Sunday, February 1, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 3

நாங்கள் ஒவ்வொருவராக ஜித்தாவிலிருந்து மக்கா செல்லும் பஸ்ஸில் ஏற ஆரம்பித்தோம். அப்பொழுது முஅல்லிமின் ஆள் எங்களிடமிருந்து பாஸ்போர்ட்டுகளைப் பெற்றுக் கொண்டார். பாஸ்போர்ட் என்பது இண்டர்னேஷனல் பாஸ்போர்ட் அல்ல. இது பில்கிரிம்ஸ் பாஸ்போர்ட். இது ஹஜ் முடிந்து திரும்பி வரும் காலம் வரை தான், அதன் பிறகு செல்லாது.

நாங்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைத்து விட்டு திரும்பிப் பார்த்தால், டிரை சைக்கிள் போன்ற ஒரு வண்டி சாமான்களை ஏற்றிக் கொண்டு சல்லுனு மேலே போகிறது. அதிலிருந்து சாமான்களை எடுத்து ஒருவர் பஸ்ஸின் டாப்பில் அடுக்குகிறார். முதன்முறையாக பார்ப்பதால் எனக்கு வேடிக்கையாக இருந்தது.

ஜித்தாவிலிருந்து மக்கா ஒரு 60,70 கி.மீ இருக்கும். ஆனால் ஹஜ் டைம் ஆதலால் சாலைகளில் நெருக்கடி காரணமாக போய் சேர 4 மணி் நேரம் ஆகிவிட்டது. பஸ் செல்ல ஆரம்பித்ததும் எல்லாரும் இரவு முழுக்க தூக்கமில்லாததால் தூங்கி வழிய ஆரம்பித்தனர். நான் தூக்கம் வந்தாலும், கட்டுப்படுத்திக் கொண்டு மக்கா நகரின் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். வழியெங்கும் சிறு சிறு மலைக்குன்றுகள். பாலைவனம் என்றாலும் ஆங்காங்கே பசுமையாக வளர்க்கப்பட்ட ஈச்ச மரங்கள். அதிகாலையில் உதிக்கும் ஆதவனின் கிரணங்கள் பட்டு தங்கமென தகதகக்கும் மலைச்சரிவுகள், மணல்வெளிகள்.

சிறிது தூரம் சென்றதும் பஸ் நிறுத்தப்பட்டது. சுங்கப் பரிசோதனை நிலையம். பாஸ்போர்ட்களை பரிசோதித்தபின், ஆளுக்கொரு ஜம் ஜம் தண்ணீர் பாடிலும், வெல்கம் மீல்ஸும் வழங்கப்பட்டன. மீல்ஸ் கிட்டில் ஒரு கேக், ஒரு உப்பு பிஸ்கட் பாக்கிட், ஈத்தம்பழம் நிரப்பப்பட்ட குக்கீஸ் பார் ஒன்று, ஒரு புரூட் டிரிங்க் ஆகியவை இருந்தன. நாங்கள் அதை சாப்பிட்டு பசியாறினோம். ஜம் ஜம் தண்ணீர் மட்டும் நான் அருந்தவில்லை. முதன் முதலில் காபா சென்று, அங்குள்ள பைப்பில் தான் அருந்த வேண்டும் என்ற ஆவலில் அதை அப்படியே வைத்துக் கொண்டேன்.

முஅல்லில் அலுவலகத்தின் அருகில் பஸ் நின்றது. முஅல்லிம் என்பவர் சவூதிப் பிரஜை. அவருக்கு கீழ் சில ஆயிரம் ஹாஜிகளின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கும். நமது தங்குமிடம், போக்குவரத்து ஆகியவற்றிற்கு அவரே பொறுப்பு. என்ன குறை இருந்தாலும் அவரிடம் தெரிவிக்கலாம். அவருக்கு பொறுப்புகள் அதிகம் என்பதால் அவரைப் பார்க்க முடியாது. மேனேஜர் மற்றும் பல உதவியாட்கள் அவரின் கீழ் இருப்பார்கள். அவர்களை அனுப்பி வைப்பார் நம் உதவிக்கு.

மக்கா நகரை பஸ் நெருங்கியதற்கு அடையாளமாக பிரம்மாண்டமான ஒரு ஆர்ச் வரும். அது திருக்குரான் திறந்து வைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தில் இருக்கும். இதைத் தாண்டி முஸ்லிம் அல்லாதவர்கள் போக அனுமதி இல்லை.

மக்காவினுள் சிறிது தூரம் சென்றதும் பஸ் நின்றது. முஅல்லிம் பஸ்ஸில் ஏறி, நம்மை முகமன் கூறி வரவேற்று, உருதுவில் பேசினார். எனக்கு உருது தெரியாது. ஹிந்தி அரைகுறையாக தெரியும். எல்லாருக்கும் முஅல்லிமின் விசிட்டிங் கார்டு, 2 கப்கேக்குகள், கிரீம் பிஸ்கட் பாக்கிட் மற்றும் கூல்ட்ரிங்ஸ் வழங்கப்பட்டது. அடுத்து நாங்கள் எங்கள் தங்குமிடம் நோக்கி பயணமானோம். தூரம் குறைவு எனினும் மிக நீண்ட நெடிய பயணம் அது.

சென்னையிலேயே என் தந்தை அவர் இன்ஃபுளூயன்ஸினால் சார்ட்டைப் பார்த்து எங்கள் ரூம் நம்பர், மற்றும் எங்களுடன் தங்கக் கூடியவர்கள் விபரத்தை தெரிவித்திருந்தார். எல்லா ரூமிலும் 5, 6 பேர் தான். எங்கள் ரூமில் மட்டும் 14 பேர். அதைக் கேட்டதும் எனக்கு மூட் ரொம்ப அப்செட். சரி அதிலும் ஒரு நல்லது இருக்கும் என மனதைத் தேற்றிக் கொண்டேன்.

சுமார் காலை 10.30 மணிக்கு எங்கள் லாட்ஜை பஸ் அடைந்தது. பஸ் விட்டு இறங்கியதும், மச்சான் என்னிடம், ‘ சாமான்களை நான் சரி பார்க்கிறேன், நீ போய் 14 கட்டிலில் எங்கு நாம் கரண்ட் அடுப்பு வைத்து சமைக்க பிளக் பாயிண்ட் இருக்கோ, அந்த கட்டிலைப் பிடித்துக் கொள்’ என்று அனுப்பினார். நான் போய் பார்த்தால் எங்குமே பாயிண்ட் இல்லை. ஏ.ஸி. பாயிண்ட் தவிர. சோகமாக திரும்பி வந்து இறைவனிடம் ப்ரார்த்தித்தேன்.

அதற்குள் ஒரு குளறுபடி. எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பர்ஸ்ட் ஃபுளோரில் இடம் காலில் இல்லையாம். ஆனால் M ஃபுளோர் என்று ஒன்று அங்கு எல்லாக் கட்டிடத்திலும் உண்டு. மீஜாஜைன் அல்லது மிடில் ஃபுளோர் என்று சொல்லக் கூடிய, கிரவுண்ட் ஃபுளோருக்கும் ஃபர்ஸ்ட் ஃபுளோருக்கும் நடுவில் உள்ளது. நம்ம ஊர் ஃபர்ஸ்ட் ஃபுளோரைத்தான் அவர்கள் அப்படி சொல்கிறார்கள். அதற்கும் மேல் இருப்பது தான் அங்கு ஃபர்ஸ்ட் ஃபுளோர். சரி குழப்பம் தீரட்டும் என்று நான் ரிஷப்ஷன் அருகே இருந்த ஹாலில், ஒரு சால்வையை விரித்துப் படுத்து ஒரு மணி நேரம் தூங்கி விட்டேன். தூங்கி எழுந்ததால், கொஞ்சம் ஃப்ரெஷாக இருந்தது.

படத்தில் இருப்பது, எங்கள் லாட்ஜ். இந்தியக் கொடியுடன் உள்ளது.

அதற்குள் கசமுசவென்று எல்லாரும் பேசி முஅல்லிமிடம் போனில் கேட்டு கடைசியில் 'M' தான் நம்ம ஃபுளோர் என்று முடிவு செய்தார்கள். 14 பேர் தூங்கக் கூடிய பெரிய ரூமுக்கு நான் சென்றேன். சுமார் 30 அடிக்கு 16 அடி என்ற அளவிலான ரூம் அது. அதை பாதிக்கு மட்டும் தடுப்பு சுவர் வைத்து மூன்று பாகமாக பிரித்து இருந்தார்கள். இரண்டு தடுப்பு சுவர்களுக்கு நடுவே குறுக்கு நெடுக்காக 3 கட்டில்கள். சரி நமக்கு இது சரியாக வரும் என்று நாங்கள் அதை எடுத்துக் கொண்டோம். கட்டில்களை சவுகரியமானபடி மாற்றிப் போடவும், அடியிலிருந்து பிளக் பாயிண்ட் எங்களைப் பார்த்து சிரித்தது.

இரண்டு கட்டில்களை ஒன்றாக சேர்த்துப் போடவும், நடுவில் இடம் கிடைத்தது. அதில் அங்கு இருந்த ஒரு சதுர டேபிள் எடுத்துப் போட்டுக் கொண்டேன் சமைக்க. டேபிள் அருகிலேயே ஒரு ஜன்னல். அதற்கு நேர் மேலே ஏ.ஸி. நாங்கள் கொண்டு சென்றிருந்த ஸ்கிரீன் துணியால், எங்கள் இருவரின் (மச்சான், நான்) கட்டிலுக்கும் நல்லா பக்காவாக மறைப்பு போட்டுக் கொண்டோம். துணி காய வைக்கும் ஸ்டீல் கிளிப் மிக உதவியாக இருந்தது ஸ்கிரீன் போட.

எங்கள் இருவரின் கட்டில்(திரையுடன்) அடுத்ததாக சமையல் டேபிள், அடுத்து மாமனாரின் கட்டில், மாமனார் கட்டிலின் கால் மாட்டில் டிராயருடன் கூடிய இன்னொரு மேஜை பாத்திரங்கள் வைக்க. எங்கள் கட்டிலின் கால் மாட்டில், சூட்கேஸ்கள் என எல்லாமே கச்சிதமாக செட் ஆகிவிட்டது, எங்களுக்கு.

இனி அடுத்தபடியாக, எல்லாருக்கும் பசி. சாப்பிடும் நேரம். காலையிலும் சரியான டிபன் இல்லை. சும்மா பிஸ்கட் கேக் என சாப்பிட்டது. சமைக்க வேண்டும். முதலில் ரூமில் வைத்து சமைக்க அனுமதிப்பார்களா, தெரியவில்லை! பிளக் பாயிண்டும் நம்மூர் போல் இல்லை. அதில் போட வேண்டுமானால், அடாப்டர் வேண்டும். எங்கு போய் தேடி வாங்குவது அடாப்டரை? எல்லாருக்கும் ரொம்ப டயர்டு வேறு. சோதனையான நேரத்தில் நாம் உதவி தேடுவது ஆண்டவனிடம் தான்.

முதலில் நாங்கள் என்ன கொண்டு சென்றோம் என்று கூறிவிட்டு, பிறகு எப்படி உதவி கிடைத்து சமைத்தோம் என்று கூறுகிறேன்.

-சுமஜ்லா

7 comments:

Anonymous said...

சுஹைனா...

எப்படீங்க இப்படி விரு விருப்பா எழுதரீங்க? அருமை தோழி. அடுத்த பாகத்துக்கு waiting.

-கவின்.

Anonymous said...

thank you kavin

Anonymous said...

வாவ்!!!சுஹய்னா மஜ்ஹர் இப்படி ஒரு புனித பயனக்கட்டுரை யாராலும் வர்னிக்கமுடியாது,இன்ச் பை இன்ச், அழகாக எலுதுகின்ற?ர்கள்.வாழ்த்துக்கள்.
ரைஹானா.

Anonymous said...

நன்றி ரைஹானா,
இன்னும் நிறைய சகோதரிகளிடம், அதுவும் ஹஜ்ஜுக்கு செல்ல இருப்பவர்களுக்கு, இதைப் பற்றி சொல்லுங்கள்.

Anonymous said...

assalamu alakum
alhamdulillala
while reading yr articles we have recalled the unforgetable rememberance of our haj.
waiting for yr next......

Anonymous said...

thank you kathija, i think u r in japan. how is japan?

rasia said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா
ரொம்ப நல்லா இருக்கு உங்கள் ஹஜ் பயண அனுபவம், இப்பொழுது தான் படித்து ரசிக்க முடிந்தது!நல்லா எழுதுறீங்க!வாழ்த்துக்கள்!அடுத்த பாகத்திர்க்கு நானும் போகிறேன்,அங்கு பார்ப்போம்!