Sunday, February 15, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 12

எங்க ரூமில், நாங்க மூன்று பேர், தவிர விருதாச்சலத்துக்காரர்கள் ஆறு பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த இன்னும் ஐந்து பேர்கள். தவிர, காலியாக ஒரு கட்டில்.

ஈரோட்டைச் சேர்ந்த, அதிபா, முஸ்தஃபா(எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிகள் மற்றும் அவர் பொறுப்பில் ஒரு வயதான தாதிமா. அது போல தனித் தனியாக வந்திருந்த காலித், யாஸர் என்ற இரு இள வயதுக்கார தோழர்கள். விருதாலத்துக்கார பெண் பெயர் அமீனா. நான் அம்மு என்று கூப்பிடுவேன். அதிபா, முஸ்தஃபா, காலித், யாஸர் தாதிமா 5 பேர் மற்றும் பக்கத்து ரூமில் இருந்த ஈரோட்டைச் சேர்ந்த இன்னும் 5 பேர் காமிலா, அஹமதலி, மற்றும் அஹமதலி தந்தை, முஸ்தஃபாவின் தங்கை ஆனிஷா மற்றும் அவர் கணவர் காதர் என 10 பேரும் ஒன்றாக சமையல்.

எல்லா பெண்களும், கிட்டத்தட்ட சம வயதுடையவர்கள் என்பதால், நல்ல இணக்கம் இருந்தது. அடுத்த நாள், நாங்கள் மாமனாரை வீல் சேரில், உம்ரா செய்விக்க வேண்டும் என்பதால், ஹரமுக்குக் கிளம்பினோம்.

நாங்கள் பஸ்ஸில் போக பஸ் ஸ்டேண்டில் நின்றிருந்தோம். அப்போது, ஒரு பெரிய பையன் வந்து எங்களிடம், விசாரித்து விட்டு ஆளுக்கொரு பஸ் பாஸ் கொடுத்தான். இதை பஸ்ஸில் போகும் போது பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று. ஏற்கனவே, நாங்கள் கையில் போட்டிருக்கும் பிரேஸ்லெட்டையும் தேவைப்பட்டால் காட்டுங்கள் என்று சொன்னான். அந்த பிரேஸ்லெட் சென்னை ஹஜ் கமிட்டியில் கொடுத்தார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட அதில் அவரவர் பெயர், ஊர், குரூப் நம்பர் மற்றும் வரிசை எண் ஆகியவைப் பொறிக்கப்பட்டிருக்கும். மக்கா வந்து சேர்ந்ததும், இன்னொரு பட்டை தந்தார்கள். அதில் அரபியில், முஅல்லிம் பேர், அட்ரஸ், போன் நம்பர் அச்சடிக்கப்பட்டிருக்கும். எங்க லாட்ஜ் நம்பர் 607. இந்த கைப்பட்டை, நாம் தொலைந்து போய்விட்டால், அல்லது, விபத்து போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் நம்மை அடையாளம் காட்ட உதவும்.

படத்தில் இருப்பது தான் இந்திய பஸ். இந்தியா என்று எழுதியிருப்பதைக் காணலாம். மச்சான் பஸ்ஸில் ஏறப் போகிறார்.

இந்தியக் கொடி போட்ட பஸ் வந்தது. அதில் ஏறிக் கொண்டோம். இந்திய நாட்டு ஹஜ் க்மிட்டியினர், வாடகைக்கு அமர்த்திய பஸ்கள் இவை. எங்க பஸ் நம்பர், 10. ஒரு 4 கி.மீ போய் மஅபஸல் ஜின் என்ற பஸ்ஸ்டாண்டில் நம்மை இறக்கி விட்டு விடுகிறது. ஹஜ் பயணிகளுக்கென உள்ள ப்ரத்தியோகமான பஸ் ஸ்டாண்ட் அது.படத்தில் பார்ப்பது தான் மஅபஸல் ஜின் பஸ் ஸ்டேண்ட். இறங்கி ஒரு ஃபர்லாங் நடந்தால், இந்தியக் கொடி போட்ட சிகப்புக் கலர் சாப்ட்கோ(saptco - பஸ் கம்பெனி பெயர்) பஸ்கள் நிற்கின்றன. அதில் ஏறினால், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகை வழியாக சுமார் 2 கி.மீ சென்று, நம்மை பாபு ஸலாம் வாசலுக்கு, சற்று தூரத்தில் இருக்கும், பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுகின்றனர்.

போக ஒரு குகை பாதை(tunnel), வர ஒரு குகை பாதை என ஹரமுக்கு போகும், திரும்பி வரும் பயணிகளை, ஏற்றி இறக்கி, ட்ரிப் அடிப்பது தான் இந்த பஸ்ஸின் வேளை. ஈரான், பாகிஸ்தான், துருக்கி போன்ற பல நாடுகளின் பஸ்கள் அந்தந்த நாட்டுக் கொடியோடு நிற்கின்றன. எல்லா சாப்கோ பஸ்களும் மஅபஸல் ஜின் பஸ்ஸ்டாண்டுக்குத் தான் போகின்றன என்றாலும், அவரவர் அவரவர் நாட்டு பஸ்ஸில் தான் ஏற வேண்டும். பஸ்ஸுக்கு காசு கிடையாது. ஃப்ரீ.

நாங்கள் பாபு ஸலாம் வாசலை அடைந்தோம். அங்கு நிறைய காடி(gadi)வாலாக்கள் இருந்தார்கள். 300 ரியால் கேட்டார்கள் ஒரு உம்ராவுக்கு. கடைசியில் 200 ரியாலுக்கு பேசி, உம்ரா முடித்து அதே இடத்தில் கொண்டு வந்து விட்டுவிடுமாறு சொல்லி அனுப்பி விட்டு நாங்கள் தவாப் செய்யப் போனோம். அதாவது, இப்பொழுது நாங்கள் இஹ்ராம் உடையில் இல்லை. அதனால், இப்போ, காபாவை ஏழுமுறை வலம் வ்ந்து 2 ரக்அத் தொழுவதற்கு ஒரு தவாப் என்று பெயர். சயீ செய்வது, முடி களைவதெல்லாம் இல்லை. இது போல, தினமும் எத்தணை தவாப் முடியுமோ, அத்தணை தவாப் செய்ய வேண்டும். செய்யும் வரையில் நன்மை. ஆரம்பத்தில் கூட்டம் இருக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு, ஒன்று இரண்டு தான் முடியும். ஹஜ் முடிந்த பின் அதிகம் செய்யலாம்.

நாங்கள் ஒரு தவாப் முடித்துவிட்டு, ஹரமை சுற்றிப் பார்த்தோம். அழகு....கண் கொள்ளா அழகு. அதன் கலை நுணுக்கமான வேலைப்பாடு, அதன் சுத்தம், சுகாதாரம் பார்த்து பிரமித்தேன். எல்லாமே பிரமாண்டம். சதாவும் ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

மாமனார் உம்ரா, முடித்து வந்தவுடன், கையோடு கொண்டு சென்றிருந்த சாப்பாட்டை, மூவரும் சாப்பிட்டோம். அதற்குள் அஸர் நேரமாகிவிட்டது. மொத்தம் 5 நேரத் தொழுகை. சூரியனின் உதயம், மறைவு பொறுத்து அதன் நேரங்கள் மாறுபடும். நாங்கள் அங்கிருந்த போது, அதன் நேரங்கள், ஃபஜ்ர் - காலை 5.30 மணி, லுஹர் - மதியம் 12.30, அஸர் மாலை 3.30, மஃரிபு - மாலை 5.45, இஷா - இரவு 7.15.

இஷா தொழுத பின் கிளம்பினோம். பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல, மாமனார் சற்று சிரமப்பட்டதால், அங்கேயே டேக்ஸி பிடித்து, தலைக்கு 10 ரியால் கொடுத்து, ரூம் வந்து சேர்ந்தோம். மச்சானே ரேஸரில் மாமுக்கு மொட்டை அடித்து விட்டார். அவருக்கு முழு வழுக்கை, ஒரு சில முடிகள் தான்.

இனி, அங்கு காய்கறி, மளிகை வாங்க கடைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளணும். துணி துவைக்க பக்கெட் வாங்கணும். அங்கு லாட்ஜில் கீழ்ஃப்ளோரில் வாஷிங் மெஷின் இருப்பதை பார்த்ததாக மச்சான் சொன்னார். அதைப் போய் பார்க்கணும். அடுத்த நாள், வேலைகளை மனதில் பட்டியலிட்டவாறு உறங்கிப் போனேன்.

மீண்டும் சந்திப்போம்.

-சுமஜ்லா

5 comments:

Anonymous said...

படங்களுடன் விளக்கி இருப்பது அருமை.விபரங்கள் கேள்விபட்டதாயிருந்தாலும்,சில புதிய தகவல்களும் உள்ளது.நன்று.

Anonymous said...

ஹாய் சுஹைனா,
போன அத்தியாயத்தில்(11) ஒரு பதிவு போடனும்னு நினைத்தேன்.அதில் சொல்லியிருந்தீங்க,

//மர்வாவில் நின்று, காபாவை நோக்கிக் கரமேந்தி துவா செய்து விட்டு, மீண்டும் நாங்கள் சஃபாவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். போய் சேர்வது ஒன்று, திரும்பி வருவது இரண்டு, என மொத்தம் ஏழு சுற்று முடித்து, ஏழாவது சுற்றின் முடிவில், மர்வா வாசலின் வழியாக வெளியே வந்தோம்.//
இதில் 7வது சுற்று முடிவில் நீங்க சஃபாவில் தானேபா இருப்பீங்க.ஒருவேளை ரவுண்டா சுத்தி வருவீங்களா?இதை பற்றி தெரியாது,ஆர்வ மிகுதியால் கேட்டுட்டேன்.தப்பா இருந்தா நீக்கிடுங்க.அப்புறம் உங்க பயணக்கட்டுரை அருமையா இருக்குபா.ஆமா நடுவில் லாம்ராவுக்கும்,லாமினுக்கும் ஃபோனில் பேசினீர்களா?அல்லது இணையதளத்தில் சாட் பண்ணீங்களா?

Anonymous said...

வணக்கம் சகோதரி சுஹைனா, உங்கள் பதிவை படிக்க படிக்க ஆர்வத்தை மேன்மேலும் துண்டுகின்றது. என்ன வேலை இருப்பினும் இடைக்கிடையே வந்து புதிய பதிவு போட்டுவிட்டீர்களா என்று பார்ப்பேன். தற்பொழுது படுக்கப் போகுமுன்பும் ஆர்வமிகுதியால் வந்து பார்த்தேன். இருந்தது. படித்தேன். ரசித்தேன்.

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

நன்றி சகோதரிகளே, உங்கள் ஊக்கத்துக்கு, ஏன்ப்பா சுகன்யா, சஃபாவில் ஆரம்பிக்கிறோம்.மர்வா போனவுடன் ஒன்று, திரும்ப சஃபா வந்தால், இரண்டு, மர்வா மூன்று, சஃபா நாலு, மர்வா ஐந்து, சஃபா ஆறு, மர்வா ஏழு. சரியா கணக்கு?!!! :-

லாஃபிராவுக்கும், லாமினுக்கும், ஃபோன் தான்ப்பா, பண்ணினேன். நெட் செண்டரில், லேடீஸ் மம்னூன் என்று சொல்லி விட்டார்கள். மம்னூன் என்றால், not allowed என்று அர்த்தமாம். அந்த கதையை பிறகு எழுதுகிறேன்.

நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன, பகிர்ந்து கொள்ள. எல்லாம் பட்டியல் போட்டிருக்கிறேன்.சொல்கிறேன்ப்பா. எல்லாம் ஹஜ் முடிந்த பின் நடந்தவை தான். ஏனென்றால், நாங்கள் ஹஜ் முடியும் வரை, எந்த கடைத் தெருவுக்கும் போய் எதுவும் வாங்கவில்லை.

Anonymous said...

suhainaa,

very intresting payana katturai. I eagarly waiting every day to read your writing. nalla plan panni ethayum seiyareenga pa. really like it.