விடிய விடிய தூக்கமில்லாததால், நான் சிறிது கண் அசந்து விட்டேன். ஓரிரு மணி நேரம் தான் இருக்கும். அதன் பின், பசியால் விழிப்பு வந்து விட்டது. ஃப்ளைட்டில் பரிமாறிய கோக் குடிக்க, வயிறு கடமுடா என்று உருட்டியது. சின்னூண்டு பாத்ரூமுக்குள் கஷ்டப்பட்டு போய் வந்தேன். பாத்ரூம் உள் ஒரே வாடை. வாந்தி வருவது போல ஆகி விட்டது.
காலை எட்டு மணிக்கு சாப்பாடு தந்தார்கள். ஜூஸ், சேலட், ஜெல்லி, கேக், சேண்ட்விச் போன்ற எக்ஸ்ட்ரா ஐட்டங்களுடன், ஒரு பாக்ஸில் மீல்ஸும் இருந்தது. அதைத் திறந்தால், கொதிக்க கொதிக்க நுரை போன்ற ஒரு உணவுடன், கீரையும் கொத்துக்கறியும் கலந்து இருந்தார்கள். அது போன்ற தினுசான உணவை, அதுவரை பார்த்தது கூட இல்லை. பசியில், டப்பாவை திறந்து தான் தெரியும். ஒரு நிமிடத்தில் காலியாகி விட்டது. அடுத்து, சைட் ஐட்டெம் எல்லாவற்றையும் காலி செய்து விட்டேன். பசி நீங்கியவுடன் சுறுசுறுப்பு வந்து விட்டது.
சுற்றிலும் நோட்டமிட்டேன். ப்ளைட்டை புகைப்படம் எடுத்தேன். கீழே இருக்கும் படத்தில், மேலே தெரிவது தான் லக்கேஜ் ரேக். அதில் சவுகரியமாக வைக்க முடியாது என்பதால் தான் எங்கள் பையை வாங்கிக் கொண்டார்கள் என்று புரிந்தது.
நேரம் ஆக ஆக, பிள்ளைகளைப் பார்க்கப் போகும் ஆவல். ஒவ்வொரு வினாடியும் யுகமாக இருந்தது. எப்போது போய் சேர்வோம் என்று இருந்தது. வாட்ச்சை திருப்பி, இந்திய நேரத்துக்கு செட் பண்ணிக் கொண்டேன். இப்போது, வெளியே பார்த்தேன். எங்கள் ப்ளைட்டின் இறக்கைகள் அப்படியே மேலே எழும்புவதும் கீழே தாழுவதுமாக இருந்தது. கீழே மேகக்கூட்டம் தெரிந்தது. அதை க்ளிக்கிக் கொண்டேன். பாருங்கள் அந்த படத்தை:
சிறிது நேரத்தில் மேகக்கூட்டம் மறைந்து விட்டது. இப்போது, கீழே கடல். கடல் மேலாக அந்தரத்தில் பறக்கிறோம் என்ற எண்ணமே பயத்தைத் தந்தது. கடல் என்றால் நாம் நினைப்பது போல் அலையெல்லாம் தெரியாது. ஒரே பச்சை, நீலம், வெள்ளை கலந்த கலவையாக தெரியும்.
இன்னும் சிறிது கீழே இறங்கியபின், முகத்தில் அறைவது போன்ற மேகக்குவியல். பஞ்சு பொதி போன்ற வெண்மேகங்களை மிகவும் ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாக, தேவதைக்கதைகளில் வருவது போல,நாங்கள் மேகத்தின் ஊடே பயணிக்கிறோம். இதோ அந்த புகைப்படம்:
ஒரு சின்ன ஜெர்க். சற்று கீழே இறங்கி விட்டது எங்கள் விமானம். காதுகள் கப்பென்று அடைத்துக் கொள்ளும் போதே புரிந்து விட்டது. ஆனால், ஸ்கிரீனில் தெரியும் குட்டி விமானம் ஏதோ கோளாறு காரணமாகத் தெரியவில்லை, அதனால் ஆல்டிட்யூடும் தெரியவில்லை. இப்போது மீண்டும் கூல்ட்ரிங்க்ஸ் வழங்கினார்கள். ப்ளைட் கீழே இறங்கி ஆரம்பித்தது. எல்லாரையும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள சொன்னார்கள். போட்டுக் கொண்டோம். மனம் முழுக்க பிள்ளைகளைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சிப் பரவசம்.
இப்போ, சென்னைக்கு மேலே பறக்கிறோம். அலையலையாய் தெரியும் கடல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நிலப்பரப்பு தெரிகிறது. ஒரு இடத்தில் கடலும் தெரிகிறது. அது பீச் என்று புரிந்தது. உயரம் குறையக் குறைய சென்னையின் ரோடுகள் தெரிய ஆரம்பித்தது. அப்படியே கூகுள் எர்த்தில் பார்ப்பது போல இருக்கிறது. அதையும் போட்டோ எடுத்துக் கொண்டேன். இதோ அந்த போட்டோ:
மேலே காணும் போட்டோவின் நீளமாகத் தெரியும் பாதை அநேகமாக மௌண்ட் ரோடாக இருக்கலாம். இருக்க இருக்க, பொம்மைகள் போல வீடுகளும், மரங்களும் தெரிய, எனக்கு ஒரே குதூகலமாக இருந்தது. சுமார் சென்னையின் மேலாக மட்டும் ஒரு அரை மணி நேரம் வட்டமிட்ட பின், ப்ளைட் இறங்கத் தொடங்கியது. இப்போ மணி மதியம் ஒன்னரை இருக்கும்.
ஓடுதளத்தின் மேலாக பறக்கிறது. எங்கு பார்த்தாலும் வெட்ட வெளியாக ரன் வே. ஒரு குலுங்கலுடன், சக்கரம் மண்ணைத் தொட்டவுடன், சொந்த மண்ணில் இறங்கப் போகும் மகிழ்ச்சி. ஓடி ஓடி மூச்சிரைத்து நின்றது ப்ளைட்.
கதவைத் திறந்து எல்லாரும் இறங்க, சொந்த மண்ணில் கால் வைக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் கால்கள், சிலிர்ப்பால் கூச, இறங்கி நடக்கிறோம், ஒவ்வொருவராக. குடும்பத்தை, ஊரை, உறவைப் பார்க்கப்போகும் சந்தோஷத்தோடு, 75 வயதான மாமனாரை நல்லபடியாக ஹஜ் முடிக்க வைத்து அழைத்து வந்த சந்தோஷமும் மனதில் நிறைந்திருந்தது.
வரியாக நிற்கும் ஹஜ் கமிட்டி தொண்டார்கள், “வாங்க ஹாஜியார்! வாங்க ஹாஜிமா!” என்று முகமன் கூறி வரவேற்று, ஆண்களுடன் முஸாபா செய்ய, ‘ஹாஜியார்’ என்ற வார்த்தையை முதன்முறையாக கேட்டவுடன், உடலின் அசதியெல்லாம் குறைந்து போய், மனசு அப்படியே லேசாகி, இறைவனிடத்தில் ஐக்கியமானது போல ஒரு ஃபீலிங் வருகிறது.
சற்று முன்னேறி வந்தவுடன், எங்கள் பாஸ்போர்ட்டை சரிபார்த்து முத்திரை குத்த, நாங்கள், லிஃப்ட்டில் கீழே இறங்குகிறோம். பாத்ரூம் போய், காலைக் கடன்களை முடித்து, முகம் கழுவிவிட்டு, வெளியே வந்தால், கன்வேயர் பெல்ட்டில் எங்கள் சாமான்கள் வந்து கொண்டிருந்தது. மச்சானுக்காக காத்திருக்காமல், நான் சாமான்களை ஒவ்வொன்றாக இழுத்து வெளியே போட்டுக்கொண்டிருந்தேன்.
ஜம் ஜம் கேன்கள் தவிர எல்லா சாமான்களையும் எடுத்து விட்டேன். ஜம் ஜம் கேனுக்காக அரை மணி நேரம் காத்திருந்த பின், அது அடுத்த ப்ளைட்டில் வருவதாக சொல்லி விட்டார்கள். எங்களுக்காவது பரவாயில்லை. விருதாசலக்காரர்கள் உட்பட பலருக்கும், எந்த சாமான்களும் வரவில்லை. நாங்கள் மதினாவில், முன்கூட்டியே பஸ் டிக்கியில் ஏற்றி விட்டதால் எங்களுடையது வந்து விட்டது. கடைசியாக ஏற்றியவர்களின் சாமான்கள் எல்லாம் தனி டிரக்கில் லேட்டாக வர, ஏற்ற இடமில்லாமல், வேறு ஃப்ளைட்டில் ஏற்றி அனுப்ப பெண்டிங் வைத்து விட்டார்கள் என்று புரிந்தது.
எங்களுடைய மூன்று ஜம் ஜம் தண்ணீர் கேன்கள், மற்றும் பிறருடைய சாமான்கள் எல்லாமும் ஒரு வாரம் கழித்தே இன்னொரு ப்ளைட்டில் வந்தது. பின் அதை கார்கோவில் அவரவர் ஊருக்கு அனுப்பியது தனி கதை. நல்லவேளை, 4 கேன்கள், பேகுக்குள் இருந்ததால், எங்களுக்கு பிரச்சினை இல்லை.
எல்லா பேகையும் எடுத்து டிராலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு, வெளியே வந்தால், ஆயிரக்கணக்கான முகங்கள், சலாம் சொல்லிக் கொண்டும், முஸாபா செய்து கொண்டும்... அதில் என் ரத்தங்களைத் தேட, முதலில் என் தந்தை தென்பட்டார். போய் அவரிடம் முஸாபா செய்து கொண்டு, கம்பி தடுப்பைத் தாண்டி வெளியே வந்தோம்.
வெளியே என் பிள்ளைகளுடன் தாயார் நின்றிருந்தார். ஓடிப் போய் என் மகனை நான் தூக்கி முத்த மழை பொழிய, மச்சான் மகளை சேர்த்தணைக்க, தாயிடம் முஸாபா செய்ய, அங்கே ஒரே உணர்ச்சிப் பிரவாகம். எல்லார் கண்களிலும் ஆனந்த கண்ணீர். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுத்தி அழைத்து வந்திருந்தார் என் அம்மா. அம்மாவின் அன்பான கவனிப்பின், சற்று சதை போட்டு மினுமினுப்பாக இருந்தார்கள் பிள்ளைகள். கையில் வைத்திருந்த ஜம் ஜம் தண்ணீர் பாட்டில் மற்றும் சாக்லேட்டுகளை எடுத்துக் கொடுத்தேன்.
பின்பு, லுஹருக்கு நேரமாகிவிட்டபடியால், ஒளு செய்து, அங்கே போட்டிருந்த சாமியானா பந்தலில் தொழுது கொண்டோம். எங்களுக்காக பஸ் காத்திருந்தது, ஹஜ் கமிட்டி அழைத்துச் செல்ல. அதோடு ஒரு வேனும் நின்று கொண்டிருந்தது, லக்கேஜ்களை ஏற்ற.
லக்கேஜ்களை ஏற்றிய பின், பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். பாதி பஸ் காலியாக இருந்தும், என் பெற்றோரை பஸ்ஸில் வர அனுமதிக்கவில்லை. பிள்ளைகளை விட்டு விட்டார்கள். மற்றபடி ஹாஜிகளுக்கு மட்டும் தான் என்று சொல்லி விட்டார்கள்.
பெற்றோர், எலெக்ட்ரிக் ட்ரைனில் வந்துவிடுவதாக சொல்லி இறங்கிக் கொள்ள, மகனிடம், மகளிடம் பேசியபடியே, பஸ்ஸில் வந்தேன். கூலிங் கிளாஸ் மற்றும் ஓரிரு சாமான்கள் எடுத்து கொடுத்தேன். வாய் ஓயாமல் பேசியபடியே வந்தான் பையன்.
மதியம் லன்ச் ஹஜ் கமிட்டியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். பருப்பும் காயும் ரசமும் மோருமான சாப்பாடு அமிர்தமாக இருந்தது. எங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த ஹஜ் கமிட்டி தொண்டர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!
எல்லா சாமான்களையும் தந்துவிட, மகன் சந்தோஷமாக விளையாடியபடியே இருந்தான். மகளோ, என்னை விட்டு அசையவில்லை. அவளுக்கு சாமான்களைக் கண்ட சந்தோஷத்தை விட, எங்களைக் கண்ட சந்தோஷம் தான் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்கள் களைப்பு தீர ஹஜ் கமிட்டியில் தங்கிய பின், ட்ரைனில் ஊர் திரும்பினோம்.
இரவு ஈரோட்டு மண்ணில் கால் பதித்ததும், ஊரும் உறவும், ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்காகக் காத்திருந்தனர். எல்லாரும் தழுவி வரவேற்றது, வாழ்நாள் பூராவும் மறக்க முடியாதது.
வேனில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். இரண்டு மாதத்துக்குப் பின் வீட்டை - தோட்டத்தை - வேலையாட்களை - தெருவை பார்க்கும் சந்தோஷமே அலாதியாக இருந்தது. வீட்டிலும் பெருங்கூட்டமாக உறவினர்கள். வந்தவர்களுக்கு எல்லாம், எளிமையான விருந்து, ஏற்கனவே என் பெற்றோர் ஏற்பாடு செய்து வைத்திருக்க, அனைவரும் உணவுண்டு, மகிழ்ச்சியாக அளவளாவிச் சென்றனர். ஒரு மாதம் வரை வந்து போய்க் கொண்டிருந்தனர்.
‘ஹாஜி’ என்ற பட்டத்தை வாங்குவது சுலபம். ஆனால், ‘ஹாஜி’ யாக வாழ்வது கடினம். இறைவன் எங்களையும் இன்னும் பிற ஹாஜிகளையும் அவனுக்குப் பொருத்தமான வழியில் வாழ கிருபை செய்வானாக! ஆமீன்!
42 அத்தியாயத்துடன் இத்தொடர் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும், எனக்கு அவ்வப்போது பின்னூட்டம் மற்றும் மெயில் மூலம் ஊக்கமளித்தவர்களுக்கும், இதை ப்ளாகில் தொடராக எழுத காரணமானவர்களுக்கும், ஹஜ்ஜுக்கு செல்ல எங்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும், எங்களுக்கு எல்லாவிததிலும் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கும், என் பிள்ளைகளை, நாங்கள் இல்லா குறை தெரியாமல் இருக்க அவ்வப்போது வந்து பார்த்து சென்றவர்களுக்கும், வியாபாரத்தை நாங்கள் இல்லாத போது நல்ல முறையில் கவனித்துக் கொண்டவர்களுக்கும் இறைவன் எல்லா நலவுகளையும் வழங்கி, அவர்கள் எல்லோரும் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் ஹாஜியாகவும், நாங்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருடன், குடும்பத்தோடு மேன்மேலும் ஹஜ் மற்றும் உம்ரா செய்யவும் இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்!
இதைத் தொடர்ந்து படித்து வந்தவர்கள், இந்த அத்தியாயத்தின் கீழ் ஒரு பின்னூட்டமாவது இட வேண்டும் என்பது என் ஆசை! மேலும், இந்த ப்ளாகை தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஹஜ் செய்ய நாடியிருக்கும் அனைவருக்கும் எத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எத்தி வைப்பவருக்கும் அதன் மூலம் பயனடையும் அனைவருக்கும் இறைவன் ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
வஸ்ஸலாம் (முற்றும்)
-சுமஜ்லா.
39 comments:
சுஹைனா அல்லா எல்லா விதத்திலும் உங்களுக்கு அருள் புரிவானாக.
இவ்வளவு தெளிவா ஹஜ் பதிவுகள் நலல் அழகான முறையில் போட்டு இருக்கிறீர்கள். ஒரு விஷியம் விட்டாமல் நினைப்பு வைத்து எழுதுவது ரொம்ப பாராட்டத்தக்கது.
எங்களுக்கும் தூஆ செய்யுங்கள்.ஹஜ் பாக்கியம் கூடைய விரைவில் கிடைக்கவும், அதை ஆண்டவன் எங்களுக்கு லேசாக்கி வைக்கவும்.
வாழ்த்துக்கள்.
சுஹைனா,
வாழ்த்துக்கள்!! அழகாக எழுதுகிறீர்கள். ஹஜ் விளக்கத்திற்காக பிளாக் தொடங்கி, இப்ப தமிழகம் முழுதும் தெரிந்த ஒரு எழுத்தாளராகி விட்டீர்கள்!! புகழனைத்தும் இறைவனுக்கே!!
41 பகுதிகளையும் தவறாமல் படித்து வந்தேன். விளக்கமாக எழுதுகிறீர்கள். வியத்தற்க ஞாபகசக்தியும் இருக்கிறது!!
தொடர்ந்து எழுதிவர இறைவன் அருள்புரிவானாக!!
Sorry, Not 41 parts, but 42.
அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! உங்களின் கடைசி பதிவு வரை படித்துவிட்டேன். போய் வந்து நீண்ட நாட்களாகாவிட்டாலும், அவ்வப்போது நடந்த சின்னஞ்சிறு விஷயங்களைக்கூட மறவாமல் சொன்னது பாராட்டப்படவேண்டியது. மாஷா அல்லாஹ், உங்களின் நினைவாற்றல் பார்த்து வியக்கிறேன். வல்லாரை அதிகமாக சாப்பிடுவீர்களோ? :)
உங்களின் கடைசி பதிவைப் படித்து முடித்ததும் நேரமில்லை என்று எழுந்து போய்விடாமல், (உங்களின் ஆவலான வேண்டுகோளின்படி) எப்படியும் பதிவு போடவேண்டும் என்பதற்காகவே தினமும் 42 வது பதிவை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போதான் பார்த்தேன், படித்தேன், பதிவிட்டுவிட்டேன் :) எங்களுக்கும் ஹஜ் பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள் சுஹைனா! ஹஜ் கனவு ஒரு நீண்ட நாள் ஆசை. ஒவ்வொரு முறை நினைக்கும்போதும், அதற்காக துஆ செய்யும்போதும் அழாமல் இருந்ததில்லை நான்! அல்லாஹ்தான் விரைவில் அதை நிறைவேற்றித்தரவேண்டும். உங்களின் பதிவுகளில் மிக முக்கியமான சிலவற்றை பிரிண்ட் அவுட் செய்து இந்தியாவிலிருந்து இந்த வருடம் (இன்ஷா அல்லாஹ்) ஹஜ் செல்லப்போகும் என் மாமி, மச்சான், சின்ன பாட்டி அனைவருக்கும் அனுப்பலாம் என்றிருக்கிறேன். இவ்வளவு முயற்சியெடுத்து அத்தனையையும் எங்களோடு பகிர்ந்துக்கொண்டதற்கு, இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான் இன்ஷா அல்லாஹ்!
அன்பு சுமஜ்லா அவர்களுக்கு,
தங்களின் ஹஜ் விளக்கம் முதல் பகுதியில் இருந்து இன்று கடைசி பகுதி வரை படித்து முடித்து விட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை இதை வர்ணிப்பதற்கு. தங்களின் நியாபக சக்தியை கண்டு வியக்கிரேன்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
தங்களுக்கு ஏற்கனவே மெயில் அனுப்பியிருக்கிரேன் நியாபகம் இருக்கும் என்று நினைக்கிரேன்.
தங்களின் எழுத்து நடை மிகவும் அருமை. சாயுபு வீட்டு சரித்திரம் மிகவும் அருமையாக உள்ளது. நான் தங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகையாகி விட்டேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி!!!!!!!!!!!!
அன்புடன் தமிழ்ச்செல்வி
வணக்கம் சுஹைனா,
பிளைட்டில் இருந்தபடியே அந்த அற்புதக் காட்சிகளை அழகாக படம் எடுத்துள்ளீர்கள். ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு தென்படும். நான் எப்போதும் பிளைட்டில் பயணம் செய்யும்போதும் இக்காட்சிகளை ரசிப்பேன். ஏதோ ஒரு இனம் புரியாத களிப்பு மனதில் ஒட்டிக் கொள்ளும். இரவு நேரத்திலும் விமானத்திலிருந்து கீழ் நோக்கி மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் ஊரைக் காண கண் கோடி வேண்டும்.
இது வரை காலமும் நீங்கள் உங்கள் ஹஜ் பயணத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஞாபகத்தில் வைத்து என்னைப் போன்ற (ஹஜ் பயணத்தைப் பற்றி சரி வரத் தெரியாதவர்களுக்கும்), மற்றும் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும், ஹஜ் பயணத்தைப் பற்றி இதுவரை காலமும் சிந்தித்திராதவர்களை அங்கு போகத் தூண்டுமளவிற்கும் அங்குள்ள அனைத்துத் தேவையான விடயங்களையும், எந்தெந்த விடயத்தில் முன்னேற்பாடாக, அவதானமாகச் செயல் படவேண்டும் என்று அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகான எளிய எழுத்து நடையில் புரிய வைத்ததற்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல இறை அருளால் உங்கள் திறமைகள் மேன்மேலும் வளரவும் அது அனைவரையும் சென்றடையவும் வாழ்த்துகின்றேன்.
அன்புடன் பிருந்தா
என் எழுத்துக்களை விடாமல் ரசிக்க ஒரு ரசிகையர் கூட்டம் இருப்பது எனக்கு மனநிறைவையும் ஏதோ சாதித்தது போன்ற பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது.
இதுகாலம் நான் எழுதி வந்து தற்போது முடித்தவுடன், என் ரசிகைகளை இழந்துவிடுவோமோ என்ற பயம் இருந்தது. இதோ, சாயபு வீட்டு சரித்திரம் தொடர் மூலம் அவர்களைத் தக்க வைத்துக் கொண்டேன் என்று இப்போது ஆறுதல் கிடைக்கிறது.
ஒவ்வொரு ரசிகையும் ஒவ்வொரு விதம். மாற்று மத சகோதரியாக இருந்தும், தவறாமல் ஒவ்வொரு பதிவின் கீழும் பின்னூட்டம் இட்டு வந்த பிருந்த, பாதிவரை உடன் வந்த கவின். இவ்விருவரும், உன் வகுப்பு தோழிகளா என்று என் உறவுகள் கேட்கும் அளவுக்கு என்னை உற்சாகப்படுத்தினார்கள். பிருந்தா, தாய்மை சிறுகதையைப் படித்தீர்களா?
மெயிலிலும், பதிவிலும், தமிழ்குடும்பம்.காமிலும் சலிக்காமல் பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய ஜலீலாக்கா, அஸ்மா ஆகியோருக்கும் என் நட்பு கலந்த நன்றிகள்.
தமிழ் செல்வி எனக்கு தங்களை நன்றாக நினைவிருக்கிறது. எப்படி மறப்பேன்? தங்கள் மகன் நலமா? ரசிகைகள் கூட்டம் தானே என் பலம்.
//இப்ப தமிழகம் முழுதும் தெரிந்த ஒரு எழுத்தாளராகி விட்டீர்கள்//
மிஸஸ் ஹுசைன், என்னை ரொம்ப பெரிய அளவில் உயர்த்தி விட்டீர்கள். எல்லாம் இறைவன் கிருபை!
நான் நிறைய எழுதி வந்தாலும், பல பல பத்திரிக்கைகளுக்கு தற்சமயம் அனுப்பி வருவதால், அதை ப்ளாகில் பதிய முடிவதில்லை. அவை வெளியானபின் பதிவேன்.
எல்லாரும் என்னுடைய நியாபக சக்தியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். எழுத ஆரம்பித்த போது இருந்த நினைவுகள் எல்லாம் இப்போது, சற்று குறைந்தாற் போல் தான் இருக்கிறது. நாங்கள் ஜனவரி 14(பொங்கலன்று) ஊர் திரும்பினோம். தற்போது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகி விட்டனவல்லவா?
ஆனால் ஒரு விஷயம். எப்போது நான் இதைப் படித்தாலும், மீண்டும் பசுமையான அந்நினைவுகள், மனதில் கிளர்ந்தெழுந்து ஹஜ் செய்தது போன்ற மனநிறைவை எனக்குத் தரும்.
இதை அடுத்தவர் படிக்கிறார்கள் என்பதை விட, ஒரு டைரியில் பதிவதைப் போன்ற உணர்வுடன் தான் பதிந்தேன். அதனால் தான், அந்தரங்கமான விஷயங்கள் தவிர்த்து அனைத்தையும் பகிரங்கமாக எழுதினேன்.
இனி ஹஜ் செல்ல நாடும் யாவரும் இதைப் படித்து பயன் பெற வேண்டும். மேலும், அடுத்தடுத்த வருடங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அதைத் தெரியப்படுத்தினால், இதில் அப்டேட்(அப்டேட் என்ற பகுதியில்) செய்து விடுவேன்.
அன்புத்தோழி சுஹைனா !உண்மையில் கண்ணீரோடுதான் இந்த பதிவை படித்து முடித்தேன்.அருமையான விளக்கத்தால் நாங்களும் ஹஜ் செய்த பேறு பெற்றோம்.பாராட்டுக்கள்.என்னை தேடி வந்து அழைக்கும் பொழுது உங்கள் அன்பு என்னை வியக்க வைத்தது.மிக்க மகிழ்ச்சி.
அன்பு சுஹைனா,
அதற்குள் ஹஜ் தொடர் முடிந்து விட்டதா? நான் மிகவும் விரும்பி படித்தேன். பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.ஏற்கனவே சொன்னது போல் உடல் நலம் சரியில்லாததால்(நல்ல விசயம் தான்) பின்னூட்டம் இடாமல் படிக்க மட்டும் செய்தேன். எனக்கு கேள்விகள் பல இருக்கு....இன்னும் சிறிது நாள் கழித்து கேட்கிறேன்...தவறாமல் பதில் போடுங்கள்.
ஆசியா அக்கா,
தங்கள் நட்பு கிடைத்தது என் பாக்கியம். தங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன். பார்த்தீர்களா?
கவின் கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! இது எத்துணையாவது மாதம். பூரண ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். முதல் குழந்தையா?
நல்ல விளக்கமா எழுதிருக்கிங்க உங்க எழுத்து நடையில்.நானும் ஆரம்பத்திலிருந்து படித்து வந்தேன்,அதுக்குள்ள முடிந்துவிட்டது.வாழ்த்துக்கள்!!
அன்பு சுஹைனா
சொல்ல வார்த்தைகள் இல்லை...வியப்பில் எனக்கு சில நாள் தூக்கம் கூட போயிருக்கிறது..உங்கள் ஞாபக ஷக்தியும் திருத்தமான தெளிவான எழுத்து நடையும் என்னவென்று சொல்ல.மாஷா அல்லாஹ்
எழுதின அதே அட்மாஸ்ப்ஹியருக்கு எங்களையும் அழைத்து செல்வது தான் உங்களது எழுத்தின் சிறப்பு..அருமை சுஹைனா...
ஹஜ்ஜுக்கு போகும் யாராக இருப்பினும் இதனை ப்ரின்ட் அவுட் போட்டு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..அதெப்படி அத்தனையும் நியாபகம் வைக்கிறீர்கள்..வியப்பாகவே உள்ளது..இவ்வளவு சிரமமெடுத்து இக்கட்டுரையை இனிமையாக முடித்த உங்களுக்காக என் ப்ராத்தனை என்றும் உண்டு..இன்னும் இன்னும் இன்னும் விடாமல் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
தளிகா
அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா,
உங்கள் ஹஜ் பயணக்கட்டுரை என்னை வியக்க வைக்கிறது. மாஷா அல்லாஹ்.
நான் ஆரம்பத்தில் இருந்து ஒரு பதிவு விடாமல் படித்து விடுவேன். ஒவ்வொரு விஷயங்களையும் மறக்காமல் விளக்கமாக எழுதியிருப்பது அனைவரும் ஹஜ்ஜை பற்றி அறிந்து கொள்ளவும், இனி ஹஜ்ஜுக்கு செல்பவருக்கு சிறந்த வழிக்காட்டியாகவும் இருக்கும்.
ஹஜ் சென்று வந்த அனுபவங்கள், உங்கள் கட்டுரையை படிக்கும் பொது மனக்கண் முன் தோன்றி கண்ணீரை வரவழைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! அனைவருக்கும் இப்பாக்கியம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் புரிவானாக! ஆமீன்!
PART 41 ல் ஒரு பதிவு போட்டென். அதற்க்கு முன் ஒவ்வொரு பதிவிற்கும் பதில் போடாமல் மிஸ்பண்ணி விட்டேன்.
அன்புடன் ஹசீனா
மேனகா, தளிகா, ஹசீனா உங்கள் பாராட்டுக்கு நன்றி!
ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்கு டிப்ஸ் மட்டும் தொகுத்து ஒரு தனி பதிவாக போட நாடியுள்ளேன். எப்போது முடியும் என்று தெரியவில்லை.
assalamu alaikum .ur hajvilakkam is very good..thank u for sharing...
நல்ல அனுபவம்,ஆனால் சில விஷயங்கள் இஸ்லாத்தின் கோட்பாட்டுக்கு மாறுபட்டவையாக நீங்கள் எழுதி இருப்பது,நீங்கள் இஸ்லாத்தை சரியான முறையில் புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதையே சுட்டுகிறது.அதை திருத்துவது நலம்.எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் ஹஜ்ஜை ஏற்று,உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் நல் அருள் பாலிப்பானாக.ஆமீன்.எனக்கும் ஹஜ் பாக்கியம் கிடைக்க துவா செய்யுங்கள் சகோதரி.
visit my blog and give your feedback,and ask dua,sister.
http://peacetrain1.blogspot.com/
Dear Sister
Asssalamu alaikum. I read your entire article about Haj. Alhumdulillah. It is nice and wonderful effort. May Allah Bless you Success in this world and here after. Haj is our life term project. Myself and my wife always discuss about Haj. Surely I will recommend my wife to read your blog, Insha Allah.
Your writing trend looks very good. So keep writing and remember in your duas.
And convey my salaams to your family members.
Wassalam.
Abdul Azeez
//அமைதி ரயில் said...
நல்ல அனுபவம்,ஆனால் சில விஷயங்கள் இஸ்லாத்தின் கோட்பாட்டுக்கு மாறுபட்டவையாக நீங்கள் எழுதி இருப்பது,நீங்கள் இஸ்லாத்தை சரியான முறையில் புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதையே சுட்டுகிறது.அதை திருத்துவது நலம்//
எல்லாமே சுன்னத் வல ஜமாத் கோட்பாட்டின் படி தான் உள்ளது.
thank you abdul azeez for your kind remarks.may allah give you the chance for haj soon.
One of the best writings! I enjoyed every post and the great details about Haj! God Bless.
Thank you Ram Ravishankar for your kind words!
Very nice. Publish a Book on Haj Pilgrimmage.
We had a feeling of travelled with you.
Natraj
thank you natraj. nice to hear a comment like this by a non muslim. I will try to publish it as a book!
ஈரோடு சங்கமம் பதிவு வாயிலாக ஹஜ் பதிவுக்கு வந்தேன். மிகுந்த ஈர்ப்புகுள்ளாகி இரவு 9 மணிக்கு ஆரம்பித்தவன் 42 அத்தியாயத்தையும் முடிக்கும் போது மணி இப்போது 1.30. மிக மிக அருமையாக நெகிழ்ச்சியாக எழுதப்பட்ட பதிவுகள்.
நான் எந்த அளவு தொடரில், அல்லாவின் பால் ஈர்க்கப்பட்டேன் என்பதற்கு ஒரு உதாரணம். நான் கமெண்டை கிளிக் பண்ண அங்கு எனக்கு முன்னாடி கடைசியாக நடராஜ் (nats ) என்ற நண்பர் கமெண்ட் குடுத்து இருக்க, நான் ஒரு நிமிடம் குழம்பி விட்டேன். என்னடா, நாம் ஏற்கனவே இந்த பதிவுக்கு வந்து இருக்கிறோமா, இல்லை அல்லாவின் விளையாட்டா இது (நீங்கள் வேறு ஒரு முஸ்லிமாக இல்லா விட்டாலும் அந்த நண்பரின் ஈடுபாட்டை பாராட்டிநீர்களா) , எனக்கு குழப்பம் ஆகிவிட்டது. ஏனென்றால் நானும் நடராஜ் தான். என்னையும் Nats என்று தான் அழைப்பார்கள்.
வெறுமனே tourist guide போன்று இல்லாமல் உங்கள் இறை அனுபவங்கள், சிறு பிணக்குகள், உங்கள் பிள்ளை பாசம், உங்கள் மகனின் innocence எல்லாம் சேர்த்து எழுதிய விதம் மிக மிக அருமை. இன்ஷா அல்லாஹ் !
நன்றி நண்பர் நட்ராஜ், தங்கள் ஈடுபாட்டை பாராட்டுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா,உங்கள் மெயின் ப்ளாக்கை படித்துக் கொண்டு வரும் போது ஏதோச்சயாக ஹஜ் விளக்கம் ப்ளாக் பார்த்தேன்.அப்படி என்ன புதியதாக சொல்லிவிட முடியும் என்ற என்னத்தில்தான் படிக்க ஆரம்பித்தேன்.ஆனால் A to Z முழுமையான பயண கட்டுரை,இதைப்போன்று நான் கேட்டதுமில்லை,படித்ததுமில்லை. உண்மையில் நானும் கூட இருந்த உனர்வை தந்தது.மொத்த பதிவையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.நடுவில் டீ,தண்னீர் எதற்குமே அசையவில்லை. நீங்கள் கேட்ட துவாக்கள் \\\மச்சானுக்கு கோர்வையாக துவா செய்ய தெரியாது என்பதால் நான் துவா செய்தேன். அவர் ‘ஆமீன்’ என்று வழி மொழிந்தார்.\\\உடல் சிலிர்த்து விட்டது.””ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தின் வஃபில் ஆகிரதி ஹசனதன் வகீனா அதாபன்னார்”””. அனைத்து முஸ்லிம்களும் ஹாஜியாகவும், நாங்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருடன், குடும்பத்தோடு மேன்மேலும் ஹஜ் மற்றும் உம்ரா செய்யவும் இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்!
அன்புள்ள சகோதரி சுமஜ்லா அக்கா அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.நீண்ட நாட்களாகிவிட்டது கருத்து பரிமாறி.பேனாமுனை எனும் பெயரில் ஒரு பிளாக் தொடங்கியுள்ளேன்.அல்ஹம்துலில்லாஹ்.
அதன் நோக்கம்,நல்ல பிலாகுகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி வைப்பதும்,ஊக்கப்படுத்துவதும் ஆகும்.
முதலில் நான் தேர்ந்த்டுத்தது உங்கள் ஹஜ் விளக்கம் பிளாக் ஆகும்.
எனவே,அது பற்றிய விளக்கம் எழுதும் முகமாக உங்களைப் பற்றிய,பெற்றோர்கள் பற்றிய சிறு குறிப்பு,ஊர்,பள்ளி,இதுவரை சாதித்தவை,இனி சாதிக்க நினைப்பவை,தங்கள் மார்க்கத்துக்கு,நாட்டுக்கு,இதுவரை என்ன பங்களிப்பு செய்துள்ளீர்கள்?இன்னும் பல விஷயங்களை எனக்கு ஈமெயில் மூலம் அனுப்பித்தந்தால்,வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வசதியாக இருக்கும்,எதிர்பார்க்கிறேன்.
http://penaamunai.blogspot.com/
அன்பிற்கினிய சகோதரி...அஸ்ஸலாமு அலைக்கும்...
புனித மண்ணில் (சவூதியில்) பல ஆண்டுகள் வேளையில் இருந்ததில், இறைவன் கிருபையால் ஹஜ்ஜூம், பல உம்ராவும் செய்து, அதிகம் மஸ்ஜிது நபவியைக்காணும் பாக்கியமும் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்...தாங்களது ஹஜ் விளக்கம் இப்பொழுதுதான் கண்டேன். ஆர்வமுடன் (முழுவதும் படித்து முடித்தேன்) படிக்கையில் பழய நினைவுகளும் வந்து, மெய்சிலிர்த்து, பல தடவை அழுது, கண்களில் நீர் வந்ததும் உண்மை. தற்பொழுது அமீரகத்தில் (துபாயில்) இருப்பதால், இறை இல்லத்தை, இறுதி நபியின் இடத்தை காண ஆவலும் அதிகம் வருகிறது. அந்நாட்களுக்காக மனம் ஏங்கி தவிக்கிறது.
//காபத்துல்லாஹ்வை முதல்முறை, பார்த்ததும் கேட்கும் பிரார்த்தனை(துவா) நிறைவேறும் என்பதால், எங்கள் ஊர் பெரியவர்கள்,ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது போல, காபாவைப் பார்த்த உடன், ‘ இறைவா! நான் வாழ்நாள் முழுதும் கேட்கும் எல்லா நல்ல துவாக்களையும் நிறைவேற்றித் தருவாயாக!’ என்று கேட்கும்படி சொல்லித்தந்தார்கள்.//
- ஆகா.., அழகிய, ஆழ்ந்த இவ்வரிகள் புல்லரிக்கச்செய்து, இதன் பெருமை உணர்ந்து,….உடனே மீண்டும் காபாவைப் பார்த்து இதனைக்கேட்க வேண்டும் என மனம் ஆசைகொள்கிறது. வல்ல ரஹ்மான், நம் அனைபேர்களுக்கும் அவ்வாய்ப்பினை மீண்டும், மீண்டும் தந்தருள்வானாக (வும்.) தாங்களது பயணக்கட்டுரை மிகவும் அருமை. அனைத்தையும் எழுதிய விதம், ஆச்சரியமும் வந்து பிரம்மிப்பை தந்தது. நெகிழ்ச்சி கொண்டு பின்னூட்டம் இட வைத்தது. ஒவ்வொன்றையும் கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். மாஷா அல்லாஹ்... படிக்கும் அனைவரையும் பார்க்கத்தூண்டும். அவை நிச்சயம் பயனும் அளிக்கும். பார்த்தவர்களை பரவசக்கொள்ளவும் வைக்கும். வியப்பில்லை. திட்டமிடுதல், எச்சரிக்கை உணர்வு, பொறுப்பு, ஆர்வம், அமைதி, அமல்செய்தமுறை, அடைந்த இன்பம், பட்ட கஸ்டம், கேட்ட துவா அத்துடன் தாங்களது அபார ஞாபகசக்தி, விளக்கமுடன் எழுதிய நயம் பாராட்டுக்குறியது. வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை (தெரியவில்லை). பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி. தங்களது திறமைகள் மென்மேலும் வளர்ந்திட, நல்லவிசயங்கள் எல்லோருக்கும் பயன் பட, மேலும் நாம், திருமறை, நபிமுறையில், நேரான வழியில் நடந்து (வாழ்ந்து), அனைவரும் இரு உலக வாழ்விலும் வெற்றியைப்பெற வல்ல நாயன் அல்லாஹ்...அருள் புரியட்டும், (புரிவானாக...வும்) ஆமீன். வஸ்ஸலாம்.
- அன்புடன்,
ஹுஸைன் / துபாய்.
Assalamu allaikum, your haj vilakkam very usesful & informative.thank u very much.
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரி.. தற்செயலாக தங்களது வலைக்குள் சிக்க நேரிட்டது, அல்ஹம்துலில்லாஹ், 'ஹஜ் அனுபவங்கள்' கட்டுரை எங்களது ஹஜ் பிரயாண ஆயத்தங்களில் மாற்றங்கள் செய்ய தூண்டியது. இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜூக்கு புறப்பட உள்ளோம். உங்களது விரிவான 'எழுத்து' புகழுக்குரியது. 'மனிதனுக்கு நன்றி செலுத்தியவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவன் ஆவான்'. எமது பயணம் சிறப்படைய, நல்லுள்ளம் கொண்ட தங்களின் வாழ்த்துக்களை வேண்டியவளாக.., ரஜீனாசுல்தான்.
சகோதரி, எல்லாப்புகழும் இறைவனுக்கே, ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்கு உபயோகமாக இருந்தால், அதுவே என் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி! ஹஜ் செல்ல இருக்கும் அனைவரையும் இதைப் படிக்க சொல்லுங்கள். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் துவா செய்யுங்கள். நாங்கள் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய இறைவனுடைய சந்நிதியில் கேளுங்கள். இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய அல்லாஹ் போதுமானவன்.
எனதருமை மகளே!
அறிவியல் ஒத்துக்கொண்டுள்ள எட்டு அறிவுகளில் ஒன்று கண்கள் பார்த்த காட்சியை அப்படியே பதித்துக்கொள்வதாகும்.
இன்னொன்று மொழி அறிவு. இன்னுமொன்று இசையறிவு (rhymes - எதுகை , மோனை). இந்த மூன்று அறிவுகளும் ஒருசேர உன்னிடம் தவழ்வதை உன்னுடைய எழுத்தாற்றலில் காண்கிறேன். சுபஹானல்லாஹ்! உன்னுடைய ஹஜ் அனுபவ விளக்கவுரை என்னை 2005 -ல் ஹஜ் செய்த நினைவுகளை உசுப்பிவிட்டது. நான், என் மனைவி, என் மூத்த மகன், அவர் மனைவி, என் முதல் மகள் 42 வயது ரூபீனா பாத்திமா என ஐவர் சென்று வந்ததில் ஆறு மாதம் கழித்து ரூபினாவை தன பக்கம் அல்லாஹுத்த'ஆலா மீட்டுக்கொண்டான். அந்த ஞாபகங்கள் கண்களைக்குளமாக்கிவிட்டன. எனவேதான் உன்னை மகளே என்று அழைத்திருக்கிறேன்.
தினமலரில் டாட்காம் என்ற பகுதியில் நாட்டுமருந்துகள் என்ற தலைப்பில் 'veggicookbooks.blogspot.com' எனும் வலைப்பூவில் தட்டிய பொழுது உன்னுடைய வலைப்பூவில் நுழைய நேரிட்டது. இப்போது உன் கற்பனைத்திறன்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன். உன் எழுத்தாற்றல் மேன்மேலும் வளர வல்ல அல்லாஹ் அருள்வானாக.
கணியூர் அப்துல் ரஹிமான் , கோவை-21
நன்றி பெரிய தந்தை அவர்களே... ஞாபகசக்தியைத் தந்து என்னை எழுத வைத்த இறைவனுக்கே எல்லாப்புகழும்! இப்போது இரண்டு வருடம் ஆகி விட்ட நிலையில், நினைவுகள் சற்று மஞ்சனித்து விட்டன. ஆயினும், இதில் பதிந்து வைத்திருப்பதைப் படிக்கும் போது எனக்கும் பழைய ஞாபகங்கள் வந்து கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாது. தங்கள் மகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
உங்கள் பதிப்பை இப்போதுதான் பார்த்தேன். மிக்க அருமை! நானும் சில தகவல்களை தெரிந்துக்கொண்டேன்..உங்கள் ஹஜ்ஜினை இறைவனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஹஜ்ஜாக ஆக்குவானாக!!!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.
தாங்களும் தங்கள் வீட்டில் அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? மிக மிக மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன். ஆனாலும் இந்த நான்கு நாட்களாக
அதிக நேரம் ஒதுக்கி தாங்கள் எழுதிய ஹஜ் அனுபவத் தொடரை ரசித்து அனுபவித்து படித்து முடித்திருக்கிறேன். படிக்கவே இவ்வளவு நேரமாகும் போது எவ்வாறு தான் தொடர்ந்து
எழுதினீர்களோ? ஆச்சரியமாக இருக்கிறது.
அனேகமாக சில வருடங்களுக்கு முன் - ஏதோ ஒரு வகையில் (கூகுளில் எதையோ தேடும் போதே என்னவோ) இந்த தொடர் மூலம் தான் தங்களின் மற்ற பிளாகுகள் எனக்கு அறிமுகமாகியது என்று நினைக்கிறேன். ஆனாலும் அப்பொழுது இத்தொடரின் சில பகுதிகளை படித்தாலும் இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்லும் போது படித்து கொள்ளலாம் என்று
தங்களின் மற்ற பிளாகுகளை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். அதற்கு சில கருத்துகளும் பதிந்திருக்கிறேன். தங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் எழுத்துகள் மூலம் சில பயனுள்ள விஷயங்களும் தெரிந்து கொண்டிருக்கிறேன். நன்றி.
முக்கியமாக தாங்கள் எழுதிய சாயபு வீட்டு சரித்திரத்தினை மிக ஆர்வமாக வாசித்து வந்தேன். அந்த கச்சாமாவின் மறைவு பற்றிய பதிவுக்கு முந்தைய பதிவு வரை. ஒவ்வொரு பதிவின் முகப்பிலும் தாங்கள் கொடுத்திருந்த கவிதை நடை முன்னுரை/குறிப்பு மூலம் கச்சாமாவின் மறைவு குறித்து அறிந்து - அந்த குறிப்பிட்ட பதிவை முகப்போடு நிறுத்து விட்டேன். எல்லாமே அல்லாஹ்வின் நாட்டப்படி தான் என்றாலும் அதற்கு மேல் அந்த தொடரை படிக்கும் சக்தி இன்று வரை என்னிடம் இல்லை. அந்த அபலை பெண்ணை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
சகோதரி. உண்மையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு அழகிய முறையில் தங்களின் ஹஜ் பயண அனுபவத்தினை விவரித்துள்ளீர்கள். உண்மையில் நாங்களும்
உங்களுடனேயே அந்த புனிதத் தலங்களுக்கு சென்று வந்த உணர்வு. மாஷா அல்லாஹ். தாங்கள் அனைவரின் ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்று கொள்வானாக.
பிளாக்கர் வந்த சமயத்திலிருந்து மிக ஆரம்ப கால பதிவராக இருந்த என்னால் சில பதிவுகளுக்கு மேலேயே தொடர முடியவில்லை. இருந்தும் தங்களின் பணிகளுக்கிடையில் எவ்வளவு தெளிவாக படங்களோடு விவரித்திருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் இந்த வருடம் நாங்கள் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வதற்கு தேர்வாகி இருக்கின்றோம். நாங்கள்
அனைவரும் நல்லபடியாக, அந்த ஈடு இணையற்ற கருணையாளனான எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜினை இலகுவாகவும், மிகவும் பாதுகாப்பாகவும், திருப்தியாகவும் செய்து வர அந்த அர்ரஹ்மானிடம், அர்ரஹீமிடம் எங்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இத்தொடர் அல்லாஹ்வின் உதவியால் ஹஜ் செல்ல திட்டமிட்டுள்ள எங்களுக்கும், எங்களைப் போன்ற மற்றவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். தங்களின் இந்த பணிக்கான கூலியை தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்ளுக்கும் இம்மையிலும் மறுமையிலும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக. நிறைய தெரிந்து கொண்டேன். மீண்டும் வாசித்து குறிப்புகள் எடுக்க வேண்டும். மீண்டும் மிக்க நன்றி!
For follow up...
Post a Comment