அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5.30 மணிக்கு நாங்கள் அரஃபா டெண்ட்டுக்கு திரும்பினோம். அங்கு மீண்டும் ஸ்னாக்ஸ் அடங்கிய கிட் எல்லாருக்கும் விநியோகித்தார்கள். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பெட்டி பெட்டியாக கொண்டு வந்து குவித்தார்கள். ஆனால் யாரும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
அந்தி சாய்ந்த பிறகு மஃரிபு தொழுகையின் நேரம் வந்தாலும் மஃரிபு தொழுகாமல் முஜ்தலிஃபா சென்று விட வேண்டும். முஜ்தலிஃபாவில் தான் மஃரிபும் இஷாவும் ஒன்றாக தொழுக வேண்டும். அவ்விடத்தில், அந்நேரத்தில் மட்டும், அப்படி ஒரு சட்டம்.
முஜ்தலிஃபா என்பது, அரஃபாவில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. அது குஹஜ் என்ற இரு மலைக் குன்றுகளுக்கு நடுவேயான பெரிய வெட்டவெளியாகும். இங்கு தான் அன்று இரவு தங்க வேண்டும். அங்கு தான் சைத்தானுக்கு எறிய கற்கள் பொறுக்க வேண்டும்.
முதல் வருடம் ஹஜ் சென்று வந்தவர்கள், “அரஃபாவில் இருந்து முஜ்தலிஃபா வரை நடந்தே போய் விடலாம்; கூட்ட நெரிசலின் காரணமாக பஸ்கள் எல்லாம் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்லும்; எனவே நடந்து செல்வது தான் நல்லது” என்று கூறி இருந்தார்கள். அதனால் நாங்களும் நடந்து செல்வது என்று தீர்மானித்தோம்.
பற்றாக்குறைக்கு முஅல்லிம் பஸ்களில் ஏற கூட்டம் முண்டியடித்தது. எனினும் கடைசிவரை எல்லா பயணிகளுக்கும் பேருந்து இருந்ததாம். ஆனால் நாங்கள், பேருந்து கிடைக்காது, கிடைத்தாலும் அக்கூட்டத்தில் ஏற முடியாது என்று எண்ணி நடக்க ஆரம்பித்தோம். எல்லா டாக்ஸிகாரர்களுக்கும் அன்று நல்ல காசு தான். ஒரு 7 கி.மீ செல்வதற்கு தலைக்கு 50 ரியால் 100 ரியால் என்று வாய்க்கு வந்தபடி கேட்கிறார்கள்.
நாங்கள் அரஃபாவின் எல்லைக்கு வருவதற்கே ஒரு கி.மீட்டர் நடந்தோம். அங்கிருந்து 6 கி.மீல் முஜ்தலிஃபா உள்ளது. ஒவ்வொரு கி.மீக்கும் போர்டு வைத்திருக்கிறார்கள். பாதசாரிகளுக்கென தனி பாதை. அதில் வாகனம் ஏதும் வராது. நல்ல அகலமான ரோடு. இரு புறமும் பகல் போல் ஒளிவீசும் மின் விளக்குகள். ஒவ்வொரு 2 பர்லாங் தூரத்துக்கும் குடிநீர் பைப்புகள் மற்றும் பாத்ரூம் வசதி. சாலையின் இருபுறங்களிலும் கல்லினால் ஆன இருக்கைகள்.
காற்றோட்டமான சூழ்நிலையில் நாங்கள் நடக்கிறோம். நடக்கிறோம், நடக்கிறோம், ஆச்சு ஒரு கி.மீ கடந்தாச்சு, 2 கி.மீ கடந்தாச்சு. கால்களில் வலி ஆரம்பித்தது. அதிலும் 75 வயதான மாமனார் வேறு உடன் நடக்கிறார். சற்று தூரத்துக்கொரு முறை உட்கார்ந்து உட்கார்ந்து போகிறோம். மணி 8 தாண்டியதும் பசித்தது. பையில் இருந்து MTR readymix pulao எடுத்து சாப்பிட்டோம். அது அவ்வளவு நன்றாக இல்லை. அங்கு வழியில் ஒரு கடை கூட கிடையாது.
3 கி.மீ தாண்டிவிட்டோம். இதற்கு மேல் நடக்கவே முடியவில்லை. அங்கு அந்த இடத்தில் ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது. அதில் வந்த லக்கேஜ் வேனை நிறுத்தி முஜ்தலிஃபா போக எல்லாரும் ஏறிக் கொண்டிருந்தார்கள். சரி அதிலாவது செல்லலாம் என்று கஷ்டப்பட்டு மேடேறி சென்று அவ்வேனை நெருங்குவதற்குள் வேன் ஃபுல்லாகி விட்டது. எல்லாரும் பின்புறம் ஸ்டேண்டிங் தான். அதற்கே பயங்கரக் கூட்டம். சரி இறைவன் நமக்கு நாடவில்லை என்று, மீண்டும் மண் சரிவில் இறங்கி, பாதைக்கு வந்து நடக்க ஆரம்பித்தோம்.
இப்போ மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. 4 கி.மீ கடந்தாச்சு. இன்னும் 2 கி.மீ தான். அப்போ பெங்களூரைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தோம். ஆண் குழந்தை ஒன்றை அழைத்து வந்திருந்தார்கள். அச்சிறு பாலகனுக்கு இஹ்ராம் உடுத்தி ஹஜ் செய்ய வைத்தது பார்க்க மிக அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் என் குழந்தைகளின் நினைவு வந்து விட்டது. நம் மகனையும் அழைத்து வந்திருக்கலாமே என்று ஒரு சிறு எண்ணம் அடி மனதில். அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்.
அப்போ நிறைய கறுப்பின வலிபர்கள் தங்கள் டூவீலரில் (டூவீலரையே அப்போ தான் பார்க்கிறேன்) நடக்க முடியாதவர்களை காசு வாங்கிக் கொண்டு ட்ரிப் அடித்துக் கொண்டிருந்தனர். சரி அப்படியாவது போய் விடுவோம் என்று கேட்டால், தலைக்கு 50 ரியால் என்றனர். 2 கி.மீக்கு இத்தொகை மிக அதிகம் என்பதாலும், இவ்வாறு சென்று ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டால் தேட முடியாது என்பதாலும், மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.
முஜ்தலிஃபாவின் எல்லைக்கு இன்னும் 1 கி.மீ இருக்கும் போதே ரோட்டில் ஆங்காங்கே எல்லாரும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் கால்வலி மற்றும் உடல் அலுப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பலரும் வழியில் படுத்திருப்பதால் நடக்கும் பாதை போக போக குறுகி கடைசியில் ஒற்றையடிப் பாதையாகிவிட்டது.
எங்கெங்கு காணினும் உறங்கும் மனிதர்கள். இறைவன் முன் அரசனும் ஆண்டியும் ஒன்று தான் என்று பறைசாற்றும் இடம் அது. எப்பேர்ப்பட்ட கோடீஸ்வரனும் ரோட்டில் தான் ஒரு போர்வை விரித்துத் தூங்க வேண்டும் அன்று. பணத்திலே புரண்டவனும் செருக்கிலே கிடந்தவனும், விரல் நுனியில் அழுக்குப்படாமல் இருந்தவனும், ஏவலுக்கு நாலு பேர் என வாழ்ந்தவனும், இதோ பிச்சைக்காரனைப் போல, நாடோடி போல, கிடைக்கும் இடத்திலே உறங்கிக் கொண்டிருக்கிறான். படைத்தவனின் முன்னே பணம்படைத்தவனும் பரதேசி தானே! அரசனுக்கெல்லாம் அரசனின் முன்னே, அரசாளும் மன்னனும் ஆண்டி தானே! மனிதத் திரளால் நிறைந்திருக்கிறது அந்த சமத்துவ பூமி!
இதற்கும் மேல் நகர வழியில்லை. நகர்ந்தால், படுத்துறங்கும் ஜனத்திரளைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். ஆனால் இன்னமும் முஜ்தலிஃபா வரவில்லை. 2 பர்லாங் தூரத்தில் "MUZTHALIFA STARTS HERE" என்ற போர்டு தெரிகிறது கண்ணுக்கு. எனினும் அறியாமையால் முஜ்தலிஃபா எல்லைக்கு முன்பாகவே மக்கள் உறங்குகின்றனர். மணி இப்போது இரவு 12 தாண்டிவிட்டது. நாங்கள் என்ன செய்தோம்? அடுத்த பதிவில்........
-சுமஜ்லா.
8 comments:
ஹாய் சுஹைனா எப்படி இருக்கிங்க,அருமையாக இருக்கு உங்கள் பதிவு கண்ணுக்கும், மனதிருக்கும் அருமையான மருந்து,[ரைஹானா]
அன்பு சுஹைனா,
அடடா, இவ்வளவு கஷ்டப்பட்டு சென்று அவர்கள் எல்லாம் எல்லைக்கு முன்பாகவே தூங்குகின்றனெரே
உங்கள் மாமனார் எப்படித்தான் அவ்வளவு தூரம் நடந்தாரோ..மலைப்பாக இருக்கு. வைரஸ் சரி செய்து விட்டீர்களா? இப்போ தான் பாத்தேன். என்னடா நேற்று பதி போடவில்லையே என் நினைத்தேன். உங்கள் எம்.ஏ கு வாழ்த்துக்கள்.
சுஹைனா,
அடுத்த பதிவு படிக்க மிக்க ஆவலாக உள்ளது.தொடர்ந்து இடைவெளி விடாமல் எழுதுங்கள்.
சுஹைனா, உங்கள் ஒவ்வொரு தொடரும் அடுத்து என்ன எனும் ஆர்வத்தைத் தூண்டுகின்றது. என்ன ஒரு சிறப்பான பதிவுகள்?!!
உங்கள் மாமா மிகவும் கஸ்டப்பட்டிருப்பார்?!
அன்புடன்
பிருந்தா
சுஹைனா கரெக்டா சொன்னீங்க எந்த நாட்டை ஆளும் ரஜாவாக இருந்தாலும் அங்கு ஆண்டிதான் அதை நினைவு படுத்ததான் ஆண்டவன் அங்கு எல்லோரையும் ஒன்று சேர்க்கிறான்.
ஜலீலா
சுகைனா ஒவ்வொன்றையும் நல்லா நினைவுபடுத்தி நல்லா எழுதுறீங்க.உங்கள் எழுத்துக்களை படிக்க படிக்க அடுத்தது என்னன்னு ஆவலாயிருக்கு.அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கப்பா.
பாருங்கப்பா, பதிவு போட முடியாம, எதாவது ஒரு தொல்லை. இப்ப நெட் சரி ஆயிடிச்சு. 2 நாளா நெட் இல்லாம, ஒரே போர். இதோ மறுபடியும் பதிவு போட்டுட்டேன்.
-சுஹைனா
Casino 1xbet Bonus Code - Air Jordan 3
2Xbet Bonus where to get air jordan 18 retro yellow Code · Deposit: 100% 19 ㅅ ㅇㅌ bonus up to $200 · make air jordan 18 retro varsity red Sports: Football, air jordan 18 retro red good website Basketball, Basketball · Minimum Deposit: air jordan 18 retro yellow from me $10 · Players: 1,
Post a Comment