Thursday, February 5, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 6

நாங்கள் சென்னை சென்று சேர்ந்ததும், அங்கு ரயில்வே ஸ்டேஷனில், ஹஜ் கமிட்டி தொண்டர்கள் எங்களை வரவேற்று, வேனுக்கு அழைத்துச் சென்றார்கள். வழக்கமாக தங்க வைக்கும் சூளை நடராஜா தியேட்டர் அருகில் இருக்கும் ஹஜ் கமிட்டி ஹவுஸ்ஃபுல்லாக இருந்தததால், எங்களை எக்மோர் இம்பாலா ஹோட்டலில் தங்க வைத்தார்கள்.

அடுத்த நாள் வெள்ளியன்று காலை, எங்களை அவர்கள் வாகனத்திலேயே, ஹஜ் கமிட்டிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஹஜ் கமிட்டி பில்டிங்கில் எங்கள் பாஸ்போர்ட் மற்றும் ப்ளைட் டிக்கட் வழங்கப்பட்டது. தொழுகை விரிப்பு, ஜம் ஜம் நீர் கொண்டு வர 10 லிட்டர் காலி கேன், சிறிய ஹேண்ட் பாக், தவாப் மணி (counting beads), செருப்பு போடும் பை ஆகிய அன்பளிப்புகளும் வழங்கினார்கள். ஹேண்ட் லக்கேஜ் தவிர மீதி லக்கேஜ்களை, அங்கு இருந்த கவுண்டரில் ஒப்படைத்தோம். எடை சரி பார்க்கப்பட்டு அவை வாங்கப்பட்டன.

வெள்ளியன்று முழுவதும் இம்பாலா ஹோட்டலில் இருந்து விட்டு சனிக் கிழமை காலை மீண்டும் ஹஜ் கமிட்டிக்கு வந்தோம். திருவிழா கூட்டம் போல் ஜே ஜே என்றிருந்தது. என் 12வயது மகளையும், 5 வயது மகனையும் பிரியும் ஆதங்கம் மனதில் சூறாவளியாய் சுழன்றடித்தது. என் மகள் பரவாயில்லை; பிரிவின் சோகம் முகத்தில் தெரிந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என் மகன் அப்பாவியாக என்னிடம் கேட்கிறான், “மம்மி ப்ளைட்டில் இடமில்லாததால் தானே என்னை அழைத்துச் செல்ல மாட்டேங்குறீங்க, நான் வேணா மடியில் உட்கார்ந்து கொள்ளட்டுமா?” என்று. எனக்கே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

வழக்கமா, என் பையன் அது வேணும், இது வேணும் என்று அடம் பிடிப்பான். அன்னிக்கு நான், குழந்தைகளை மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போய், என் மகனுக்கு அவன் கேட்காமலே, பலூன், கூலிங்கிளாஸ் கண்ணாடி, பூ லைட், வாட்சு என சின்ன சின்ன பொருட்கள் ஆசையாக வாங்கித் தரவும், அவன் கேட்கிறான் என்னிடம், “ என்னை விட்டுட்டுப் போகிறதுனால தான் நான் கேட்காமலே எனக்கு வாங்கித் தரீங்களா?” என்று. ஆனா என் மகள் மட்டும் எதுவும் கேட்கவில்லை. “வேண்டாம் மம்மி, எனக்கு மனசு எப்படியோ இருக்கு, எனக்கு எதுவும் வேண்டாம்” என்று பெரிய மனுஷியாக சொல்கிறாள். அதைக் கேட்டு எனக்கும் மனம் கனத்து விட்டது.

நாங்கள் பீச்சில் இருக்கும் போது, மிக அருகாக ஒரு ப்ளைட் பறந்தது. நான் என் குழந்தைகளிடம், “ நாளைக்கு நைட் 9 மணிக்கு இதே மாதிரி ஒரு பளாஇட் பார்த்தீங்கன்னா எனக்கு டாட்டா காண்பியுங்கள். நானும் பார்த்தால் தெரியாவிட்டாலும் உங்களுக்கு டாட்டா காண்பிக்கிறேன்.”, என்றேன்.

இரவு குழந்தைகள் என் பெற்றோருடன் தங்கி விட, நாங்கள் இம்பாலா ஹோட்டல் திரும்பினோம். விடிந்ததும் கிளம்பி, டி. நகரில் நடந்த அறுசுவை டாட் காமின் கெட் டு கெதருக்கு சென்றோம், நானும் என் கணவரும். சிறிது நேரம் மட்டுமே அங்கு செலவிட முடிந்தது. லஞ்சுக்கு முன் கிளம்பி, ஹஜ் கமிட்டிக்கு வந்துவிட்டோம்.

இனி அடுத்ததாக, சாப்பிட்டு இஹ்ராம் உடுத்தி கிளம்ப வேண்டும். இரவு 8.30 க்கு ப்ளைட். மாலை 4.30 க்கு ஏர்போர்ட் அழைத்துச் செல்வதாக அனௌன்ஸ் செய்தார்கள். பஸ்ஸுக்கான டோக்கன் கொடுத்தார்கள். எங்களுக்கு பஸ் நம்பர் 9.

குளித்து, சாப்பிட்டு, இஹ்ராம் உடுத்தி ரெடியானோம். இப்பொழுது இஹ்ராம் பற்றி ஒரு சிறு குறிப்பு.

அந்நிய நாட்டவர்கள் ஒவ்வொரு முறை மக்கா நகரில் நுழையும் முன்பும் இஹ்ராம் உடுத்தித் தான் நுழைய வேண்டும். எந்த எல்லையிலிருந்து, இஹ்ராமுடன் செல்ல வேண்டும் என்பது நாட்டுக்கு நாடு அவர்கள் செல்லும் ரூட்டை பொறுத்து மாறுபடும். அந்த ‘எல்லை’ க்கு அரபியில் மீகாத் என்று சொல்வர். இந்தியர்களுக்கான மீகாத், ‘யலம்லம்’ என்ற மலையாகும். இது மக்காவுக்கு தென் கிழக்கே, எமன் நாடு செல்லும் திசையில் சுமார் 70 கிமீ தூரத்தில் இருக்கிறது. இவ்விடமானது, நாம் ப்ளைட்டில் பறாந்து செல்லும் போதே வந்து விடும் என்பதால், ப்ளைட் ஏறும் முன்பே இஹ்ராம் உடுத்திக் கொள்ளனும். ஆனால் இஹ்ராமுக்கான நிய்யத்து (நிய்யத்து என்றால், மனதிற்குள் சங்கல்பம் செய்தல்) ப்ளைட் மேலே செல்ல ஆரம்பித்தவுடன் செய்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு வழக்கமாக அணியும் ஆடை தான் இஹ்ராம். தலைமுடி உதிராத வகையில் தலையில் ஒரு துணி கட்டிக் கொள்ளணும். முகத்தை மறைக்கக் கூடாது.

ஆண்களுக்கு தையல் இல்லாத ஆடை அணிய வேண்டும். 2 1/2 மீட்டர் அளவினாலான 2 தையலில்லாத வெள்ளைத் துணிகளை ஒன்று வேட்டி போல் கட்டிக் கொள்ளணும். ஒன்று வஸ்திரம் போல மேலே உடல் தெரியாதவாறு அணிந்து கொள்ளணும். ஆண்கள் தலை, முகம், கால் பாதத்தில் மேல் பாகம் மூடக் கூடாது.

இஹ்ராமின் போது சில விஷயங்கள் விலக்கப் பட்டுள்ளன. அவை,

நகம், முடி வெட்டக் கூடாது.
வாசனைத் திரவியங்கள் பூசக் கூடாது.
புல், பூண்டுகள் பிடுங்கக் கூடாது.
தரைவாழ் பிராணிகளை வேட்டையாடக் கூடாது. எந்த சிறு உயிரினத்தையும் (ஒரு பேனைக் கூட) கொல்லக் கூடாது.
உடலுறவு கொள்ளுவது, மற்றும் கணவன், மனைவியிடையே இச்சையான வார்த்தைகள் பேசுவது கூடாது.
சண்டை சச்சரவு செய்யக் கூடாது.
அழுக்குத் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

மொத்தத்தில், ஒரு பரதேசிக் கோலத்தில், இறைவனின் சந்நிதானத்தில் ஆஜராக வேண்டும் என்பது அதன் நோக்கம்.

காபாவை ஏழு முறை வலம் வந்து(தவாப் செய்தல்), சஃபா மர்வா குன்றுகளுக்கு இடையே ஏழு முறை தொங்கோட்டம் ஓடி(சயீ செய்தல்), பின் தலை முடி களைந்தபின், இஹ்ராமில் இருந்து வெளிப்படணும். தலை முடி களைதல் என்பது, ஆண்கள் நான்கில் ஒரு பங்கு முடி டிரிம் பண்ணிக் கொள்ளணும். பெண்கள் முடியின் நுனியில் சுமார் ஒரு அங்குலம் அளவிற்கு கத்தரித்துக் கொள்ள வேண்டும்.

முதலில் 4 தொழுகைகள் தொழுதோம்(ஸலாத்துல் சுக்ர் - நன்றி செலுத்தும் தொழுகை, ஸலாத்துல் தவ்பா - பாவமன்னிப்புத் தொழுகை, ஸலாத்துல் ஹாஜத் - நாட்டம் நிறைவேற தொழுகை, ஸலாத்துல் சஃபர் - பிரயாணத் தொழுகை).

பிறகு மச்சான் மற்றும் மாமனார் இஹ்ராம் உடுத்தி, காலின் மேல் பாதம் மூடாத வகையில் ரப்பர் செருப்பு அணிந்து கொண்டனர். நான் தலை முடி உதிராதவாறு டைட்டாக பின்னி, ரிப்பன் போட்டு மடித்துக் கட்டிக் கொண்டேன். பின் ஹஜ் கமிட்டி பில்டிங்கில் கூட்டுப் ப்ரார்த்தனை(துவா) நடந்தது. துவா முடிந்ததும் அஸர்(மாலை நேரத் தொழுகை) தொழுதோம்.

ஆச்சு ஏர்போர்ட் போகும் நேரம் ஆயிற்று. பிள்ளைகள் மற்றும் பெற்றோர், உற்றாருக்கு பர்கத் பணம் கொடுத்தேன். ஒரு சிறிய தொகை கிளம்பும் போது அருகில் இருப்பவர்களுக்கு, இது போல நினைவு பரிசாக தருவது வழக்கம்.

கண்ணீர் மல்க, பிள்ளைகளிடம் பிரியாவிடை பெற்று பிரிந்தேன். ஏர்போர்ட்டுக்கு வந்தால், மனது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்பதால், பிள்ளைகளை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிள்ளைகளாஇ கொஞ்சி முத்தமிட்டு, பாசக் கண்ணீரால் அவர்கள் முகத்தை நனைக்க, பேருந்தில் ஏறி அமர்கிறோம், ஏர்போர்ட் செல்ல. விழியில் நீரோடு அவர்களைப் பார்த்து கையசைத்தேன், கையசைத்தேன், கடைசி புள்ளியாய் அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரை கையசைத்துக் கொண்டே இருந்தேன்.

வீட்டிலிருந்து கிளம்பும் முன் நான் எழுதிய என் கவிதையை இங்கு நினைவு கூறுகிறேன்.

“ஏகன் கருணையில் இறுதிக் கடமையைத் தான் முடிக்கவே,
வாகை முகம்மது(ஸல்) வாழ்ந்த இடத்தினை நான் காணவே,
பாலை வனத்திலே ஹஜ்ஜை முடித்திட ஓர் பயணமே!
வேதம் தந்த பூமி, காண வந்ததொரு தேன் தருணமே!!

காபா அழகினை காண இருவிழி தான் போதுமா?!
மாறா இறையச்சம் மேவும் விழிகளில் நீர் ஊறுமா?
ஆதம் ஹவ்வா முதல் யாவும் தரிசித்த ஓர் ஆலயம்,
பாதம் பட்டுவிட தானாய் கனிந்தது நல் வேளையும்!!

ஜம்ஜம் கிணற்றுநீர் அள்ளிப் பருகிட போம் தாகமே,
எந்தன் மேனியது வந்த சிலிர்ப்பினில் தள்ளாடுமே!
அந்த இன்பத்தினை எண்ணி உள்ளத்திலே கள்ளூறுமே,
சொந்த மண்ணைவிட்டு இன்ப எல்லை காண எல்லோருமே!!!

வெள்ளை உடையினில் நல்ல கடமையை நிறைவேற்றவே,
சொல்லில் லப்பைக் எனும் புனித மந்திரத்தை அரங்கேற்றவே,
அரஃபா வெளிதனில் ஏந்தும் கரங்களின் தனிக் கூட்டமே!
பாலை மணல்கூட சோலை யாகுமென இனி காட்டுமே!!

அண்ணல் முஹம்மதை(ஸல்) காணக் கல்புக்குள்ளே பேராசையே,
கன்னல் மொழிதனில் சொல்லும் ஸலவாத்தின் தேனோசையே,
இன்னல் கொண்டவர்க்கு தஞ்சம் தந்துவிட்ட பொன்பூமியே,
அன்பு மதினாவின் மக்கள் யாவருக்கும், என் நன்றியே!!

அந்த இறையவன் தந்த அருளதன் ஓர் வடிவமே,
வந்த ஹஜ்ஜுதனை பூர்த்திசெய்வதொரு வைபோகமே!
எந்தன் வீட்டை விட்டு ஏகன் வீட்டை நோக்கி இந்நாளிலே,
சொந்த மண்ணைவிட்டு, தந்தை தாயைவிட்டு நான் செல்கிறேன்!!

ஆசைக்கிளிகளாம், பெற்றக் பிள்ளைகளும் தாய் பொறுப்பிலே,
பாசவிடை தனை நானும் தந்துவிட நீர் விழியிலே!
நேச நட்புதனை விட்டுப் பறக்குகின்றேன் வான் வழியிலே!!
பாச உணர்வுதனில் ஆசி வழங்கிடுவீர் தேன் மொழியிலே!!!“

என் முதல் விமானப் பயணத்தைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் எழுதுகிறேன்.

-சுமஜ்லா

7 comments:

Anonymous said...

ரொம்ப அருமையா இருக்கு சுஹைனா... மேலும் எழுதுங்க இந்த வாரவிடுமுறையில் பார்க்க முடியாது திங்கள் வந்து படிக்கிறேன். எனக்கே தொடர்கதையில பாதி நிக்குதேன்னு இருக்கு :))

ila

Anonymous said...

ஒக்கே இலா, உங்க கமெண்ட்ஸுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா.

Anonymous said...

எனக்கு ஒரே சோகமா போச்சு சுஹைனா, உங்கள் குழந்தைகள் அப்படி சொன்னது.

கவின்.

Anonymous said...

அன்பு சுகைனா,
ரொம்ப நல்லா எழுதறிங்க.
4 ம் பாகத்தில் நீங்க கொடுத்த லிஸ்ட் மற்றும் நைட்டிக்கு பாக்கட் வைத்து கொண்டதுபார்த்த போது எல்லா விசயத்திலும் organised ஆக இருப்பது புரியுது. உங்களிடம் கற்றூ கொள்ள வேன்டிய விஷ்யங்கள் நிரய இருக்கு.
வாழ்த்துக்கள்

kirthika

Anonymous said...

thanks for your comments, krithika and kavin.

rasia said...

சுஹைனா எனக்கும் நெஞ்சம் கணக்கிறது,பிள்ளைகளைவிட்டுசெல்ல கஷ்ட்டமாகதான் இருக்கும் அல்லா எங்களுக்கு எல்லாம் எப்படி நாடுகிறானோ தெரியவில்லை

AslamShariff said...

Assalamu Alaikum Very Good explanation Thanks Vassalam