Monday, March 2, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 15

வெள்ளிக் கிழமை நாங்கள் ஹரமுக்குப் போகவில்லை. எனக்கு நல்ல காய்ச்சல். நான் கொண்டு போயிருந்த தர்மா மீட்டர் வேறு வேலை செய்யவில்லை. நான் குரோசின் போட்டுக் கொண்டே, வழக்கம் போல நடமாடிக் கொண்டிருந்தேன்.

கீழ் ஃப்ளோரில், காமன் பாத்ரூமில் வாஷிங் மெஷின் இருந்ததால், மச்சான் போய் அதில் துணிகளை துவைத்து வந்துவிட்டார்கள். முஅல்லிமின் ஆள் வந்து இரு அடையாள அட்டைகளை கொடுத்து சென்றார். அதில் மினாவில் எங்கள் டெண்ட் நம்பர் மற்றும் சைத்தானுக்கு கல் எறிய எங்களுக்கான டைம் ஆகியவை எழுதப்பட்டிருந்தது.

அடுத்த நாள் காலை மினா செல்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தேன். கொஞ்சம் பூரி சுட்டு எடுத்துக் கொண்டேன், MTR foods, கட்டி சாதம், பூரிக்கு தொட்டுக் கொள்ள அம்மா செய்து கொடுத்திருந்த வெங்காயத் தொக்கு, உப்புக் கண்டம், சுடுநீர் வைக்கும் சிறிய டம்ளர் ஹீட்டர், டீ பேக்ஸ், சர்க்கரை, டம்ளர், ஸ்பூன், டபரா, டவல், மாற்றுடை, சங்கிலிப் பூட்டு(நம்பர் லாக்), போர்வை(ஆனால் இது தேவைப் படவில்லை) மாத்திரைகள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில், போர்ட்டபிள் சேர் -2, ஆகியவை முதுகில் மாட்டும் பையில் எடுத்துக் கொண்டேன்.

பக்கத்து ரூம் காமிலா வந்து, “நாம் தங்கியிருக்கும் அஜிஜியாவுக்கு மினா ரொம்ப பக்கம். ஒரு 2 கி.மீ தான் இருக்கும். என் கணவரும், அவர் நண்பரும் சென்று பார்த்து வந்தார்கள்” என்று சொன்னார். அப்படியா என்று லாட்ஜின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தேன். தூரத்தில் மினாவின் லைட் வெளிச்சம் தெரிந்தது.

சனிக் கிழமை அதிகாலை அனைவரும் குளித்து இஹ்ராம் உடுத்திக் கொண்டோம். எல்லோரும் ‘லப்பைக்’ ஓத ஆரம்பித்தோம். ஹாஜியாகப் போகிற நினைப்பால் மனதெல்லாம் மகிழ்ச்சி. எல்லாரும் தொழுதுவிட்டு, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதாக நிய்யத் செய்து கொண்டோம்.

ஊரிலிருந்து போன் வந்தது. மகனுக்கு ஹை ஃபீவர் வந்து பெட்டில் சேர்க்க சொல்லிவிட்டார்க்ளாம். அதற்குள் அவனுக்கு அம்மை போட்டுவிட்டதாம். அதனால், பெட்டில் சேர்க்கவில்லை. துவா செய், என்று அம்மா கவலையோடு சொன்னார்கள். மனம் பாரமாகி விட்டது. வல்ல நாயன் எல்லாம் பார்த்துக் கொள்வான் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். இப்ராஹிம்(அலை) அவர்களை சோதித்த இறைவன் நம்மையும் சிறிது சோதிக்கிறான் போலும் என்று எண்ணிக் கொண்டேன்.

பஸ் வந்து விட்டது. நாங்கள் பஸ்ஸில் ஏறி, மினா சென்றாடைந்தோம். எங்கள் டெண்ட் வாயிலிலேயே இறக்கி விட்டார்கள். மற்றபடி தனியார் வாகனங்களுக்கு மினாவினுள் அனுமதி இல்லை.

முன்பெல்லாம் மினாவில் தற்காலிக கூடரங்கள் தான் அமைத்தார்கள். ஆனால், இப்பொழுது நல்ல கெட்டியான கேன்வாஸினால், பர்மனெண்ட் டெண்டுகள் அமைத்து விட்டனர். டெண்டின் கூரை மேல் செங்குத்தான போர்டுகளில் டெண்ட் நம்பர் எழுதியுள்ளனர். ஒரு டெண்ட் என்பது, கிட்டத்தட்ட 300 பேர் தங்கும் அளவில் உள்ளது. அது சுருட்டக் கூடிய கேன்வாஸ் திரைகளால் 30, 40 பேருக்கு ஒன்று என சிறு சிறு சதுரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் டெண்டில் திரையை மேலே உயர்த்தியே கட்டிவிட்டார்கள், ஜமாத்(கூட்டு) தொழுகைக்கு வசதியாக இருக்கும் என்று.

டெண்டுக்கு வெளியே சிறிய வாசல். வாசலை விட்டு வெளியே வந்தால் சிறிய நடைபாதை. நடைபாதையின் இந்தக் கடைசியிலும், அந்தக் கடைசியிலும், இரு வரிசை டெண்ட்டுகளுக்கும் சேர்த்து ஒரு கேட். அதாவது, நடைபாதையின் இப்புறமும் அப்புறமும் சுமாராக பத்து பத்து டெண்ட்டுகள். இது ஒரு காம்பவுண்ட். இது போல நூற்றுக்கணக்கான காம்பவுண்டுகள் இருக்கும் மினாவில். அடையாள அட்டை இல்லாமல், நம் காம்பவுண்ட் கேட்டினுள் நுழைய முடியாது. கேட் கீப்பர் இருப்பார்கள். நம் பொருட்கள் திருடு போகாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடு.

டெண்டின் உள் பெரிய பெரிய கம்பளங்கள் விரிக்கப்பட்டு, அதன் மேல் நெருக்கமாகப் போடப்பட்ட லேசான டிஸ்போசபிள் பெட், 1 1/2 * 6 அடி என்ற அளவில். இந்தியக் கொடி போட்ட ஜிப் வைத்த பாலிதீன் பையில், சிறிய தலையணையும், போர்வையும் ஆளுக்கொன்று தருகிறார்கள். இது அவரவர்க்கு சொந்தம். வேண்டுமானால் எடுத்துப் போய்க் கொள்ளலாம்.

தலைக்கு மேலே சற்று உயரத்தில் ஆங்காங்கே ஏர்கூலர்கள். 20 அடிக்கு ஒன்றாய் பெரிய, பைப் வைத்த குடிநீர் கேன்கள் வைக்கப் பட்டுள்ளன. ஏர்கூலர் அருகில் செல்போன் சார்ஜ் செய்ய ஓரிரு ப்ளக் பாயிண்ட்டுகள் உள்ளன. ஆனால் அது எட்டாது.

25 ரியால் கொடுத்து வங்கியிருந்த சிறிய போர்ட்டபிள் சேரையும், கேன்வாஸினால் ஆன சிறிய போல்டிங் சேரையும் மினாவுக்கு எடுத்துப் போயிருந்தோம். நாங்கள் அச்சேரில் ஏறி ப்ளக் பாயிண்டில் செல்போன் சார்ஜ் செய்து கொள்வோம். Extension Cord எடுத்துப் போயிருந்தால் சவுகரியமாக இருந்திருக்கும். டெண்ட்டின் வெளியே வாசலில் ஒரு டிரான்ஸ்பார்மர் போன்ற பெட்டியினுள் ஒரு ப்ளாக் பாயிண்ட் இருப்பதைக் கண்டுபிடித்து பின் அதை உபயோகித்தோம்.

பெட்(படுக்கை) மிகவும் குறுகலாக இருந்ததால், சற்று குண்டானவர்கள் எல்லாரும் 2 பெட்களை ஆக்ரமித்துக் கொண்டனர். அதனால், கடைசியாக வந்தவர்களுக்கு உள்ளே இடமில்லாமல் வாசலில் படித்துக் கொண்டனர். அவர்களுக்கு கம்பளம் மட்டும் விரிக்கப்பட்டிருந்தது. எனினும் பனியில் படுப்பதால், அவர்களுக்கு சற்று கனமான போர்வை வழங்கினார்கள்.

பாத்ரூம் தான் கொஞ்சம் பிரச்சினை, நம்ம காம்பவுண்டுக்குள்ளேயே, ஆண்களுக்குத் தனியாக, பெண்களுக்கு தனியாக, வரிசை வரிசையாக பாத்ரூம்கள் இருந்தாலும் எந்நேரமும் கூட்டமாக இருக்கும். அதுவும் தொழுகை நேரத்துக்கு முன் ஒவ்வொரு பாத்ரூமிலும் பெரிய க்யூ இருக்கும். ஆத்திர அவசரத்துக்குப் போக முடியாது. பொறுமை தேவை.

எங்கள் காம்பவுண்டில் எல்லாரும் இந்தியர்கள்தான். நாங்கள் போன உடன் தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாரும் வரிசையாக இடம் பிடித்துக் கொண்டோம். காதர், காமிலா குரூப் ரூமிலிருந்து மினாவுக்கு நடந்தே வந்ததால், பெண்களுக்கு மட்டுமே டெண்டின் உள் இடம் கிடைத்தது. ஆண்கள் வாசலில் தங்கிக் கொண்டார்கள்.

போன உடன் எல்லோருக்கும், கேக், பன், பிஸ்கட், உப்பு பிஸ்கட், தண்ணீர் பாட்டில், குக்கீஸ் அடங்கிய பிளாஸ்டிக் டப்பா தந்தார்கள். நான் அந்த பிளாஸ்டிக் டப்பா காலியானதும் பத்திரப்படுத்திக் கொண்டேன், ஹரமுக்கு சாப்பாடு கொண்டுப் போக. பல பேரிடம் இருந்து ஒரு 10 டப்பாக்களை சேகரித்து வைத்துக் கொண்டேன்.

நம்ம காம்பவுண்டினுள் ஒரு கிச்சன். ஆனால் அதில் நாம் சமைக்கவெல்லாம் முடியாது. பெரிய பெரிய அடுப்பு வைத்து, தேனீர் மட்டும் போட்டு, இருவேளையும் வழங்கினார்கள். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் மாமுக்கு சர்க்கரை இல்லாமல் வேண்டும் என்பதால், நான் டம்ளர் ஹீட்டரில் சுடுநீர் வைத்து, பால் பவுடர், சுகர் ஃப்ரீ போட்டு டீ கலக்கிக் கொடுத்தேன். அருகிலிருப்பவர்கள் எல்லாருக்கும் அவ்வப்போது டீ போட்டு போட்டு கொடுத்தேன். ஒரு வழியாக எல்லாரும், டெண்டில் செட்டில் ஆனோம்.

மீண்டும் சந்திப்போம்.

-சுமஜ்லா.

11 comments:

Anonymous said...

Meendum suvarasiyama padika kathirunthom, pathivu potu viteergal. nalla irrukku. ovvoru visayaththilum kavanamaaka epadi supera plan panni panarenga. unka kita vazkai kalvi niraya padikanum.

SUMAZLA/சுமஜ்லா said...

ஹாய் கவின்,
இத்தணை நாட்களாய் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணிவிட்டேன். இனி, ரெகுலராய் பதிவு போடுவேன். வாழ்க்கை கல்வியா? ஹா...ஹா... நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லைப்பா. ஆனா கொஞ்சம், இல்லை நிறைய முன்னெச்சரிக்கையாக இருப்பேன். அதுக்கு நேர் ஆப்போசிட் என் ஹஸ்.
-சுஹைனா

Anonymous said...

மினா பற்றி நல்ல விளக்கமாக தெரிந்து கொண்டேன்.நன்றி.

Anonymous said...

வணக்கம் சுஹைனா, எப்படி இருக்கிறீங்க?
சிறிய இடைவெளியின் பின் மீண்டும் உங்கள் பதிவைப் படிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் ஞாபகசக்தி என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஒவ்வொரு சிறு சிறு விசயத்தையும் நன்றாக ஞாபகம் வைத்திருந்து படிப்பவர்கள் இலகுவில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கமாக எழுதுவது என்பது நிஜமாகவே ஒரு கலை தான்.
உங்களுக்கு இறைவன் அனுக்கிரகம் கிடைக்க மனதாரப் பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
பிருந்தா

SUMAZLA/சுமஜ்லா said...

ஆசியா அக்கா, இன்னும் நிறைய விஷயம் இருக்கு மினாவைப் பற்றி தெரிந்து கொள்ள. அடுத்தடுத்த பதிவில் பாருங்கள்.

பிருந்தா, நான் நல்லா இருக்கேன்ப்பா. எங்கே உங்க கமெண்ட்ஸை காணோமே என்று பார்த்தேன். போட்டுட்டீங்க. நீங்க என் பதிவை எதிர்பார்ப்பது போல, நானும், உங்க எல்லார் கமெண்ட்ஸையும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன்ப்பா. உங்க ப்ரார்த்தனைக்கு மிக்க நன்றி.

-சுஹைனா.

Anonymous said...

அருமை

Anonymous said...

மிகவும் பிடித்திருக்கிறது.

Jaleela Kamal said...

டியர் சுஹைனா அடுத்த பதிவை ஆவலாக எதிர் பார்க்கிறேன், இவ்வளவு ஞாபக சக்தியோடு எழுதுவது ரொம்பவே கடினம் பா.

தொடரட்டும் உங்கள் பணி , பயனடையட்டும் உலக மக்கள் யாவரும், வாழ்த்துக்கள்.

ஜலீலா

Anonymous said...

ஹாய் சுஹைனா,எப்படி இருக்கிங்க விழா எல்லாம் நல்ல விதமாக முடிந்தா,உங்கள் பதிவை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,இன்னும் அடுத்த அடுத்த பதிவுகலை பர்க்க ஆவல் வஸ்ஸலாம்,[ரைஹானா]

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா, ரைஹானா, உங்க ஊக்கம் என்னை உற்சாகப்படுத்துகிறது. இதோ இன்னும் சில மணி நேரங்களில் அடுத்த பதிவைப் போடுகிறேன்.
-சுஹைனா

Anonymous said...

நான் எப்பொழுதும் பதில் போடத் தவறுவது இல்லை, சுஹைனா. ஏனென்றால், பல சிரமங்களின் (வீட்டு வேலைகள், வெளி அலுவல்கள், குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற அன்றாட வேலைகளின்) மத்தியில் நீங்கள் தவறாமல் உங்கள் பதிவைப் போடும்போது நாமும் எங்கள் பதில்கள்/பதிவுகள் மூலம் உங்களை ஊக்கப் படுத்தினால்தான் உங்களுக்கும் எழுதுவதற்கு/பதிவு போடுவதற்கு உற்சாகமாக இருக்கும்.
அதிலும் நான் உங்களைப் பார்த்து வியந்த விடயம் என்னவென்றால்; வீட்டில் விசேஷம் நடந்தால் அதன்பின் நாம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சோர்த்து விடுவோம். எப்படியும் சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளத்தான் விரும்புவோம், அந்த சமயத்தில் வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மனம்/உடல் இடம் கொடுக்காது. அவ்வளவு தூரம் வேலைப்பளு இருந்திருக்கும். அப்படியிருந்தும் நீங்கள் ஏற்கனவே கூறியதுபோல் மறுநாள் தவறாமல் உங்கள் பதிவைப் போட்டது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
You are great.

உங்களுக்கு இறையருள் கிடைக்க மனதார வேண்டுகின்றேன்.

அன்புடன்
பிருந்தா