Saturday, April 4, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 28

அடுத்து நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் விஷயம், மக்கா நகரின் சுத்தம். வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு இது வியப்பான விஷயமாக இருக்காது. ஆனால் அது வரை எந்த வெளிநாட்டுக்கும் போயிராத எனக்கு அது ஆச்சரியம் அளித்தது வியப்பில்லை.

அங்கு எங்கள் லாட்ஜின் முன் மிகப் பெரிய குப்பை பேஸ்கட் இருந்தது. மனிதர்களால் தூக்க முடியாத அளவுக்கு ரொம்பவும் பெரியது. அதை எப்படி க்ளீன் பண்ணுவார்கள் என்று எனக்கு ஒரே சஸ்பென்சாக இருந்தது. அதனால் நான் தினமும் அதை கவனிப்பேன். ஒரு நாள் பார்த்தால், ஒரு பெரிய லாரியில் இருந்து சங்கிலிகளால் அதைப் பிணைத்து, அப்படியே மோட்டர் போட்டு இழுக்கிறார்கள். பேஸ்கட் அப்படியே தூக்குகிறது. ராட்சஷ வேக்குவம் க்ளீனர் போல, லாரியினுள் காற்று உள்ளிழுக்க, அந்த பேஸ்கட்டின் குப்பைகள் உள்ளிழுக்கப்படுகின்றன.

அதே சமயம், அக்குப்பைகள் லாரியினுள் இருக்கும் மிஷினால் அரைக்கப்பட்டு, துண்டுகளாக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதால், பெரிய பொருட்கள் எல்லாம் துண்டுகளாக்கப்பட்டு, இடத்தை அடைக்காமல் இருக்க வழி செய்யப்படுகிறது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, இந்த ப்ரொசீஜரைப் பார்க்க. அங்கு குப்பை தொட்டியில் நல்ல நல்ல பொருட்கள் எல்லாம், அதாவது நம்ம ஊரில் காசாக்கும், பழைய ப்ளாஸ்டிக், இரும்பு பொருட்கள் எல்லாம் கிடக்கும். அதனால் இந்த ராட்சஷ குப்பைக் கூடை அங்கு தேவை தான்.

அடுத்த படியாக, ஹரமின் சுத்தம். ஹரமை சுத்தம் செய்ய மட்டும், 50,000 ஆட்களாவது இருப்பார்கள். 2,3, ஷிஃப்டுகளாக இரவும் பகலும் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே, இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரம் தற்காலிக ஊழியர்கள் ஹஜ் சமயத்தில் நியமிக்கப் படுகிறார்கள்.

ஹரமில் எங்கு திரும்பினாலும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் மிளிரும். ஆனால் எந்த இண்டு இடுக்கிலும் ஒரு துளி தூசி கூட பார்க்க முடியாது. ஸ்பெஷலாக வடிவமைத்த மிஷின்களால் உயரமான பகுதி கூட தினமும் துடைக்கப்படுகின்றது. இத்துணை லட்சம் ஜனங்கள் கூடுகிற இடத்தில், இவ்வளவு சுத்தம், ஒரு வியப்பான விஷயம் தான்.

ஒரு நாள் நான் பார்த்தேன், ஒரு பெரிய ஏணி போன்ற மிஷின். அதில் உயரத்தில் ஒரு மனிதர் அமர்ந்து துடைத்துக் கொண்டிருந்தார். அதன் போட்டோவை கீழே பார்க்கலாம்.



அடுத்து, ஒரு முக்கிய விஷயம், அங்கு ஹரமில், லட்சக்கணக்கான மக்கள் எந்நேரமும் இருந்தாலும், அதை சுத்தப்படுத்துவது தான். நகரக் கூட இடமில்லாத அளவில் கூட்டம் இருக்கும். அப்பொழுது ஒரு 30, 40 பேர் வருவார்கள். ஒரு பட்டை நாடாவை விரிப்பார்கள். பல பேர் சேர்ந்து, அந்த வட்டத்தை சிறிது சிறிதாக பெரிது பண்ணுவார்கள். பிறகு அவ்வட்டத்தினுள் சுத்தம் செய்வார்கள். இப்படியாக குறைந்த நேரத்தில் காபாவை சுற்றிலும் க்ளீன் பண்ணிவிடுவார்கள். இரவு இஷா தொழுகைக்குப் பின் கொஞ்சம் கூட்டம் குறையும் என்பதால் அந்நேரத்தில் தான் சுத்தம் செய்வார்கள், மற்றும் காலை ஒரு முறையும் சுத்தம் செய்வார்கள்.

சுத்தம் செய்வதற்கு ராட்சஷ மூட்டைப் பூச்சிகள் போன்ற வண்டிகள் இருக்கும். வண்டி என்று நான் சொன்னாலும் அது வேக்குவம் க்ளீனர் தான். அதில் ஆட்கள் அமர்ந்து ஓட்டுவார்கள். இது புகை வராமல் பேட்டரியால் இயங்கும் கார் போன்றது. அதில் முன்புறம் இரண்டு பெரிய வட்ட வடிவ பிரஷும், பின்புறம் இரண்டு ரப்பர் பிரஷும் இருக்கும். ஒரே சமயத்தில், சுழலும் முன்புற பிரஷ் குப்பைகளை இழுத்துக் கொள்ள, அடுத்து உள்ள அமைப்பு நீர் விட்டு அவ்விடத்தை கழுவ, பிறகு இருக்கும் வேக்குவம் சிஸ்டம் அதிகப்படி நீரை உறிஞ்சிக் கொள்ள, ஆக ஒரு முறை அந்த காரை ஒரு இடத்தில் ஓட்டினால், இடம் பளிச்சென்று ஆகி விடும்.


படத்தில், வட்டமாக பிடித்திருக்கும் நாடாவினுள் க்ளீன் பண்ணும் மூட்டைப் பூச்சி வடிவ வேக்குவம் க்ளீனிங் காரை பார்க்கலாம்.

இவ்வளவு வேகமாக சுத்தம் செய்யாவிட்டால் அங்கு முடியாது. அது போக, ஆங்காங்கே, ஜம் ஜம் நீர் அருந்தும் பைப்புகள். அந்த பைப்புகளுக்கு அருகே சிந்தும் நீரை சுத்தம் செய்ய எந்நேரமும் ஊழியர்கள். நடு ஹாலில் பைப் இருக்கும். ஆனால் ஒரு துளி நீர் கீழே வழுக்கச் செய்யாது. எல்லாமே அங்கு சிஸ்டமேடிக் தான்.

அதே போல ஹரமைச் சுற்றிலும் ஆயிரம் பாத்ரூம்களுக்கும் மேல் இருக்கும். பெண்கள் டாய்லட்டில் பெண்களும் ஆண்கள் டாய்லட்டில் ஆண்களும் எந்நேரமும் க்ளீன் செய்து கொண்டே இருப்பார்கள். டாய்லட் எல்லாமே அண்டர் கிரவுண்டில் தான். அண்டர் கிரவுண்டில் மூன்று ஃப்ளோர்களில் அமைந்திருக்கின்றன. அதனால், ஒரு ஃப்ளோரில் க்ளீனிங் ஒர்க் நடக்கும் போது, மீதி 2 ஃப்ளோர் டாய்லட்டுகள் நம் உபயோகத்துக்காக திறந்திருக்கும். அவ்வளவு பேர் உபயோகித்தாலும், ஒரு சிறு வாடை கூட இருக்காது. நிம்மதியாக மூக்கைப் பொத்தாமல் டாய்லட் போய் வரலாம். மூன்று ஃப்ளோர்கள் கீழே இறங்க ஏற எஸ்கலேட்டர்கள் என்னும் நகரும் படிக்கட்டுகள் உண்டு.

அண்டர் கிரவுண்டில் டாய்லட் அமைப்பே பார்க்க பிரமாண்டமாக இருக்கும். 30 அடி அகல பாதையில், இருபுறமும் வழி ஏற்படுத்தப் பட்டு, அதில் வரிசை வரிசையாக பாத்ரூம்கள். வெளியே உட்கார்ந்து ஒளு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட திட்டுகளுடன், நூற்றுக்கணக்கான பைப்புகள். எப்படித் தான் இதையெல்லாம் மெயிண்டெயின் செய்கிறார்களோ?!

அங்கு ஹரமில் மூன்று மாடி. மூன்றாம் மாடியில் கட்டுமானப் பணி நடப்பதால், ஹஜ் சமயத்தில் மட்டும் அதை நிறுத்திவிட்டு, ஹாஜிகளை மேலே தொழுகச்செல்ல அனுமதிக்கிறார்கள். பிறகு ஹஜ் முடிந்து சிறிது நாட்களுக்குப் பிறகு அனுமதிப்பதில்லை. நாங்கள் மூன்றாம் மாடி போய் பார்த்தோம். கண் கொள்ளாக் காட்சியாய் கீழே ஊறும் மக்கள் வெள்ளம். மற்றும் காணக் கிடைக்காத காட்சியாக காபாவின் மேல் புறத் தோற்றம். சிறிது நாட்களுக்குப் பின் மீண்டும் போட்டோ எடுக்க மேலே செல்ல முயன்றபோது எங்களை அனுமதிக்கவில்லை.

சற்று கூட்டம் குறைந்ததும், தான் நாங்கள் ஹரமை முற்றிலும் சுற்றிப் பார்த்தோம். அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் எழுதுகிறேன்.

-சுமஜ்லா.

4 comments:

கவின் said...

கேட்க நல்லா இருக்கு. அசுத்தத்தில் வாழ இந்தியர்கள் பழகியது எப்போது என ஆய்வு கட்டுரை எழுதலாம் என உள்ளேன்.

suhaina said...

பரவாயில்லை, போஸ்ட் பண்ணிய வேகத்தில் படித்து, பதிவும் போட்டுட்டீங்களே கவின், ரொம்ப நன்றிப்பா. சீக்கிரமே PhD பண்ணுங்கப்பா.

asiya omar said...

நானும் நீங்கள் சொன்ன அனைத்தையும் கவனித்தேன்,அப்பா அந்த டாய்லட் சுத்தம் தான் ஆச்சரியம்,இவ்வளவு கூட்டத்திலும் இப்படி சுத்தம், அங்கு சுத்தம் செய்யும் பெண்கள் ஹோஸ்வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்வதை ஒரு நாள் என்னை அறியாமல் பார்த்துக்கொண்டு நின்று விட்டேன்.அப்புறம் என் மகள் அழைப்பு கேட்டுதான் கிளம்பினேன்.ராட்சச ஏசி வேறு.ஜில்லுன்னு.

Biruntha said...

ஆமாம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான். இங்குள்ளவர்களுக்கு (வெளிநாட்டில்) இது பழகிப் போன ஒன்று. நீங்கள் கூறிய அந்த சுத்தம் செய்யும் இயந்திரங்கள் இங்கு தினமும் தெருவெல்லாம் சுத்தம் செய்யும். ஆனால் மனிதர்கள்தான் துர்நாற்றத்துடன் திரிவார்கள். ஏனோ இவர்கள் (வெள்ளையர்கள்) குளிப்பது ஆடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை அடிக்கடி செய்து கொள்வதில்லை. இவ்விடயத்தில் அவர்களை நினைத்தாலே அருவருப்பாக இருக்கும். அதிலும் தலைக்கு அவர்கள் குளிப்பது என்பது மிகக்குறைவு. புகை பிடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் அருகில் செல்லும்பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் படிக்கும் காலத்தில் இங்குள்ள ஆசிரியர்கள்/மாணவர்களின் துர்நாற்றம் தாங்கமுடியாமல் தவித்தது ஞாபகத்திற்கு வருகின்றது.

அன்புடன்
பிருந்தா