அரஃபாவில் உள்ள மசூதிக்கு மஸ்ஜிதே நிம்ரா என்று பெயர். அங்கு மதியம் லுஹர், அசர் ஆகிய இரு நேரத் தொழுகைகளும் ஒன்றாக குத்பா(பிரசங்கம்) ஓதித் தொழ வைக்கப்படுகின்றது. எனினும் அக்கூட்டத்தில் எல்லாரும் அங்கு சென்று தொழுவதென்பது இயலாத காரியம். சென்று விட்டால் மீண்டும் நம்ம டெண்ட்டை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். அதனால் அவரவர் டெண்ட்டில் தனியாகவோ கூட்டாகவோ தொழுது கொள்வது நல்லது.
அது போலவே டெண்ட்டில் நாங்கள் தொழுதோம். இப்பொழுது அரபாவுடைய நாள் ஆரம்பமாகிவிட்டது. மாமுவை நாங்கள் டெண்ட்டில் விட்டு விட்டு, அருகில் இருந்த சிறிய மலைக்குன்றுக்கு சென்றோம், துவா செய்ய. மச்சானுக்கு கோர்வையாக துவா செய்ய தெரியாது என்பதால் நான் துவா செய்தேன். அவர் ‘ஆமீன்’ என்று வழி மொழிந்தார்.
சுட்டெரிக்கும் பாலை வெய்யில். குன்றில் ஏகாந்தமாக இருவரும் நின்றபடி கையேந்துகிறோம். இறைவனுக்கும் நமக்கும் நேரடி கனெக்ஷன் ஏற்பட்டது போல ஒர் சிலிர்ப்பு. ஆண்கள் எல்லாரும் வெள்ளையுடையில். நான் கேட்ட துவா இதோ. (முஸ்லிம் அல்லாதவர் விரும்பாவிட்டால், இதைப் படிப்பதை தவிர்த்துவிடலாம்)
“யா அல்லாஹ், உன் தனிப்பட்ட கிருபையால் ஹஜ்ஜுடைய பாக்கியத்தை எங்களுக்கு தந்த எங்கள் இறைவா, உனக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். திக்ரு செய்யும் நாவையும், சுக்ரு செய்யும் மனதையும், போதுமென்ற சீமான் தனத்தையும் எங்களுக்கு தந்து விடு நாயனே!
யா அல்லாஹ், நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. என் தாய் தந்தை, கணவர், குழந்தைகள், சகோதர சகோதரிகள் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. யா அல்லாஹ், உற்றார், உறவினர், மூதாதையர், ஊர்காரர்கள், இன்னும் பூரா உலக மக்கள் செய்த குற்றங்களையும் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. இறைவா, இன்னும் நாங்கள் ரகசியமாகவும், பகிரங்கமாகவும், இரவிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து சிறிய பெரிய பாவங்களையும் மன்னித்து எங்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
யா அல்லாஹ், எங்கள் ஆயுளை நீளமாக்கிக் தருவாயாக. யா அல்லாஹ், எங்களையும் எங்கள் பெற்றோர் குழந்தைகள் யாவரையும் ஆரோக்கியமானவர்களாய் ஆக்கி அருள்புரிவாயாக. எங்கள் குழந்தைகளை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக ஆக்கி அருள்வாயாக. எங்களுக்கு கீழ்படியக் கூடிய குழந்தைகளக ஆக்குவாயாக. ஈருலக கல்வியிலும் சிறந்தவர்களாக ஆக்குவாயாக. அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்குவாயாக. அதிகமாக குரான் ஓதக்கூடியவர்களாகவும், நல்ல முறையில் தொழுகையை கடைப்பிடிப்பவர்களாகவும், இறையச்சம் உள்ளவர்களாகவும் ஆக்கி அருள் செய்வாயாக. நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற கிருபை செய்வாயாக. ஒழுக்கத்தில் மேன்மையானவர்களாய் ஆக்குவாயாக. என்னிறைவா, என் குழந்தைகளை அழகானவர்களாக, அறிவானவர்களாக, அன்பானவர்களாக, பண்பானவர்களாக, வளரச் செய்வாயாக. அவர்கள் பருவ வயதை அடைந்ததும், அவர்களுக்கு சாலிஹான வாழ்க்கைத்துணையை ஜோடி சேர்த்து வைப்பாயாக.
யா அல்லாஹ், எங்கள் வியாபாரத்தை செழிப்பாக்குவாயாக. என்னிறைவா, எங்கள் வியாபாரத்தை அமானிதமாக உன் பொறுப்பில் விட்டு வந்திருக்கிறோம் ரப்பே. எங்கள் வியாபாரத்துக்கு உறுதுணையாய் இருப்பவர்களுக்கு நீ கிருபை செய்திடு நாயனே. எங்களுக்கு துரோகம் செய்யக்கூடிய பணியாட்கள் இருந்தால் நீக்கிவிடு ரஹ்மானே! இழந்ததை மீட்கவும், இருப்பதைக் காக்கவும், இனியும் சம்பாதிக்கவும் கிருபை செய் யா அல்லாஹ். எங்களை என்றென்றும் நேர்மையானவர்களாக ஆக்கிவிடு யா அல்லாஹ்!
கடனில்லாத வாழ்வைவையும் கடனில்லாத மரணத்தையும் தருவாயாக. யா அல்லாஹ் நீ கொடுக்க நாடினால் தடுக்க யாருமில்லை ரஹ்மானே! நீ தடுக்க நாடினால் கொடுக்க யாருமில்லை யா ரப்பே, அள்ள அள்ளக் குறையாத உன் கஜானாவிலிருந்து அள்ளிக் கொடுத்து விடு யா அல்லாஹ். எங்கள் வருமானத்திலே பரக்கத்தைக் கொடு ரஹ்மானே, கொடுக்கக் கூடிய கரங்களாக எங்கள் கரங்களை ஆக்கிவிடு ரப்பே, வாங்கக் கூடிய கரமாக ஒரு போதும் ஆக்கி விடாதே.
மனிதர்களிடம் கேட்டால் பிச்சை; உன்னிடத்தில் கேட்டால் துவா. யா அல்லாஹ், உன்னிடம் மட்டுமே கையேந்தக் கூடியவர்களாய் ஆக்கி வை யா அல்லாஹ். உன் சந்நிதானத்திலே நாங்கள் பிச்சைக்காரர்களாக நிற்கிறோம் யா அல்லாஹ். சொந்த மண்ணைவிட்டு, அந்நிய மண்ணில், உன் திருப் பொருத்ததுக்காக அனாதை போல நிற்கிறோம் யா அல்லாஹ். ஏந்திய கரங்களை வெறுங்கரங்களாக அனுப்பிவிடாதே ரஹ்மானே.
என் பெற்றோர்களுக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடு ரஹ்மானே. அவர்கள் வியாபாரத்தை செழிப்பாக்கு. அவர்கள் உடல் கஷ்டத்தை நீக்கு. பணநெருக்கடி இல்லாமல் இருக்கச் செய். கடனில்லாத வாழ்வைக் கொடு. மரணம் வரை அவர்கள் தீன்பணி செய்யக் கிருபை செய். தாயின் கால்வலி குணமாக்கு. தந்தையின் இடுப்பு வலி, நெஞ்செரிச்சல் குணமாக்கு. ஹஜ்ஜில், உனக்குப் பிடித்தமாக நான் செய்த நல்ல அமலின் பொருட்டால், அவர்களின் எல்லாக் கஷ்டங்களையும் போக்கிவிடு ரஹ்மானே.
என் சகோதர்களின் வருமானத்தில் அபிவிருத்தியைக் கொடு. அவர்கள் வாழ்க்கைத்துணையை சிறப்பானவர்களாக ஆக்கி வை. அவர்களின் எதிர்காலத்தை வளப்பமாக்கித் தா. எங்கள் குடும்பத்தில் என்றும் ஒற்றுமை நிலைத்திருக்கச் செய். இறைவா, என் மற்றும் மச்சானின் சகோதரர்கள் சொந்த வீடு கட்ட கிருபை செய். அவர்களுக்கு நல்ல சந்ததியைக் கொடுத்துவிடு யா அல்லாஹ்.
என் மாமியார், மாமனார், சகோதரர்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்து. நான் என்று அவர்கள் மனம் கோணாமல் பணிவிடை செய்ய எனக்குப் பொறுமையைக் கொடு, இறைவா...
எனக்கும் மச்சானுக்கும், இடையே எப்பொழுதும், ஒற்றுமையைத் தா, இறைவா, நாங்கள் வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் பிரியாமலிருக்கச் செய் யா அல்லாஹ். இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் எங்களைக் கணவன் மனைவியாக ஆக்குவாயாக. எங்களிடையே பாசத்தையும் நேசத்தையும் அதிகப்படுத்து யா அல்லாஹ்.
கொடிய நோய்களிலிருந்தும், துர்மரணத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்று என்னிறைவா. மரணத்தருவாயில் கலிமாவை நசீபாக்கு. சக்ராத் கஷ்டத்தை லேசாக்கு. கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக ஆக்கிவை. முன்கர் நகீர் கேள்விகளை லேசாக்கு. மஹ்ஷர் மைதானத்திலே ஹர்ஷுடைய நிழலைத் தா யா அல்லாஹ். சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய் ரஹ்மானே. அஃமல் நாமா பட்டோலையை வலது கரத்தில் பெறக்கூடியவர்களாக ஆக்கி வை யா அல்லாஹ். சுந்தூஸ் இஸ்தபரக் என்னும் சுவர்க்க ஆடைகளை அணியச் செய் ரஹ்மானே!
ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவர்க்கத்தைக் கொடு ரஹ்மானே. மஹ்ஷர் மைதானத்திலே, மறைந்த எங்கள் மகளின் கரங்களால், தங்க சொம்பிலே தண்ணீர் அருந்தக் கூடியவர்களாக ஆக்கு யா அல்லாஹ். யா அல்லாஹ்! ‘ யா நஃப்ஸி யா நஃப்ஸி’ என்று கதறக்கூடிய வேளையிலே ‘ யா உம்மத்தி உம்மத்தி’ என்று வரும் ஈருலக சர்தார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சஃபாஅத்தைப் பெறக்கூடியவர்களாக ஆக்கு ரப்பே. அவர்கள் புனித கரங்களால் ஹவ்துல் கவ்தர் நீரை குடிப்பாட்டு யா அல்லாஹ். எல்லாவற்றுக்கும் மேலாக உன்னுடைய லிகா என்னும் தரிசனத்தைத் தந்துவிடு யாஅல்லாஹ்.
இறைவா நாங்கள் உனக்காகவே வாழ்ந்து, உனக்காகவே மரணிக்கக்கூடியவர்களாக ஆக்கு. பேணுதலாக தொழக்கூடியவர்களாக, அதிகம் திக்ரு திலாவத்துகள் மற்றும் குர்ஆன் ஷரீப் ஓதக் கூடியவர்களாக ஆக்கிவி யா அல்லாஹ். சுன்னத்தான முறையில் எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கிருபை செய்வாயாக. ரமலானிலே நல்ல முறையில் நோன்பு நோற்கக்குடியவர்களாகவும், ஜக்காத்தை சிறந்த முறையில் நிறைவேற்றக் கூடியவர்களாகவும், அதிகம் தான தருமங்கள் செய்யக் கூடியவர்களாகவும், இன்னும் நிறைய ஹஜ்ஜு செய்யக் கூடியவர்களாகவும் ஆக்கிவை என்னிறைவா. கலிமாவுடன் வாழ்ந்து கலிமாவுடன் மரணிக்கச் செய் யா அல்லாஹ்.
பூரா உலகத்திலும் அமைதியை ஏற்படுத்து ரப்பே. வன்முறையிலிருந்து உலக மக்களை காப்பாற்று இறைவா. இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை விட்டு அந்நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக. இந்தியாவிலே நல்ல ஆட்சியை ஏற்படுத்துவாயாக. இந்தியப் பொருளாதாரத்திலே மறுமலர்ச்சியைத் தருவாயாக. வீழ்ந்து போன ஷேர் மார்க்கட்டை தூக்கி நிறுத்துவாயாக. யா அல்லாஹ், அநியாயக்காரர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்து விடாதே.
யா அல்லாஹ் யாரெல்லாம் வேலை இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கச்செய் யா அல்லாஹ்! யாரெல்லாம் சொந்த வீடு இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு சொந்த வீட்டை அமைத்துத் தா ரப்பே! யாரெல்லாம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத் தா ரஹ்மானே. யாரெல்லாம் கர்ப்பமாக இருக்கிறார்களோ, அவர்கள் பிரசவத்தை எளித்தாக்கி வை யா அல்லாஹ். யாரெல்லாம் ஹஜ்ஜு செய்யவில்லையோ அவர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தா என்னிறைவா.
யாரெல்லாம், நோய்வாய்ப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தா ரஹ்மானே. யாரெல்லாம் பரிச்சை எழுதப் போகிறார்களோ அவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெறக் கிருபை செய் யா அல்லாஹ். யாரெல்லாம் கடனிலே கஷ்டப்படுகிறார்களோ, அவர்தம் கடனை திருப்பி செலுத்த கிருபை செய் யா அல்லாஹ். யாரெல்லாம் வறுமையில் இருக்கிறார்களோ, அவர்கள் வறுமையை போக்கிவிடு யா அல்லாஹ். இன்னும் யாரெல்லாம் எங்களிடம் துவா செய்ய சொன்னார்களோ, அவர்களுடைய எல்லா நாட்டங்களையும் நிறைவேற்றித் தருவாயாக.
எங்களுடைய புனித பயணத்துக்கு உறுதுணையாக இருந்த, இருக்கும், அனைவருக்கும் நல்லருள் புரிவாயாக. எங்களுக்கு நல்ல முறையில் சேவை செய்த ஹஜ் கமிட்டி தொண்டர்களுக்கு கிருபை செய்வாயாக.
எங்களை அன்று பிறந்த பாலகன் போல பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரிசுத்தமானவர்களாக திருப்பி அனுப்பு யா அல்லாஹ். எங்கள் பிரயாணங்களை லேசாக்கு. இனி வரும் நாட்களிலும் நல்ல முறையில் அமல் செய்ய கிருபை செய் ரப்பனா. மதீனா ஜியாரத்தை நல்லபடி முடிக்கவும், அதிகம் தவாப்கள், உம்ராக்கள் செய்யவும் கிருபை செய் நாயனே.
இந்த துவாக்களை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பொருட்டாலும், உனது தனிப்பட்டக் கிருபையாலும் ஏற்றுக் கொள்வாயாக யா அல்லாஹ். ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆஹிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார். வ அதுகில்னல் ஜன்னத்த மஅல் அப்ரார், யா அஜீஜ் யா கஃப்ஃபார், யா ரப்பல் ஆலமீன்.”
நான் கேட்ட துவாக்களின் சேம்பிள் தான் இது. இன்னும் பலப்பல துவாக்களை அசர் வரை கேட்டுக் கொண்டே இருந்தோம். நேரம் வந்ததும் அசர் தொழுது விட்டு, அந்தி சாயும் நேரம் டெண்ட்டுக்கு திரும்பினோம். மீதி அடுத்த பதிவில்.(திங்களன்று)
-சுமஜ்லா
9 comments:
எப்படி சுஹைனா, மறந்து விடாமல் இவ்வளவு பிராத்தனை செய்தீர்கள்? எழுதி வைத்துக் கொண்டு பிராத்தனை செய்தீர்களா? மலைப்பாக இருக்கு. உலக மக்கள் அனைவருக்கும் வேண்டியுள்ளீர்கள். மகிழ்ச்சி.ஊர் மக்கள் கேட்டகிரியிலேயே நான் வந்து விடுகிறேன்( ஹி.ஹி). ஒரு சந்தேகம்...யா அல்லா என்கிறீர்கள் அல்லவா? அதில் யா' என்றால் என்ன? என்' என்று பொருளா?
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒவ்வொரு அத்தியாய்த்தின் அடியில், முந்தய மற்றும் அடுத்த அத்தியாயத்திற்கு போகும்படியான இணைப்பு குடுத்தால் வசதியாக இருக்கும்....
மற்ற்வர்களுக்காக துஆ செய்யும்போது, மலக்குள் கேட்பவர்க்கும் அது போல் செய் என்ற் அல்லஹ்விடம் கேட்பார்களாம்... உங்கள் துஆவை அல்லாஹ் ஏற்றுகொள்வானாக ஆமீன்... உஙகள் அறிவின் ஆழத்தையும் அகலத்தையும் விசால படுத்தி இது போன்ற் நல்ல நிறைய பதிவுகளை இட அந்த அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
அன்பு கவின், நான் எல்லாப் பதிவுகளையும் எழுதி வைத்துப் பிறகு தான் டைப் அடிப்பேன், ஆனா இந்த பதிவை, துவா தானே, என்று நேரடியாக அப்படியே டைப் செய்து விட்டேன். இறைவனிடம் கேட்பதற்கு சிறு வயதிலிருந்தே என் தந்தை கொடுத்த ட்ரைனிங் அப்படி. உள்ளத்தில் உள்ளதை சொல்ல எதற்குப்பா பேப்பரும் பேனாவும்.
அப்புறம் நீங்க தான் நம்ம ஊர்வாசியாச்சே! மகள், மகன் நலங்கு போட்டோஸ் ப்ரொஃபைலில் போட்டுள்ளேன் பார்த்தீர்களா?
இதில் நான் கேட்ட துவாக்களில் சில பெர்சனலான துவாக்களை மட்டும் தவிர்த்து விட்டேன். யா அல்லாஹ் என்றால், அல்லாஹ்வே என்று பொருள். விளிப்பதற்கு பயன்படுத்தும் சொல்.
சகோதரரே, உங்க ஆமீனுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல நான் ஹஜ்ஜில் நிறைய துவாக்கள் உடனுக்குடன் நிறைவேறுவதை, கண்கூடாகக் கண்டுள்ளேன். அதுவும், என் தாயாருக்கு 4,5 வருடமாக குணமாகாத கால்வலி, தற்போது, மைசூர் வைத்தியரால், குணமாகிவிட்டது. குதிங்காலில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் குணமாகவில்லை. தற்சமயம், இறைவன் அருளால், பரவாயில்லை.
கீழே older post, newer post என்று உள்ளதை க்ளிக் பண்ணினால், நீங்கள் சொன்னது போல முந்தய, அடுத்த பதிவுக்குப் போய் விடலாம்.
ஹாய் சுஹைனா அருமை அருமை அருமையொ அருமை சுஹைனா உங்களின் துவாவும், உங்களின் மகளின் அன் மகன் போட்டோவும்,நீங்கள் கோட்ட துவாவும் நிரைவோற வாழ்துக்கள்,[ரைஹானா]வஸ்ஸலாம்,
வணக்கம் சுஹைனா.
இவ்வளவு தூரம் கஸ்டப்பட்டு ஹஜ் சென்றதற்கு கண்டிப்பாக பலன் இருக்கும். நீங்கள் வேண்டியவை எல்லாம் சீக்கிரம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. அதன் முதல் படிதான் உங்கள் அம்மாவின் உடல்நிலை சரியான விடயம். உங்களைப் போல் எல்லா மானிடனும் மனதில் பிரார்த்தனை செய்தால் இவ்வுலகத்து ஜீவராசிகள் நிம்மதியாக வாழ்வார்கள். ஏனோ மனிதனுக்குள் இவ்வளவு வக்கிர/கொடூரமான செயல்கள்/சிந்தனைகள்?!
இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து எழுதுங்கள்.
ஹஜ் பயணக் குறிப்புகளாக வெளியிடவும் செய்யலாம்.
துவா = துஆ என்பதுபோன்ற சிறுபிழைகளை சரிசெய்யவேண்டும்.
சுஹைனா,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. எப்பொழுதும் இவ்வாறு பிராத்தனை செய்வீர்கள் என்பது ஆச்சிரியமாக இருக்கு. உங்கள் வழிபாடுகளை அழகாக அடுத்தவர் கூட விரும்பும் வண்ணம் உங்கள் எழுத்துக்களால் எடுத்துரைப் பதற்க்கு உங்கள் பக்குவப்பட்ட மனமே காரணம். வாழ்த்துக்கள்!
நீங்கள் சொல்லிய பிறகு தான் போட்டோவை கவனித்தேன் பா..நல்லா இருக்கு.
அருமையன துஆ, எவ்வளவுக்கு எவ்வளவு நம் சொந்த பந்தங்கள்,மற்றவர்களுக்காகவும் தூஆ கேட்கிறோமோ அவ்வளவு நல்லது.
மேலும் எதிர் பர்க்கிறேன்.
ஜலீலா
ஆமீன்.....
Post a Comment