நாங்க, தமிழ்நாட்டுக்காரர்கள் ஒரு பதினாறு பேர், தலைக்கு பத்து ரியால்கள் தருவதாக, ஒரு வேன் பேசி ஏறிக் கொண்டோம். எல்லாரும் மதியம் லுஹருக்குள், ஹரம் திரும்ப வேண்டும் என்பதால், காலை நேரமே புறப்பட்டோம்.
முதலாவதாக நாங்கள் சென்ற இடம், உஹது யுத்தம் நடந்த உஹது மலை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த இரண்டாவது யுத்தமாகும். இந்த யுத்தத்தின் போது, நபிகள்(ஸல்) அவர்கள், தமது ஸஹாபாக்களை, ஒரு பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்காக நிற்க சொல்லியிருந்தார்கள். முஸ்லிம்கள் வெற்றி பெற்ற செய்தி வந்ததும், போர் முடிந்து விட்டதாக நினைத்து, அந்த ஸஹாபாக்கள், எதிரிகள், விட்டு சென்ற பொருட்களை பொருக்கிக் கொண்டிருக்க, எதிரிகள், அந்த பள்ளத்தாக்கின் பின்பக்க வழியாக வந்து தாக்கி, முஸ்லிம்களுக்கு சேதம் விளைவித்து, தோல்வி அடைய செய்து விட்டார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்ததனால், வந்த முதல் தோல்வி இது. தங்கமாய் ஜொலிக்கும் உஹது மலையையும், அந்த பள்ளத்தாக்கை கீழே தெரியும் படத்தில் பார்க்கலாம்.
இந்த யுத்தத்தில் நபிகளாரின் சித்தப்பா, ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். மொத்தம் 70 ஸஹாபாக்கள் இறப்பெய்தினார்கள். அவர்களிடைய அடக்கஸ்தலத்தை கீழே பார்க்கலாம்.
நாம் புத்தகங்களில் மட்டுமே இதுவரை படித்திருந்த, வீரம் விளைந்த அந்த மண்ணை நேரில் பார்க்கும் போது, நம் உணர்வுகள் என்னவென்று சொல்ல முடியவில்லை. உடல் அப்படியே சிலிர்த்து விடுகிறது. கண்களில் கரகரவென்று உணர்ச்சி மிகுதியால், கண்ணீர் வழிகிறது. அந்த மைதானத்தில், எத்துணை எத்துணை வாள் வீச்சு நடந்ததோ, எத்துணை எத்துணை களப்பலி நிகழ்ந்ததோ? ரத்தம் தோய்ந்த அந்த மண்ணை விரல்களால் அலையும் போது, அந்த வீரம் நமக்குள்ளும் புகுந்து கொண்டது போல ஒரு தாக்கம்.
அடுத்து எங்களுக்கு உஸ்மான்(ரலி) அவர்கள் தோட்டத்து கிணறு என்று ஒரு பகுதியை காட்டினார்கள். மிகுந்த தண்ணீர் பஞ்சத்தால், முஸ்லிம்கள் வாடிய போது, காபிர்கள் பக்கம் இருந்த இக்கிணற்றை யார் வாங்கி, முஸ்லிம்களுக்கு அளிக்கிறார்களோ அவர்களுக்கு, நான் தனிப்பட்ட முறையில் மறுமையில் சிபாரிசி செய்வேன், என்று நபி பெருமானார், கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் அதை பெரும் தொகை கொடுத்து வாங்கி, வக்பு செய்தார்கள்.
அடுத்த இடம், மஸ்ஜிதே கிப்லதைன் என்பதாகும். அதாவது இரட்டை கிப்லா பள்ளி என்பது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள், பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அஸர் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தின் போது, காபாவை கிப்லாவாக(திசையாக) கொண்டு தொழுகும்படி, வஹீ என்னும் அறிவிப்பு வந்தது; உடனே நபியவர்கள், காபாவின் பக்கம் திரும்பிவிட்டார்கள். பின்னால், தொழுது கொண்டிருந்த ஸஹாபாக்கள் குழம்பி கொண்டிருக்க, அபூபக்கர் சித்திக் ( ரலி) உட்பட, ஒரு சிலர் மட்டும், ஏன் என்று கேட்காமல், உடனே அவர்களும் தம் திசையை மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் எல்லாம் சுவர்க்க வாசிகள் என்று நன்மாறாயம் சொல்லப்பட்டவர்கள். இதை குறிக்கும் வகையில் இப்பள்ளியில் இரண்டு கிப்லா குறிக்கப்பட்டிருக்கும். அப்பள்ளியை கீழே காணலாம். அடுத்து நாங்கள் சென்று பார்த்தது, அகழ் யுத்தம் நடந்த இடம். யுத்தத்துக்கான ஏற்பாடுகள் செய்ய, மிக குறுகிய கால அவகாசமே இருக்க, ஸல்மான் பார்ஸி(ரலி) என்ற ஸஹாபி(நபி தோழர்) அருமையான ஐடியா ஒன்றை கொடுத்தார்கள். அதன்படி, மூன்று புறங்களிலும், மலைகுன்றுகளால் சூழ்ப்பட்ட அவ்விடத்தி, நான்காம் புறம், ஒரு பெரிய அகழ், அதாவது, மனிதரால் தாண்டி வர முடியாத அளவுக்கு கால்வாய் ஒன்றை தோண்ட சொன்னார்கள். மூன்று நாட்களில், அகழ் தோண்டப்பட்டது. அந்த யுத்தத்தில், காபிர்கள் உணவின்றி கஷ்டப்பட்டு, பெரும் சேதத்தை சந்திக்க, முஸ்லிம்களுக்கு ஒரு துளி சேதமின்றி, மாபெரும் வெற்றி கிடைத்தது. இதோ, அப்போர் நடந்த வீர பூமி!
அவ்விடத்தில், ஸல்மான் பார்ஸி அவர்கள் நின்று வழி நடத்திய இடத்தில், அவர்கள் பெயரில் ஒரு மசூதி உள்ளது. மற்றும், உமர்(ரலி) மஸ்ஜித், அபூபக்கர்(ரலி) மஸ்ஜித் முதலான, ஏழு மசூதிகள் உள்ளன. அதில் ஒரு மசூதியின் உள் அலங்கார தோற்றத்தை கீழே காணலாம்.
அடுத்து நாங்கள் சென்ற இடம், குபா மஸ்ஜித் ஆகும். இப்பள்ளிவாசல், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் திருக்கரத்தால், அடிக்கல் நாட்டப்பட்டது. நாங்கள் சென்ற அனைத்து மசூதிகளிலும், இரண்டிரண்டு ரக்அத் தொழுது கொண்டோம். எல்லாப் பள்ளிகளிலும், பெண்கள் தொழ தனி இட வசதி உண்டு. குபா மஸ்ஜித் சற்று பெரிய மசூதியாகும். அதன் முழு தோற்றத்தையும், கவர் செய்வதற்காக, ரோட்டில் வெகு தூரம் சென்று படமெடுத்தேன். அந்தப் படம் கீழே!
அந்த மசூதியில் தான் முதன் முதலில், வெள்ளிக் கிழமை சிறப்பு தொழுகையான ஜும்ஆ கடமையாக்கப்பட்டது. அதற்கான வஹீ என்னும் இறை அறிவிப்பு இறங்கிய இடத்தில், அதைப் பற்றி, பொறிக்கப்பட்ட, பளிங்குக் கல்லை நிறுவியுள்ளார்கள். அதைக் கீழே காணலாம். காகித சுருளைப் போல பளிங்குக் கல்லிலேயே அழகாகச் செதுக்கியுள்ளார்கள் பாருங்கள்.
நாங்கள் பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும், நிறைவாக பார்த்துவிட்டு, மதியம் லுஹருக்கு சற்று முன்பாகவே ஹரம் வந்து சேர்ந்தோம்.
இது என்ன பாத்ரூம் போட்டோனு பார்க்கிறீங்களா? சும்மாவாச்சும், பாருங்க, எங்களுக்கு எவ்வளவு சவுகரியம் என்று வீட்டிலுள்ளவர்களிடம் பீற்றிக் கொள்வதற்கு எடுத்த போட்டோ.
ஹரமின் நகரும் விதானம், புகைப்படங்களுடன் அடுத்த பதிவில்...
-சுமஜ்லா.
5 comments:
வணக்கம் சுஹைனா, நலமா?
உங்கள் பதிவை நீங்கள் போட்ட உடனே படித்து விட்டேன். பதிவு போட முயற்சித்ததும் விருந்தினர் வந்து விட்டார்கள், அதனால் இப்பொழுது என் கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
யுத்தம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை முடியாத ஒன்றாகத் தொடர்ந்து கொண்டிருப்பது என்பது கவலைக்கிடமளிக்கின்றது.
கட்டட அமைப்புகளை கண்ணைக் கவரும் விதமாக அந்தக் காலத்தில் அமைத்திருக்கின்றனர். இப்படியான கட்டடங்களைப் பார்க்கும்போது இன்றுபோல் முனேற்றமடையாத அந்தக்காலத்தில் இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்று எப்போதும் வியந்து கொள்வேன்.
காகித சுருள் போல் உள்ள பளிங்குக் கல் மிகவும் அழகாக செதுக்கப் பட்டிருக்கின்றது.
அன்புடன் பிருந்தா
இந்தப்பதிவும் சுவாரசியமாக இருக்கு.போட்டோவுடன் நீங்கள் விளக்குவது தான் மிகச்சிறப்பு.என் கருத்துக்களை சில நேரம் போஸ்ட் செய்தால் வருவதில்லை,ஏன்?நான் வாசிக்கும் சமையமெல்லாம் கருத்துக்களை பதிவதுண்டு.
பளிங்குக் கல்லால் செதுக்கப் பட்டிருப்பதெல்லாம், இக்கால்த்தில் செய்யபட்டவை தான்.
முன்பு, கமெண்ட் ஆப்ஷனில் கோளாறு இருந்தது. இப்போ சரி செய்து விட்டேன். மற்றபடி, போஸ்ட் செய்தாலும், கீழே சிவப்பு நிறத்தில் எர்ரர் மெஸ்ஸேஜ் வந்தால், மீண்டும் ஒரு முறை, பப்ளிஷ் கமெண்ட் பட்டன் அழுத்தணும். முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகள் உபயோகிக்கும் போது, இது போன்ற பிரச்சினை வருகிறது. ஆங்கிலத்தில், பதில் எழுதும் போது வருவதில்லை.
சுகைனா வெற்றி கரமாக பதிவை போட்டு கொண்டு வருகிறீர்கல் வாழ்த்துக்கள்.
அதுவும் போட்டோவுடன், இதேல்லாம் பார்க்கும் போது சென்று வந்த இடங்கள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
இன்ஷா அல்லா ஹஜ் செல்லும் போது தான் எல்லா ஒவ்வொன்றையும் நன்றாக உற்று நோக்கனும்.
ஆமாம் அக்கா, நான் 40 அத்தியாயத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனா, முடிக்க முடியாது போல் தெரிகிறது.
Post a Comment