Tuesday, March 3, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 16


படத்தில் இருப்பது மினாவின் டெண்ட்டுகள். டெண்ட்டுக்கு மேல் தெரிவது மினாவின் மதில் சுவர்.

துல்ஹஜ் மாதம் பிறை 8 அன்று காலை முதல் அடுத்த நாள் காலை வரை மினாவில் தங்கிவிட்டு பின் அரஃபா புறப்பட வேண்டும். நாங்கள் டெண்ட்டில் செட்டில் ஆனோம். எனக்கு இன்னமும் ஃபீவர் அடித்துக் கொண்டே இருந்தது. அதிர்ஷ்டவசமாக, எங்கள் டெண்ட்டுக்கு அடுத்த பில்டிங்கே இந்தியன் மிஷன் ஹாஸ்பிடல். நானும் மச்சானும் ஹாஸ்பிடல் சென்று இருமல் காய்ச்சலுக்கும், கால் மேல் தோல் வறட்சிக்கும் மருந்து வாங்கிக் கொண்டு வந்தோம்.

பீவர் சற்றுக் குறைந்ததும், காலார நடக்கலாம் என்று நானும் மச்சானும் வெளியே ரோட்டுக்கு வந்தோம். இரு மருங்கிலும், ஒரே மாதிரியான கூடாரங்கள். கூடாரத்தில், அந்தந்த நாட்டுக் கொடிகள். வழி மாறிவிடாமல் இருக்க கலர்கலராய் ஒரு சில டெண்ட்டுகளில் ராட்சஷ பலூன்களும் பறக்கின்றன. ஆங்காங்கே மினாவின் மேப்புகளும் பெரிய போர்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. நிறைய மேம்பாலங்கள் போக்குவரத்துக்காக இருக்கின்றன.

நாங்கள் சிறிது தூரம் சென்றதும், பங்களாதேஷ் டெண்டுக்கு வெளியே பிரிண்ட் செய்யப்பட்ட மினாவின் மேப்பை விநியோகித்தனர். அதை நாங்கள் பெற்றுக் கொண்டோம். அதை புர்கா ஜோப்பிலேயே பத்திரப் படுத்திக் கொண்டேன். அது கடைசிவரை எங்களுக்கு மிக உதவியாக இருந்தது. மேப் மட்டும் இல்லாவிட்டால் பாஷை தெரியாத அவ்விடத்தில் எப்பேர்ப்பட்ட புத்திசாலிகளும் வழிமாறிப் போய்விடுவர். பின் கால் தேய டெண்ட்டைத் தேடி அலைய வேண்டியது தான்.

ஒரே மாதிரி வரிசையாக இருக்கும் டெண்ட்டுகள். இது மேம்பாலத்தில் பஸ்ஸில் இருந்து எடுத்தது.

நாங்கள் எங்க பெரியப்பாவுக்கு போன் செய்து, அவர் டெண்ட் எண்ணைத் தெரிந்து கொண்டு மேப்பின் உதவியால் அதைத் தேடிப் போனோம். 2 கி.மீ நடந்த பின் அதைக் கண்டு பிடித்தோம். ஆனால் கேட் கீபர் எங்களை உள்ளே விடவில்லை. ‘பிரதர்’, ‘பிரதர்’ என்று சொன்னதும், பெண் என்பதால் என்னை மட்டும் உள்ளே விட்டான். உள்ளே போய் அவர்களை சந்தித்தேன். அந்நிய மண்ணில் நம் உறவைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம்.

பெரியம்மா, பெரியப்பா எல்லாரும் மிகவும் அசதியாகக் காணப்பட்டனர். பெரியப்பா மகனுக்கு கண்வலி மற்றும் காய்ச்சல். மச்சான் கேட்டுக்கு வெளியே நிற்பதாக சொன்னவுடன் அவர்கள் வெளியே வந்து பேசிச் சென்றனர். திரும்பும் போது, அங்குள்ள மஸ்ஜிதான மஸ்திதே கைஃப்ஃபிலிருந்து, பாங்கொலி கேட்டது. உடனே கையில் வைத்திருந்து, சிறிய முஸல்லா(தொழுகை விரிப்பு) விரித்து தொழுது கொண்டோம். முஸல்லாவை எங்கு சென்றாலும் கையோடு எடுத்துச் செல்வது நல்லது. நான் அதை புர்கா ஜோப்பில் போட்டுக் கொள்வேன்.

பின் டெண்ட்டுக்கு வந்தால், உள்ளே விட மறுக்கிறார்கள். அடையாள அட்டை காண்பித்தோம். எனினும் கழுத்தில் மாட்டக்கூடிய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கேட்கிறார்கள். அது எங்க ப்ளைட்டில் வந்த யாருக்குமே முஅல்லிம் வழங்கவில்லை. கடைசியாக வந்ததால் விட்டு விட்டார்கள் போலும். பாஷையும் தெரியாது. கேட் கீப்பருக்கு நாங்கள் சொல்வதும் புரியவில்லை. பிறகு ஒருவர் எங்கள் உதவிக்கு வந்தார். அவர் எதோ அரபியில் சொல்ல, உள்ளே விட்டு விட்டார்கள். பிறகு இஷா ஜமாத்தாக தொழுதுவிட்டு, பூரி சாப்பிட்டு விட்டு தூங்கினோம்.

காலை தஹஜ்ஜத் நேரம் (நடுநிசி நேரம்) எழுந்து பாத்ரூம் சென்றால், பெரிய க்யூவே நிற்கிறது. அரை மணி நேரம் க்யூவில் நின்று ஒளு (தொழுகும் முன் கைகால், முகம் கழுவுவது) செய்துவிட்டு வருவதற்குள் பஜ்ரு பாங்கு சொல்லி விட்டனர். பின் பஜ்ரு தொழுது கொண்டோம். துல்ஹஜ் பிறை 9. அரஃபாவில் தங்கும் நாள் அனைவரும் ஹாஜியாகும் நாள். மனமெங்கும் மகிழ்ச்சி. உதடுகளில் லப்பைக் முழக்கம்.

காலை உணவாக கட்டிசாதம் சாப்பிட்டோம். எங்கள் பொருட்கள் எல்லாம் பேகில் போட்டு பூட்டினோம். ஒரு சேர் எடுத்துக் கொண்டோம். மற்றும் ஒரு சேர், பேக், எல்லாம் டெண்ட்டில் அருகில் இருந்த இரும்பு தூணில் சங்கிலில் பூட்டால் பூட்டிவிட்டேன். தொலைந்து போகாமல் இருக்க. MTR foods, போர்வை, சால்வை, முஸல்லா, மாத்திரைகள் மட்டும் ஒரு பேகில் போட்டு எடுத்துக் கொண்டோம். அதிக லக்கேஜ் எடுத்துச் சென்றால் நமக்குத் தான் சிரமம்.

பிறகு பஸ் வந்து விட்டதாக சொல்ல, நாங்கள் வெளியே வந்தோம். டெண்ட்டின் அருகிலேயே பஸ் வந்தது. எனினும், கூட்டம் முண்டியடித்தது. முஅல்லிம் நம்பர் 27 என்று பஸ்ஸில் ஒட்டியிருந்தார்கள். ஒவ்வொரு பஸ்ஸாக வந்தது. எல்லாரும் சீக்கிரம் போக வேண்டும் என்ற துடிப்பில் அவசரப் பட்டதால், வயதானவர்கள் பஸ்ஸில் ஏறவே முடியவில்லை. ஒவ்வொரு பஸ்ஸாக ஏற முயன்றும் முடியவில்லை. 60 பேர் உட்காரக் கூடிய பஸ்ஸுக்கு 600 பேர் போட்டியிட்டால் எப்படி இருக்கும்? எல்லாரும் இந்தியர்கள் தான். ஆனால் யாருக்கும் பொறுமை இல்லை. ஒரு வழியாக அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். ஸ்டேண்டிங் தான். கூட்டம் பிதுங்கியது. ஒரு 10 கி.மீ தூரம் சென்றதும், அரஃபா வந்து விட்டது. அதில் எங்களுக்கான கூடாரத்தின் வெளியே இறக்கி விட்டார்கள்.

அரஃபா என்பது, சிறு சிறு குன்றுகளுடன் கூடிய பெரிய மைதானம். அங்கு ஜபலே ரஹ்மத் என்ற சிறு குன்று உள்ளது. அங்கு ஏறி கேட்கப்படும் துவா கபூலாகும்.(ப்ரார்த்தனை நிறைவேறும்). அரஃபாவில் உள்ள மசூதியின் பெயர், மஸ்ஜிதே நிம்ரா என்பதாகும்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் உள் சென்றோம். துணியாலான வெயிலுக்கும் மழைக்கும் தாங்காத தற்காலிக கூடாரங்கள். மினாவை விட குறைந்த எண்ணிக்கையில் பாத்ரூம்கள். கூடாரத்தில் கீழே மணல் தான்; அதன் மேல் விரிப்பு விரித்திருந்தார்கள்.

மதியத் தொழுகையான லுஹர் தொழுதபின் அரஃபாவுடைய நாள் ஆரம்பம் ஆகிறது. சூரியன் மறையும் வரை அது நீடிக்கிறது. அந்நாளில் நிறைவேறாத துவாவே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, இறைவன் நம் ப்ரார்த்தனையை செவி மடுக்கிறான். அந்நாளில் செய்யக் கூடிய முக்கிய வேலையே துவா கேட்பது தான். அன்று ஒரு ஹாஜி, தன் வாழ்நாளில் செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு, அன்று பிறந்த பாலகன் போல் ஆகிறார்.

நாங்கள் சென்றதும் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டோம். டிசம்பரிலும் வெய்யில் சுள்ளென்று அடித்தது. மாமனார் வெளியில் விற்றுக் கொண்டிருந்த திராட்சைகள் கொஞ்சம் வாங்கினார். நெல்லிக்கனி போன்று வித்தியாசமான சுவையில் இருந்த அது வெயிலுக்கு இதமாக இருந்தது.

எல்லோருக்கும் அந்நாட்டு மன்னரின் சார்பாக உணவு வழங்கினார்கள். அன்று இறைவன் தன் விருந்தாளிகளான 40, 50 லட்சம் ஹாஜிகளுக்கும் மன்னர் மூலம் உணவு தருகிறான். எங்கள் அடையாள அட்டையில் பன்ச் பண்ணிவிட்டு உணவு வழங்கினார்கள். பெரிய சிக்கன் பீஸுடன் கூடிய அந்நாட்டு முறையில் செய்யப்பட்ட பிரியாணி அது. சாப்பிட்டு, லுஹர் தொழுதுவிட்டு துவா செய்தேன். எங்கே, எப்படி, என்ன துவா செய்தோம் என்ற விபரங்கள் அடுத்த பதிவில்.

-சுமஜ்லா

9 comments:

Anonymous said...

நன்றாக இருக்கிறது சுஹைனா..கதை கேட்கும் பொழுது, டெண்ட் என்றெல்லாம் சொல்லும் பொழுது..நான் மண் ரோடு, கிராமம் போல் கற்பனை செய்து கொண்டேன்..படத்தில் மேம்பாலம், ரோடு எல்லாம் பார்த்த பொழுது தான் நிகழ்கால உண்மை புரிகிறது. கட்டிடமாக இல்லாமல் டெண்ட் இருப்பது எதற்காக? காரணம் ஏதும் உண்டா?

Anonymous said...

கவின், ஆமாப்பா, நபிகள் நாயகம்(ஸல்), அவ்விடத்தில் டெண்ட் அடித்துத் தான் தங்கினார்கள். அதனால் தான் அப்படி. வேறு காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இருந்தால் விசாரித்து சொல்கிறேன்ப்பா.
-சுஹைனா

Anonymous said...

சமீபத்தியக் கருத்துக்கள் சைட் பாரில் இடம் பெறுமாறு செய்திருக்கிறேன்.
-சுஹைனா

SUMAZLA/சுமஜ்லா said...

ஆனா அது சரியா வருமா தெரியவில்லை.

Anonymous said...

அருமையான எழுத்து நடையில் கதை போல் கூறியிருப்பது பாராட்ட தக்கது.

Anonymous said...

ஹாய் சுஹைனா எப்படி இருக்கிங்க, படிக்க படிக்க மகிழ்ச்சியாக இருக்கு ஹஜ்ஜின் விளக்கம், மிகவும் பிடித்தும் இருக்கிறது உங்களின் பதிவு, வஸ்ஸலாம், [ரைஹானா]

Anonymous said...

உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கின்றது சுஹைனா. அடுத்தது என்ன என்று ஆவலைத் தூண்டும் அளவிற்கு உள்ளது. நானும் ஏன் டென்ட் இல் தங்குவது என்று யோசித்தேன், ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருப்பதாக விளக்கியுள்ளீர்கள்.
நன்று.

அன்புடன்
பிருந்தா

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) மரியாதை கூறிய சகோதரியார் அவர்களுக்கு...இறையருளால் நலம் நாட்டமும் அதுவே!

தாங்களுடைய தளத்தை கண்டேன் அருமை அன்புடன் அபுஜுலைஹா அதிராம்பட்டினம் www.adiraipost.blogspot.com

Anonymous said...

உங்க எல்லார் அன்பையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த அன்பும் உற்சாகமூட்டுதலும் தான், என்னை நடுநிசியிலும் பதிவு போடத் தூண்டுகிறது.

சில சமயம், பகலில் நேரம் கிடைக்காவிட்டால், இரவில் என் கணவரிடம் சொல்வேன், ”இருங்க, ஒரு 10 நிமிஷம், என் பதிவுக்காக நிறைய பேர் காத்துட்டிருப்பாங்க” என்று.

ஹஜ் கட்டுரை மட்டும், ஒரு பதிவு டைப் செய்ய முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. அதனால், பாதி பாதியாக டைப் செய்து சேவ் செய்து கொள்வேன்.

அன்றன்று போடும் கட்டுரையை, அன்றன்று தான் எழுதுவேன். டைம் கிடைத்தாலும் முன்பே எழுதி வைக்க சோம்பல்.