Saturday, May 2, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 36

மதினாவில் கால் வைத்ததும், ஊசியாய் குளிர் தாக்கியது. கை காலெல்லாம் வெட வெடனு நடுங்குது. நம்ம ஊட்டி போல க்ளைமேட், நாங்கள் சென்றிருந்த சமயம்.

மதினாவில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்காவாசிகள் கொடுத்த இன்னலின் காரணமாக மதினாவுக்கு புலம் பெயர்ந்த போது, அவ்வூர் மக்கள், வெகு மகிழ்ச்சியாக வரவேற்று, தங்கள் சொத்து சுகம், கால்நடைகள் எல்லாவற்றையும் முழுமனதாக நபிகளாரிடம் ஒப்படைத்தார்கள். அந்த மண்ணின் மைந்தர்களை கண்ணியப்படுத்தும் விதமாக, நாம் அவ்வூர் மக்களுக்கு நோவினை தரக்கூடிய எந்த செயலையும் செய்யக் கூடாது; பேரம் கூட அதிகமாக பேசக்கூடாது. அதே போல, மதினாவில் எதையும் பழிக்கக் கூடாது.

மதினாவில் எப்பொழுதும் மனதிற்கு சாந்தி அளிக்கும் விதத்தில் ஒரு வித அமைதி நிலவும். மக்காமக்களிடம் உக்கிரம் இருந்தால் மதினாமக்களிடம் உன்னதம் இருக்கும். அது மண்ணுக்கேயான குணம். அங்கே காரம் என்றால், இங்கே இனிப்பு, அங்கே கோபம் என்றால் இங்கே சாந்தம். அதிர்ந்து பேசாத இனிய குணமுடைய மக்கள். அதை நாம் நன்றாக உணர முடியும்.

மக்காவில் காபா இருக்கும் ஹரம் போல, இங்கு மதினாவில், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடங்கி இருக்கும் ஹரமின் போட்டோ. இதை நபிகளாரின் மஸ்ஜித் என்று பொருள் படும் வகையில் மஸ்ஜிதுந்நபவி என்றும், ரவ்லா ஷரீஃப் என்றும் சொல்வர்.

நாங்கள் எங்கள் ரூமுக்கு சென்றோம். ஒரு சூட் போல, இரண்டு ரூமுக்கு ஒரு கிச்சன், இரண்டு பாத்ரூம்கள், ஒரு சிறிய நடை. நாம் வெளிக்கதவை சாத்திக் கொண்டால், யாரும் நடைக்குள்ளேயே வரமுடியாது. நாங்கள் எங்களுக்கு மூன்று கட்டிலை சவுகரியமாக எடுத்துக் கொண்டோம். மெட்ராஸ்காரம்மா, எங்க கட்டில் தான் தனக்கு வேண்டும் என்று கேட்க, நான் மறுக்க, முதல் கோணல். அவங்க ஒரு டைப்பான குணம். அதனால், அவங்களிடம் அதிகம் வைத்துக் கொள்ள மாட்டேன்.

எங்க சூட்டில் இன்னொரு ரூமில், விருத்தாசலத்துக்காரர்கள் ஆறு பேர் தங்கியிருந்தார்கள். நான் முதலில், என்னுடைய கரண்ட் அடுப்பில் தான் சமைக்கலாம் என்று நினைத்தேன். அங்கு பின், நம்மூர் போல இல்லை. அடாப்டர் வாங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கிச்சனில் நான்கு கரண்ட் காயில் அடுப்புகளும், எலக்ட்ரிக் ஓவனும் இருந்தது. அதனால், அதிலேயே சமைத்துக் கொண்டேன்.

கிச்சனில், டிஷ்வாசர், பெரிய ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், ஷெல்ஃப், எலக்ட்ரிக் சிம்னி எல்லாமே இருந்தது. நல்ல ரேக்குகள் வைத்து மிக அழகான மாடுலார் கிச்சன் அது. அதனால், சமைப்பது சுலபமாக இருந்தது. நான் நடையில் இருந்த ஒரு மேஜையில், என் சமையல் பொருட்களுக்கான சூட்கேஸை வைத்துக் கொண்டேன்.

கீழே போட்டோவில் இருப்பது தான் எங்க கிச்சன்.
அந்த ஊரில் எல்லா லாட்ஜுகளும் ஒரே உயரத்தில் பார்க்க மிக அழகாக இருக்கும். அதாவது, மஸ்ஜிதுந்நபவியினுடைய மினாராக்களை விட உயரமாகாமல் கட்டப்பட்டுள்ளன. அதனால் எல்லா லாட்ஜிலும் 15 ஃப்ளோர்களுக்கு மேல் கிடையாது. அதனால் அண்டர் கிரவுண்டில் 5 ஃப்ளோர்கள் வரை இருக்கிறது. அதில், கடைசி இரண்டு ஃப்ளோர்கள், கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கி இருக்கிறார்கள்.

எங்க லாட்ஜின் பெயர், அல்-மஜீதி ரெஸிடென்ஷியல் செண்டர். நாங்கள் தங்கி இருந்தது 12ம் மாடியாகும். மொத்தம் எங்க லாட்ஜில் 9 லிஃப்ட்டுகள் இருந்தும், ஒவ்வொரு தொழுகை நேரத்துக்கும், பெரிய க்யூ நிற்கும். அதனால் ஒரு அரை மணி நேரம் முன்பாகவே இறங்கி விட வேண்டும்.கீழே படத்தில் இருப்பது தான் எங்கள் லாட்ஜ். இதில் தெரியும் டூம் லைட், ஹரமினுள் இருப்பது. இதைப் பார்த்தால், எங்க லாட்ஜ் ஹரமுக்கு எவ்வளவு பக்கம் என்று புரியும். மக்காவில் ஹரமுக்கு தூரமாக தூரமாக தங்கியிருந்ததற்கெல்லாம் சேர்த்து வைத்தது போல, இங்கே ரோட்டில் காலே வைக்க வேண்டாத அளவுக்கு அவ்வளவு பக்கம். எல்லாம் இறைவன் கிருபை!

எங்கள் லாட்ஜின் கீழேயே பின் தாவூது சூப்பர் மார்க்கட் இருந்தது. மற்றும் ஒரு பெரிய பஜாரே இருந்தது. எங்க லாட்ஜ் மற்றும் அருகில் இருந்த இன்னும் இரண்டு லாட்ஜுகள் சேர்த்து அண்டர் கிரவுண்டில் ஒரே வணிக வளாகமாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். கீழே ஒரு உலகமே இருந்தது. சுமார் 500 கடைகளுக்கும் மேல் இருக்கும். ஆரம்பத்தில், உள்ளே போய் விட்டு, வெளியே வர வழி தெரியவில்லை. போகப் போக பழகி விட்டது.

எனக்கு மாதத்தொந்திரவு காரணமாக முதல் ஆறு நாட்கள், மஸ்ஜிதுந் நபவிக்குள் போக வில்லை. மச்சான் மட்டும் தொழுகைக்குப் போய் வந்தார்கள். தொழுகை முடிந்த பிறகு, எல்லாரும் லிஃப்டில் மேலே ஏறுவார்கள், அப்போ கீழே லிஃப்ட் காலியாக போகும். அப்போ நான் கீழே போய் விடுவேன். கீழே காத்திருக்கும் மச்சானுடன், அண்டர் கிரவுண்ட் கடைக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தொழுகை நேரம் வந்ததும், மச்சான் தொழுகைக்குப் போய் விடுவார்கள். அப்போ எல்லோரும் தொழுகைக்குக் கீழே இறங்குவதால், நான் மேலே போய் விடுவேன். இப்படியாக, ஒரு ஆறு நாட்கள் எந்த வேலையும் அதிகம் இல்லாமல், ஷாப்பிங் தான் செய்தோம். கையில் பணம் வேறு அடிக்கடி தீர்ந்து விடும். பிறகு இந்தியா ருபாயை மாற்றிக் கொள்வோம். மதினாவில் ஷாப்பிங்குக்கென்று நாங்கள் அதிகம் பணம் ஒதுக்கவில்லை. ஆனால், மக்காவை விட இங்கு பல பொருட்கள் விலை மலிவாக இருந்தன.

போய் சேர்ந்ததும் அடுத்த நாள், மச்சான் குளித்து, புத்தாடை உடுத்தி, சுன்னத்தான(நபிவழிப்படி) கோலத்தில், எம்பெருமானாரின் அடக்கஸ்தலத்துக்கு சென்று, அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தார்கள். அடுத்த நாள் மாமும் போய் வந்தார்கள். நான் தான் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டதே!

மதினாவில் என் ஷாப்பிங் அனுபவங்கள் அடுத்து.....

-சுமஜ்லா

1 comment:

Biruntha said...

படங்களுடன் கூடிய உங்கள் விளக்கங்கள் அனைத்தும் நேரே சென்று பார்த்த திருப்தியைத் தருகின்றது. உங்களின் கிச்சன் அமைப்பு வெளிநாடுகளில் உள்ள பல வீடுகளின் கிச்சன் அமைப்பைக் கொண்டுள்ளது. மக்கா மற்றும் மதினா மக்களின் குணாதிசயங்கள் நிஜமாகவே வியக்க வைக்கின்றன. உலக மக்கள் அனைவரும் இப்படியே அன்பானவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் இருந்தால் எல்லோரும் எவ்வளவு அருமையான, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். மனிதனைக்கண்டு மனிதனே பயப்படும் அளவிற்கு இந்த மானிடஜாதி மாறிவிட்டது என்பதை நினைக்கும்பொழுது மிகவும் வேதனையாக உள்ளது.

அன்புடன்
பிருந்தா