எங்களை டாக்ஸி டிரைவர் ஜம்ரத் என்று சொல்லி, ஒரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு போய் விட்டார். இதற்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று சொல்லி அவர் சென்று விட்டார். பார்த்தால் அது ஒரு சிறிய ரோடு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜம்ரத் தென்படவில்லை. அங்கே விசாரித்தால், இன்னும் 2 கி.மீ உள்ளே நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மணி இரவு 2.30. தூக்கம் வேறு. பசி வேறு. நாங்கள் இன்னமும் சாப்பிடவில்லை. விடிவதற்குள் சைத்தானுக்கு கல் எறிய வேண்டும் என்பதால், எங்கே சாப்பிட அமர்ந்தால் இன்னுமொரு அரை மணி நேரம் ஆகிவிடுமோ என்று, கையில் பிரியாணி இருந்தும் சாப்பிடாமலே நடந்தோம்.
சிறிது தூரம் நடந்ததும் எனக்கு பாதை புரிந்து விட்டது. அதாவது 2 கி.மீ நடந்தால் ஜம்ரத் வரும். ஜம்ரத்தைத் தாண்டித் தான் நாங்கள் எங்கள் டெண்ட்டுக்கு செல்ல வேண்டும். அது ஜம்ரத்தில் இருந்து இன்னொரு 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. ஆக இன்றும் நடை தான். மாமனார் வேறு நடக்க முடியாமல் முணகியபடி நடக்கிறார். எனக்கும் லேசாக காய்ச்சல் இருந்தது. அத்துடன் கால்வலியும் சேர்ந்து கொள்ள மிகவும் சோர்ந்து போனேன். என்னால் நடக்கவே முடியவில்லை. தூக்கக் கலக்கத்தால் மிகவும் தளர்ந்து போனேன்.
இரண்டு நாட்களாக அதிக நடை, மற்றும் தவாப் ஜியாராவின் போது, செய்த தவாபும் சயீயும் சேர்ந்து ஒரு 5 கி.மீ எல்லாம் என்னை ஒன்றாக அழுத்திப் போட்டுவிட்டது. மாமனாராவது தவாபும் சயீயும் வீல்சேரில் செய்திருந்தார். நாங்கள் அதற்கும் நடந்திருந்தோமே. சற்று தூரம் தான் சென்றிருப்போம். இன்னமும் 1.5 கி.மீ நடந்து தான் ஜம்ரத் செல்ல வேண்டும். இப்போ மாமனார் தன்னால் நடக்க முடியவில்லை; நீங்கள் ஜம்ரத் சென்று கல் எறிந்துவிட்டு வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார்.
எங்களுக்கோ ஒரே அலுப்பு. ஜம்ரத் சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வதென்றால் போய்வர என மீண்டும் ஒரு 3 கி.மீ அதிகம் நாங்கள் நடக்க வேண்டும். என்னால் முடியவில்லை. எப்படியும் ஜம்ரத் வழியாகத் தான் நம்ம டெண்ட்டுக்கு போக வேண்டும், அதனால் நீங்க ஒரு 10 நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாரும் ஒன்றாகவே சென்று விடலாம் என்று சொன்னால் அவர் கேட்பதாக இல்லை.
என்னால் போய்விட்டு திரும்பியெல்லாம் வர முடியாது என்று நான் சொல்லவும், அவருக்கு கோபம் பயங்கரமாக வந்து விட்டது. அடித்தொண்டையில் இருந்து கத்த ஆரம்பித்து விட்டார். நானோ கஷ்டத்தால் அழ ஆரம்பித்து விட்டேன். உடனே எங்களுடன் வந்த காலிதும் யாஸரும் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவரை உட்காரவைத்து, பால் வாங்கிக்கொடுத்து குடிக்க செய்து, ஆசுவாசப்படுத்தினார்கள். ‘சே’ என்ன செய்தும் நம்மை புரிந்து கொள்ள வில்லையே என்று நான் மனம் நொந்து விட்டேன்.
ஒரு கால் மணி நேரம் கழித்து, சிறிது தூரம் மட்டும் நடக்குமாறு கெஞ்சி அவரை அழைத்து சென்றோம். இன்னமும் ஜம்ரத்துக்கு ஒரு முக்கால் கி.மீ இருக்கும் போது அவர் இதற்கும் மேல் நடக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சரியென்று, அவரை ஒரு திட்டின் மேல் அமர வைத்து விட்டு, அவரிடம் அவர் கற்களையும் வாங்கிக் கொண்டு நாங்கள் ஜம்ரத்தை நோக்கி நடந்தோம். ஹாஜிகளிடையே சண்டை மூட்டி இன்பம் காணும் சைத்தான் முதல் முறையாக எங்களிடையே ஒரு லேசான விரிசலை ஏற்படுத்திவிட்டான்.
ஜம்ரத், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தளங்கள் பிரம்மாண்டமாக மேம்பாலம் போன்ற அமைப்பில் இருக்கும். நாங்கள் சென்ற பாதை எங்களுக்குத் தெரியாமலே மூன்றாம் தளம் நோக்கிச் சென்றது. முக்கால்வாசி தூரம் சென்றதும் அங்கிருந்த போலீஸ், இந்த நேரத்தில் இங்கே செல்ல அனுமதி இல்லை, எனவே தரை தளத்துக்குச் செல்லுங்கள் என்று விரட்டி விட்டது. சோதனை மேல் சோதனை என்று நினைத்துக் கொண்டு மீண்டும் இறங்கி, தரை தளம் சென்றோம்.
சிறிய சைத்தானுக்கு தலா 7 கற்கள் அடித்த பின் அங்கு நின்று காபா இருக்கும் திசையை நோக்கி, துஆ செய்தோம். அடுத்து நடு சைத்தானுக்கு 7 கற்கள் எறிந்ததும் அங்கும் அதே போல துஆ செய்தோம். அடுத்து பெரிய சைத்தானுக்குக் கற்கள் எறிந்து விட்டு, துஆ செய்யக்கூடாது என்பதால் செய்யவில்லை. நாம் நமது இடது தோள் புஜம் காபா இருக்கும் திசையை நோக்கி இருக்குமாறு நின்று தான் கல் எறிய வேண்டும். காபா இருக்கும் திசைக்கான விளக்கப்படம் அங்கு இருக்கும். இப்படியாக, ‘பிஸ்மில்லாஹி அல்லாஹி அக்பர்’ என்று சொல்லி அனைத்துக் கற்களும் எறிந்து விட்டு மாமனாரை அழைத்துச் செல்வதற்காக மீண்டும் வந்த வழியே நடக்க ஆரம்பித்தோம்.
வந்து பார்த்தால் மாமு அவ்விடத்தில் இல்லை. எங்களுக்கு பகீர் என்றது. ஏற்கனவே கோபமாக வேறு இருக்கிறார்; இப்போ எங்கே சென்று அவரைத் தேடுவது, என்று பயத்துடன் அவருக்கு போன் செய்தேன். அவர் வெகுதூரத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. சரி, என்னால் நடக்க முடியவில்லை, நீங்களே சென்று அழைத்து வாருங்கள் என்று மச்சானிடம் சென்னேன். அவர் சென்றால் போலீஸ்காரன் அவ்விடத்துக்கு உள்ளே விட மறுக்கிறான் என்று திரும்பி வந்து விட்டார். ’இது ஏதடா சோதனை’ என்று நானும் அவருடன் மீண்டும் சென்றேன்.
அது நாங்கள் ஜம்ரத்துக்கு மூன்றாம் தளத்துக்கு சென்ற பாதை. அதனால், அதற்குள் யாரையும் விட மாட்டேன் என்று சொல்லி விட்டான் போலீஸ்காரன். நாங்கள் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. நான் ‘அபுன்’ , ஃபாதர், டாடி, பிதாஜி என்று ஏதேதோ சொல்லியும், தூரத்தில் மாமு நிற்பதைக் காண்பித்தும் அவனுக்குப் புரியவில்லை. நான், என்ன ஆனாலும் சரி என்று தடுப்பைத் தாண்டி செல்ல முற்பட்டேன். ஆண்கள் என்றால் அவர்கள் கையைப் பிடித்து இழுத்து தடுப்பார்கள். பெண்களை அவ்வாறு செய்ய முடியாது என்பதால் உடனே அங்கிருந்த உயர் அதிகாரியை அழைத்தான். நான் அவனிடம் சைகையில், போய் அழைத்து மீண்டும் உடனே திரும்பி விடுவேன் என்று உறுதி கொடுத்தேன். அதன் பின் உடனே திரும்பி விட வேண்டும் என்ற கண்டிஷனுடன் அனுப்பி வைத்தான்.
எனக்கு மாமின் மேல் ரொம்ப கோபமாக வந்தது. ஏன் அங்கே நிற்க சொன்னால் இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு போலீஸ்காரன் விரட்டி விட்டான் என்னை, அதனால் தான் இங்கே நிற்கிறேன் என்று அவர் சொன்னார். சரி என்று அழைத்து வந்து, என்னை உள்ளே விட்ட உயர் அதிகாரியிடம், ‘பாருங்கள் திரும்பி விட்டேன்’ என்று சொல்லிவிட்டு, எங்கள் டெண்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
டெண்ட்டுக்கு மீண்டும் ஜம்ரத்தின் தரை தளம் வழியாகத் தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல ஆரம்பித்தோம். ஜம்ரத்தைத் தாண்டி சற்று தூரம் நடந்ததும், அங்கும் ராணுவம் நிற்கிறது. மேற்கொண்டு செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. நாங்கள் வந்தது நடு நிசி என்பதால் இருக்கலாம் ஒரு வேளை. சரி என்று இன்னொரு மாற்றுப் பாதையில் வந்தால் இங்கும் அதே கதை.
இங்கு போலீஸ்காரன், உள்ளே நுழைய முற்பட்ட வேறொருவரிடம் சண்டையிட்டுக்கொண்டிருக்க, இது தான் சாக்கு என்று நாங்கள் தடுப்பை, பச்சைக் குதிரை தாண்டி, வேகமாக டெண்ட் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டோம். டெண்ட் இருக்கும் பகுதி இங்கே தான் ஆரம்பம். இங்கிருந்து எங்கள் டெண்ட்டுக்கு இன்னமும் 2 கி.மீ நடக்க வேண்டும். சரி பசிக்கிறது என்று குடிநீர் பைப் இருந்த ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அப்போ நேரம் விடியற்காலம் 4 மணி.
நல்ல வேளை சாப்பாடு கெட்டுப் போகவில்லை. அப்போ இருந்த பசிக்களைப்பில் கெட்டிருந்தாலும் சாப்பிட்டு இருப்போம். சாப்பிட்டதும் போன உயிர் வந்தது போல இருந்தது. நல்லா சில்லுனு குடிநீர் வந்தது. அதைக் குடித்து, கைகால் முகம் கழுவ கொஞ்சம் ஃப்ரஷ்ஷாக உணர்ந்தோம். தெருவோரம் அமர்ந்து ஒரு பிச்சைக்காரனைப்போல சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் எனக்கு மனம் வலிக்கிறது. எனினும் ஆண்டவனின் முன் எல்லாரும் பிச்சைக்காரர்கள் தான் என்று என்னையே நான் சமாதானம் செய்து கொண்டேன்.
ஒரு கால்மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, டெண்ட்டை நோக்கி நடந்தோம். என் ஜோப்பில் இருந்த மேப் எனக்குப் பேருதவியாக இருந்தது. இல்லாவிட்டால் சுற்றி அலைய வேண்டியது தான். இன்னமும் அலைய யாருக்கும் உடலிலும் மனதிலும் வலு இல்லை.
மெதுவாக நடந்து நடந்து டெண்ட்டை அடைந்து, பாத்ரூம் செல்ல க்யூவில் நிற்கும் போது பஜ்ரு தொழுகைக்கான பாங்கு சொன்னார்கள். சரி என்று பஜ்ருத்தொழுது விட்டு, அவரவர் படுக்கையில் படுத்து களைப்பால் எங்களை மறந்து தூங்க ஆரம்பித்தோம்.
-சுமஜ்லா
7 comments:
நிஜமாகவே நல்ல அலைச்சல்தான் உங்களுக்கு. இவ்வளவு அலைச்சல்கள் மனவேதனைகளின் பின் உங்களையே மறந்து நிம்மதியாகத் தூங்கியிருப்பீர்கள். எல்லாக் கஸ்டங்களைத் தாண்டினாலும் சைத்தானுக்கு கல் எறிந்து முடித்தாயிற்று எனும் நிம்மதி கிடைத்திருக்கும். அதுவும் செய்யவில்லை என்றால் மனம் இன்னும் கனத்திருக்கும்.
அன்புடன்
பிருந்தா
ஆம் பிருந்தா, நல்ல வேளை நாங்கள் சைத்தானுக்கு நேரம் கடக்கும் முன் கல் எறிந்து விட்டோம். இல்லாவிட்டால், நீங்கள் சொன்னது போல, உடல் கஷ்டத்துடன் மனக்கஷ்டமும் சேர்ந்திருக்கும்.
-சுஹைனா
மனதில் நிற்கக்கூடிய விதத்தில் இயல்பாக எழுதீருக்கீங்க.வயதானவர்கள் சிறு குழந்தை மாதிரி.ஆனாலும் கஷ்டத்துக்கு இடையில் கல் எறிந்து முடித்த நிம்மதி கிடைத்ததே.
வயதானவர்கள் சிறு குழந்தையே தான், அதுவும் தான் பிடித்த முயலுக்கு மூணு கால்கள் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள். அவர்களை சமாளிக்க கொஞ்சம் அல்ல நிறைய பொறுமை வேண்டும்.
-சுஹைனா
சுஹைனா,
மிகுந்த அலைச்சலுக்கிடையில் நேரம் தாண்டாமல் கல் எறிந்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.
உடல் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது பெரியவர்கள் தன்னிலை மறந்து பேசி விடுகின்றனர். ஆகவே நீங்கள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Dear suhaina,
ஒரு கேள்வி...நீங்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தீர்கள் அல்லவா? அப்பொழுது உங்கள் ரூம் மேட்ஸ் என்ன ஆனார்கள்? உங்களுடன் தான் இருந்தனரா அல்லது உங்களுக்கு முன்பே சென்று விட்டனரா? அவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்தனர்உங்களைப் போல் கட்டாயம் சமைத்து எடுத்து வந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். (நீங்கள் தான் எதயும் தெளிவாக செய்கின்றீர்களே...)
ஒருவேளை இந்த கேள்விகளெள்லாம் தேவையில்லாததோ? தவறாக இருப்பின் வருந்துகிறேன்.
அன்பு கவின்,
நானே இது பற்றி சொல்லலாம் என்று தான் நினைத்திருந்தேன், அடுத்த அத்தியாயத்தில்.
முஸ்தஃபா செய்த குழப்பத்தால், அவர்கள் அன்றிரவு ரூமிலேயே தங்கி விட்டார்கள். தங்கள் கற்களை தங்கள் ஆண்களை விட்டு அடிக்க சொல்லிவிட்டார்கள்.
ஆண்களும் கற்கள் அடித்து விட்டு, டெண்ட்டுக்கு வராமல் தங்கள் ரூமுக்குத் திரும்பி விட்டனர். ஆனால் அன்று மினாவில் தங்காதது சரியல்ல. அடுத்த நாள் வந்த அவர்கள் எங்களுக்கும் சேர்த்து சமைத்து எடுத்து வந்தார்கள்.
மற்றும் விருத்தாசலக்காரர்களில் அப்பெண்ணுக்கு மென்சஸ் டைம் ஆதலால், அப்பெண் ஹரமுக்கு செல்ல வில்லை. வயதான அம்மாக்கள் இருவர் மட்டும், அதிகாலை நேரமே ஹரம் சென்று திரும்பி விட்டனர், ஆண்களுடன் வீல்சேரில்.
எங்களுக்கு, முஸ்தஃபா குரூப்புடன் சென்றதனாலும், வயதான மாமனார் உடன் இருந்ததாலும் தான் இவ்வளவு பிரச்சினையே. இல்லாவிட்டால், சீக்கிரமே மினா திரும்பி இருப்போம்.
சுஹைனா
Post a Comment