Friday, February 6, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 7

எங்கள் பேருந்து மற்றும் ஹஜ் பயணிகளை சுமந்த ஏழெட்டுப் பேருந்துகள் வரிசையாக மீனம்பாக்கம் விமான நிலையத்தை சென்றடைந்தது. முதுகில் மாட்டும் பை இரண்டு, சிறிய சூட்கேஸ் ஒன்று ஆக மொத்தம் மூன்று ஹேண்ட் லக்கேஜ்களுடன் நாங்கள் ஏர்பொர்ட்டினுள் நுழைந்தோம். உள்ளே போனவுடன் ஒவ்வொரு பேகிலும் ஒரு tag மாட்டிவிட்டார்கள். சிறிது தூரம் சென்றாதும் எங்களிடமிருந்த சிறிய சூட்கேஸ், விமானத்தில் உடன் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால், வாங்கி கார்கோவில் போட்டுவிட்டு அதற்கு ஒரு ரசீது கொடுத்தார்கள்.

மேலும் சிறிது தூரம் சென்றது வழிநெடுக, பேட்ஜ் குத்திய ஹஜ் கமிட்டி தொண்டர்கள் எங்களை முகமன் கூறி வரவேற்று, ஆளுக்கொரு பிரியாணி பார்சலும், தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள்.

உள்ளே சென்று நாங்கள், ஒளு செய்து (ஒளு செய்வது என்றால் கை, கால், வாய், மூக்கு, முகங்களைக் கழுவுவது. ஒவ்வொரு நேரத் தொழுகைக்கு முன்னரும் இவ்வாறு கழுவ வேண்டும். மலம் ஜலம் கழித்தாலோ, காற்று பிரிந்து விட்டாலோ, ஒளு முறிந்து விடும். அதுவரை முறியாது) மஃரிபு என்ற அந்தி சாயும் நேரத் தொழுகையைத் தொழுதோம். பிறகு ஒரு கவுண்டரில், எங்களுக்கான அந்நிய செலாவணிதொகை 2100 ரியால்கள், அவரவர் கையில் வழங்கப்பட்டன. HDFC bank சார்பாக ஒரு சிறிய கைப்பையும் அன்பளிப்பாக தந்தார்கள். நாங்கள் ஒவ்வொருவராக, எங்களுக்கான டோக்கனை கொடுத்து கையெழுத்துப் போட்டு, இவற்றை பெற்றுக் கொண்டோம்.

பிறகு, எங்களுக்கு தரப்பட்ட பிரியாணியை உண்டு பசியாறினோம். அருமையான ஃபர்ஸ்ட் கிளாஸ் சிக்கன் பிரியாணி. அபாரமான சுவை. சும்மா சொல்லக் கூடாது, ஹஜ் கமிட்டி தொண்டர்களின் சேவை மகத்தான சேவை. பின் இரவு நேரத் தொழுகையான இஷா தொழுகைக்கான நேரம் வந்ததும், தொழுதுவிட்டு ப்ளாஇ ஏற கியூவில் நின்றோம். எங்கள் ஹேண்ட் லக்கேஜ்களை ஸ்கேனிங் கவுண்டரில் வாங்கி ஸ்கேனிங் செய்தார்கள். எங்களையும், ஆண்களை ஆண்களும், பெண்களை பெண்களும் உடல் முழுதும் தடவி செக் செய்தார்கள்.

அதன் பிறகு ஒரு ஹாலில் வெயிட் பண்ணினோம். அங்கு ஏர்போர்ட்டில் நிறைய கடைகள். விலை ரொம்ப திகம். ஒரு ஆப்பிள் ஜூஸ் கூட 90 ரூபாய், 100 ரூபாய் என விலை இருக்கும். அங்கு டிஜிட்டல் சைன் போர்டில், நம்மூர் ரயில்வே ஸ்டேஷன் போல ப்ளைட் அறிவிப்பு ஓடுகிறது. அதில் SV 5241 என்ற எண்ணைப் பார்த்தவுடன், அட நம்ம ப்ளைட் என்று எழுந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தபடி, மூன்றாம் எண் வாசல் வழியாக நடந்தோம். சிறிது தூரம் நடந்ததும், ஏர் ஹோஸ்டஸ், நம்மை வரவேற்கிறார்கள். அப்போ தான் புரிகிறது நாம் ப்ளைட்டில் நுழைந்து விட்டோம் என்று. நம் ஊரில், ஒன்றுக்குள் இருந்து ஒன்றுக்குள் போக ரயில் பெட்டிகளை இணைத்திருப்பார்களே அது போல இணைத்திருந்தார்கள் ப்ளைட்டையும் ஏர்போர்ட் ஹாலையும்.

உள்ளே நுழைந்ததும், பார்த்தால் நம்மூர் ஏர்பஸ் போலத்தான். இரண்டு வரிசை பஸ்ஸில் இருப்பதற்கு பதில், இங்கே மூன்று வரிசைகள். ஒவ்வொரு வரிசையிலும், மும்மூன்று இருக்கைகள். எல்லாரும் ஹஜ் பயணிகள் என்பதால், சீட் நம்பரெல்லாம் கிடையாது. வேண்டும் இருக்கையை பிடித்துக் கொள்ள வேண்டியது தான். நான் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டேன், ப்ளைட் இறக்கை வெளியே பிரம்மாண்டமாக தெரிந்தது.

மிக அழகாக உடுத்திய இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் ஆகிய சவூதிய ஏர்ஹோஸ்டஸ்கள் எங்களுக்கு சீட் பெல்ட் போட சொல்லிக் கொடுத்தார்கள். மற்றும் லைஃப் ஜாக்கிட் உடுத்துவதையும் சொல்லிக் கொடுக்கும் போது, அடிவயிற்றில் கிலி பந்தாய் கவ்விக் கொள்கிறது. எல்லாரையும் தம் தம் செல்போனை ஆஃப் பண்ணச் சொன்னார்கள். மெதுவாக, ஜன்னல் வழியே ஏர்போர்ட்டை நோட்டம் விட்டேன். இரவு நேரமாதலால், ஆங்காங்கே, மினுக் மினுக்கென்று லைட் வெளிச்சமும், ரோந்து கார்களின் சுழல் விளக்கும் தென் படுகின்றது.

படத்தில் ப்ளைட் உட்புறம்.

வ்ரூம்.......வ்ரூம்.......ப்ளைட் ஸ்டார்ட் ஆகிவிட்டது. என்ன இது பின்னோக்கி நகர்கிறதே. உண்மையாக பின்னால் செல்கிறதா? இல்லை பிரமையா? சிறிது தூரம் பின்னால் சென்றாதும் இப்போ முன்னால் நகர்கிறது. மேலே ஏறும் போதும் இறங்கும் போதும் சிலருக்கு காதுவலி வரும் என்பதால் அதை தவிர்க்க பபுள்கம் மெல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நான் பபுள்கம் பிரித்து வாயில் போட்டுக் கொண்டேன். ஓடுது, ஓடுது, ப்ளைட் ரன்வேயில் கிட்டத்தட்ட கால்மணி நேரமாக. வாயில் இருந்த பபுள்கம்மின் ஸ்வீட்னஸ் கூட போய்விட்டது. நாங்கள் பிரயாணம் நல்லபடி அமைய துவா ஓதி ப்ரார்த்தனை செய்தோம்.

திடீரென்று அடிவயிறு சுருங்குகிறது. நாம் அப்படியே மிதப்பது போல இருக்கிறது. நம்மை அறியாமல் நாம் சீட்டில் சாய்கிறோம். அட! ப்ளைட் டேக் ஆஃப் ஆயிடுச்சு. கைகள் பயத்தால், சில்லிட்டு விட்டது. பயத்துடன் மச்சான் கைகளை இறுக பற்றிக் கொண்டேன். ஜன்னல் வழியாக பார்த்தேன். பூமி நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நழுவுவது தெரிகிறது. இறக்கையைப் பார்த்தேன்; செங்குத்தாக மேல் நோக்கி இருக்கிறது. ஒரு ராட்சஷ பறவையைப் போல எங்கள் விமானம் மேலே ஏறுகிறது. வெளியே மெட்ராஸ் மிக அழகாக ஜொலிக்கிறது. என் தோழி ஒருவர் சொல்லியிருந்தது போல, நட்டு வைத்த தீக்குச்சி போல, இரவு விளக்குகள், கலர், கலராய் வர்ண ஜாலம் காட்டுகின்றன. ப்ளைட்டில் நமக்கு முன்னால் ஒரு டீ.வி. ஸ்கிரீன் விரிகிறது. அதில் ஒரு குட்டி பொம்மை ப்ளைட் ஒரு வரைபடத்தின் மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதில் நாம் எந்த இடத்தின் மேல் போகிறோம், எத்தணை அடி உயரத்தில் போகிறோம், வெளியே டெம்பரேச்சர் மற்றும் காற்றழுத்தம் எவ்வளவு இருக்கிறது போன்ற விவரங்கள் வருகிறது.

நான் ஜன்னலை நோக்கி லூஸு மாதிரி கையசைத்தேன், கீழே இருந்து என் குழந்தைகள் ப்ளைட்டுக்கு டாடா காண்பிப்பார்களோ?! என்ற எண்ணத்தில். கீழே தெரிந்த மின் விளக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணை விட்டு மறைகின்றன. ப்ளைட் லேசாக ஒரு குலுங்கு குலுங்குகிறது. பார்த்தால், நாம் 5000 மீட்டர் உயரம் மேலே சென்று விட்டோம். இப்பொழுது, சீட் பெல்ட்களை கழட்டச் சொன்னார்கள். எல்லாருக்கும் கூல்டிரிங்க்ஸ் சர்வ் பண்ணினார்கள். சீட்டுக்கு எதிரே, மடக்கி வைக்கப்பட்டிருக்கும் பலகையை இழுத்தால், ஒரு சிறு மேஜை போல் ஆகிவிடுகிறது. அதில் நாம் நம் உணவுகளை வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். அதன் அருகே, வாமிட் வந்தால், எடுக்க ஒரு சிறு பையும், அவசர உதவிக் குறிப்புகள் அடங்கிய பேம்ப்லெட்டும் இருந்தன. பின், சிறிது நேரத்தில், பிரியாணி, சேலட், ப்ரூட் டிரிங்க், கேக், தயிர், ஊறுகாய் அடங்கிய மீல்ஸ் கிட் கொடுத்தார்கள்.

இப்ப ஜன்னல் வழியே பார்த்தால், மீண்டும் மினுக் மினுக் லைட்டுகள். டீ.வி. ஸ்கிரீனில், குட்டி ப்ளைட் கர்னாடகாவின் ஏதோ ஒரு சிட்டியின் மேல் பறந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அதுவும் காணாமல் போய் விட்டது. இப்பொழுது நாங்கள் அரபிக் கடலின் மேல் பறந்து கொண்டிருக்கிறோம். அட்லாண்டிக் கடலின், பெர்முடா டிரையாங்கிள், மரியா டிரென்சு என புக்கில் படித்து பயந்ததெல்லாம் இப்போ நினைவு வந்து தொலைத்தது.

ப்ளைட்டில் வசதியாக கால் நீட்டக் கூட இடமிராது. நம்மூர் பஸ்ஸில் இருப்பதை விட சிறிய இடம் தான் கால் வைக்க. சரி, எழுந்து ப்ளைட்டை சுற்றிப் பார்க்கலாம், என்று எழுந்தேன். இருபுறமும் தலைக்கு மேலே, நம்மூர் பஸ்ஸில் இருக்குமே, அது போல மூடி போட்ட பரண் மாதிரி இருக்கிறது நம்ம லக்கேஜ் வைக்க. ப்ளைட் டேக் ஆஃப் ஆகும் முன், கம்பல்சரியாக நம்ம லக்கேஜை பெற்று உள்ளே வைத்து விடுகிறார் ஏர்ஹோஸ்டஸ்.

நான் எழுந்து பேகை எடுத்து, அதிலிருந்து மாத்திரைகள் எடுத்து மாமனாருக்குக் கொடுத்துவிட்டு, பாத்ரூம் நோக்கி நடந்தேன். மிக குட்டியூண்டு பாத்ரூம். தண்ணீர் அதிகம் திருகக் கூடாது என்ற எச்சரிக்கையோடு உள்ளே விட்டார்கள். பார்க்க சுத்தமாக இருந்தாலும், ஒரே ஸ்மெல். உலகத்திலேயே, மிகச்சிறிய டாய்லெட். நான் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தேன்.

கொஞ்சம் நேரத்தில் மீண்டும் சீட் பெல்ட் அணியச் சொன்னார்கள். பார்த்தால் ப்ளைட் திரும்புகிறது. ஜன்னல் வழியே பார்க்கும் போது அப்படியே ஒரு பக்கத்து இறக்கை மேலே சாய்கிறது. மீண்டும் நம்மை அறியாமல், அடி வயிறு சுருங்குகிறது. கொஞ்சம் நேரம் தான்; அப்புறம் சரியாகிவிட்டது.

இப்ப ப்ளைட் அரபிக் கடலை க்ராஸ் செய்து அரேபிய மண்ணின் மேல் பறக்கிறது. கீழே தெரியும் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்தாலே, நாம் தெரிந்து கொள்ளலாம். நான் என் முதல் ப்ளைட் ஜார்னியை மிகவும் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் கோக் வழங்கப்பட்டது.

இந்தியர்களின் இஹ்ராமுக்கான எல்லையான யலம்லம் வரப் போவதாக அறிவித்தார்கள். நாங்கள் மனதிற்குள், உம்ராவுக்காக இஹ்ராம் கட்டுவதாக நிய்யத் செய்து கொண்டு ‘லப்பைக்’ ஓத ஆரம்பித்தோம்.

எல்லாருக்கும் கேக், பிஸ்கட், பிரட், ஜாம், சாண்ட்விச் அடங்கிய ப்ரேக் பாஸ்ட் கிட் ஒன்று தந்தார்கள். நாங்கள் பசியில்லாததால், ஊர் போய் சேர்ந்ததும் சாப்பிடுவதற்காக அதை பத்திரப் படுத்திக் கொண்டோம்.

ஊர் வந்துவிட்டது. ப்ளைட் லேண்டிங் ஆகப் போகிறது. எல்லாரையும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள சொன்னார்கள். மேட்டிலிருந்து பள்ளத்துக்குப் பாயும் தண்ணீரைப் போல ‘சொய்ங்’ என்று கீழே முன்னூறு கி.மீ வேகத்தில் போகிறது. இரு காதுகளும் கப்பென்று அடைத்துக் கொண்டன. மீண்டும் பபுள்கம் ச்யூவ் பண்ண ஆரம்பித்தேன். லேசாக தலை சுற்றியது.

கீழே புள்ளியாகத் தெரிந்த இரவு விளக்குகள், இருக்க இருக்க சற்று பெரிதாகிக் கொண்டே வந்தன. சட்டென்று ஒரு குலுக்கல். சக்கரம் தரையில் பட்டுவிட்டது. இப்போ இஞ்சின் சவுண்ட் வேறு மாதிரி கேட்டது. ப்ளைட் ரன்வேயில் ஓடி ஓடி ‘மூச்சு வாங்கி’ நின்றது. அப்பாடா என்று இழுத்துப் பிடித்திருந்த மூச்சை நான் நிம்மதியாக வெளியே விட்டேன்.

எங்கள் பாகுகளை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது, முகப்பில் நின்றிருந்த ஏர் ஹோஸ்டஸுக்கு சேஃப் ஜார்னிக்காக நன்றி சொன்னேன். ஏணிப்படி வழியாக இறங்கினோம். எங்கள் சவூதியன் ஏர்லைன்ஸ் ப்ளைட்டை திரும்பிப் பார்த்தேன். பயணிகளை பாதுகாப்பாக கொண்டு வந்து துப்பிய நிம்மதியில் சமர்த்தாக நின்று கொண்டிருந்தது. குளிர் சில்லிட்டாலும், மனதில் இனம் புரியாத பரவசம்.

இப்போ 2,3 பஸ்கள் தயாராக ரன்வேயில் நின்று கொண்டிருந்தன. எல்லாரும் அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். பஸ்ஸில் ஓரிரு இருக்கைகள் தவிர எல்லாமே காலி இடம். ஸ்டேண்டிங் தான். ஏர்போர்ட்டின் உள்ளேயே சில கிலோ மீட்டர்கள் போய் ஒரு டெர்மினலின் முன்னே எங்கள் பஸ் நின்றது. நாங்கள் இறங்கி லப்பைக் ஓதியவாறு டெர்மினலின் உள்ளே சென்றோம்.

மக்கா நகரின் அமைப்பு பற்றியும் அதன் கலாச்சாரம் பற்றியும் அடுத்து சொல்கிறேன்.

19 comments:

Anonymous said...

முதன்முதலில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் உங்கள் பயண அனுபவத்தைப் பார்த்தால் இலகுவில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கமாக எழுதியிருக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி.

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

Alhamdhulillah very intresting thank you

Anonymous said...

ஹாய் சுஹைனா,
ம்...ரொம்ப அழகா பயண கட்டுரையை எழுதி கொண்டு போகிறீர்கள்..படிக்க நல்லா இருக்கு.ஃப்ளைட் அனுபவத்தை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.அப்புறம் விண்ணில் இருந்து மண்ணை பார்க்கும் போது கவிதை கண்டிப்பா வந்திருக்குமே.அதையும் கொஞ்சம் எடுத்து விடுங்க!!!
தொடர்ந்து உங்க கட்டுரையை படிச்சிட்டு வரேன்பா.இதோட முதல் பகுதியில் கூட கமெண்ட் போஸ்ட் செய்தேன்.அதை நீங்க கவனிச்சீங்களோ இல்லையோ!உங்களோட இந்த எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்பா..

Anonymous said...

eagerly awaiting your next post.

Jaleela Kamal said...

டியர் சுகைனா ஒரு விஷியம் கூட விடாமால் எப்படி இவ்வளு தெள்ள தெளிவா எழுதுகிறீர்கள்
ரொம்ப அருமை.

ஜலீலா

Anonymous said...

சுஹைனா அக்கா எப்படி இருக்கீங்க நீங்கள் எழுதுவதை பார்த்து வியந்துவிட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்

Anonymous said...

அன்பு சுகைனா எப்படிப்பா இவ்வளவு அருமையாக வர்னிக்க முடிகிறது,வாய்பிளக்க வய்கின்ற்?கள்.வாவ்,,,,, ரைஹானா.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! இது உங்களுக்கு என்னுடைய நான்காவது பதிவு :) ஆனால் ஒன்றுக்கு கூட உங்களின் பதில் இல்லையே?! இணையத்துக்கு வருவதே கொஞ்ச நாளாக எனக்கு அரிதாக உள்ளது. அப்படியும் உங்களுக்கு ஆசையாக பதிவு போடுகிறேன். சரி பரவாயில்லை. மாஷா அல்லாஹ், அசராமல் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களின் எழுத்து இன்னும் தொடரட்டும், இன்ஷா அல்லாஹ்!

SUMAZLA/சுமஜ்லா said...

முதலில் என் பதிவு அஸ்மாவுக்கு,
பதில் தர விடுபட்டதற்கு மன்னிக்க வேண்டும் சகோதரி. முற்பக்கத்தில் இருக்கும் லிங்க் மூலம் மின்னஞ்சல் கொடுங்கள்.

சுகன்யா, உங்க பதிவை படித்தேன்ப்பா; யார் எந்த பதிவு கொடுத்தாலும், எனக்கு ஈமெயில் வந்து விடும். அது போல செட்டிங் செய்துள்ளேன். உங்க நல்ல குணம் எப்பவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஜலீலாக்கா, உங்க ப்ளாகில் போஸ்ட் செய்துள்ளேன். போஸ்ட் செட்டிங்ஸில் கொஞ்சம் மாற்றம் செய்தால் போஸ்ட் செய்பவர்களுக்கு ஈஸி. என்னிடம் மெசஞ்சரில் தொடர்பு கொள்ளுங்கள். விளக்கமாக சொல்கிறேன்.

இன்னும், ராஹிலா, ரைஹானா, பிருந்தா மற்றும் ananymous(பெயர் போடக் கூடாதா?) தோழிகளுக்கு, உங்கள் கமெண்ட்ஸ் என்னை உற்சாகப் படுத்துகிறது. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இறைவன் நாடினால், இன்னும் நிறைய தொடர்கள் எழுத நாடியுள்ளேன்.

அன்புடன்
சுஹைனா

Anonymous said...

கண்டிப்பாக எழுதுங்கள் தோழி.
திறமைகள் எப்பொழுதுமே வெளிக்கொணர வேண்டியவை. அதனால் தயங்காமல் உங்கள் ஆக்கங்கள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிருந்தா

afrine said...

hi suhaina its very interesting

afrine said...

சுஹைனா அடுத்த தொடர்ச்சிக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.

Anonymous said...

Hi suhaina... vanthathum muthalil padiththathu ungaL blog. Very interesting


ila

Unknown said...

சுஹைனா உங்களின் இந்த பயண கட்டுரை இன்று தான் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கு..

Unknown said...

டியர் சுஹானா
பயணக்கட்டுரை படித்தாலே ஆசையை தூண்டுகின்றது
மிக்க நன்றி
www.tamilkudumbam.com
பாருங்க ரசியுங்க நீங்களும் அசத்துங்க

Anonymous said...

ila, thanishaa, faiza, and birundha thanks for ur comments. and who is that tamil kudumbam? i know tamilkudumbam.com, aana ungga peru ennappaa? i think u r the admin of tamilkudumbam. am i right?
-suhaina.

Anonymous said...

என் முறையீட்டுக்கு முதல் பதிவாக பதில் தந்ததற்கு :) ரொம்ப நன்றி சுஹைனா!மன்னிப்பெல்லாம் எதற்குபா...?சில முக்கியமான வேலைகளால் கொஞ்சம் பிஸியாக உள்ளது. இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.

Menaga Sathia said...

ஹாய் சுகைனா உங்க ப்ளாக் ரொம்ப நல்லாயிருக்கு.பயணக் கட்டுரை ரொம்ப அருமை.நல்லத் தெளிவான எழுத்து நடை,விளக்கம் எல்லாமே ரொம்ப பிடித்திருக்கு.தினமும் நான் உங்க ஹஜ் பயணக் கட்டுரையைப் படிப்பேன்பா.மேலும் உங்க எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
மேனகா.

rasia said...

சுஹைனா என் அம்மா கூட ஹஜ் செய்துள்ளார்கள்,இதுபோல் விவரித்ததில்லை!ஒன்றைக்கூட மறக்காமல் எழுதுகிறீர்கள்!தொடருங்கள்!