Monday, June 15, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 41

எங்கள் லாட்ஜில் இருந்து எல்லா சாமான்களையும் இறக்கி வைத்து, கீழே ப்ளாட்பாரத்தில் பஸ் வருவதை எதிர் நோக்கிக் காத்திருந்தோம். 12 மணிக்கும் மேல் தான் பஸ் வந்தது. பஸ் சற்று தூரத்தில் நிற்கும் போதே, நாங்கள் எங்கள் சாமான்களை சுமக்க முடியாமல் சுமந்து சென்று, பஸ்ஸின் கீழ் இருந்த டிக்கியில் அடுக்கி விட்டோம்.

சொல்ல மறந்து விட்டேன். ஆளுக்கு 10 லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் எடுத்துவர அனுமதி. அது போக ஆளுக்கு 45 கிலோ எடுத்து வரலாம். நாங்கள் வெளியே 3*10 லிட்டர்கள் எடுத்திருந்தாலும், உள்ளே பேகுக்குள் வைத்து, மேற்கொண்டு 40 லிட்டர்கள் எடுத்திருந்தோம். அது தான் எங்களுக்கு வெயிட்டே! மற்றபடி, வெயிட்டான சாமான்கள் எதுவுமே வாங்க வில்லை. அதனால், நிர்ணயிக்கப்பட்டதற்கும் மேல் கூடுதலாக 20 கிலோ எடை வந்து விட்டது. சரி, ஏர்போர்ட் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம்.

நாங்கள், கஷ்டப்பட்டு சுமந்து டிக்கியில் அடுக்கியதைப் பார்த்த விருத்தாசலக்காரர்கள், தானியங்கி வண்டி, தூக்கிச் செல்லுமே, நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டு, வண்டிக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

பஸ்ஸின் கீழ் டிக்கி ஃபுல்லானதும், பஸ்ஸின் மேலே சாமான்கள் ஏற்றப்பட்டன. சாமான்கள் அளவுக்கு மீறி இருந்ததால், கடைசியாக ஏற்றிய சாமான்களை, தூக்கி ஒரு டிரெக்கில் போட்டு விட்டார்கள். எந்த ஒரு உடையும் பொருளாக இருந்தாலும் உடைந்து விடுமளவு, அப்படி தூக்கி டிரெக்கில் போடுகிறார்கள். அந்த சாமான்கள், தனியாக வேனில்(டிரெக்) ஏர்போர்ட் வந்து விடும் என்று சொல்லி விட்டார்கள். நல்ல வேளை நாங்கள் எங்கள் சாமான்களை கீழே அடுக்கி இருந்ததால், எங்களுடையது தனியாக போகவில்லை.

பஸ் கிளம்ப சற்று முன், ஹரம் சென்று கடைசி வக்த்தாக அன்றைய லுஹர் தொழுதோம். கண்களில் மீண்டும் குளம் கட்டியது. பஸ் ஏறிய பின்னும், என் பார்வை ஹரமை நோக்கியே இருந்தது. வாய் நிறுத்தாமல், ஸலவாத்தை மொழிந்தபடி இருந்தது.

பஸ் கிளம்பியது. அவரவர் பாஸ்போர்ட், அவரவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எங்களிடம் அந்நிய செலாவணியாக 13 ரியால்கள் மட்டுமே இருந்தன. மற்றபடி, இந்திய ருபாய் தான் இருந்தது. பஸ் புறப்பட்டதுமே, எல்லாரும் சேர்ந்து (எல்லாருமே தமிழ் நாட்டுக்காரர்கள் தான்), தலைக்கு ஒரு ரியால் போட்டு, 50 ரியால்கள், பஸ் டிரைவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, வழியில் ஆங்காங்கே தொழுகைக்கு நிறுத்தும்படி சொல்லி விட்டார்கள். நாங்கள் பணம் இல்லாததால், இந்திய ருபாயை சக பயணியிடம் கொடுத்து மாற்றிக் கொண்டோம். அதோடு, வழியில், பத்ரு போர் நடந்த இடத்தையும் காட்டும்படி எல்லாரும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

பஸ் டிரைவர் ஒரு இந்தோனேஷியர். இப்போது தான் முதன் முறையாக ஏர்போர்ட் செல்கிறாராம். நானும் மச்சானும், ஃப்ரண்ட்டில் முதல் இருக்கையில் அமர்ந்தபடி, பஸ் செல்லும் பாதையை ரசித்தபடி வந்து கொண்டிருந்தோம்.

வெகு தூரம் சென்ற பின், மீண்டும், தூரத்தில் ஹரமின் மினாரா தெரிந்தது. அந்த மினாராவைப் பார்த்ததும் ஒரு இனம் புரியாத பரவச உணர்வும், ஏக்க உணர்வும் நம்மை மீண்டும் தொற்றிக் கொள்கிறது. அதைப் பார்த்ததும், நான் உணர்ச்சி மிகுதியால், கையிலிருந்த டைரியில், ‘ஆலய மணியில் ஓசையை நான் கேட்டேன்’ என்ற பழைய பாடலின் மெட்டில் ஒரு பாடல் எழுதினேன். அப்பாடல் கீழே:

ஆலயம் முழுதும் ஸலவாத் ஒலி கேட்டேன்
அருள் மொழி கூறும் நபிகளின் மொழி கேட்டேன்!

என் தலைவர் அவரே அவரே!
எனக் கூறும் மொழி கேட்டேன்!!
இறை தூதர் அவரே அவரே!
என பாடும் ஒலி கேட்டேன்!!

(ஆலயம்)

இளகும் மாலை பொழுதினிலே - என்
நபிகளைக் கண்டேன் நேரினிலே!
தேடிய இன்பம் கிடைத்திடவே,
இரு விழி நீரில் கலங்கி நின்றேன் (2)

(என்)

பிரியும் நேரம் நெருங்கிடவே,
கருணைத் தேவர் நினைவினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே,
அழுதிட கண்ணீர் விழிகளிலே!!

(என்)

கனத்த மனதுடன் எழுதியதை மூடிவைத்தேன். சற்று தூரம் சென்றதும் வீட்டுக்கு போன் போட்டேன். பெற்றோரிடமும், மகள், மகனிடமும் பேசி, புறப்பட்ட விவரத்தை சொன்னேன். மகன் என்னிடம், எனக்கு ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிட்டு வாங்க என்றான். இப்போ போய் எங்கே வாங்குவது? இருந்தாலும் சரி என்று சொல்லி விட்டேன்.

வழியில், பத்ரு போர் நடந்த மைதானத்தை, பஸ்ஸில் இருந்த படியே காண்பித்தார் டிரைவர். வீரம் விளைந்த அந்த மண்ணை பார்க்கும் போது, இனம் புரியாத ஒரு உணர்வு. நாயகத் திருமேனி(ஸல்) அவர்கள் முன்னின்று நடத்திய முதற்போர். நம்மவர் 313 பேரும், எதிரிகள் 1000க்கும் மேலுமாக நடந்த போரில், இஸ்லாமியர் இமாலய வெற்றி பெற்றனர். 14 நபித் தோழர்கள், ஷஹீது எனும் வீர மரணம் எய்தினார்கள். அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அவர்களுக்கு, பஸ்ஸில் இருந்தபடியே, ஸலாம் சொன்னோம்.

தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது பஸ். ஒவ்வொரு வக்த் தொழுகைக்கும், ஆங்காங்கே இருக்கும் மஸ்ஜிதில் பஸ்ஸை நிறுத்தினார், டிரைவர். நாங்கள் தொழுது கொண்டோம். இரவு உணவுக்கு, வழியில் மோட்டலில் நிறுத்த, நாங்கள் கையோடு கொண்டு சென்றிருந்த குழம்பு சாதம் சாப்பிட்டோம். அதற்கு தொட்டுக்கொள்ள, பொரித்த கோழி மட்டும் வாங்கிக் கொண்டோம். பொதுவாக, மோட்டலில் சாப்பாடு நன்றாக இருப்பது இல்லை. அதோடு விலையும் மிக அதிகமாக இருக்கும். அதனால், கையோடு கொண்டு போய் விடுவது நல்லது.

மஃரிபு தொழுத பள்ளிவாசல் அருகில் ஒரு சிறு கடை இருந்தது. அதில் என் மகன் கேட்ட கூலிங் கிளாஸ் வாங்கிக் கொண்டோம். இப்போ கையில் வெறும் 4 ரியால்கள் மட்டுமே மிச்சம் இருந்தது.

பஸ் டிரைவருக்கு ஏர்ப்போர்ட் வழி தெரியவில்லை. சைன் போர்டுகளைப் படித்துப் பார்த்து பார்த்து போனார். ஏர்போர்ட் தனி ஹஜ் டெர்மினல் தனி. நாம் போக வேண்டியது ஹஜ் டெர்மினலுக்கு. ஆனால், டிரைவரோ, பாதை மாறி, மக்கா செல்லும் ரூட்டில் ஒரு 20 கிலோ மீட்டர் வந்து விட்டார். ஓவர் ப்ரிட்ஜ் அருகில் விசாரிக்கவும் தான் தெரிந்தது.

நம்மாளுங்க, ஆளாளுக்கு ரூட் சொல்லிக் கொண்டிருக்க, வழியில் இறங்கி விசாரித்து, பின் மீண்டும் ஜித்தா செல்லும் ரூட்டில் போய், நகரத்துக்குள் போய் விட்டார். அவர் தயவில், நாங்கள் ஜித்தாவை சுற்றிப் பார்த்தோம். பெரிய பெரிய மால்களும், கப்பல் வடிவ அலங்கார மாளிகையும், வெகு அழகான கட்டிடங்களையும், அவர் ரூட் மாறிய புண்ணியத்தில் கண்டு ரசித்தோம்.

இரவு 10 மணி ஆகிவிட்டது. ஆலிஸ் இன் ஒண்டர் லாண்ட் கதையில் வருவது போல, யாரிடமோ விசாரித்து, மீண்டும் மக்கா நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டார். மீண்டும் அதே ஓவர் ப்ரிட்ஜ் வர, நாங்கள் எல்லாரும் டென்ஷன் ஆகி விட்டோம். அட, எல்லாரும் இஹ்ராம் துணிய எடுத்து வெச்சிக்கங்க, இல்லாட்டி தம் கொடுக்கணும்னு ஆளாளுக்கு கமெண்ட் அடித்து, சூழ்நிலையைக் கலகலப்பாக்க, திரும்பி வேறு புறமாக ஓட்டினார் டிரைவர்.

கொடுமை என்னன்னா, சில இடங்களில், வழி கேட்கக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். பாலைவனம்னா இது தான் பாலைவனம்னு நினைத்துக் கொண்டேன். இப்போ, பல விமானங்கள் தாழ பறக்க, அப்பாடானு நம்பிக்கை வந்தது. அடுத்தடுத்து, விமானங்கள் பறப்பதைப் பார்க்க, கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

ஒரு வழியாக ஹஜ் டெர்மினல் கண்டு பிடித்து, உள்ளே பஸ்ஸை விட்டார் டிரைவர். அது ஒரு ஊர் சைஸுக்கு இருக்கும் போலிருந்தது. உள்ளேயே சுமார் 10 கி.மீ தூரம் பஸ் சென்றிருக்கும். கடைசியாக ஒரு இடத்தில் இறங்கினோம். அங்கே கூலிகள், பாகிஸ்தானியர் மற்றும் இந்தியர்கள், சாமான் இறக்க காசு கேட்டு, எங்களிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார்கள். கூலியெல்லாம், ஏற்கனவே, முஅல்லிமால் கொடுக்கப்பட்டுவிட்டது. இது கிம்பளம். நம்மவருக்கு இந்த புத்தி என்று போகுமோ? என்ன செய்வதென்று தலைக்கு ஒரு ரியாலாக போட்டு கொடுத்தார்கள். நாங்கள் இந்திய ருபாய் தான் கொடுத்தோம்.

உள்ளே போய், சிறிது நேர காத்திருத்தலுக்குப் பின், எங்கள் லக்கேஜை தேடிப் பிடித்தோம். இரவு சுமார் 12 மணி ஆகி விட்டது. தூக்கம் கண்களை சுழட்டியது. ஆனால், அன்று இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

லக்கேஜை டிராலிகளில் ஏற்றி, ஒரு கவுண்டரின் எடை போட்டு, ஒப்படைத்து, நம்ம பாஸ்போர்ட்டில் சீல் வாங்க வேண்டும். அதிகாலை 5 மணிக்கு ப்ளைட். நான் க்யூவில் நின்று கொண்டிருந்தேன். அங்கு கவுண்டரில் கூலி பாகிஸ்தானியன். நாம் பைசா கொடுத்தால், வாங்கிக் கொண்டு, எடை கூடுதலாக இருந்தால், கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான். ஒரு சிலருக்கு மட்டும், லக்கேஜை ஒரு ஓரமாக வைத்துவிட்டான், ரொம்பவும் அதிகமாக இருக்கிறது என்று.

எங்களுக்கு தலைக்கு 5 கிலோ அதிகம், அதுவும் ஜம்ஜம் தண்ணீர் எடை தான். நான் எப்படியாவது, ஊருக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். லேடீஸாக இருந்தால், அதிகம் கேள்வி கேட்பதில்லை. அதனால், நான் போய் கவுண்டரில் நின்று கொண்டேன். மச்சானை சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டேன். அப்போ, மேலே ப்ளைட் ஒவ்வொன்றாக பறந்தபடியே இருந்தது, பார்க்க பொம்மை ப்ளைட் போல் மிக அழகாக இருந்தது. அதை போட்டோ எடுக்க முயன்றேன். வெகு வேகமாக போவதால், சரியாக விழவில்லை.

எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இருந்தாலும் 5 ரியால்கள் கொடுத்து விட்டேன். அதுவும் நண்பரிடம், ருபாய் கொடுத்து மாற்றியது தான். ஒரு வழியாக ஒப்படைத்து விட்டு, வந்து பார்த்தால், டிரெக்கில் ஏற்றப்பட்ட சாமான்கள் அதுவரை வந்து சேரவில்லை. நல்ல வேளை நாம் முந்திக் கொண்டதால், சீக்கிரம் வேலை ஆகிவிட்டது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன். எங்களுடைய எந்த லக்கேஜையும் பிரிக்கவில்லை. அப்படியே ஸ்கேனிங் செய்து எடுத்து உள்ளே வைத்துக் கொண்டார்கள்.

சாமான்களை ஏற்ற மறுத்ததால், நிறையப் பேர், என்ன செய்வதென்று புரியாமல், தடுமாறிக்கொண்டு, இருந்த ஜம் ஜம் தண்ணீரை எல்லாம் காலி செய்து எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த டென்ஷனிலும், அந்த டெர்மினலின் மேற்கூரை அமைப்பை மிகவும் ரசித்து, போட்டோ எடுத்துக் கொண்டேன். மழை பெய்தால் எப்படி இந்த ஓட்டைகளை மூடுவார்கள் என்று எனக்கு ஒரே சிந்தனை. அந்த புகைப்படம்:
அடுத்ததாக இன்னொரு வளாகத்தில் நீண்ட க்யூவில் நிற்க வைத்தார்கள். அங்கு எங்களுக்கு அழகிய குர்ஆனை அன்பளிப்பாக கொடுத்தார்கள். சிறிது நேர காத்திருத்தலுக்குப் பின், நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். எங்கள் கைப்பையில் இருந்த, கத்தி, கத்திரி, நெக வெட்டி போன்ற பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பினார்கள்.

இங்கே நம்ம, ஹேண்ட் லக்கேஜ் செக்கிங். நான் பிள்ளைகளுக்கு வாங்கிய விளையாட்டு சாமான்கள் அனைத்தையும், ஏர்ப்போர்ட்டில் இறங்கிய உடனே கொடுக்கும் பொருட்டு, ஹேண்ட் லக்கேஜில் வைத்திருந்தேன். எல்லாமே பேட்டரி டாய்ஸ். அதை ஸ்கேனிங் செய்ய, பீப் பீப் ஒலி! இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால், மெட்டல் டிடெக்டர் காட்டுக்கொடுத்து விடுமாம்.

இன்னொரு பேக் கடைசி நேரத்தில் ஜிப் காலை வாரி விட, வேறு வழியில்லாமல், ஊசி நூலால் தைத்திருந்தேன். அதிலும், பீப் ஒலி! காரணம் அதில், தங்க நிற பிளாஸ்டிக் விளையாட்டு வாள்(கத்தி போல) வைத்திருந்தேன். எனக்கு ஒரே கவலை. இதைப் பிரிப்பானே, எப்படி தைப்பது என்று! துவா செய்தபடியே நின்றிருந்தேன்.

முதல் பையை தலைகீழாகக் கொட்டினான். அதில் இருந்த தங்க டாலர் மற்றும், நகையை வெளியே எடுத்தான். எனக்கு அக்கு பக்குனு அடிச்சிட்டிருந்தது. நல்லவேளை செக் பண்ணி எல்லாவற்றையும் உள்ளே போட்டு கொடுத்து விட்டான். இன்னொரு பையை கீழே போட்டு வைத்திருந்தான். டேபிள் அடியில் தெரிந்தது. நான் யாருக்கும் தெரியாமல் காலை விட்டு, வெளியே இழுத்து விட்டேன். இப்போ நினைத்தாலும் பயமாக இருக்கிறது. என்ன செய்வது? ஜிப் வேறு இல்லை. ஊசி நூலால் தைத்திருக்கிறேன். எப்படி மறுபடியும் தைப்பது, அந்த நேரத்தில்?

பின், எங்களையும் ஸ்கேன் செய்து, உள்ளே அனுப்பி விட்டான். நாங்கள், ஆளுக்கொரு பையை எடுத்துக் கொண்டு, ஓடிப் போய், கிளம்ப தயாராக இருந்த டெர்மினல் பஸ்ஸில் ஏறினோம். 5 நிமிட பயணத்துக்குப் பின், விமானத்துக்கு அருகில் இறக்கு விடப்பட்டோம்.

எங்கள் ஹேண்ட் லக்கேஜ் சற்று பெரியதாக இருந்ததால், வைப்பதற்கு சிரமம் என்று, லக்கேஜுடன் வைப்பதற்கு வாங்கிக் கொண்டார்கள். என்னுடையதை வாங்குவதைப் பார்த்ததும், அவன் கூப்பிட கூப்பிட, மச்சான் வேக வேகமாக சென்று உள்ளே ஏறிக்கொண்டார்கள், தன் பையுடன். நான் இடது புறம், டெயில் அருகில் சீட் பிடித்துக் கொண்டேன். குண்டாக இருப்பவர்கள் கால் வைக்கத் தான் சற்று சிரமம், விமானத்தில்.

எங்கள் ப்ளைட்டின் ஜன்னல் வழியாக அருகில் நின்றிருந்த இன்னொரு ப்ளைட்டை புகைப்படம் எடுத்தேன். இதோ:
ஒரு வழியாக, எல்லோரும் செட்டில் ஆனோம். இரவு முழுவதும் தூங்காததால், பசி வயிற்றைக் கிள்ளியது. சற்று தூங்க முயற்சி செய்தாலும் தூக்கம் வரவில்லை. பிள்ளைகளைப் பார்க்கும் ஆவல். ஒரு சில ரியால்கள், செல்லில் மீதம் இருந்ததால், அதைப் பேசித் தீர்த்துவிடலாம் என்று அம்மாவுக்கு போன் போட்டேன். விமானம் கிளம்பப் போவதை சொன்னேன். அம்மா, அப்பா, குழந்தைகள் எல்லாரும் சென்னை வந்திருந்தார்கள், எங்களை வரவேற்க.

மீண்டும் தாய்மண்ணில் காலடி வைத்தது, அடுத்த அத்தியாயத்தில்...

(அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்)

-சுமஜ்லா.

7 comments:

rahim gazali said...

arumaiya irukku. sameepaththil hajj patri yaarum ivvalvu arumaiyaa vivariththathillai. ungalukku ellam valla allaah neenda aayulai thanthu arulvaanaaka...(aameen).

Biruntha said...

41 ஆவது பதிவும் போட்டிருக்கிறீங்கள். நான் இதைக் கவனிக்கவே இல்லை.
எப்போதும் ஏர்போட்டில் லக்கேஜ் செக்கிங் முடிப்பது என்பது ஒரு பெரிய தலைவலியான விடயம். அவர்கள் கூறும் அளவிற்குள் அடங்க வேண்டும் மற்றும் அவர்கள் அனுமதிக்காத பொருட்களில் ஏதாவது ஒன்றை கவனிக்காமல் வைத்திருந்தால் அதற்கு வேற பிரச்சனை கொடுப்பார்கள். இப்படியான பல குளறுபடிகளை முடித்து பிளைட்டில் ஏறிய பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

உங்கள் பாடல் வரிகள் அருமை.

அன்புடன்
பிருந்தா

asiya omar said...

உங்கள் அனுபவங்களை படிக்கும் பொழுது ,எல்லோரும் எழுதத்தயங்கும் ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்ததை பாராட்டியே ஆக வேண்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

அடுத்த பதிவு இன்னும் ஓரிரு நாளில் போட்டு விடுவேன். அத்துடன் இத்தொடர் முடிந்துவிடும். அடுத்த பதிவின் கீழ், இத்தொடரைத் தொடர்ந்து படிப்பவர்கள், அட்லீஸ்ட் ஒரு பதிவாவது போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.

Anonymous said...

assalam alaikum

Anonymous said...

assalam alaikum
Haj vilakkam miga arumayaaga ullathu.naan aarambathilirunthu oru naal vidaamal,oru pathivu vidaamal paarpen.yelzuthu nadayum arumai.anaithu vishayangalum marakkamal yelzuthiyuleergal.masha allah.
hajjukku yeduthu sellum listil aarambithu,tarif,anubavangal,Duakkal,sambavangal,Madinaavin amaithi ivaianaithum yelzuthiyathu matravargalukku miga payanullathaga irukkum.
Hajjin anubavangalai padikkum bothu, naangal sendruvantha ninaivugal yen manakkan munné vanthu kondirukkirathu.maasha allah! Anaivarkum haj pakkiyam kidaikka yellam valla iraivan nallarul purivaanaaga.Ameen.

Jaleela Kamal said...

சுகைனா ரொம்ப வே ஆச்சரியம் அந்த டெஷனிலும் நீஙக் போட்டோ எடுத்தது.
வாழ்த்துக்கள் ஹஜ் போய் வந்தது ஒன்று விடாமல் மறக்காமல் ஞாபகம வைத்து போட்டு இருக்கிறீர்கள்.
எங்களுக்கும் தூஆ செய்யுங்கள் ஹஜ் பாக்கியம் கூடிய விரைவில் கிடைக்க.
கடைசி நேரத்திலும் நபிகள் நாயகத்தை புழந்து உடனே கவிதையை பாடலை அமைத்து இருக்கிறீர்கள், நானும் வாசித்துக் கொண்டேன்.