Wednesday, February 11, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 10

வெற்றிகரமாக பத்தாவது அத்தியாயத்தைத் தொட்டுவிட்ட இக்கட்டுரையில் ஒரு புதுமை படைக்கலாம், என்று நினைத்தேன். அதன் படி, கீழே இருக்கும் ப்ளேயரில், இக்கட்டுரையை, என் சொந்த குரலில் கேட்கலாம். இது பற்றி உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.



மூன்றாம் பாகத்தி்ன் இறுதியில் நான் எழுதியது நினைவிருக்கிறதா உங்களுக்கு? அதாவது, நாங்கள் மக்காவில் எங்கள் லாட்ஜை சென்றடைந்தோம். எல்லாருக்கும், ரொம்ப பசி, சமைக்க வேண்டும். என்னிடம் இருப்பது, இண்டக்‌ஷன் அடுப்பு. ப்ளக் பாயிண்ட், வேறுவிதமாக இருப்பதால், அதற்கு, அடாப்டர் வேண்டும். என்ன செய்வது?

எங்கள் லாட்ஜில் 6 ஃபுளோர்கள். அதில் ஒவ்வொரு ஃபுளோரிலும் 16 அறைகள். 4 ரூம்காரர்களுக்கு ஒரு கிட்சன் என ஒரு ஃபுளோருக்கு, 4 சமையலறைகள். ஆனால், எங்களுடைய ஃபர்ஸ்ட்(M) ஃபுளோருக்கு மட்டும் 7 ரூம்களுக்கு ஒரே ஒரு சமையலறை. காரணம் என்னவென்றால், எங்கள் ஃபுளோரில் மொத்தம் ஏழே அறைகள் தான். மீதி இடத்தில், லாட்ஜ் ஓனர் குடியிருக்கிறார்.

எங்கள் சமையலறையில், மூன்று பர்னர் கொண்ட ஒரு அடுப்பு, ஒரு பெரிய பிரிட்ஜ், 2 டேபிள்கள், 2 சின்க் ஆகியவை இருந்தன. அடுப்புக்கு முதல் சிலிண்டர் மட்டும் லாட்ஜ் ஓனர் ஃப்ரீயாக தருகிறார்; தீர்ந்து விட்டால், 20 ரியால் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

பொது சமையலறையில் சமைக்காமல், தனியாக ரூமில் வைத்து, கொண்டு சென்றிருந்த இண்டக்‌ஷன் அடுப்பில் சமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் ப்ளான். எங்கள் அதிர்ஷ்டம், எங்கள் லாட்ஜின் மேனேஜர்கள், நாகர்கோவிலை சேர்ந்த சாதிக், தவ்பிக் என்ற இரு தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்.

எல்லாரும், அவர்களிடம் சென்று, 40 பேருக்கு ஒரு கிட்சனா? என்று முறையிட, இது தான் சாக்கு என்று ‘சார் நாங்கள் வேண்டுமானால், எங்கள் ரூமிலேயே கரண்ட் அடுப்பு வைத்து சமைத்துக் கொள்கிறோம்’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்களும், சரி ஒரு பிரச்சினை முடியுமே, என்று ஓக்கே சொல்லி விட்டார்கள். உடனே நான், ‘சார் அடாப்டர் வேண்டுமே’ என்று சொல்ல, ’அதற்கென்ன, இதோ வாங்கித் தருகிறேன்’ என்று அவரே போய் ஐந்தே நிமிடத்தில் வாங்கி வந்து விட்டார். அதற்கு காசு கூட எங்களிடம் வாங்கவில்லை. என்னே, ஆண்டவனின் உதவி! எங்களைப் போலவே இன்னொரு குடும்பமும், அங்கு மக்காவிலேயே ஒரு கரண்ட் அடுப்பு வாங்கி சமைத்துக் கொள்ள, கிச்சன் பிரச்சினை சால்வாகிவிட்டது.

நான் உடனே, வேகமாக தக்காளி பிரியாணி சமைக்க ஆரம்பித்தேன். 1.5 படி அசிரி போட்டு, 20 நிமிஷத்தில் தயார் செய்து விட்டேன். கொஞ்சம் தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு எல்லாம், மெட்ராஸிலே இருந்து வாங்கி கொண்டு போயிருந்தது, அந்த நேரத்தில் ரொம்ப உபயோகமா இருந்தது. தொட்டுக் கொள்ள உப்புக் கண்டம். நாங்களும் சாப்பிட்டு, எங்கள் ரூமிலுள்ள மற்றவர்களுக்கும் விருந்து கொடுத்தோம். எங்க ரூம் மேட்ஸ் மக்காவில் சாப்பிட்ட முதல் சாப்பாடு எங்களுடையது தான். அவர்கள் மிகவும் டயர்டாக இருந்ததால், யாரும் அன்று சமைக்கவே இல்லை.

அதற்குள் பக்கத்து ரூம்காரம்மா, வந்து கேஸ் அடுப்பு எரிய மாட்டீங்குது என்று என்னை அழைத்துச் சென்றார். நான் கொஞ்சம் விபரமாக இருப்பதால், எந்த பிரச்சினை என்றாலும் என்னிடம் தான் கேட்பார்கள். நானும் சென்று, அந்த ஆட்டோ இக்னிஷன் அடுப்பை, 4, 5, முறை பட்டு பட்டுனு திருக பற்றிக் கொண்டது. முதன்முதலில் பற்ற வைத்தது நான் என்றாலும், கடைசிவரை, இருந்த 30 நாட்களும், பொது கேஸ் அடுப்பை நான் தொடவே இல்லை. ஒரு சுடு தண்ணீர் கூட வைக்கவில்லை. எல்லாமே என் கரண்ட் அடுப்பு தான். கேஸை விட வேகமாக ஆகி விடுகிறது அதில்.

அடுத்தது என்னன்னு, பார்த்தா, நாங்கள் இஹ்ராம் டிரெஸ்ஸில் இருக்கிறோம். ரொம்ப பேணுதலாக இருக்க வேண்டும். எதாவது குற்றம் குறைகள் நிகழ்ந்து விட்டால், குற்றப் பரிகாரமாக, ஒரு ஆடு அறுத்து பலியிட வேண்டும். அதற்கு ‘தமு’ கொடுத்தல் என்பார்கள்.

இனி ஹரம் சென்று, காபாவை ஏழு முறை வலம் வந்து, சஃபா, மர்வா, குன்றுகளுக்கு இடையே, ஏழு முறை தொங்கோட்டம் ஓடி முடி களைந்தால் தான் எங்கள் உம்ரா பூர்த்தியாகும். உம்ராவை பூர்த்தி செய்த பின் தான், நாங்கள் இஹ்ராம் உடையிலிருந்து, வெளிப்படணும். அதாவது, இச்செயல்களை முடித்துவிட்டால், நாம் சாதாரண உடையில், சாதாரண வாழ்க்கை முறைக்கு வந்து விடலாம்.

அன்று டயர்டாக இருந்ததால் எங்க ப்ளோர் மேட்ஸ் யாருமே ஹரமுக்கு போகவில்லை. நாங்கள் மட்டும், சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்த பின் கிளம்பினோம். இலவச பஸ் வசதி இருந்தும், முதன் முறை அது பற்றி, சரியாகத் தெரியாமல், டேக்ஸியில் போக முடிவு செய்தோம். அதன்படி, தலைக்கு 5 ரியால் கொடுத்து மூவரும் ஹரம் சென்றோம்.

காபத்துல்லாஹ்வை முதல்முறை, பார்த்ததும் கேட்கும் பிரார்த்தனை(துவா) நிறைவேறும் என்பதால், எங்கள் ஊர் பெரியவர்கள்,ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது போல, காபாவைப் பார்த்த உடன், ‘ இறைவா! நான் வாழ்நாள் முழுதும் கேட்கும் எல்ல நல்ல துவாக்களையும் நிறைவேற்றித் தருவாயாக!’ என்று கேட்கும்படி சொல்லித்தந்தார்கள்.

ஹரமை நெருங்கியதும், மனதில் ஒரு பரவச உணர்வு. இறை இல்லத்தை முதன்முறையாக, காணப் போகும் ஆவல். எதற்காக இவ்வளவு ஏற்பாடுகள் செய்தோமோ, எதற்காக அருமை பிள்ளைகளையும், சொந்த மண்ணையும் பிரிந்தோமோ, எதற்காக பல சிரமங்களை சகித்துக் கொள்ள தயாராக இருந்தோமோ, எதற்காக ஒரு வருடம் காத்திருந்தோமோ - அந்த தருணம் - வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத இனிய தருணம் இதோ வரப் போகிறது.

பாபு ஸலாம் வாயில் வழியாகப் போனால் தான் காபாவின் முன்பக்கம், அதன் தங்கக் கதவுகள், மகாமே இபுராஹிம், உடன் கூடிய முழு அமைப்பையும் ஒரு சேர தரிசிக்கலாம் என்பதால், நாங்கள் பாபு ஸலாம் எது என்று கேட்டு கேட்டு, அதை நோக்கி நடந்தோம். மிகப் பெரிய வெளி வாசலைத் தாண்டி, எஸ்கலேட்டரில், அண்டர் கிரவுண்ட் வழியாக உள்ளே போய், மீண்டும் சில படிகள் ஏறினோம். காபாவின் முன்பக்கம் வரும் வரை தலையை தாழ்த்தியபடி நடந்தோம்.

என்னை நம்பவில்லை, நான் என் கண்ணை நம்பவில்லை; இது கனவா, நனவா, தெரியவில்லை. ‘லப்பைக்’ ஓதியவண்ணம் எங்கள் இறைவனின் சந்நிதானத்தில் ஆஜராகப் போகிறோம். நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சியில் உள்ளம் துடிக்கிறது. ஆவலோடு கூடிய எதிர்பார்ப்பில், எண்ணம் சிறகடிக்கிறது. ஆனந்த ராகம் பாட, ஆசை அலைமோதுகிறது.ஆலயம் கண்டதும் ஆழ்மனம் விம்மி வெடிக்கிறது.

இதோ தலையை உயர்த்திப் பார்க்கிறேன். காபாவின் முழு உருவமும் என் கண்களின் வழியாகச் சென்று நெஞ்சில் பதிகிறது. வாய் துவாக் கேட்டாலும், கண்கள் குளமாகின்றன. என்ன உணர்வு என்றே புரியாத ஒரு உணர்வு. உலக இன்பதுன்பங்களை எல்லாம் கடந்த மோன நிலை. இறைவனிடம் அடைக்கலம் தேடி நிற்கிறோம், அழுத வண்ணம். பேரின்பம் என்பது இது தானோ?! தமிழில் இணையான வார்த்தை தெரியவில்லை எனக்கு. ஆங்கிலத்தில் சொன்னால், ecstatic bliss என்று சொல்லலாம்.


நெக்குருகி, இருகரமேந்தி இறைஞ்சுகிறோம், வல்ல நாயனிடம். ஊணும் நீயே, உயிரும் நீயே, தூணும் நீயே, துரும்பும் நீயே, அன்பும் நீயே, அருளும் நீயே, பண்பாய் எங்களைக் காப்பவன் நீயே. வாழ்வில் நிம்மதி தருபவன் நீயே! உன் வாசலில் கையேந்த வைத்திட்ட வல்லவன் நீயே! நீயே!!

கவிதை வரவில்லை தோழி - ஆனால்
கண்ணீர் வந்ததடி.
வார்த்தை வரவில்லை எனக்கும் - ஒரு
வாசல் தெரிந்ததடி,
இறை நேசம் புரிந்ததடி!

சரணா கதி யடைந்தேன் - நானும்
சகலத்தை மறந்துவிட்டேன்.
இமைக் காத விழியுடனே
இறைக் காதல் உணர்ந்து கொண்டேன்.
இனி யாவும் அவனென்பேன்.

எண்ணத்தின் பெருவெள்ளம் - என்
உள்ளத்தில் பொங்குதடி
பொங்கிடும் நினைவலைகள்,
விழி நீராய் வழியுதடி!
அது, ஆறாய் பெருகுதடி!!

என் விழியில் விழுந்து இதயம் நுழைந்த காபாவை பார்த்தபடி எவ்வளவு நேரம் நின்றிருந்தேனோ எனக்கே தெரியவில்லை. மச்சான் கூப்பிட்டதும், என் தவம் கலைந்தது.

நாங்கள் முதல் உம்ராவை முடித்ததை அடுத்த பதிவில் போடுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

23 comments:

Anonymous said...

ஹாய் சுஹைனா,
உங்க குரலில் கேட்பது ரொம்ப அருமையா இருக்கு.26 செகண்ட் தான் எனக்கு play ஆச்சு.உங்க குரல் நல்லா இருக்குபா.யப்பா இவ்ளோ நாட்கள் கழித்து உங்க கவிதை கேட்டு மிக்க மகிழ்ச்சி,அதிலும் இந்த வரிகள்...
//சரணா கதி யடைந்தேன் - நானும்
சகலத்தை மறந்துவிட்டேன்.
இமைக் காத விழியுடனே
இறைக் காதல் உணர்ந்து கொண்டேன்//
மிக அருமை.உண்மையில் கவிதையும் அருமை,கட்டுரையை பாங்குடன் வழங்குவது அதை விட அருமை!!!

Anonymous said...

ஆஹா...உங்கள் குரலுடன் பயணக் கட்டுரை அருமை!!!

இலா said...

ரொம்ப அருமையா இருக்கு சுஹைனா எனக்கும் இப்படி நெக்குருகி நின்ற தருணங்கள் நினவுக்கு வருது.

"ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க தாராயோ என் இறைவா
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும் அறிவாயோ என் இறைவா"
விழிகளை மூடி உனை நினைக்கையிலே விந்தைகள் நிகழ்வதும் ஏன் இறைவா

Anonymous said...

ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நாள் முழுவதும், உட்கார்ந்து, ஆராய்ந்து, இந்த வெப் ப்லேயர் போடுவது எப்படி என்று கண்டு பிடித்தேன்ப்பா. அது ரொம்ப கஷ்டம்ப்பா, ஏனா, இது ப்லாக். இதில் ஆடியோ ஃபைல்ஸ் ஹோஸ்ட் செய்ய முடியாது. வேறு ஒன்றில் ஹோஸ்ட் பண்ணி இதில் லிங்க் கொடுக்கணும். அதிலும் எனக்கு கம்ப்யூட்டர் மொழி அறிவு கிடையாது.
அதனால், எல்லாருக்கும், முழுசா ப்ளே ஆச்சா இல்லையா என்று சொல்லுங்கப்பா! சுகன்யா ஏன்ப்பா 26 வினாடி தான் ப்ளே ஆச்சா? எனக்கு இங்கே முழுதா ஆகுதே. திரும்ப ட்ரை பண்ணி பாருங்க.
மற்றவர்களும் உங்க ஃபீட்பேக் கொடுங்கப்பா, இது பற்றி.
சுமஜ்லா.

Anonymous said...

நீங்கள் ப்ளேயரில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கமென்ட் போஸ்ட் பண்ணினால், ப்ளேயர் ஸ்டாப் ஆகிவிடும்.

Anonymous said...

சுஹைனா, எனக்கு முழுவதும் கேட்டது. உண்மையில் இறைநிலை உணர்தலே பேரானந்தமாகும். உணர்தவர்கள் அதில் லயித்து விடுகின்றனர். உணர மட்டுமே முடியும், விளக்க இயலாது. அந்த நிலை அடைதவர்களே ஞானிகள். உங்களுக்கு அத்தகைய பேறு கிடைத்ததற்கு எனது வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஹாய் சுஹைனா,
நீங்க சொன்னதற்க்காக மறுபடியும் ட்ரை பண்ணி பார்த்தேன்.திரும்ப ரீஃப்ரெஷ் செய்து கேட்டாலும் 14 செகண்டில் நின்று விடுகிறது.நான் realplayer download செய்திருப்பதால்,இந்த ப்ளேயரில் `download this clip' வருகிறது.download செய்தாலும் அதே 14 செகண்ட் தான் ப்ளே ஆகுது.நீங்க ஃபீட்பேக் கொடுக்க சொன்னதால் இப்போது மறுபடியும் குறிப்பிட்டேன்.ஒருவேளை எனக்கு மட்டும் தான் கேட்பதில் ப்ரச்சனை உள்ளது போலும்.

Anonymous said...

கண்கள் குளமாகுதம்மா! என்று நீங்கள் பயணம் சொல்லும் போது சொன்னேன்,நினைவிருக்கிறதா?எனக்கு நீங்கள் ஹஜ் பயணம் என்றவுடன் கண்களில் கண்ணீர் தான் வந்தது.காபாவின் பேரழகைக்காண்போர் முதலில் தம்மை அறியாமல் அழுது விடுவது உண்மை.ரொம்ப யதார்த்தமாக உருக்கமாக எழுதிருக்கீங்க.பாராட்டுக்கள்.

Anonymous said...

ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க/பேசியிருக்கீங்க. இல்லை இல்லை... அது பேச்சல்ல கவிதை. கவிதைமழை. ஆஹா என்னே அருமை. நானும் இறை தலத்திற்கு வந்திருந்தது போன்ற ஒரு உணர்வு. என்னால் அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நானும் அந்த தெய்வ ஸ்தலத்தைப் பார்த்து பரவசப் பட்டதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்திய உங்கள் வரிகளுக்கும்/வார்த்தைகளுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

(பி.கு: உங்கள் குரலை என்னால் முழுமையாகக் கேட்கமுடிந்தது சகோதரி)

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

உங்களைப் பாராட்டுவதா, உங்கள் எழுத்து வரிகளைப் பாராட்டுவதா அல்லது கவிதை மழையாக ஒலிக்கும் உங்கள் இனிய குரலைப் பாராட்டுவதா தெரியவில்லைத் தோழி.
உங்கள் அழகான எழுத்துக்களாலும் உங்கள் இனிய கவிதை வடிவிலும் என்னை இறைவனின் சந்நிதானத்தில் கொண்டு சேர்த்ததற்காக மீண்டும் நன்றிகள் பலகோடி.

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

ஹாய் சுஹைனா

ரொம்ப அருமை அருமை... உங்க பதிவை படிப்பதற்கே ரொம்ப அருமை அதிலும் உங்க குரலுடன் கேக்க ரொம்ப இனிமையா இருக்கு உங்கலேட சேர்ந்து நாங்கலும் பயனிப்பது போல இருக்கு... வாழ்த்துகள்

Anonymous said...

//காபாவின் முழு உருவமும் என் கண்களின் வழியாகச் சென்று நெஞ்சில் பதிகிறது. வாய் துவாக் கேட்டாலும், கண்கள் குளமாகின்றன. என்ன உணர்வு என்றே புரியாத ஒரு உணர்வு. உலக இன்பதுன்பங்களை எல்லாம் கடந்த மோன நிலை. இறைவனிடம் அடைக்கலம் தேடி நிற்கிறோம், அழுத வண்ணம்//
சுஹைனா!கஃபாவை நேரில் காணும்போது எப்படியிருக்கும் என்று பலமுறை நான் கற்பனைப்பண்ணிப் பார்க்கும்போதே ரொம்ப அழுதிருக்கிறேன் பரவசத்தில்! அதேப்போலவே தாங்கள் அடைந்த பரவசத்தைப்படித்தும், அமைதியான உங்கள் குரலில் கேட்டும் உங்களோடு சேர்ந்து பாபுஸ்ஸலாமில் நுழைந்த ஒரு உணர்வு!நேரில் கண்டவர்களுக்கு அதை விளக்க நிச்சயமாக வார்த்தைகள் கிடைக்காதுதான்!!

Menaga Sathia said...

ஹாய் சுகைனா ரொம்ப அருமை அதுவும் உங்க குரலுடன் கேட்க ரொம்ப நல்லா இருக்கு.உங்கள் அழகான எழுத்து,இனிமையான குரல்,நல்ல கவிதை நல்லாயிருக்குப்பா.நானும் இறைவனை நேரில் பார்த்த பரவசம்.
மேனகா

Anonymous said...

ஹாய் சுஹைனா எனக்கும் முழுவதும் கேட்டது.ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.இதயத்திற்கு இதமாக இருக்கு உங்களின் ஹ்ஜ் பயண அனுபவங்கள்,உங்கள் குரலுடன் கேட்கும்பொது.

Anonymous said...

ஹாய் சுஹைனா எனக்கும் முழுவதும் கேட்டது.ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.இதயத்திற்கு இதமாக இருக்கு உங்களின் ஹ்ஜ் பயண அனுபவங்கள்,உங்கள் குரலுடன் கேட்கும்பொது.

February 12, 2009 6:16 AM
ரைஹனா.

Anonymous said...

ஹாய் சுஹைனா,
நேற்று முதல் இவ்வளவு நேரம் ட்ரை பண்ணி இப்ப தான் உங்களோட குரலை முழுவதும் சுமார் 8:05 நிமிடம் கேட்க முடிந்தது.‘லப்பைக்’ என்ற வார்த்தையை உச்சரிப்பீர்கள் என்று நினைத்தேன்.எப்படி ஓதுவீர்கள் என்று இதில் தான் கேட்க முடிந்தது.ம்...நல்லா இருந்துச்சுபா நீங்க உங்க கவிதையை படிக்கும்(பாடும்)போது,அதுக்கு இன்னும் கொஞ்சம் மெருகு கூடுதுபா...

சுரைஜ் அஹமது said...

பதிவு செய்த முறை கொஞசம் கோனல், மானலாக இருக்குது.
கொஞசம் பேச்சு வழக்கு தமிழ், கொஞ்சம் மேடை பேச்சு தமிழ், கொஞ்சம் உரை நடை தமிழ்.

irundaalum adjust pakkilaam.... he he he.....

Anonymous said...

Really interesting suhaina.May Allah reward you for this effort.

Anonymous said...

டேய் சுரைஜ்,
என் கட்டுரையை படித்ததற்கு தேங்க்ஸ்டா. ஆனா இந்த யதார்த்தமான நடை தான்டா எல்லாருக்கும் பிடிக்குது.
அன்பு அக்கமா,
சுரைஜ்

Anonymous said...

ஹாய் சகோதரி சுஹைனா என்ன சொல்ல என்ன எழுத தங்களின் கட்டுரை படித்து மெய் மறந்து போய் இருக்கிறேன்.தங்களின் குரல் பதிவு எனக்கு முழுவதுமாக கிடைத்தது.

Unknown said...

உங்களின் வாய்ஸ் மிகவும் தெளிவாக இருக்கு.
மனதிற்கு ஓர் இதமாக இருக்கிறது.. இந்த தகவலை கேட்கும்பொழுது...
மெக்காவை பார்க்கனும் என்று ஆவல் வருகிறது..
உங்களின் கவிதை வரிகள் அருமையாக இருக்கு

Anonymous said...

சகோதரி தங்களின் ஹஜ் பயணக்கட்டுரையை தொடர்ந்து படித்து வருகிறேன் ரொம்ப அருமையாக இருக்கு உங்கள் குரலை என்னால கேட்க முடியலே play option வரவில்லை

Anonymous said...

அன்பு ஜாஸி, வாழ்த்துக்கு நன்றி. பாப் அப் ப்ளாக்கர் ப்ளாக் செய்துவிட்டதா பாருங்கள்.
-சுஹைனா