Tuesday, March 31, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 27

போன அத்தியாயத்தில் நான் வாங்கியதாக சொன்ன செட் நகையின் போட்டோ.


நாங்கள் பெரும்பாலும் ஹரமில் இருந்து வருவதற்கே இரவு 8.30 மணி ஆகிவிடும். பிறகு, சமைத்து சாப்பிட்டு விட்டு, நானும் மச்சானும் காலார நடப்போம். அஜிஜியாவில் இந்தியர்கள் மட்டுமின்றி இந்தோனேஷியர்களும் நிறைய தங்கி இருப்பதால், அங்கும் பெரிய கடைவீதி உள்ளது. அக்கடைகள் ஹஜ் முடிந்து 2 வாரங்கள் வரை இரவு 2 மணி வரை திறந்திருக்கும்.

அங்கு 2 ரியால் கடைகள் உண்டு. எது எடுத்தாலும் 2 ரியால்கள் தான். அதில் இல்லாத பொருட்களே இல்லை எனும்படி, ஏகப்பட்ட பொருட்கள். நாங்கள் அதிகம் செலவளித்தது அங்கு தான்.

அது போக டாய்ஸ் கடைகள். இங்கு இந்தியாவில் நான் பார்த்திராத வித விதமான கிரியேடிவ் டாய்ஸ். என் மகன் போன் செய்யும் போதெல்லாம் மம்மி என்ன வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்பான். நானும் பாடம் ஒப்புவிப்பது போல சொல்வேன், ‘ பாட்டுப்பாடிகொண்டு நடக்கும் கேமல், மேலே பறக்கும் ஹெலிகாப்டர், சுவற்றில் போகும் ரிமோட் கார், குட்டிக்கரணம் அடிக்கும் கார்’ என்று. என்ன மம்மி ஒவ்வொரு முறையும் இதே சொல்றீங்க என்பான். சரி என்று அதற்காகவே, இன்னும் 2 பொருட்கள் வாங்குவோம். மீண்டும் அதே கதை, மீண்டும் பொருள் வாங்குவோம். சொல்லும் போது, ஒரு பொருளும் விட்டுப் போகக்கூடாது. விடுபட்டால், நமக்கு திருத்தித் தருவான். எல்லாம் அவனுக்கு தெரியும், என்றாலும் என் வாயால் கேட்பதில் ஒரு திருப்தி அவனுக்கு.

எல்லாமே காஸ்ட்லியாக அவனுக்கு வாங்கியது தப்பு; பத்து பத்து ரியாலாக, ஒரு 20 ஐட்டம் வாங்கியிருக்கணும் என்று நானும் மச்சானும் பேசிக் கொள்வோம். என் மகளோ ஒன்றுமே கேட்க மாட்டாள். தினமும் நாங்கள் திரும்பி வரும் நாளை கணக்குப் போடுவது தான் அவள் வேலை.

நான் மகளுக்கு ஒரு புர்கா வாங்கினேன். 70 ரியால் சொல்லி 50 ரியாலுக்கு வாங்கினேன். இதுவே மற்றெல்லாக் கடைகளிலும் இன்னும் அதிகம் சொன்னார்கள். ஆனால் மதினாவில் 30 ரியால் 35 ரியாலுக்கு மிகவும் நல்ல வேலைப்பாடோடு அழகாக இருந்தது.

அங்கு சிட்டி செண்டர் என்று ஒரு ப்ளாஸா எங்கள் ஏரியாவில் இருந்தது. மக்காவிலேயே மிகப் பெரிய ப்ளாஸா அது தான் என்றார்கள். அங்கு இல்லாத பொருளே இல்லை. கம்ப்யூட்டர் முதல், ஜுவல்லரி வரை எல்லாமே உண்டு. மிக அழகாக ரேட் ஸ்டிக்கருடன் டிஸ்ப்ளே செய்திருக்கிறார்கள். அங்கு சென்று சுற்றிப்பார்த்தோம். எல்லாமே நம்ம ஊரை விட காஸ்ட்லி தான். எனினும், நம்ம ஊரில் இல்லாத, கிடைக்காத சில பொருட்கள் இங்கே கிடைக்கிறது. குறிப்பாக வெளிநாட்டினரின் மாறுபட்ட உணவு தேவைக்கேற்ப பாஸ்தா மிஷின் போன்ற உபகரணங்கள். நாங்கள் அங்கு 23 ரியாலுக்கு கரண்ட்டில் தண்ணீர் சுட வைக்கும் ஜக் மட்டும் ஒன்று வாங்கினோம்.

அந்த காம்ப்ளக்ஸில் நான் ஒரு மோதிரம் பார்த்தேன். கலர் கற்கள் பதித்து நல்ல அழகாக இருந்தது. நான் அது போன்ற மோதிரம் ஒன்றை, ஆயிஷா மஸ்ஜிதில் 2 ரியாலுக்கு வாங்கினேன். சரி இங்கொன்று வாங்கலாம் என்று விலை கேட்டால், அம்மாடியோவ், 40 ரியால் என்றான். திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டேன்.
இது தான் நான் வாங்கிய மோதிரம்.

இவ்வாறு இரவு உணவுக்குப் பின், வாக்கிங் போய் ஷாப்பிங் செய்வது எங்கள் பழக்கமாகி விட்டது. மூன்று விரலுக்கும் மோதிரம் மற்றும் அதில் சரம் வந்து கற்கள் பதித்த வாட்ச் ஒன்று என் மகளுக்கு 35 ரியால் கொடுத்து வாங்கினேன்.
படத்தில் நான் வாங்கிய கைச்சரத்துடன் கூடிய வாட்ச்.

எங்களுடைய இன்னொரு ஷாப்பிங் ப்ளேஸ், மஅபஸ் பஸ்ஸ்டாண்ட். அதாவது, நாங்கள் ஓரிடத்தில் இறங்கி இன்னொரு பஸ் மாற்றிப் போவதாக சொன்னேனே, அவ்விடம். அங்கு அடுத்த பஸ் ஏற நடக்கும் ஒரு பர்லாங்கும், நிறைய கறுப்பினப் பெண்களின் ப்ளாட்பாரக் கடைகள். அங்கு 10 ரியால் என நாங் வாங்கிய வேலைப்பாடுடன் கூடிய ஷால், ஒரு வாரம் கழித்து 8 ரியால் என விற்கப்பட்டது.

அதாவது, ஹஜ் சமயமும், அதன் பின் ஒரு 10 நாட்களும், விலை சற்று கூட இருக்கும். பின், வாங்க ஆளில்லாவிட்டால், சரக்கை எப்படியாவது காலி செய்ய நினைத்து, குறைத்துத் தருகிறார்கள். ஆனால், கடைசியில் வாங்க நினைத்தால், டிசைன் நல்லதாக இருக்காது, அல்லது அந்த பொருளே கூட கிடைக்காது போய்விடும்.

பஸ் ஸ்டாண்ட் கடையில் நல்ல அழகான செருப்புகள், அந்நாட்டு பாரம்பரிய உடையான அபா, விதவிதமான டாய்ஸ், முஸல்லா (தொழுகை விரிப்பு) எல்லாம் நிறைய கிடைக்கும். நான் என் மகளுக்கு ஒரு செருப்பு, தங்கக் கலர் சமிக்கி வேலைப்பாடோடு இருந்தது, 8 ரியால் சொல்லி, 6 ரியாலுக்கு வாங்கினேன். அதே செருப்பு, மதினாவில் கடையில் 10 ரியாலுக்கு குறைத்து தர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். அதற்காக மதினாவில் விலை அதிகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி. படத்தில் 6 ரியாலுக்கு நான் வாங்கிய செருப்பு.

பொருட்கள் வைத்துத் தள்ளிச் செல்லும் ட்ராலி ஒன்று வாங்கி வரும்படி என் அம்மா சொல்லி இருந்தார். 25 ரியாலுக்கு ஒரு ட்ராலியும், அதைவிட சற்றுப் பெரியதாக 35 ரியாலுக்கு ஒன்றுமாக வாங்கினோம்.

அடுத்து, ஹரமை சுற்றி உள்ள பஜார். ஹரமில், பாபு ஸலாம் வாசலில் இருந்து, இடது புறம் நடந்தால், பெரிய பஜார் உள்ளது. அங்கு, எல்லாப் பொருட்களும் காஸ்ட்லி என்பதால், சும்மா சுற்றி மட்டும் பார்த்தோம். எதுவும் வாங்க வில்லை.

அதே போல, 1ம் நம்பர் கேட்டுக்கு எதிரே, நிறைய கடைகள் உண்டு. அங்கு ஒரு பெரிய காம்ப்ளக்ஸில் பின் தாவூது சூப்பர் மார்க்கட் உள்ளது. அங்கு போய், சமையல் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது, அங்கு விலை அதிகம் என்று. அந்த காம்ப்ளக்ஸில், தான் டிஜிட்டல் கேமரா ஒன்று வாங்கினோம், 400 ரியாலுக்கு. சாம்சங் 7.2 மெகா பிக்ஸல். அந்த காம்ப்ளக்ஸில் நல்ல தரமான செண்ட்கள் குறைந்த விலைக்கு கிடைத்தன. கொஞ்சம் வாங்கிக் கொண்டு பின் மதினா வந்து, மீண்டும் அது போன்ற செண்ட் தேடினோம், கிடைக்கவில்லை.

79ம் நம்பர் கேட்டுக்கு எதிரில், ஐஸ்கிரீம் கடைகள் நிறைய உண்டு. 2 ரியாலுக்கு, மூன்று வர்ணம் கொண்ட சாஃப்டி ஐஸ்கிரீம் கப் நிறைய தருவார்கள். ஒன்று வாங்கி, நானும் மச்சானும் சாப்பிடுவோம், காரணம் அளவு அவ்வளவு அதிகம் இருக்கும். அங்கு நம்ம ஊர் வடை போல வைத்திருப்பார்கள். அதை ரொட்டியில் வைத்துத் தருவார்கள். வடை மட்டும் கேட்டால், ஒரு ரியாலுக்கு 4 தருவார்கள். அடிக்கடி நாங்கள் அந்த வடை வாங்கி சாப்பிடுவோம். சுவையாக இருக்கும். ஆனால், வியாழன் மற்றும் வெள்ளிகளில் கூட்டம் அதிகம் இருப்பதால், அப்போது வடை தனியாக கிடைக்காது.

பொதுவாக மக்காவில் ஷாப்பிங்குக்கென்று நேரம் அதிகம் ஒதுக்கத் தேவையில்லை. வழியில் தென்படும் பொருட்களை பர்சேஸ் செய்தாலே, பை நிறைந்து விடும். பர்ஸ் காலியாகி விடும்.

-சுமஜ்லா.

6 comments:

Biruntha said...

சுஹைனா, நீங்கள் வாங்கிய நகை செட், வாட்ச் என்பன மிகவும் அழகாக உள்ளன. நல்ல டிசைன்கள்.
விலை குறைவாக இருக்குதோ இல்லையோ, பார்க்கும் பொருளெல்லாம் வாங்கிக் குவிக்கும் போது பர்ஸ் காலியாவது தெரியாது, பின் வீட்டில் கணக்குப் பார்க்கும் போதுதான் ஏன் தேவையில்லாமல் எல்லாவற்றையும் வாங்கினோம் என்று இருக்கும். நான் இதற்காகவே அடிக்கடி வெளியில் செல்வதைத் தவிர்ப்பேன். அதிலும் வெளிநாடுகள் சென்றால் கேட்கவே வேண்டாம். வெளிநாட்டுப் பயணத்திற்கென்றே சில வருடங்கள் அல்லது மாதங்கள் முன்னதாகவே பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவேன்.

அன்புடன்
பிருந்தா

கவின் said...

அழகிய நகைகள் சுஹைனா. நல்லா இருக்கு.

சுஹைனா said...

ஆமாம்ப்பா, செலவு செய்யும் போது தெரியாது. நாங்களும் அவ்வாறு தான் 2 ரியால் கடைக்குப் போவோம். பிறகு பில் போடும் போது பார்த்தால், 70,80 ரியால் ஆகி இருக்கும். காரணம் 2 ரியால் தானே என்று ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி இருப்போம்.

asiya omar said...

வாங்கிய அனைத்து பொருளும் அழகாக இருக்கிறது.நான் இப்ப கொஞ்சம் பிஸி.எனவே நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் பதிவுகளை பார்வையிடுவேன்.

Jaleela Kamal said...

டியர் சுகைனா நீங்கள் வாங்கி வந்த அனைத்து நகைகள், மோதிரம், எல்லாமே சூப்பர்,
நாங்களும் போன வருடம் உம்ரா போன போது தினம் காலை மதிய உணவே அந்த முவர்ண ஜூஸ் ரொம்ப அருமையாக இருக்கும், அதுவும் ரொட்டியில் வடை சாலடுடன் (அது பிலாஃபில் சாண்ட்விச்) பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும், அதான் சாப்பிட்டோம், டீயும் ஒரு டீ வாங்கினால் இரண்டு பேர் குடிக்கும் அள்விற்கு இருக்கும்.

ஜலீலா

சுஹைனா said...

தேங்க்யூ அக்கா. ஒரு நாள் அந்த ஜூஸ் வாங்கி, என்னால் முழுவதுமாக குடிக்க முடியவில்லை. அதனால் அதன் பிறகு அதை வாங்க வில்லை. ஐஸ்க்ரீம் தான், எப்படியும் தினமும் வாங்கி விடுவேன்.

அந்த சாண்ட்விச், பச்சைக் காய்கறிகள் போடுவதால், ஒரு சிலருக்குப் பிடிக்காது. எனினும், பசிக்கு ஓக்கே. ஒரு ரியாலுக்கு விற்கும் டீ கேக்கு தான் பெரும்பாலும் நான் இரவு ஹரமில் தங்கி அமல் செய்யும் போது இடையிடையே பசிக்கு சாப்பிடுவேன்.