மதினாவில் நல்ல குளிர். நம்ம ஊர் ஊட்டி போல. அதிலும் காற்று வீசும் நேரங்களில், ஊசி போல துளைக்கும். அந்த குளிரிலும், பேரித்தங்காயை சாப்பிடும் ஆசையில், ஐந்தாம் எண் கேட்டருகே சென்று துழாவினோம். கடைசி வரை கிடைக்கவேயில்லை. பெரிய கடைகளில் அரைப் பழம் வைத்திருக்கிறார்கள். ஆனால், காயின் ருசியே தனி. இன்னும் எனக்கு அந்த ருசி மறக்கவில்லை. ஆலிவ் பழங்கள் தான் கிடைத்தது. அதை வாங்கி சாப்பிட்டோம்.
நான் ஒரு நாள் ஹரமுக்குள் மதியம் லுஹர் தொழுது விட்டு அமர்ந்திருந்தேன். திடீரென்று வெளிச்சம் நிறைய அண்ணாந்து பார்த்தால், மேல் விதானம் அப்படியே நகர்கிறது. நகர்ந்து நகர்ந்து வானம் தெரிகிறது. கற்பனையை எல்லாம் தாண்டிய மிக பிரம்மாண்டமான தூண்கள் நிரம்பிய ஒரு மண்டபத்தின் நடுவில் திடீரென்று வானம் தெரிந்தால் எப்படி இருக்கும். இது ஒரு இடத்தில் அல்ல, ஆங்காங்கே நூற்றுக்கணக்கான இடத்தில் இப்படி திறந்து மூடுகிறது. அதை அப்படியே வீடியோ எடுத்து வந்தேன். அது பெரிய ஃபைலாக இருப்பதால், போட்டோக்களாக கீழே தருகிறேன். மூடியிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக திறந்து இறுதியாக வானம் தெரிவதைப் பாருங்கள். ஒவ்வொரு விதானத்தின் அளவும் 40 அடிக்கு 40 அடி என்ற அளவிலானதாகும்.
நாம் புறப்படக்கூடிய தேதி மற்றும் நேரத்தை, ரிஸப்ஷனில் ஒட்டி விடுகிறார்கள். நாங்கள் புறப்படக்கூடிய நாள் வந்தது. காலை 9 மணிக்குப் புறப்பாடு என்றார்கள். ஆனால், மதியம் 2 மணிக்குத் தான் பஸ் கிளம்பியது. முதல் நாளே, எங்கள் பொருட்களை பேக்கிங் செய்து வைத்தோம். ஒவ்வொரு பேகும் 25 கிலோ எடைக்குள் இருக்குமாறு சரி பார்த்து சரி பார்த்து கட்டி வைத்தோம் இதற்காகவே ராத்தல் தராசு(spring balance) எடுத்துப் போயிருந்தோம்.
மதியம் சாப்பிட சிறிது உணவு பாக்ஸில் எடுத்துக் கொண்டோம். அதிகமாக எனக்கு எதுவும் மிச்சமாகவில்லை. அரிசி மட்டும் ஒரு மூன்று படி அளவில் மிச்சமானது. அதே போல, விருத்தாசலத்துக்காரர்களுக்கு மூன்று படி பற்றவில்லை. அதனால் அவர்களுக்குக் கொடுத்து விட்டோம். அவர்கள் எல்லா தமிழ்காரர்களுக்கும் மீன் வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். எல்லாரும் சமைத்து சாப்பிட்டோம்.
கடைசி மூன்று நாட்கள், யாரும் எந்த பொருட்களும் வாங்காமல், ஒருவரிடம் இருப்பதை ஒருவர் பகிர்ந்து உபயோகித்துக் கொண்டதால், யாருக்கும் எதுவும் வேஸ்டாகவில்லை. எங்கள் ரூமில் இருந்த மெட்ராஸ்காரப் பெண்களுடன் கடைசியாக கொஞ்சம் மனஸ்தாபம் ஆகி விட்டது. அதனால், திரும்பும் வரை பேசிக்கொள்ளவில்லை. மற்ற எல்லாரும் மிகப் பிரியமாக இருந்தார்கள். அதனால், கடைசி நாளன்று எல்லாருக்கும், மனதில் ஒரு பாரம். ஏர்போர்ட் வரை ஒன்றாக சென்றாலும் அங்கு போய் சந்திக்க முடியமோ என்னவோ என்று முன்பே ஒருவருக்கொருவர் போன் நம்பர் வாங்கிக் கொண்டோம்.
எல்லா ஊர்காரர்களுக்கும் ப்ளைட் மதினாவிலிருந்தே புறப்படுகிறது. எங்களுக்கு மட்டும் ப்ளைட் சற்று பெரியது என்பதால், ஜித்தாவிலிருந்து என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு ஒரே சோகம், காரணம் மீண்டும் ஜித்தா போக எட்டு மணி நேரம் ஆகும். ரொம்ப டயர்டாகி விடுவோம். அதனால் ரொம்பவும் கவலையாக இருந்தது.
இப்போ, சாமான்களை 14ம் மாடியிலிருந்து கீழே இறக்கியாக வேண்டும். லிஃப்டில் பயங்கரக் கூட்டம். ஒன்பது லிஃப்ட்டுகள் இருந்தும், முழுவதையும் இறக்கி முடிக்க வெகுநேரம் ஆகி விட்டது. நானும் மச்சானும் சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க, சாமான்களுக்குப் பாதுகாப்பாக மாமனாரை நிறுத்து வைத்தோம்.
ஆச்சு, ஒரு வழியாக எல்லா சாமான்களையும் இறக்கியாகி விட்டது. பஸ் தான் இன்னும் வரவில்லை. கடைசி முறையாக ஒரு தடவை, நபிகளாரின் தர்பாருக்கு சென்று ஸலாம் சொல்லி பிரியாவிடை பெற்று பிரிந்தோம். கீழே ப்ளாட் பாரத்தில், அமர்ந்து கொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்த போது, கனமான என் மனபாரத்தை இறக்கி வைக்க, டைரியில் தோன்றியதை கண்ணீர் வழிய எழுத ஆரம்பித்தேன். இதை கவிதை என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆழ் மனதின் ஓசைகளாகக் கொள்ளலாம். இதோ நான் எழுதிய வரிகள்:
நாள்: ஜனவரி 9, 2009
பித்து பிடித்ததம்மா எங்கள் ரசூலைப் பிரிகையிலே
சித்தம் கலங்குதம்மா, சிந்தையும் மயங்குதம்மா!
புனித பூமியதை நான் கண்ட போதினிலே,
பூரிப்பெய்திடவே, என் தேகம் சிலிர்த்ததுவே!
அண்ணல் ரசூல்(ஸல்) அவர் பாதம் பட்ட இடம்,
மதினா நகரத்து வீதிதனில் எல்லாம்
காலில் செருப்பின்றி நடக்க ஆசைப்பட்டேன்!
ரசூல்(ஸல்) காலடியில் பட்ட மண்ணினிலே
எந்தன் கால்கள் பட இச்சை மிக கொண்டேன்!
பித்து பிடித்ததம்மா, எங்கள் ரசூலைப் பிரிகையிலே
சித்தம் கலங்குதம்மா, சிந்தையும் மயங்குதம்மா!
உதிரம் பட்ட பூமி உஹதைக் கண்ட உள்ளம்,
அதிர்வு கொண்டு விழி கண்ணீர் சிந்துதம்மா!
குளிரில் வாடி நின்றேன், வெயிலில் வதங்கி நின்றேன்,
ரசூல்(ஸல்) பட்ட கஷ்டம், சிறிதேனும் உணர ஆசைப்பட்டேன்.
அன்பு நாயகமே! கருணை முஹம்மதுவே(ஸல்)!
பண்புடன் தீனைத் தந்தீர், பாச அஹமதுவே(ஸல்)!!
கனத்த மனதுடன் எழுதியதை வாசித்துக் கொண்டிருக்கையில், எங்களுக்கான பஸ் வந்தது!
42ம் அத்தியாயத்துடன் நிறைவு பெறும்...
(வளரும்)
-சுமஜ்லா.
3 comments:
வணக்கம் சுஹைனா? நலமா?
அங்கிருந்து புறப்படும்போது மிகவும் கஸ்டப் பட்டிருக்கிறீங்கள் என்பதை உங்கள் கவிதையைப் படிக்கும்போது என்னால் உணர முடிந்தது.
அந்தப் புனித பூமியை விட்டுப் பிரியும்போது ரொம்ப வேதனையாகத்தான் இருக்கும். மீண்டும் எப்போது வந்து தரிசிப்போமோ என்ற ஏக்கம் இருந்திருக்கும்.
மிகவும் அழகான படங்கள்.
அன்புடன்
பிருந்தா
இன்னும் இரண்டு பதிவில் ஹஜ் பயணக்கட்டுரை முடிந்துவிடுமா?எழுதியவை எல்லாம் மிகவும் அருமை.
படங்கள் எல்லாம் நேரில் காண்பது போல் இருக்கு
மிக அருமையான பதிவு, நன்றி
Post a Comment