2008ம் வருடம் நான் சென்ற ஹஜ்ஜின் அனுபவங்களையும், ஹஜ் செய்யும் முறையையும் மிக அழகாக நான் இதில் பதிவு செய்துள்ளேன்.
Wednesday, May 20, 2009
என் ஹஜ் பயண அனுபவங்கள் - 37
மதினாவில், ஷாப்பிங்குக்கென்று அதிகமாக பணம் ஒதுக்காதது என் மடத்தனம் என்று புரிந்தது. அங்கு பேரம் பேசக்கூடாது என்றாலும் விலை நியாயமாக இருக்கிறது.
என் மகனுக்கு ஒரு லைட் எறியும் ஸ்கேட்டிங் ஷூ வாங்கினேன். அதன் விலை 35 ரியால்கள். வேண்டுமானால் பட்டனை அழுத்தி சக்கரத்தை வெளியே எடுத்துக் கொள்ளலாம். வேண்டாவிட்டால், சக்கரத்தை, உள்ளேயே இருக்குமாறு வைத்துக்கொண்டு சாதா ஷூ போல போட்டு செல்லலாம். இது என் மகனுக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது. சீக்கிரமே ஸ்கேட்டிங் பழகி விட்டான்.
அடுத்து தஸ்பீஹ் மணிகள்(beads for counting slogans). மக்காவை விட இங்கு விலை குறைவாகவும் தரமாகவும் இருக்கிறது. அதே போல புர்காக்களும் நிறைய வகை வகையாக மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. கையில் பணம் அதிகம் இல்லாமல், எங்க கையை கட்டிப் போட்டது போல இருந்தது. அதனால், யாருக்கும் புர்கா வாங்கி செல்லவில்லை. ஊரில் உறவினர்களுக்குக் கொடுப்பதற்கு செண்ட், கால்குலேட்டர் மற்றும் தஸ்பீஹ் மணிகள் சில டஜன்கள் வாங்கிக் கொண்டோம்.
இன்னொரு விஷயம், நகைக்கடைகள். மக்காவை விட மதினாவில், எக்கசக்கமான கடைகள். பல்லாயிரக்கணக்கான டிசைன்களில் கண்ணைப் பறிக்கின்றன. முக்கியமாக வளையல்கள். மக்காவில் வாங்குவதைவிட, மதினாவில் நகை வாங்குவது தான் நல்லது என்பது என் அபிப்பிராயம்.
அங்கு ரோட்டிலோ, ஹரமின் வாசலிலோ கடை போட போலீஸ் அனுமதிக்காது. ஆனாலும், எங்கே ஏமாறுவார்கள், நாம் கடை போடலாம் என்றே ஒரு கறுப்பின பெண்களின் கூட்டம் அலையும். அதுவும், எங்க எங்க லாட்ஜுக்கு பின்புறம் நெடுக கடைகள், அடுத்து ஒரு சிறு நடை பாதை. அதைத் தாண்டினால் ஹரமின் வாசல். அந்த இடத்தில் கடை பரப்புவார்கள். போலீஸ் வருகிறதா என்று உளவு பார்த்து சொல்வதற்கு ஒரு ஒற்றர். திடீரென்று ‘புலீஸ்; புலீஸ்’ என்று கத்திக் கொண்டு எல்லாவற்றையும் வாரி வழித்துக் கொண்டு ஓடுவார்கள். அந்த நேரத்தில், நம்மிடம் பணமும் பெற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதே சமயம் மீதிப் பணமும் தந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதனால், நாம் உஷாராக எப்போதும் அவர்களிடம் சரியான சில்லரை கொடுப்பது நல்லது. அந்த சிறிய சந்தில், அதாவது மார்பிள்ஸ் பதிக்கப்பட்ட தரையில், அப்படியே போலீஸ் ஜீப் வருவதைப் பார்த்தால், ஏதோ சினிமாவில் பார்ப்பது போல இருக்கும். நடைபாதை வியாபாரிகள் சிக்கிக் கொண்டால் அவ்வளவு தான். எல்லா பொருட்களையும் பிடுங்கிக் கொள்ளும் போலீஸ்.
முதல் ஆறு நாட்களும் ஷாப்பிங் தான். அங்கிருந்து 1ம் நம்பர் கேட் பக்கமாக இரண்டு பர்லாங் நடந்தால், பேரிச்சம் பழ மார்க்கட் வரும். அங்கு போய், பேரிச்சம் பழங்கள் வாங்கிக் கொண்டோம். பேரிச்சம் பழம் என்றவுடன் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. அங்கு போய் சேர்ந்ததும், எங்கள் ரூம்காரர், எங்களுக்கு பேரித்தங்காய்கள் தந்தார். அப்படியே ஒரு கொத்தாக இருக்கிறது. ருசி, அவ்வளவு ருசி நான் கண்டதே இல்லை. அற்புதமான சுவை. ஆனால், அதை ஊருக்கு வாங்கி வர முடியாது, காரணம், ஓரிரு நாட்களில் அவை பழுத்து, பழமாகி விடும்.
சுவைத்த பேரித்தங்காய்களின் சுவை அப்படியே நாவிலேயே இருந்தது. அதனால், மீண்டும் அதை வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு விசாரித்தோம். எல்லா சூப்பர் மார்க்கட்டிலும் அரை பழம் வைத்திருக்கிறார்கள். ஆனால், காய் எங்கேயும் பார்க்கவில்லை. 5ம் நம்பர் கேட்டருகில் அதிகாலை நேரம் கிடைக்கும் என்று சொன்னார்கள். அப்படியே, ஊசியாக குத்தும் குளிரில், அதிகாலை வேளையில், 5ம் நம்பர் கேட்டுக்கு வெளியே நடந்து அலைந்து தேடினோம். ம் ஹூம் எங்கேயும் பார்க்க முடியவில்லை. அதை மீண்டும் உண்ண முடியவில்லை என்பது எனக்கு ஒரு குறை தான்.
பேரித்தம்பழ மார்க்கட்டுக்குப் போனால் அங்கே குவியல் குவியலாக, பலதரப்பட்ட பேரித்தங்கனிகள், அம்பாரம் போட்டு வைத்துள்ளார்கள். அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும். பேரித்தம் பழத்திலேயே, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விரும்பி சாப்பிட்ட பழம் அஜ்வா என்னும் வகை பேரித்தம்பழமாகும். அதில் பல்வேறு மருத்துவ குணம் அடங்கி உள்ளது. அதன் விலை கிலோ 50 முதல் 100 ரியால்கள் வரை இருக்கும். மற்றபடி, 5 ரியால் முதல் பழங்கள் கிடைக்கும். அழுகும் நிலையில் கொழ கொழ வென இருக்கும் பழங்களை வாங்கினால் சீக்கிரம் புழு வைத்து விடும். அதனால், உடைத்துப் பார்த்து வாங்க வேண்டும்.
நாங்கள் போய் 20 கிலோ பழங்கள் வாங்கிக் கொண்டோம். ஆனால், அதை எப்படி கொண்டு வருவது என்று யோசிக்க வில்லை. அவர்கள் பாலிதீன் பைகளில் போட்டுத் தந்தாலும், அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எங்க லாட்ஜுக்கு அதை எடுத்துப் போகணுமே! இரண்டு டிராலி, வாங்கியிருந்தும், அதை கடைக்கு எடுத்துப் போகாதது எங்கள் முட்டாள்தனம். தலை மீதும், தோள் மீதும் வைத்து, சுமக்க முடியாமல் சுமந்து, ஒரு வழியாக கொண்டு வந்து சேர்த்தோம். அதுவும், மச்சானுக்கு ஜமாத் தொழுகைக்கு நேரமாகிவிட்டதால், வேக வேகமாக வந்ததில் மூச்சிரைத்தது.
நாங்கள், ஹரமின் வெளியே எல்லா இடங்களுக்கும் சுற்றி சுற்றி வந்தோம். நான் அப்படியே போய், ஹரமின் வெளித் தோற்றத்தை, பல கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டேன். ஒரு ஷாப்பிங் மாலுக்குள் இருந்து, அதன் வாசல் வழியாக போட்டோ எடுத்தால் மட்டும் தான், இப்படி முழு வியூவும் கிடைக்கும். அதுவும், குளோசப்பில் மனித முகங்கள் வந்து மசூதியை மறைத்து விடக்கூடாது என்று, வெகு நேரம் வெயிட் பண்ணி எடுத்தேன். பல்லாயிரம் பேர் கூடும் இடத்தில், இப்படி எடுப்பது மிகவும் கஷ்டம்.
இந்த போட்டோக்களில் தெரியும் பச்சை நிற குபா(dome) வுக்குக் கீழே தான் நபிகள் நாயகம்(ஸல்) அடங்கி இருக்கிறார்கள். பக்கத்தில், தெரியும் வெள்ளை குபாவினடியில், ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களும், உமர்(ரலி) அவர்களும் அடங்கி இருக்கிறார்கள். இன்று இந்த போட்டோக்களைப் பார்த்தாலும், என்னை அறியாமல், அன்று நபிகளாரின் மீது நாங்கள், நூற்றுக்கணக்கான முறை ஓதிய ஸலவாத்தை என் நாவு மொழியும்; கண்களில் நீர் குளம் கட்டும்.
“அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்!”
பெரிய பெரிய ராட்ஷத குடைகள், ஹரமின் வெளி வளாகத்தில் நிழலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. அவை வெய்யில் நேரத்தில் திறந்தும் பிறகு மூடியும் காணப்படும்.
ஒரு ஆள் எங்க ரூமுக்கு வந்து உருதுவில் ஜியாராவுக்கு வருகிறீரா என்று கேட்டார். அதாவது, அங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்களுக்கு சுற்றிக் காண்பிப்பார்கள். நாங்கள் இன்னமும் இரண்டு நாட்கள் கழித்து போய்க்கொள்வதாக சொல்லி விட்டோம். பெண்களின் மாதத் தொந்திரவு காரணமாக, நபிகள் நாயகத்தின் ரவ்லாவையே நான் இன்னமும் தரிசித்திருக்கவில்லை. அதன் பிறகு தான் ஜியாராவுக்குப் போக வேண்டும் என்று நாடியிருந்தேன்.
நான் எடுத்த ஒரு அற்புதமான போட்டோ, அடுத்த அத்தியாயத்தில்...
-சுமஜ்லா.
Posted by
SUMAZLA/சுமஜ்லா
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் சுஹைனா,
நலமா? நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் ஹஜ் பதிவைப் பார்க்கின்றேன். நானும் நாட்டு நிலமை காரணமாக அடிக்கடி வந்து பார்ப்பதில்லை.
எனக்குப் பேரிச்சம்பழம் அவ்வளவாகப் பிடிக்காது, ஆனால் நீங்கள் கூறியபின் கண்டிப்பாக அங்கு கிடைக்கும் பழமோ, காயோ வாங்கி சாப்பிட வேண்டும் போல் உள்ளது. படங்கள் அனைத்தும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் காட்சி தருகின்றன. நீங்கள் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு காமிரா மானும் கூட. சாரி.. காமிரா வூமன்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
பிருந்தா
அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா!நலமா?நெட் பக்கம் வரும்போதெல்லாம் உங்களின் புதிய பதிவு வந்துள்ளதா என்று ஒரு கண் பார்த்துவிட்டுதான் போவேன்.ஒவ்வொரு முறையும் ரொம்ப ஏமாற்றமாக இருக்கும். பிறகுதான் தெரிந்தது, உங்களின் கம்ப்யூட்டர் பிரச்சனை.இப்போது சரியானதுவரை ரொம்ப சந்தோஷம், அல்ஹம்துலில்லாஹ்! அடுத்தடுத்த பாகங்களையும் விரைவில் போடுங்கள்.அந்த அற்புதமான ஃபோட்டோவை காண ஆவலாக இருக்கிறேன்.
அஸ்மா,
நான் நலம். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல மீண்டும் என் சிஸ்டத்தில் ப்ராப்ளம்(வைரஸ்). அம்மா வீட்டு சிஸ்டத்தில் இருந்து தான் ஓரிரு பதிவுகள் போட்டு வருகிறேன்.
நாளை தான் சரியாகி வரும். பிறகு தான் பதிவு போட முடியும். பாருங்கள் ஹஜ் கட்டுரை முடியும் நேரத்தில் இப்படியாகி விட்டது.
இன்னும் ஒரு மூன்று நான்கு பதிவில் முடிந்து விடும் இன்ஷா அல்லாஹ்.
Post a Comment