Tuesday, February 17, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 13

அடுத்த நாள் காலையில் போய் ஒரு வழியாக கடைகளை கண்டுபிடித்து கொஞ்சம் தேவையான பொருட்கள் வாங்கி வந்தோம். சிறிய மூடி போட்ட பக்கெட் துணி துவைக்க 10 ரியாலுக்கு வாங்கினோம்.

அதிகாலை வீட்டிலுருந்து, போன் வந்தது. என் பையனுக்கு ரொம்ப ஃபீவராம். அதனால, அரையாண்டுத் தேர்வுக்குக் கூட போக முடியவில்லையாம். அவன் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டு படிக்கிறான். அவனிடம் பேசி ஆறுதல் சொன்னேன். சொன்ன பேச்ச கேட்டுக்கோ, உனக்கு நிறைய விளையாட்டு சாமான் எல்லாம் வாங்கிட்டு வருகிறேன் என்றேன். மனம் கொஞ்சம் சஞ்சலமாக இருந்தது.

மதியத்துக்கு மேல், ஹரமுக்குப் போனோம். ஹஜ்ஜுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகம் முழுதும் இருந்து, ஹஜ்ஜுக்கு வரம் 40, 50 லட்சம் மக்களில், கிட்டத்தட்ட பாதி பேராவது, ஹரமில் இருப்பார்கள். 20 லட்சம் மக்கள் ஓரிடத்தில் கூடினால், எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். எள்ளுப் போட்டால், எண்ணெய் ஆகிவிடும் போல் கூட்டம். தொழுகை நேரத்தில், ஹரமின் உள்வாசல், வளாகங்களின் மூன்று அடுக்கு, வெளிவாசல் எல்லாம் நிரம்பி, ரோட்டிலும் மக்கள் தொழுவார்கள். அவ்வளவு கூட்டம்.

அக்கூட்டத்தில், நீரிழிவு நோயாளியான மாமனாரால், பாத்ரூம் போய் வருவதென்பது, கஷ்டமான விஷயம். அதனால், அவர் காபாவை தரிசனம் செய்ததும், கூட்டிப் போய், கையோடு கொண்டு போயிருந்த போர்டபிள் போல்டிங் சேர் போட்டு பாத்ரூமுக்கு சற்று அருகில், உட்கார வைத்து விட்டுத்தான், நாங்கள் தவாப் முடித்தோம்.

மாலை வீடு வந்து சேர்ந்ததும், எங்க பெரியப்பா, போன் செய்தார். அவர், பெரியம்மா, அவர்கள் மகன்(தம்பி) மூவரும் ஹஜ்ஜுக்கு வந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் தங்குமிடம், எங்கள் லாட்ஜில் இருந்து, தூரம். பெரியம்மா மகனை ஹரமில் பார்த்தேன். போன் நம்பர் எக்ஸ்சேஞ் செய்து கொண்டோம்.

இப்போ பெரியப்பா, போன் செய்து குர்பானி கொடுப்பது சம்பந்தமாக என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள், என்று கேட்டார். நாங்கள் ஆட்டுப் பண்ணையில் தான் போய் வாங்கி குர்பானி கொடுக்கணும் என்று சொன்னேன். அதற்கு அவர், சவுலதியா மதரஸாவில் பணம் கட்டிவிட்டால், நமக்காக அவர்களே கொடுத்து விடுவார்கள், நாம் அலைய வேண்டியதில்லை என்று சொன்னார். சரி என்று சவுலதியா மதரஸா இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டேன்.

இப்பொழுது குர்பானி பற்றி ஒரு சில வார்த்தைகள். குர்பானி கொடுத்தல் என்றால், ஆடு, மாடு அல்லது ஒட்டகம் அறுத்து இறைவனுக்காக பலியிடுவது. இதில், ரத்தமோ இறைச்சியோ, இறைவனுக்கு சென்று சேர்வதில்லை, மாறாக, நம் தியாக உள்ளத்தைத் தான் அவன் பார்க்கிறான்.

ஆடு அறுத்துக் குர்பானி கொடுத்தால், ஒருவருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும். ஒட்டகம் அல்லது மாடு கொடுத்தால், ஏழு பேர் சேர்ந்து ஒன்று கொடுக்க வேண்டும்.

குர்பானி கொடுப்பதற்கு சுவையான ஒரு பின்னனி வரலாறு உள்ளது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு வெகுநாள் குழந்தை பாக்கியம் இல்லாமல், தனது 90 வது வயதில் மனைவி ஹாஜரா மூலம், இஸ்மாயில் என்ற குழந்தை பிறந்தது.

இஸ்மாயில்(அலை) அவர்கள் சிறு பிள்ளையாக இருந்த போது, இப்ராஹிம்(அலை) அவர்களின் இறை நம்பிக்கையை ஆண்டவன் சோதிக்க நினைத்தான். இஸ்மாயிலை அழைத்துச் சென்று பலியிடுமாறு கனவில் இறைகட்டளை வந்தது. இப்ராஹிம்(அலை) மிகுந்த தயக்கத்துக்குப் பின், இவ்விஷயத்தை, தன் மகனிடம் சொன்னார். இறைவனின் ஆணையை நிறைவேற்ற நான் தயார் என்று கிளம்பி விட்டார் அச்சிறுபிள்ளை.

கத்தியை எடுத்துக் கொண்டு போகிறார் ஒரு மொட்டைப் பாறைக்கு. தன் மகனை அப்பாறையின் மேல் படுக்க வைக்கிறார். அப்போ இஸ்மாயில்(அலை) சொல்கிறார், “தந்தையே, பாசத்தின் காரணமாக, உங்கள் மனம் கலங்கும். அதனால், இருவரும் கண்களைக் கட்டிக் கொள்வோம்” என்று. சரியென்று அவ்வாறே, கட்டிக் கொண்டு, அறுக்கப் போகிறார் மகனின் கழுத்தை. ஆனால் கத்தி அறுக்க மறுத்து தலைகீழாக திரும்பிக் கொள்கிறது. மீண்டும் மீண்டும் முயன்றும் முடியாததால், கோபம் வந்து அருகிலிருந்த பாறையில் ஓங்கி அடிக்கிறார், கத்தியால். பாறை பிளந்து விட்டது. கத்தி அவ்வளவு கூர்மை. ஆனால், கத்திக்கு இறைவன் கட்டளையிட்டிருக்கிறான், இஸ்மாயிலின் கழுத்தை அறுக்கக்கூடாதென்று. பிறகெப்படி அது அறுக்கும்?

வானிலிருந்து சத்தம் கேட்கிறது அப்போது, “இப்ராஹீமே, கண்கட்டை அவிழ்த்துப் பார்” என்று. பார்த்தால் அருகில் ஒரு ஆடு நிற்கிறது. “ உம்முடைய தியாகத்தைப் பொருந்திக் கொண்டோம். உன் மகனுக்கு பதில் இந்த ஆட்டை அறுத்துப் பலியிடுவாயாக” என்று அசரீரி கேட்கிறது. தன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவாறு சந்தோஷமாக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள்.

இப்ராஹிம்(அலை) அவர்களின் இத்தியாகத்தை நினைவு கூறும் விதமாக, குர்பானி கொடுக்க வசதியுள்ள உலக முஸ்லிம்கள் அனைவரும், வருடாவருடம் பக்ரீத்தின் போது குர்பானி கொடுக்க வேண்டும். பக்ரீத்தின் போது தான் ஹஜ் வரும். அப்போது ஹஜ்ஜிலும் குர்பானி கொடுக்க வேண்டும்.

இனி இந்த குர்பானிக்கு, பணம் கட்டக் கூடிய நிறைய பேங்குகள் உள்ளன. நம் பொறுப்பில் அவர்களே குர்பானி கொடுத்து விடுவார்கள். எனினும், நம்பகமானதா என்று விசாரித்து செய்ய வேண்டும்.

சவுலதியா மதரஸா என்பது 79ம் நம்பர் கேட்டிலிருந்து செல்ல வேண்டும். ஆயிஷா மஸ்ஜிதுக்குப் போக பஸ் ஏறும் ரோட்டிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இடது பக்கம் சிறிய சந்தில் உள்ளது. இது ஒரு எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூஷன்.

அடுத்த நாள் காலை எழும் போதே எனக்கு நல்ல காய்ச்சல். அலுப்பினால் கைகால் செம வலி. மாத்திரை போட்டுக் கொண்டு, நானும் மச்சானும் சவுலதியா மதரஸா போக டாக்ஸியில் ஹரமுக்குப் போனோம். வியாழன் மாலை ஆனதால், (வியாழனும் வெள்ளியும் முஸ்லிம்களுக்கு சிறப்பான நாட்கள் என்பதால், அக்கம் பக்கத்து ஜனங்கள் எல்லாம் ஹரமில் தொழுகக் கூடுவார்கள்) கூட்டம் எக்கச்சக்கம். ஹரமின் உள்ளேயே போக முடியவில்லை.

எப்படியோ விசாரித்து, விசாரித்து மதரஸாவைக் கண்டு பிடித்து மூவருக்கும் தலா 350 ரியால் கட்டினோம். குர்பானி கொடுக்கக் கூடிய மூன்று நாட்களில், 2ம் நாள் காலை 10மணிக்குக் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, டாக்ஸி பிடிக்கப் போனோம்.

ஹஜ்ஜுக்கு 2 நாள் முன்பும், 2 நாள் பின்பும் கூட்ட மிகுதியால் பஸ் சர்வீஸ் நிறுத்தி விடுகின்றனர். அதனால், டாக்ஸிகளுக்கு ஏக கிராக்கி. டாக்ஸி பிடிக்க போனால், அஜிஜியா ஜுனூபியா என்று சொன்னால், ஒருவனும் வருவதாயில்லை. ஜனங்களோ ஏகப்பட்ட பேர். வரும் டாக்ஸியின் எண்ணிக்கைப் போதவில்லை. ஒரு டாக்ஸியை சுற்றி 50 பேர் முண்டியடிக்கின்றனர்.

என்ன காசு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தும் யாரும் வரமாட்டேன் என்கிறார்கள். காய்ச்சல் வேறு எனக்கு. சோர்வுடன் ரோட்டிலேயே, உட்கார்ந்து விட்டேன். கடைசியில், இறைவனிடம் இறைஞ்சினேன். சற்று நேரத்தில் ஒரு டேக்ஸி கிடைத்தது. அதில், உள்ளே உட்கார்ந்து கொண்டால், தலைக்கு 10 ரியால், மேல் டாப்பில் ஏறிக் கொண்டால் 5 ரியால் என்றான். நல்ல வேளை உள்ளே இரண்டு இடங்கள் இருந்தன. நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். நிறைய ஆண்கள் மேல் டாப்பில் ஏறிக் கொண்டார்கள். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

ஹஜ் என்றால் என்ன என்று அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.

-சுமஜ்லா

5 comments:

Menaga Sathia said...

ஹாய் சுகைனா உங்கள் கட்டுரையை படிக்கத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்.குர்பானி பத்தி நல்லா விளக்கியிருக்கிங்க.நானும் தெரிந்துக் கொண்டேன்.இப்போ ஹஜ் பத்தி தெரிஞ்சுக்க அடுத்த கட்டுரைக்கு வெயிட்டிங்.
மேனகா

Anonymous said...

வணக்கம் சுஹைனா,
எப்படி இருக்கிறீங்க?
புதிய பதிவு வந்து விட்டதா என்று அடிக்கடி வந்து பார்த்தேன். இல்லை. சரி நாளை பார்ப்போம் என இருந்தேன், ஆனால் மனம் கேட்காமல் இப்பொழுது பார்ப்போம் எனப் பார்த்தேன், உங்கள் 13வது பதிவைப் பார்த்ததும் மகிழ்வுடன் படித்தேன்.
நீங்கள் எழுதிய நபி இப்ராஹிம் ஐப் பற்றிய இத்தகவலைப் படிக்கும்பொழுது நான் சிறுவயதில் படமாகப் பார்த்த காட்சி இப்பொழுது என் கண் முன்னே வந்தது. படத்தின் பெயர் எனக்கு இப்பொழுது ஞாபகத்தில் இல்லை. (நான் எனது பத்தாவது வயதிலிருந்து ஜேர்மனியில் வசித்து வந்தேன். அங்குள்ள பாடசாலையில் இக்கதையைப் பற்றிய படம் ஒன்று மதங்கள் சம்பந்தமான பாடம் படிக்கும்பொழுது பார்த்த ஞாபகம்.)

அடுத்து, ஹஜ்ஜைப் பற்றிய உங்கள் பதிவைப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

suhainaa,
pathivu potu teengala. nalla epothum pola intresting a irukku. aana konjam eluthu பிழை.sari seythu vidungkal. ithuvarai ethuvum illamal epoo irukku pa. sariya iruka vendum nu than solarean, thapa eduthukkathenga :)

Anonymous said...

ஹாய் மேனகா, பிருந்தா, கவின், எப்படி இருக்கீங்க? நான் கொஞ்சம் அவசரமா டைப் செய்தேன். அதான் எழுத்துப் பிழை. ஃப்ரீயா இருக்கும் போது படித்து சரி செய்து விடுகிறேன். டைபிங் மிஸ்டேக் தான்.
-சுஹைனா.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா உங்களின் ஹஜ் கட்டுரையை தொடர்ந்து படித்து வருகிறேன்.ஹஜ்ஜின்போது என்னென்னெ செய்ய வேண்டும் என்பதை அழகாக எழுதுகிறீர்கள்.நிறைய பேருக்கு இந்த கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.வாழ்த்துக்கள்.