அங்கு போய்ப் பிரார்த்தனை செய்த ஒரு உணர்வைக் கொடுப்பது போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளன. வாழ்த்துக்கள் சகோதரி.

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

Suhaina,

orea asiriyama irukku, eppadi alaisaloda avalavu kilo meter nadantheenga? niraya visayangkal therinthu kolla mudikerathu. thanks.

Anonymous said...

பிருந்தா, கவின், என் எழுத்துக்களை, தொடர்ந்து, ரசித்துப் படிப்பதற்கு நன்றிப்பா.

Anonymous said...

Superb Suhaina.It brought back the old memories of our umrah.keep going.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா,ரொம்ப நல்லா இருக்கு சுஹைனா அடுத்த பாகத்துக்கு வைடிங்.ரைஹானா.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா
உங்களின் இந்த பயண கட்டுரையினை படிக்கும் பொழுது நானும் ஹஜ் செய்த ஊணர்வு வருகிறது..