Sunday, March 29, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 26

என் மாமனார் தனது மனைவிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் மக்கா மதினா படம் போட்ட டாலர் தங்கத்தில் வாங்கித் தர சொன்னார் என்னிடம். சரி என்று அதற்கான இந்திய ருபாயை டாலராக மாற்றிக் கொண்டேன். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், ஹஜ்ஜின் போதும் அதன் பின் ஓரிரு வாரமும் ரியாலின் மதிப்பு சற்று அதிகமாக இருக்கும். அக்காலங்களில் முடிந்தவரை, மாற்றாமல் இருப்பது லாபகரமாக இருக்கும். அதன் பின் கொஞ்சம் குறைந்து விடும்.


பணம் மாற்றுவதற்கான கடைகள் ஹரமின் பாபு ஸலாம் வாசலுக்கு வெளியே ஹரமை நோக்கி நின்றால் வலது புறமாக நிறைய இருக்கும். அங்கு மதிப்பு கேட்டால், 13 ருபாய்க்கு ஒரு ரியால் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். நாங்கள் போய் கேட்ட போது 78 என்றார்கள். நான் குழம்பி விட்டேன். பிறகு தான் தெரிந்தது. 1000 ருபாய்க்கு 78 ரியால்கள் என்று. 500 ன் மடங்குகளில் மாற்றிக் கொள்ளலாம்.


ஹஜ் நேரங்களில் 1000க்கு 73, 74 என்று இருந்தது, பிறகு 79 வரை போய் 78 ல் நின்றது. இங்கு சென்னையில் மாற்றிச் செல்வதெல்லாம் வேஸ்ட். ரொம்ப ரேட் அதிகம். அங்கு நிறைய கடைகள் இருந்தாலும், ஹரமின் அருகில் இருக்கும் கடையைத் தவிர்த்து சற்று தூரம் நடந்தால் ஓரிரு ரியால் கூட கிடைக்கும்.


என் மாமனார் 5 டாலர்கள் வாங்கி வர சொன்னார். நாங்கள் தங்கி இருந்த அஜிஜியாவிலேயே ஏராளமான நகைக் கடைகள் இருந்தன. மற்றும் ஹரமை சுற்றிலும் ஏகப்பட்ட நகைக்கடைகள். எனினும், ஹரம் அருகில் எல்லாமே கொஞ்சம் காஸ்ட்லி என்பதால், நாங்கள் எங்க ஏரியாவிலேயே வாங்க தீர்மானித்தோம்.


மச்சான், தன் தாயாருக்கு மட்டும் சற்று பெரிதாக வாங்க சொன்னார்; அதன்படி மாமு, கால் பவுனில் 4 டாலரும் அரை பவுனில் ஒன்றுமாக வாங்கி வர சொன்னார். அது போல நாங்களும் வாங்கி வந்தோம். அங்கு தங்கத்துக்கு கூட பேரம் தான். அங்கு 18 கேரட் மற்றும் 21 கேரட் என்று இரண்டு வகை வைத்திருக்கிறார்கள். இரண்டுமே ஒரே விலை தான். நாம் கேட்காவிட்டால் சொல்ல மாட்டார்கள். நாம் தான் ஏமாறாமல் வாங்க வேண்டும். எந்த கடையிலும் 22 காரட் 916 எல்லாம் கிடையாது. கடையில் பில் தருகிறார்கள். அவ்வளவு தான். வெள்ளை தங்க நகைகள் எல்லாமே 18 காரட் தான். காரட் எவ்வளவு என்று நகையின் பின்புறம் பொரித்திருப்பதை பார்த்துத் தான் வாங்க வேண்டும்.


அப்போ நம்ம ஊரில் நகை விலை சுமார் 10,000 ருபாய். அங்கு கிராம் ஒன்று 100 ரியால் முதல் 130 ரியால் வரை டிசைனைப் பொறுத்து விலை உள்ளது. மற்றபடி கூலி சேதாரமெல்லாம் கிடையாது. கணக்குப் பார்த்தால் எல்லாம் நம்ம ஊர் விலை தான்.

நாங்க மாமு சொன்னபடி, கிராம் 100 ரியால் என்று 5 டாலர் வாங்கி வந்தோம்; ஆனால் மாமுக்கு திருப்தி இல்லை. அவர் பார்த்து விட்டு, பெரிய டாலர் ஓகே. சின்னது மிகவும் சின்னதாக உள்ளதால், அதையும் பெரிதாக மாற்றி வர முடியுமா? என்று கேட்டார். நம்ம ஊரில் என்றால் நிச்சயம் மாற்றித் தர மாட்டார்கள். ஆனால் அங்கு போய் கேட்டதும், உடனே மாற்றித் தந்து விட்டார்கள்.


அடுத்து நான் கையில் போட்டிருந்த 2 வளையல்களை மாற்றலாம் என்று போய் கிராம் 110 ரியால் சொன்னதை பேரம் பேசி 103 ரியாலாக குறைத்தேன். என்னுடைய பழைய வளையல், என் திருமணத்தின் போது செய்தது. ஏற்கனவே ஒரு முறை இந்தியாவில் மாற்ற முயன்ற போது, மச்சம் சரி இல்லை என்று சொல்லி விட்டார்கள். அதை இங்கு கிராம் 88 ரியாலுக்கு எடுத்துக் கொண்டார்கள். எடையில் எந்த தள்ளுபடியும் செய்யவில்லை. அழுக்கு கூட கழிக்கவில்லை. தங்கத்தை உரசியும் பார்க்கவில்லை.


நாம் மாற்ற கொடுக்கும் போது எந்த நாடு என்று கேட்கிறார்கள். இந்தியா என்று சொன்னால் நல்ல விலை தருகிறார்கள். காரணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கேரட்டில் செய்கிறார்கள். அதை வைத்துத் தான் விலை. நம் நாட்டு தங்கமாக இருந்தால் 22 கேரட் இருக்கும் என்று நம்பிக்கை அவர்களுக்கு.


பழைய நகைக்கு நல்ல விலை கிடைத்ததால், என் இரு வளையல், மற்றும் அதற்கு மேட்சாக மோதிரம் எல்லாம் சந்தோஷமாக மாற்றிக் கொண்டேன். மாற்றி வந்து இரண்டு மூன்று நாள் இருக்கும், கூட்டத்தில் என் வளையல் நசுங்கு பட்டு, தன் வடிவத்தை இழந்துவிட்டது. எனக்கோ பெரும் கவலை. மீண்டும் சரி செய்ய முயன்றும் பழைய வடிவம் வர வில்லை. புத்தம் புதுசு வேறு. ஊருக்கு வந்தால் கேட்பவருக்கு பதில் சொல்ல முடியாது. இறைவா இது எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று ஆண்டவனிடம் ப்ரார்த்தித்தேன்.


சரி, வாங்கிய கடையிலேயே கொடுத்து சரி பண்ணி வாங்கிக்கலாம் என்று போனேன். அவர்களிடம் விஷயத்தை சொன்னேன். அவர்களுக்கு புரியவில்லை, எனினும் வளையலைப் பார்ததும், தவாஃப், தவாஃப் என்று சொல்லிவிட்டு (அதாவது, தவாப் சுற்றும் போது நசுங்கி இருக்கும் என்று சொல்கிறார்கள்) அதற்கு பதில் புது வளையல் தந்து விட்டார்கள். நான் நினைத்துப் பார்க்கவே இல்லை, புதிது தருவார்கள் என்று. இரண்டுக்கும் இடையேயான எடை வித்தியாசத்துக்கு மட்டும் கூடுதல் பணம் தந்தோம். மற்றபடி ஒரு பைசா வாங்கவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன ப்ராக்டிகலான மனிதர்கள்; எவ்வளவு நேர்மையான வியாபாரம் என்று. நாங்க இதுக்கான எக்ஸ்ட்ரா சார்ஜ் இருக்கா என்று கேட்டதற்கு, துஆ செய்யுங்கள் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இதே நம்ம ஊராக இருந்தால்? மாற்றித்தருவது ஒரு புறம், முதலில் காசு வாங்காமல் சரி செய்து தருவார்களா?


என் மகளுக்கும் சிறியதாக ஒரு செட் நகை வாங்க வேண்டும் என்று நினைத்தேன். நகை பிடித்திருந்தால் அது 18 கேரட் என்றார்கள். 21 கேரட்டில் டிசைன் பிடிக்கவில்லை. நான் ஒரு மூன்று பவுனுக்குள் செட் நகை பார்த்தேன். கடைசியில் ஒரு மெல்லிய செயினில் கோர்த்திருந்த டாலர் மற்றும் தோடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு மேட்சாக பிரேஸ்லெட்டும் மோதிரமும் எடுத்துக் கொண்டேன். எல்லாம் 21 கேரட். செயின் மிக மெல்லியதாய் இருந்தது. செயினின்(டாலர் இல்லாமல்) மொத்த எடையே 0.8 கிராம் தான், அதாவது ஒரு கிராமுக்கும் குறைவு. எனவே, அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு, அதற்கு பதிலாக வேறொன்று எடுத்துக் கொண்டேன். விலை கிராமுக்கு 110 ரியாலுக்கு குறைத்துத் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். திருப்தியாக இருந்ததால், சரி என்று எடுத்துக் கொண்டோம்.

பிறகு மதினா வந்து பார்த்தால், ஆயிரக்கணக்கான டிசைன்கள். ஏன் மக்காவில் வாங்கினோம் என்று இருந்தது. விலை எல்லாம் ஒன்று தான். ஆனால் பலப்பல வகைகள், முக்கியமாக வளையல்கள் அவ்வளவு அழகழகான டிசைனில் ஜொலித்தன.

பொதுவாக, முதலில் மக்கா செல்ல நேர்வதால், நாம் எல்லா பர்சேஸும் மக்காவிலேயே முடித்துக் கொள்கிறோம். எனினும் மதினாவுக்கென்று கொஞ்சம் பணம் வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சில பொருட்கள் மதினாவில் மிக குறைந்த விலைக்குக் கிடைக்கும்.

என் மற்ற ஷாப்பிங் அனுபவங்களை அடுத்து எழுதுகிறேன்.

-சுமஜ்லா.

5 comments:

Biruntha said...

பரவாயில்லையே..! அப்படியென்றால் நானும் அங்கு போய் பழைய நகைகளை மாற்றி வரலாம் போல இருக்கே... நசுங்கிய வளையலைக்குக் கூட எவ்வித பணமும் மேலதிகமாக வாங்காமல் புதிய நகையைத் தருகின்றார்களே..? ஆச்சரியமாக உள்ளது? எம்மவர்களிலும் சிலர் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமென்றால் ஏதாவது ஒரு அரேபிய நாட்டிற்கு டிரான்சிட் எடுத்து அங்கு சில மணித்தியாலங்களோ/நாட்களோ தங்கி நகை வாங்கிக் கொண்டு வருவதாகக் கேள்விப்படிருக்கின்றேன். நாங்களும் போன வருடம் இந்தியா வந்திருந்த போதும் டுபாய்க்கு டிரான்சிட் எடுத்து அங்கு பல மணித்தியாலங்கள் தங்கி மிகக் குறைந்த விலையில் நல்ல டிசைன் நகைகள் வாங்கிவந்தோம்.

நல்ல தகவல், சுஹைனா. நன்றி.
அன்புடன்
பிருந்தா

சுஹைனா said...

அன்பு பிருந்தா,
ட்ரன்சிட் என்றால் என்னப்பா? தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். எனக்குத் தெரியாது, அதான் கேட்டேன்.

Mrs. Hussain said...

டிரான்ஸிட் என்றால் நீங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் போகும் வழியில் வேறு ஒரு நாட்டில் இறங்கிப் போவதுதான். அங்கு நீங்கள் தங்கியிருக்கும் நாட்களை ட்ரான்ஸிட் பீரியட் என்று சொல்வார்கள்.

Mrs. Hussain said...

சுஹைனா,

சுவையாக எழுதி வருகிறீர்கள். இதுவரை தவறாமல் படித்து வருகிறேன்.

Biruntha said...

Thanks, Mrs Hussain. I just see your post Suhaina. But, Mrs Hussain said the right answer.

Biruntha