Tuesday, February 10, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 9

மக்கா நகர மக்கள் யாரும் அதிகம் படிப்பதில்லை. அங்கு பள்ளிக்கூடங்களை விட அரபி கற்றுத் தரும் மதரஸாக்கள் தான் அதிகம். அதனால், செகண்ட் லாங்குவேஜ் எனப்படும் வேற்று மொழி அறிவு அவ்வூர் மக்களுக்கு அறவே கிடையாது. யாருக்குமே ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலத்தில் அடிப்படை வார்த்தை, அதாவது, ஒன், டூ, த்ரீ கூட தெரியாது. நாம் எதாவது கடைக்கு பொருள் வாங்க சென்றால் கால்குலேட்டரில் விலையை அடித்து காண்பிக்கிறார்கள். நாம் பேரம் பேச வேண்டுமென்றால், அதைவிட குறைவான விலையை அடித்துக் கண்பிக்க வேண்டும். இப்படியாகத்தான் வியாபாரம் நடக்கிறது.

‘பின் தாவூது’ எனப்படும் பெரிய சூப்பர் மார்க்கட் பல இடங்களில் உள்ளது. அங்கு ஏ டு ஜட் எல்ல பொருட்களும் கிடைக்கும். ஆனா, விலை சற்று அதிகம். அங்கு பெட்டிக் கடை முதல், சூப்பர் மார்கட் வரை எல்லாமே செல்ஃப் சர்விஸ் தான். நமக்கு வேண்டியதை நாமே எடுத்துக் கொள்வதால், பாஷை தெரியாதது ஒரு பிரச்சினையே அல்ல.

அங்கு எல்லாமே உயரமான கட்டிடங்கள் தான். 15 அடுக்கு என்பதெல்லாம் சர்வ சாதாரணம். ஆனால், சிறிய பெட்டிக் கடை முதல், பார்பர் ஷாப் வரை எல்லா இடத்திலும் ஏ.சி. இருக்கும். இல்லாவிட்டால் டெஸர்ட் க்ளைமேட்டுக்கு வெயில் தாங்க முடியாது. வெயில் மிக உக்கிரமாக இருக்கும். தகுந்த பாதுகாப்பு இல்லாமல், போனால் சன் ஸ்டிரோக் வந்து உயிரே போய்விடும்.

மித மிஞ்சிய வருமானம் இருப்பதால், சிறு வயதிலேயே திருமணம் முடித்து விடுகின்றனர். ஆண்கள் கால் பாதம் வரையில் ஆன நீண்ட ஜிப்பா போன்ற அங்கி அணிந்திருப்பார்கள். தலையில் வஸ்திரம் போட்டு அதன் மேல், கருநிற ரிங் வைத்திருப்பார்கள். இது தான் பாரம்பரிய அரேபிய உடை. சிறு பிள்ளைகள் கூட இவ்வாறு தான் உடுத்தி இருப்பார்கள். பெண்கள் தலையிலிருந்து பாதம் வரை (பின்பக்கம் சற்று நிலத்தில் தரையும் படி ஏன் போடுகிறார்கள் என்பது தெரியவில்லை) நீண்ட கருநிற பர்தா அணிந்திருப்பார்கள். கண்களுக்கு மட்டும் சிறு ஓட்டைகள் இருக்கும்.

அங்கு குடும்ப கட்டுப்பாடென்பதே கிடையாது. வத வத வென நிறையக் குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள். பெராம்புலேட்டர் எனும் தள்ளு வண்டியில் குழந்தைகளை வைத்து தள்ளிக் கொண்டு போவார்கள். அதிலும் இரு குழந்தைகள் அமரும் படியான இரட்டை பெராம்புலேட்டர்களைப் பார்க்கும் போது, எப்படித்தான், இப்படி வரிசையாக பெற்று வளர்க்கிறார்களோ என்று இருக்கும் நமக்கு.

ஹரமை சுற்றிலும் மற்றும் எல்லா இடங்களிலும் நிறைய நகைக் கடைகளைப் பார்க்கலாம். அங்கு 22 காரட் நகைகள் எங்குமே கிடையாது. 18 அல்லது 21 காரட் தான். இரண்டுமே ஒரே விலைதான். நாம் தான் பார்த்து வாங்க வேண்டும். இந்திய தங்கத்துக்கு நல்ல விலை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் செய்கிறார்கள். ஒரு கிராம் (21 காரட்) விலை 100 ரியால் முதல் 110 ரியால் வரை, டிசைனைப் பொறுத்து மாறுபடுகிறது. மற்றபடி கூலி சேதாரமெல்லாம் கிடையாது. இந்திய நகைகளை கிராம் 88 ரியால்களுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். நம்மூர் போல எதுவும் கழிப்பதில்லை. அழுக்குக் கூட கழிப்பதில்லை.

வெள்ளை அரபு இன மக்களும், ஹபஷிக்கள் எனப்படும் கருப்பின மக்களும் கலந்து தான் வசிக்கிறார்கள். கருப்பின மக்கள் பெரும்பாலும் நாட்டின் அடையாள அட்டை இல்லாமல் வசிப்பவர்கள். கருப்பினப் பெண்கள் ஆங்காங்கே ப்ளாட்பாரங்களில் கடைபோட்டு விற்பனை செய்கிறார்கள்.

அந்நாட்டில், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும், குற்றம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆங்காங்கே கையில்லாத பிச்சைக்காரர்களைப் பார்க்கலாம். அவர்கள் எல்லாம் திருடியதால் கை வெட்டப்பட்டவர்கள். நாம் அசால்ட்டாக ரோட்டோரம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தால், கருப்பர்கள் அதைப் பறித்துச் சென்று விடுவார்களாம். தனியாக பெண்கள் யாரும் வாடகை காரில் ஏறுவதில்லை. மலையோரப் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் நடப்பதால், பயப்படுகிறார்கள். குற்றவாளிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நாட்டவராயின் கொஞ்சம் சலுகை காட்டுகிறார்கள். அயல் நாட்டவருக்கு தண்டனை கடுமையாக இருக்கும்.

அங்கு சிக்னல்களில், போலீஸ் இருந்தாலும், இல்லாவிட்டாலும், விதிகளை கரெக்டாக பின்பற்றுகிறார்கள். காரணம் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தி உள்ளனர். வெளிநாட்டவருக்கு ஃபைன் சார்ஜ் பண்ணியிருப்பது கூட தெரியாதாம்; ஆனால் ரெகார்டில் இருக்குமாம். அவர் தன் நாட்டுக்கு போகும் போது, தான் கஸ்டம்ஸ் விசா ஆஃபீஸில், உங்கள் கணக்கில், இன்ன விஷயத்துக்காக, இத்தணை ரியால் ஃபைன் போட்டிருக்கிறார்கள். அதை நீங்கள் கட்டினால் தான் விசா க்ளியர் பண்ணுவோம் என்று சொல்லும் போது தான் தெரிய வருமாம். அப்புறம் என்ன நொந்து போய் கையிலுள்ளதைக் கட்ட வேண்டியது தான்.

அங்கு போலீஸைப் போல முதவ்வா(religious police) என்ற பெரிய தாடி வைத்த குரூப் ஒன்று இருக்கிறது. அவர்கள் ரோந்து வருவார்கள். அவ்வூரில், மசூதியில் தொழுகை நடக்கும் நேரங்களில் யாரும் ரோட்டில் நடமாடக் கூடாது. தொழுகைக்கு போய்விடணும்; அல்லது, வீட்டின் உள்ளேயே இருந்து கொள்ளணும். இல்லாவிட்டால், முதவ்வா, அவர்களை பிடித்துப் போய்விடுவார்கள். ஆனால், இது போன்ற கடுமையான விதிமுறைகளை, ஹஜ் சமயத்தில், அந்நிய நாட்டவர் அதிகம் இருப்பதால், கொஞ்சம் தளர்த்துகிறார்கள். எந்த கெடுபிடியும் செய்வதில்லை.

ஹஜ் சமயம் வந்து விட்டால், அந்நாட்டு மக்களுக்கு கொண்டாட்டம் தான். நல்ல காசு பார்த்து விடுகிறார்கள். எல்லா விலைவாசியும் ஏறிவிடுகிறது. ஹஜ்ஜுக்கு முன்பும் ஹஜ் சமயத்திலும், அந்நிய செலாவணி மதிப்பு கூட சற்று உயர்ந்து விடுகிறது. அச்சமயத்தில், 14.50 ருபாய்க்கு ஒரு ரியால் தருவார்கள். ஹஜ் முடிந்த பின் 12.50 க்கு ஒரு ரியால் என குறைந்து விடுகிறது.

எல்லாக் கடைகளிலும், பொருட்களை வாய்க்கு வந்த விலைக்கு விற்கிறார்கள். கேரளாக்காரர்களின் கடைகளை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். கண்டிப்பாக பேரம் பேசாவிட்டால், நாம் ஏமாந்து போவோம்.

முக்கியமாக டாக்ஸிகாரர்கள் காட்டில் தான் மழை. அவ்வூரில் பணியில் இருப்பவர்களுக்கு, ஹஜ் சமயம் 15 நாள் லீவு தருகிறார்கள். அந்நாட்களில், அவர்கள் தன்னுடைய காரை எடுத்டுக் கொண்டு, வாடகைக்கு ஓட்டுகிறார்கள். அவர்கள் சொல்லும் வாடகை மொத்தமாக அல்ல; ஒரு நபருக்கு இவ்வளவு என்பது தான். ஹஜ் சமயத்தில் தலைக்கு 10 ரியால் வாங்கும் அதே தூரத்துக்கு, ஹஜ் முடிந்தபின் 2 ரியால் ஆக குறைந்துவிடும். பகல் கொள்ளை அடிப்பார்கள்.

அந்நாட்டில் மக்கள் எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை. பெட்ரோல் வளம் முலம் மிதமிஞ்சிய வருமானம் கிடைப்பதால், கவர்ன்மெண்ட் இச்சலுகைகளை வழங்குகிறது. அங்கு மன்னராட்சி தான் மன்னர் மட்டுமல்ல, மந்திரி பிரதானிகள், அவர்கள் பிள்ளைகள், உறவினர்களுக்குக் கூட தனி அந்தஸ்தும் மரியாதையும், எல்லா இடத்திலும் கிடைக்கிறது.

அங்கு எல்லா இடங்களிலும் சாலையோரப் பூங்காக்கள் உண்டு. விலைக்கு வாங்கியாவது, தண்ணீர் ஊற்றி ஆசையாக செடி வளர்க்கிறார்கள். அதில் கலர் கலராய் பூக்களும் பூத்துக் குலுங்குகின்றன. அப்பூங்காக்களில், மக்கள், மடக்கக் கூடிய போர்ட்டபிள் டெண்ட் போட்டு, கேம்ப் செட் பண்ணி, உணவுண்டு மகிழ்ந்து தங்கள் ஓய்வு நாளைக் கழிக்கிறார்கள்.

காக்கைகளையே அங்கு பார்க்க முடியவில்லை. அது போல ஒரு நாய் கூட இல்லை. ஓரிரு சிட்டுக் குருவிகளும், உயரத்திலே கழுகுகளும் இருக்கின்றன. மற்றபடி புறாக்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. நிறைய பூனைகளையும் பார்க்கலாம். மக்கள், கருப்பின பெண்கள் விற்கும் கோதுமை மணிகளை வாங்கி புறாக்களுக்குத் தீனி போட்டு மகிழ்கிறார்கள்.

எல்லா சாலைகளும் கழுவி துடைத்துவிட்டது போல சுத்தமாக இருக்கிறது. ஹரம் ஷரீஃபினுள் பல லட்சம் மக்கள் கூடினாலும், படு சுத்தமாக இருக்கும். 24 மணி நேரமும் பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள், சுத்தம் பண்ணும் பணியில் இருப்பார்கள்.

அடுத்து என் சொந்த அனுபவத்தை தொடர்கிறேன். இவ்விரு அத்தியாயங்களையும் படித்தால் தான் நான் சொல்லும் என் அனுபவங்களை ஃபாலோ பண்ண முடியும். அதனால் தான் இவற்றை எழுதினேன். மீண்டும் சந்திப்போம்.

-சுமஜ்லா

10 comments:

Anonymous said...

suhaina,

thanks for explaing abt kaba. i got it now.
One more thing, நீக்ரோ enbathu bad word, yaravathu karuppina makalitam athai sonnal suttu vituvarkal gun eduthu.

Anonymous said...

ஆஹா கவின், அப்படியா எனக்கு தெரியாதுப்பா, நீங்க சுட்டுவிடுவார்கள் என்று சொன்னதும் எனக்கே பயமாகிவிட்டது. அவர்களைக் குறிக்கும் வேறு வார்த்தை என்னப்பா?

Anonymous said...

ரொம்ப அருமை சுஹைனா...ஆனா இந்த பகுதிலே உங்க அனுபம் மிஸ்ங்க்.அதை படிக்க ஆவலா காத்துட்டு இருக்கேன்

Anonymous said...

ரொம்ப நுணுக்கமாக எதையும் விடாமல் விவரித்துள்ளீர்கள்.படிக்கும் யாவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

Anonymous said...

சுஹைனா,

ஆமாம்பா, அது அவர்களைக் குறிக்கும் இழிச் சொல். நான் அமெரிக்கா வந்த பிறகு தான் இதைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர்களை அடிமைகளாக ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கி வந்தவர்கள் அவர்களை அப்படி அழைத்தனர். ஆப்பிரிக்கர் என அழைப்பது தகுந்த சொல். கருப்பின மக்கள் என்பது கூட ஓகே ஆனால் அது இழி சொல் இல்லாவிட்டாலும் தவறு என்று தான் சொல்கின்றனர் (சாதி சொல்லி அழைப்பது போல்).

Anonymous said...

ஹாய் சுஹைனா,
அட என்ன அருமையா விளக்குறீங்க!யாவரும் படித்தால் புரியும் வண்ணம்,கடந்த 2 அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள்.டைம் கிடைக்கும் போது போடுங்க.நைட் 1 மணிக்கு மேல் போட்டதா சொல்லியிருந்தீங்க.உடம்பை பார்த்துகோங்க.இல்லாட்டி 3 நாட்களுக்கு ஒரு முறை பதிவு போடுங்க.அதுவும் எவ்ளோ பெரிதா வேறு டைப் பண்ணி,எழுத்துபிழை இல்லாம பார்த்து அடிக்கனும்.எவ்ளோ நாள் ஆனாலும் உங்க பதிவை படிக்க எப்பவும் ஒரு நேயர் வட்டம் உண்டென்பதை மறக்க வேண்டாம்.காத்திருக்கோம் உங்க பதிவுக்காக!!!

Anonymous said...

அன்பு சுஹைனா,

இன்றைக்குதான் நேரம் கிடைத்தது. ஒரே மூச்சில் 9 பாகங்களையும் படித்து முடித்து விட்டேன். பயணக் கட்டுரை என்பது நம்முடைய அனுபவத்தை பதிவு செய்வது மட்டும் அல்ல, அது எதிர்காலத்தினருக்கான காலப் பெட்டகம்! அந்த வகையில் நீங்கள் மிகச் சிறந்த இலக்கியப் பொக்கிஷத்தை அளிக்கிறீர்கள் என்றுதான் கூற வேண்டும்!

வாழ்த்துக்கள்!

நேரம் கிடைக்கும்போது மீண்டும் பதிவு போடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

தாஜ் said...

சுஹைனாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் உங்க கட்டுரை அருமையாக போகிற்து.இஸ்லாத்தில் குடும்பகட்டுபாடு கிடையாதே அரபுகள் எம்பெருமானார் உம்மத்தை வளர்க்கிறார்கள் இறைவனும் பரக்கத் செய்கிறான்.அரபுபெண்கள் அனியும் உடைதான் இறைவனால் நமக்கு சூரத்துநூரில் கட்டளை போடப்பட்ட ஹிஜாப் இறுக்கமான உடை அணிந்து கால் பாதங்கள் தெரிய பெண்கள் வெளியில் வருவதை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது இஸ்லாம் தோன்றிய நாடல்லவா?சரியான இஸ்லாமிய சட்டப்படி நடக்கிறார்கள். எந்த நாட்டை சேர்ந்தவரானாலும் சரி தப்பு செய்தால் தண்டனை இங்கு உறுதி இங்கு இஸ்லாமிய ஷரிஅத் தீர்ப்பு சொல்லிட்டா பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் ஒழிய மன்னரே தலையிட்டாலும் தண்டனை உறுதி

Anonymous said...

வணக்கம் சுஹைனா,
மக்கா நகரைப் பற்றியும் அங்குள்ள சட்டம், நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைமுறையைப் பற்றியும் நன்கு விளக்கி உள்ளீர்கள்.
அருமை.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிருந்தா

rasia said...

சுஹைனா நன்றாக விளைக்கியுள்ளீர்கள்!பாராட்டுக்கள்!