Tuesday, April 7, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 29

சற்றே கூட்டம் குறைந்தது, ஹரமில். நாங்கள் இது வரை ஹரம் ஷரீஃபை முழுவதுமாக சுற்றிப் பார்த்திருக்கவில்லை. அதனால் அன்று சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பெரிய பெரிய தூண்கள், சுற்று வளாகத்தில். நடுவே மாபெரும் கிரவுண்டில் வெட்ட வெளியில் காபத்துல்லாஹ்.

ஒவ்வொரு இடத்திலும், நுணுக்கமான கலை வேலைப்பாடுகள். காண கண் கோடி வேண்டும். நான் முந்திய வருடம் தான் தாஜ் மஹால் சென்று பார்த்து பிரமித்தேன். ஆனால், அதைவிட பல மடங்கு பிரம்மாண்டமான ஓர் உலக அதிசயமாக ஹரமை உணர்ந்தேன். தூண், சுவர், நிலம் எல்லாமே பளிங்கு. அதுவும் வண்ண வண்ண மயமாக. ஹரமின் மாடிக்கு செல்ல எஸ்கலேட்டர் உண்டு. ஹரமுக்கு வெளியிலிருந்து போகும் விதமாக எஸ்கலேட்டர் அமைத்திருக்கிறார்கள். கலை வேலைப்பாடுகளை படத்தில் காணலாம்.

ஹரமில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான சரவிளக்கு அலங்காரம். சரவிளக்கு மட்டும் சுமார் 10,000 இருக்கும். அனைத்தும் சிறு பழுது கூட இல்லாமல் எந்நேரமும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. படத்தில் பல விதமான சரவிளக்குகளைக் காணலாம்.






மாடியிலும், ஹஜ் சமயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். இப்போ ஹஜ் முடிந்து சில நாட்கள் ஆகி விட்டதால், மாடியில் கூட்டமில்லை. அதனால் நிதானமாக, ரசித்தோம். எல்லா இடத்திலும் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அங்கு வேறு விதமான அலங்கார விளக்குகள். ஒவ்வொரு இண்டு இடுக்கையும் பார்த்து ரசித்து, முடியும் மட்டும் மனதில் நிரப்பிக் கொண்டேன். மாடியில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் ஹாலை படத்தில் காணலாம்.


மேலே இருந்து கீழே பார்த்தால், தவாப் சுற்றும் மக்கள் கூட்டம், அப்படியே அந்த இடமே சுற்றுவது போல இருக்கும். அதிலும், பலப்பல நாட்டவர் வரும் போது, ஒரு குரூப்பாக 10,20 பேர் சேர்ந்து, ஒரே மாதிரி யூனிஃபார்ம் அணிந்து வருவார்கள். கூட்டத்தில் வழிதவறி விட்டால், கண்டுபிடிக்க ஈஸியாக இருக்கும் என்று இந்த ஏற்பாடு. யூனிஃபார்ம் அணிந்தவர்கள் ஒன்றாக காபாவை வலம் வரும் போது, மேலே இருந்து பார்த்தால், ஓரிடத்தில் மஞ்சள் கூட்டமும், ஓரிடத்தில் ஆரஞ்சு கூட்டமும், ஓரிடத்தில் ரோஸ் கூட்டமும், தெரியும். இப்படி பலப்பல நிறத்தவர் ஆங்காங்கே திரண்டிருப்பதைப் பார்த்தால், பல நிற பறவைக் கூட்டம் போல இருக்கும்.

அதில் ஒரு கூட்டம் அடையாளத்துக்கு, பெரிய பிளாஸ்டிக் மஞ்சள் ரோஜாவை தலையில் குத்தி இருந்தார்கள். பார்த்தால், மஞ்சள் ரோஜாப் பூந்தோட்டமே அசைந்து அசைந்து நடப்பது போல இருக்கும். ரசனையுடையவர்க்கு எல்லாமே ஆச்சரியம் தான். கலைக் கண்ணோடு பார்த்தால் தான் அதன் ஆனந்தம் புரியும்.

ஹரமின் வெளியே ஓவர் பிரிட்ஜ் போல ஓரிடத்தில் கட்டி, ரோட்டிலிருந்து மாடிக்கு அதன் மூலம் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த ஓவர் பிரிட்ஜை படத்தில் காணலாம்.


ஹரமில் 95க்கும் மேற்பட்ட வாயில்கள் இருந்தாலும், முக்கியமான தலை வாசல்கள் 5 உள்ளன. அவை 24 - பாபுஸ்ஸலாம், 1 - கிங் அப்துல் அஜீஸ் கேட், 62 - அல் உம்ரா கேட், 79 - கிங் பஹ்து கேட், 45 - அல் ஃபத் கேட் ஆகும். அவற்றின் அடையாளமாக, அதில் ஒன்றுக்கு பதிலாக மூன்று வாயில்கள் இருக்கும். அதில் 45ம் நம்பர் தலை வாசலுக்கு வெளியே நின்று பார்த்தால் மட்டுமே, முழுக்காபாவும் தெரியும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில், ஹரமினுள் செல்லக் கூடாது என்பதால், அச்சமயம், 45ம் நம்பர் வாசலுக்கு வெளியே நின்று காபாவின் முழு உருவையும் அதன் தங்கக் கதவுடன் சேர்த்து தரிசிக்கலாம். 45ம் நம்பர் தலை வாசலான அல் ஃபத் கேட்டை படத்தில் காணலாம்.



மாடிக்கு எஸ்கலேட்டர் வழியாக செல்லும் பல வழிகளில் ஒரு வழி, மராமத்துப் பணிகளின் காரணமாக மூடப்பட்டிருந்தது. அந்த பிரமாண்டமான கதவு, இதோ படத்தில்.


அங்கு ஹரமில், பாங்கொலி, மற்றும் தொழுக வைக்கும் சப்தம், சிறு பிசிறில்லாமல், வெகு தூரம் வரை கேட்கும். ஹஜ் சமயங்களில், காபாவை சுற்றி உள்ள மைதானம், ஹரமின் பிரம்மாண்ட வளாகங்கள், மூன்று அடுக்கு மாடி, ஹரமின் வெளி வாசல் எல்லாம் நிறைந்து, ஹரமிலிருந்து வெளியே அரை கிலோ மீட்டர் வரை மக்கள் தொழுவார்கள். அதனால், தொழுக வைக்கும் சப்தம் வெகு தூரம் கேட்கும் வகையில் ஸ்பீக்கர்கள் அமைத்திருக்கிறார்கள். ஆனால் நம்மூர் போல கம்பத்தில் கட்டியெல்லாம் இருக்காது. எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிர் தான். படத்தில் பாருங்கள், இந்த பூ அலங்காரத்தின் நடுவே இருக்கும், வட்ட அமைப்பு கூட ஸ்பீக்கர் தான். எவ்வளவு அழகாக பூ போலவே அமைத்துள்ளார்கள் பாருங்கள்.


அத்தோடு, எல்லா இடத்திலும் ஏர்கண்டிஷன் மற்றும் ஃபேன்கள்.மேலே ரத்தினக்கம்பளங்கள் விரித்திருக்கும் படத்தில் வரிசையாக ஃபேன்கள் இருப்பதைப் பார்க்கலாம். நிலத்தின் அடியில் ஏ.ஸி. இருக்கிறதோ என்று எண்ணும் வகையில், அந்த பாலை வெய்யிலிலும், ஹரமின் தரை வெகு குளிர்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு தூணிலும், கீழ் புறத்திலும் மேல் புறத்திலும், உள்ளே ஏ.ஸி, பதித்து, அதற்காக அழகாக ஓட்டைகள் விட்டிருக்கிறார்கள். படத்தில் தூணின் கீழே முக்கோண வடிவில் ஏஸியின் அவுட்லெட்டைக் காணலாம்.



மக்கா நகரை சுற்றிப் பார்த்ததை அடுத்த அத்தியாயத்தில் படங்களுடன் எழுதுகிறேன்.

-சுமஜ்லா.

9 comments:

asiya omar said...

சுஹைனா படங்களுடன் அசத்தலாக இந்த பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி.கேமராவை உள்ளே அனுமதித்தார்களா?இப்பொழுது எல்லாம் புதிதாக பார்ப்பது போல் உள்ளது.காணக் கண் கோடி வேண்டும் காபாவை என்று நாகூர் இ.எம்.ஹனீபா சும்மாவா பாடினார்.அருமை.பாராட்டுக்கள் தோழி.

asiya omar said...

சுஹைனா மிகவும் அருமை.காணக் கண் கோடி வேண்டும் காபாவை என்று நாகூர் இ.எம்.ஹானீபா அவர்கள் பாடியது எத்துனை உண்மை.எல்லாம் எனக்கு இப்ப பார்க்கும் பொழுது புதிதாய் தெரிகிறது.பாராட்டுக்கள்.

கவின் said...

மிக அழகு மற்றும் பிரமாண்டம் சுஹைனா,

இதை ரசிப்பதற்கே நாட்கள் போதாது.சரிதானே! எனக்கும் நேரில் பார்க்க ஆசை வந்து விட்டது. அங்கு தான் என்னையெல்லாம் விடமாட்டார்கள் அல்லவா...சரி போட்டோவில் பார்ததே பெரிய விசயம் தான்.

சுஹைனா said...

ஆமாம் அக்கா, மிகவும் ரசித்து மகிழ்ந்தேன். கேமராவை தெரிந்தோ தெரியாமலோ உள்ளே விட்டு விட்டார்கள்.

கவின் எங்கே பிருந்தாவைக் காணோம்? வெகேஷனுக்கு டூர் போய் விட்டாரா?

ரசித்து அனுபவித்து எடுத்த போட்டோக்கள் இவை. வேறு தளத்தில் இக்கட்டுரை எழுதியிருந்தால், இப்போட்டோக்களை எல்லாம் போட்டிருக்க முடியாது.

இந்த அத்தியாயத்தில் காபாவைத் தவிர மற்றவற்றை வர்ணித்திருக்கிறேன். ஆனால் காபாவின் அழகை வர்ணிக்கவே முடியாது வார்த்தைகளால். எத்துணை முறை பார்த்தாலும் சலிக்காத பேரின்பப் பரவசம் அது.

கவின் said...

இன்று தூங்கி எழும் போது ஒரு கேள்வி காபாவை பற்றி...கேட்கலாமா வேண்டாமா என நினைத்துக் கொண்டிருந்தேன்..பார்த்தால் நீங்கள் காபாவை பற்றி பின்னூட்டத்தில் எழுதியுள்ளீர்கள்..சரி கேட்டே விடுகிறேன். தவறாக நினைக்க கூடாது.

காபா மற்றவற்றைப் போல் வேலைப்பாடு அதிகம் இல்லாத கன சதுர கட்டிடம் மட்டுமே அல்லவா? பிறகு ஏன் அதன் அழகு மிக அதிகம் என அனைவரும் கூறுகின்றீர்கள்? சிறு வயது முதல் அதைப்ப்ற்றி கேட்டு அறிந்ததனால் பார்க்கும் பொழுது அது மிக அழகாக தெரிகிறதா? எதன் ஒன்றின் மேல் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறோமோ அது அழகாக தெரியுமே அது போலா? அல்லது அதன் அழகு போட்டோவில் தெரியாதா? மிக குழப்பமாக இருக்கு. சொல்லுங்கள்.

இன்னும் ஒன்று...அங்கு ஒரு கல் இருக்கும், சொர்க்கத்தில் இருந்து வந்தது எனச் சொன்னீர்கள் அல்லவா? அதை கோடிக் கனக்கானவர்கள் தொடும் பொழுது தேய்ந்து போய்விடாதா?

சுஹைனா said...

கவின், நீங்கள் கேட்ட அந்த கல் பற்றிய விளக்கத்தை ஓரிரு அத்தியாயத்துக்குப் பின் எழுதுகிறேன். ஆயினும் சற்று தேய்ந்து தான் போகும். (முழுவதுமாக தேய்வதற்குள், இவ்வுலக முடிவு வந்து விடும் என்று நான் நினைக்கிறேன்).

அடுத்து, காபாவை பற்றி நீங்கள் எழுதியது சரி தான். அதைக் கண்களால் காண வேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் கனவு இருக்கும். எனினும் எல்லாருக்கும் அப்பாக்கியம் கிடைப்பதில்லை. கிடைத்தவருக்கு அது பேரின்பமாக தெரிகிறது.

மேலும் அதை நாங்கள் இறைவனின் இல்லமாக நினைக்கிறோம். இது புற அழகு சம்பந்தப் பட்டதல்ல. அக அழகு சம்பந்தப்பட்டது.

என்றாலும், காபாவின் தங்கக் கதவு, மிகவும் அருமையான வேலைப்பாடு. அவ்வளவு பெரிய தங்கத்தால் ஆன பொருளை நாங்கள் வாழ்வில் கண்டது அது தான் முதன் முறை. மேலும், காபாவின் திரையில், நெசவாலேயே அல்லாஹ் அல்லாஹ் என்று அரபியில் மிக நெருக்கமாக எழுதியிருக்கும். அதை போட்டோவில் காண முடியாது. குளோசப்பில் எடுத்தால் ஒரு வேலை தெரியலாம்.

அத்திரையில், தங்கத்தாலும் வெள்ளியாலும் குர்ஆன் வசனங்கள் நெய்யப்பட்டிருப்பது்ம் அழகுக்கு இலக்கணமாக இருக்கும்.

எல்லாவற்றையும் விட, இறைவனின் இல்லத்தை கண்டு விட்டோம் என்று ஆனந்த கூத்தாடும் மனம், அக்காபாவை நமக்கு பேரழகாகக் காட்டும். எவ்வளவு நேரம் பார்த்தாலும் மனதில் சலிப்பு ஏற்படாதது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

Jaleela Kamal said...

சுகைனா எப்படி பா நுனுக்கமா இவ்வளவு தெளிவா போட்டோ எடுத்து வந்தீர்கள், நானும் போனேன் ஏஸி வரும் இடம் கூட நோட் பண்ணல.

சகோதரி ஆசியா சொன்னது போல் நாகூர் ஹனீபா பாட்டு நினைவுக்கு வருது காண கண் கோடி வேண்டும் காபாவை..

ஜலீலா

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா, நான் அழகும் புதுமையும் எங்கிருந்தாலும் தேடி ரசிப்பேன். அது தான், எல்லாவற்றையும் கலைக் கண்ணோடு காண முடிந்தது.
இதையெல்லாம் விவரித்தால் தானே, அது நல்ல பயணக் கட்டுரையாக இருக்க முடியும்?!

Biruntha said...

வணக்கம் சுஹைனா, எப்படி இருக்கீங்க? எங்களுக்கு நெட் தொடர்பு கிடைப்பதில் ஏதோ கோளாறு ஏற்பட்டதால் என்னால் சில நாட்கள் உங்கள் பதிவைப் பார்வையிட முடியவில்லை. எப்போது உங்கள் பதிவைப் பார்ப்பேன் என்று காத்துக் கொண்டிருந்தேன். நேற்று என்னால் பாகம் 29 & 30 படிக்கக் கூடியதாக இருந்தது, ஆனால் பதிவு போட எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இன்று எல்லாம் (நெட்) நன்றாக வேலை செய்கின்றது. உடனே உங்களுக்குத் தான் பதில் போடுகின்றேன்.
இனி 29ம் பாகத்தைப் பற்றியது: கட்டட வேலைப் பாடுகள், கதவுகள், மின்விளக்குகள் அமைத்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி! புகைப்படங்களுடன் அமைந்த உங்கள் பதிவு மிக மிக அருமை. உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லவே தெரியவில்லை. வர்ணனை எல்லாம் நேரிலே பார்ப்பது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிருந்தா