மக்காவிலிருந்து, சுமார் 8 மைல் தூரத்தில் மினா என்ற சிறிய ஊர் உள்ளது. மினாவிலிருந்து, 10 கி.மீ தூரத்தில் அரஃபா என்ற மைதானம் உள்ளது. அரஃபா மைதானத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் முஜ்தலிஃபா என்ற இடம் உள்ளது. இனி, முஜ்தலிஃபாவில் இருந்து 2 கி.மீ தூரத்தில் மினா உள்ளது. மினா, முஜ்தலிஃபா, அரஃபா மூன்றும் கிட்டத்தட்ட முக்கோண அமைப்பில் உள்ளன.
பிறை கணக்கை அடிப்படையாகக் கொண்ட அரேபியன் காலண்டர் ஒன்று உள்ளது. இதில் டிசம்பர், பங்குனி போல கடைசி மாதம் தான் துல்ஹஜ் மாதம். இதில் பிறை(தேதி) 8 அன்று அனைத்து ஹாஜிகளும் அதிகாலை நேரம் பஜ்ர் தொழுகை தொழுத பிறகு தங்கள் ரூமிலேயே இஹ்ராம் உடுத்திக் கொண்டு, ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்தவர்களாக, மினாவுக்குப் போக வேண்டும்.
இப்பொழுது எல்லாரும் இஹ்ராம் உடையில் இருப்பதால், நான் முன்பு சொன்ன இஹ்ராமின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களாகி விடுகின்றனர்.
மினாவில் ஹாஜிகளுக்கு என டெண்ட்கள் அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு நாள் முழுவதும், தங்கியிருந்து, அடுத்த நாள் காலை, அதாவது துல்ஹஜ் பிறை 9 அன்று பஜ்ர் தொழுத பின், வாகனத்தில் ஏறி அரஃபா போக வேண்டும்.
அரஃபாவில் மாலை வரை கழிக்கும், அந்நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். மாலை அங்கிருந்து கிளம்பி, முஜ்தலிஃபா சென்று அன்று இரவை முஜ்தலிஃபாவில் தங்கி கழிக்க வேண்டும்.
நம் ப்ரார்த்தனை நிறைவேறக் கூடிய இடங்களில் முதன்மையானது அரஃபாவாகும். இறைவனிடம் இறைஞ்சி துவாக் கேட்பது தான் இங்கு நமது முக்கியமான வேலை. இங்கு ஒரு ஹாஜி, அனைத்து முன் செய்த பாவங்களும் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகன் போல் ஆகிவிடுகிறார்.
லுஹர், அசர் ஆகிய தொழுகைகள் அங்கு தொழுதுவிட்டு, சூரியன் மறைந்ததும், மஃரிபு தொழுகாமல், அங்கிருந்து கிளம்பி, முஜ்தலிஃபா சென்று, மஃரிபும் இஷாவும், ஒரு சேர தொழுதுவிட்டு, இரவு அங்கேயே தங்கிக் கொள்ளணும். சைத்தானுக்கு எறிவதற்காக, முஜ்தலிஃபாவில்,80 பொடிக் கற்கள் ஒவ்வொருவரும் பொறுக்கிக் கொள்ளணும்.
விடிந்ததும், அதாவது துல்ஹஜ் பிறை 10 அன்று, மினா சென்று பெரிய ஷைத்தானுக்கு மட்டும் கல் எறிந்து விட்டு, சற்று தூரத்தில் இருக்கும் ஆட்டுப் பண்ணைக்கு(slaugther house) சென்று குர்பானி கொடுக்கணும். முன்பே அதற்கென உள்ள பேங்கில் பணம் கட்டியிருந்தால், நாம் செல்ல தேவையில்லை. அவர்களே, நம் பெயரில் கொடுத்து விடுவார்கள்.
குர்பானி கொடுத்ததும், ஆண்கள் மொட்டை அடிக்கணும், பெண்கள் நுனியில் ஒரு அங்குலம் அளவுக்கு வெட்டிக் கொள்ளணும். இனி, இஹ்ராமிலிருந்து வெளிப்பட்டு, சாதாரண உடை உடுத்திக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு செயல் இருக்கிறது. சாதாரண உடை அல்லது, புத்தாடை அணிந்தவர்களாக, ஹரமுக்கு திரும்பி வந்து, தவாபும், சயீயும் செய்ய வேண்டும். இதற்கு தவாப் ஜியாரா என்று பெயர். இஹ்ராம் உடையில் இருந்து வெளிப்பட்டு விட்டாலும், தவாப் ஜியாரா முடிக்காமல், கணவனும், மனைவியும் உடலுறவு கொள்ளக் கூடாது.
தவாப் ஜியாரா முடித்ததும், இரவு மக்காவில் தங்காமல், மீண்டும் மினா டெண்டுக்கு திரும்பி விட வேண்டும். துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்களில் மீண்டும், சின்ன சைத்தான், நடு சைத்தான், பெரிய சைத்தான் மூன்றுக்கும் ஒவ்வொரு நாளும் தலா ஏழு ஏழு கற்கள் எறிய வேண்டும். அந்நாட்களில் மினாவில் தான் தங்கியிருக்க வேண்டும். சைத்தானுக்கு கல் எறியும் இடம் மினாவுக்கு அருகில் தான் உள்ளது.
படத்தில் பெரிய தூண் போல இருப்பது தான் ஜம்ரத். அடிக்கும் கற்கள் விழுவதற்காக கீழே தொட்டி போல கட்டி இருக்கிறார்கள். யாருடைய ஹஜ்ஜை இறைவன் ஒப்புக் கொள்கிறானோ, அவர்கள் அடிக்கும் கற்கள் வானுக்கு உயர்த்தப் படுகிறது.
13ம் நாள் மதியம் கல் எறிந்ததும், மக்கா திரும்பிவிடலாம். கடைசியாக ஊர் திரும்பும் நாளன்று, ‘தவாப் விதா’ எனப்படும் பயணத் தவாப் செய்ய வேண்டும்.
ஹஜ் என்பது இதுதான். சற்று குழப்பமாக இருக்கிறதா? நான் செய்த ஹஜ்ஜைப் பற்றி சொல்லும் போது நன்றாக புரிந்துவிடும் என்று நினைக்கிறேன்.
சரி, சைத்தானுக்குக் கல் எறிவது என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் இப்போது.
ஏற்கனவே நான் போன அத்தியாயத்தில், தன் மகன் இஸ்மாயிலை இப்ராஹிம் (அலை) குர்பானி கொடுப்பதற்காக அழைத்துச் சென்றார்கள் என்று, எழுதியிருந்தேன். அப்படி அழைத்துச் செல்லும் போது, சைத்தான் குறுக்காக வந்து போக வேண்டாம் என்று தடுக்கிறான். அதற்கு அவர்கள் சைத்தானை நோக்கி கற்கள் எறிந்து விட்டு தொடர்ந்து செல்கிறார்கள். மீண்டும் கல் எறிய, இப்படி மும்முறை நடக்கிறது.
எவ்விடத்தில் கல் எறிந்தார்களோ, அங்கு, இப்பொழுது சுமார் 15 அடி நீளம், 4 அடி அகலத்தில், நீள் வட்டமான பிரம்மாண்ட தூண் அமைக்கப்பட்டுள்ளது. அத்தூணின் மேல் தான் நாம் கல் எறிய வேண்டும். இவ்வாறு சின்ன சைத்தான், நடு சைத்தான், பெரிய சைத்தான் (ஆனால், பார்க்க மூன்றும் ஒரே அளவில் தான் இருக்கும்) என சுமார் 3 ஃபர்லாங் இடைவெளியில் மூன்று தூண்கள் உள்ளன. இதன் பெயர் ஜம்ரத் என்பதாகும்.
இப்ராஹிமை (அலை) சோதிக்க நினைத்த இறைவன், அவர் மகன் இஸ்மாயில்(அலை) பச்சிளம் குழந்தையாக இருந்த பொழுது, இஸ்மாயிலையும், மனைவி ஹாஜராவையும் யாருமில்லா வனாந்திரத்தில் விட்டு விட்டு வரும்படி கூறினான். சரியென்று யாருமில்லா காட்டில் விட்டு விட்டு வந்தார்கள்.
பச்சைக் குழந்தை தாகத்துக்குத் தவிக்கிறது. தாய் மனசு துடிக்கிறது. பாலை வனத்தில் தண்ணீர் ஏது? ஹாஜரா அம்மையார் தண்ணீருக்காக அலைமோதுகிறார்கள். சற்று தூரத்தில் தெரிந்த சஃபா மலைக் குன்றில் எறி தூரத்தில் எங்காவது தண்ணீர் தென்படுகிறதா என்று பார்க்கிறார். இல்லை என்றதும் இறங்கி, தன் குழந்தையைப் பார்த்துக் கொண்டே, மர்வாவை நோக்கி நடக்கிறார். நற்று தூரத்தில் மீளரைன் என்ற இடம் வந்ததும், அவ்விடம் சற்று பள்ளமாக இருந்ததால், குழந்தை கண்களைவிட்டு மறைந்து விடுகிறது. எனவே வேகமாக ஓடுகிறார். மீண்டும், அஃளரைன் என்ற இடம் வந்ததும், குழந்தை கண்ணுக்குத் தென்படுகிறது. சற்று ஆசுவாசப்பட்டவராக, மர்வவை நோக்கி நடக்கிறார். இப்படியாக தண்ணீருக்காக பித்து பிடித்தவர் போல சஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே ஏழு முறை ஓடுகிறார்.
கடைசியாக, தன் குழந்தையில் அருகே வரும் போது, குழந்தை தன் உள்ளாங்கால்களால் மண்ணில் உதைத்து அழ, அங்கிருந்து, ஊற்று நீர் பெருக்கெடுக்கிறது. இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக, அதைத் தானும் குடித்து, தன் மகனுக்கும் கொடுக்கிறார். ஊற்று நீர் நிற்காமல், பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கிறது. அதை நோக்கி அவர் ‘நில், நில்’ என்ற அர்த்தம் வரும் வகையில், ‘ஜம், ஜம்’ என்று கூற அது நின்று விடுகிறது.
இது தான் புனித ‘ஜம் ஜம்’ நீரின் வரலாறு. பல்லாயிரம் ஆண்டுகளக கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தியும், தம் ஊருக்கு, எடுத்துச் சென்றும், இன்றளவும், வற்றாச் சமுத்திரமாக, அது இருப்பது ஒரு அற்புதமே! காபாவில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் ஜம் ஜம் கிணறு இருக்கிறது. தற்சமயம், அது மூடுகல்லால் மூடப்பட்டு, குழாய் மூலம் தண்ணீர் சப்ளை ஆகிறது.
படத்தில் இருப்பது, ஜம் ஜம் நீர் அருந்தும் பைப். நீளமாக தெரிவது, தண்ணீர் அருந்த டிஸ்போஸபிள் டம்ளர்கள். இது போன்ற பைப்புகள் நூற்றுக் கணக்கில் ஹரமில் ஆங்காங்கே உள்ளன.
ஹாஜரா அம்மையார் ஓடியது, இறைவனுக்கு மிகவும் பிடித்தமான செயலாகிவிட்டது. அதை நினைவு கூறும் விதமாகத்தான் அனைத்து ஹாஜிகளும் ஓடும்படி இறைவன் கட்டளை இட்டிருக்கிறான். இதைத்தான் சயீ செய்தல் அல்லது, தொங்கோட்டம் ஓடுதல் என்று சொல்கிறோம்.
ஹாஜரா அம்மையார் அவர்கள் மீளரைன் அஃளரைனுக்கு, இடையே வேகமாக ஓடினார்கள் அல்லவா?. அதனால் தான் இன்றளவும் ஆண்கள் அவ்விடத்தில் சற்று வேகமாக ஓட வேண்டும். பெண்களின் சார்பாக ஹாஜராவே ஓடி விட்டதால், பெண்கள் வேகமாக ஓட வேண்டியது இல்லை.
இப்பொழுது உங்களுக்கு ஒரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்ததாக நாங்கள் ஹஜ் செய்தது பற்றி விரிவாக எழுதுகிறேன்.
-சுமஜ்லா.
8 comments:
அன்புள்ள சுஹைனா,
உங்களின் ஹஜ் பற்றிய விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.
மற்றும் ஹாஜரா அம்மையார் ஏழுதடவை ஓடியதைப் படித்தவுடன் அதன் அடிப்படையில் தான் தொங்கோட்டம் என்ற வேண்டுதல் உருவாகியுள்ளது என்பதை ஊகித்திருந்தேன், அதனை நீங்களும் உறுதிப்படுத்தி விட்டீர்கள்.
ஹஜ் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வளவு பின்னணியும் வேண்டுதல்களும் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஹஜ் பயணத்தில் இவ்வளவு விடயங்கள் அடங்கியிருக்கின்றனவா?? அதனை மிகவும் தெளிவாக தெரியப் படுத்திக் கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.
தொடர்ந்து படிக்க ஆவலைத் தூண்டுகின்றது.
அன்புடன்
பிருந்தா
suhaina,
good to hear all the stories. intresting mun paragrapgh konjam puriyalai. anal neegal sonathu pol..ungla anupavathai padikum poothu thelivu ahi vidum.
சுஹைனா,
ரொம்ப அழகாக,எளிமையாக புரியும்படி விளக்கி இருக்கீங்க,நன்று.
ஹஜ் விளக்கம் ரொம்ப நல்லா தெளிவா விளக்கியிருக்கிங்க.
மேனகா
//அரஃபாவில் மாலை வரை கழிக்கும், அந்நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்.// அரஃபா துல்ஹஜ் பிறை 9, ஹஜ் பெருநாள் பிறை 10ல் வரும்
இங்குள்ள முஸ்லிம்களுக்குத்தான் துல்ஹஜ் பிறை 10 பெருநாளாகும். அன்று பெருநாள் தொழுகையும் நடக்கும்.
ஆனால், மக்காவில் ஹாஜிகளுக்கு, துல்ஹஜ் பிறை 9 அன்று தான் ஹஜ்ஜுடைய நாள். அன்று தான் அவர் ஹாஜியாகிறார். எவர் ஒருவர், ஒரு கணமேனும் அரஃபாவில் தங்கவில்லையோ, அவர் ஹாஜியாக முடியாது.
நீஙகள் அந்நாள்தான் பெருநாளாகும் என்று பொதுவாக எழுதி இருந்தீர்கள், வாசகர்கள் அன்றய தினம்தான் மற்றவர்களுக்கும் பெருநாள் என்று நினைக்க கூடும் என்று குறிப்பிட்டேன் நிற்க.
மற்றபடி எழுத்து நடை அருமயாக உள்ளது, எல்ல விஷயத்தயும் ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள் (உ.ம் லககேஜ் லிஸ்ட், ஹரமில் உள்ள் வாயிற்கதவுகள் எத்தனை என்று, எங்கே என்ன சாப்பாடு குடுத்தார்கள் அதில் என்ன உள்ளது என்று எல்லாம், என்னை கேட்டால் காலையில் என்ன சாப்பிட்டேன் என்று சொல்ல முடியாது)... மாஷா அல்லாஹ், பாரட்டுக்கள்.... மதினா பற்றி எப்போது எழுதுவீர்க்ள்.....? என் தமிழில் பிழை இருந்தால் மன்னிகவும்
அன்பு சகோதரரே,
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு மக்கா வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள. அது முடிந்த பின் மதினா பற்றி எழுதுவேன்.
கட்டுரையை, வழ வழ வென்று எழுதுகிறோமோ, என்று ஒரு சந்தேகம் உள்ளது.
எனினும், எல்லா விஷயத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து எழுதும் போது, மீண்டும் அங்கு சென்ற அனுபவம் கிடைக்கிறது.
எழுதும் போதே அந்நாட்களுக்காக மனம் ஏங்கி கண்ணில் நீர் துளிர்த்த நேரங்களும் உண்டு.
Post a Comment