Friday, March 13, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 19

நாங்கள் படுத்துறங்கும் ஜனத்திரளின் ஊடே ஒற்றையடிப் பாதையில் முஜ்தலிஃபாவை நோக்கி நடக்கிறோம். சற்று தூரம் சென்றதும், அப்பாதையும் முற்றுப்பெற்றுவிட்டது. இனி நடந்தால், உறங்கும் மனிதர்களைத் தாண்டித் தாண்டித்தான் செல்ல வேண்டும். சரி என்ன செய்யலாம் என்று பார்த்தோம். சற்று தூரம் வந்த வழியே சென்றால், இடது புறமாக இன்னொரு பாதை தெரிந்தது. அதற்கு, செல்ல ஒரு சிலரை தாண்டத்தான் வேண்டும்.


அதற்குள் ஒரு தமிழர் அங்கு அமர்ந்திருந்தார். அவர் சொன்னார், “நீங்கள் உள்ளே போகவே முடியாது. நானும் சென்று பார்த்துவிட்டு முடியவில்லை என்று திரும்பி விட்டேன். பேசாமல் இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்” என்றார். அதைக்கேட்ட என் மாமனாரும், தனது போர்டபிள் சேரை விரித்து அங்கேயே அமர்ந்து கொண்டார். வாருங்கள் வேறு பாதையில் செல்லலாம் என்று நான் சொல்வதை அவர் கேட்பதாக இல்லை. பிடிவாதம் பிடிக்கிறார். தவறு நேர்ந்து விட்டால், ஒவ்வொருவரும் குற்றப் பரிகாரமாக ஒரு ஆடு பலியிட்டு ‘தம்’ கொடுக்க வேண்டும். ஒரு ஆட்டின் விலை 5000 ருபாய், என மூவருக்கும் 15000 செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யும் ஹஜ் நிறைவேறாமல் போய்விடும்.

எனக்கு ஒரே கவலை, மாமனாரின் பிடிவாதம் கண்டு. “இவ்வளவு கஷ்டப்பட்டீர்கள், இன்னும் சிறிது தூரம் தானே”, என்று அவரிடம் கெஞ்சுகிறேன். அவரோ, “நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள், நான் வருவதாய் இல்லை” என்கிறார். எப்படி அவரை விட்டு செல்ல முடியும். கூட்டத்தில் தொலைந்து போய் விடுவாரே.


நான் உடனே, என் செல் போன் எடுத்து, இந்தியாவில் இருக்கும் என் தந்தைக்கு போன் செய்தேன். அப்போ டைம் இரவு 12.50. இந்திய நேரம் இரவு 3 மணி. என் தந்தை இரு முறை ஹஜ் செய்தவராதலால், அவரிடம் விளக்கம் கேட்கலாம் என்று நினைத்தேன். இரண்டு மூன்று முறை ட்ரை பண்ணியதும், என்னவோ ஏதோவென்று போனை எடுத்தார் அவர். நான் நடந்ததை கூறி, சற்று முன்பாக படுத்துத் தூங்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ இல்லை அவ்வாறு தங்கி விட்டால், ‘தம்’ கொடுக்க வேண்டும். ரொம்ப டயர்டாக இருந்தால், சிறிது நேரம் அவ்விடத்திலேயே உறங்கிவிட்டு, பின் எழுந்து, முஜ்தலிஃபாவினுள் நுழைந்து, மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளை நிறைவேற்றுங்கள்’ என்று என் தந்தை கூறினார்.


தூங்கிவிட்டால், பிறகு அந்த அசதியில் எழும்பி பின் உள்ளே செல்வது முடியாத காரியம் என்று எனக்கு நன்றாக புரிந்தது. என் தந்தை சொன்ன விஷயத்தை, மாமிடம் தெரிவித்து, கெஞ்சி கூத்தாடி, அவரை அழைத்துக் கொண்டு, மாற்றுப் பாதையில் சென்றோம். ‘MUJTHALIFA STARTS HERE' என்ற போர்டை தாண்டி உள்ளே சென்றதும், ஏதோ பெரிய சாதனையே செய்தது போல மன நிம்மதி ஏற்பட்டது.


பின் என் கணவர் பாங்கு சொல்ல, மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளை தொழுதோம். இரு புறமும் ஹாஜிகள் படுத்திருந்ததால் மிக குறுகலான இடம் தான் இருந்தது. தொழுதுவிட்டு, சரி, சற்று தூரம் சென்று படுக்க இடம் தேடலாம் என்று பார்த்தால், மச்சானின் செருப்பு மிஸ்ஸிங். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பாருங்கள் அவ்விடத்தில் கூட இத்தகைய செயல் செய்கின்ற பதர்கள் நுழைந்து விடுகிறார்கள். அங்கு கறுப்பினப் பெண்கள் செருப்பு விற்கிறார்கள். அவர்களுக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்று அவர்களே, நம் செருப்புகளை எடுத்து எதாவது ஒரு இடத்தில் போட்டு விடுகிறார்கள்.


சிறிது தூரம் சென்றதும், நாங்கள் எங்கள் போர்வையை விரித்தோம். வானமே கூரையாக, பூமியே பஞ்சணையாக, அச்சூழ்நிலை, நம் வாழ்வின் உண்மை தத்துவத்தை உணரச் செய்தது. காலை நீட்டக் கூட சரியாக இடமில்லாத அளவுக்கு மக்கள் பெருவெள்ளம். நான் சிறிது நேரம் மனதிற்குள் இறைவனிடம் ப்ரார்த்தனை செய்தேன். எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், “ இறைவன் எல்லா பாவங்களையும் அரஃபாவில் மன்னித்து விடுகிறார். ஆனால், நாம் அடுத்த மனிதரை, எதாவது ஒரு வகையில், புண்படுத்தி இருந்தாலோ, கேடு விளைவித்திருந்தாலோ, அங்கு மன்னிப்பதில்லை. ஆனால், முஜ்தலிஃபாவில் பாக்கியிருக்கும் அப்பாவங்களையும் மன்னித்து விட்டு, அதற்கு பதிலாக, நாம் கேடு விளைவித்த மனிதருக்கு, அதற்கு பகரமாக, நற்கூலி தன் புறத்திலிருந்து இறைவன் வழங்குகிறான்”, என்று. இதை மனதில் கொண்டு, நான் அதற்கும் துஆ செய்தேன்.

பிறகு, அடித்துப் போட்டாற்போல் தூங்கிவிட்டோம். காலை பஜ்ர் நேரம் தான் விழிப்பு வந்தது. அனைவரும் எழுந்து, பாத்ரூம் சென்றால், பெரிய க்யூ அங்கு. பொறுமையோடு காத்திருந்து, காலைகடன்கள் முடித்து, ஒளு செய்து விட்டு தொழுதோம். பிறகு, சைத்தானுக்கு எறிவதற்காக மூவரும் கற்கள் பொறுக்கினோம். மொத்தாம் 70 கற்கள் தேவை, எனினும் எதற்கும் இருக்கட்டும் என்று ஆளுக்கு 80 கற்கள் பொறுக்கினோம்.

பிறகு மினா எப்படி செல்வது என்று விசாரித்தால், அங்கிருந்து, 2 கி.மீ தூரம் தான்; அதற்கு வாகனமெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். சாரை சாரையாக மக்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் நடக்க ஆரம்பித்தோம். எல்லாருக்கும் பசி. வழியில் டீ கிடைத்தது. மச்சானும், மாமுவும் அதை வாங்கி குடித்தார்கள். எனக்கு அப்பழக்கமில்லாததால், நான் குடிக்கவில்லை. வெறும் வயிற்றோடு நடந்தேன்.

இனி அடுத்ததாக சைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். அது அன்று மதியம் லுஹருக்குள் நிறைவேற்ற வேண்டும். எனினும் பெண்கள் வயோதிகர்களுடன் செல்பவருக்கு, மாலை வரை நிறைவேற்ற சலுகை இருக்கிறது. கல் எறிந்து விட்டு, அன்றோ அல்லது அடுத்த நாளோ, குர்பானி கொடுக்க வேண்டும். நாங்கள் அடுத்த நாள் காலை 8 மணிக்கு குர்பானி கொடுக்கும் படி ஒரு மதரஸாவில் பணம் கட்டிவிட்டோம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பிறகு முடி களைய வேண்டும். முடி களைந்த பின், இஹ்ராம் களைந்து, குளித்து, புத்தாடை உடுத்தி, ஹரம் சென்று தவாப் மற்றும் சயீ செய்ய வேண்டும். இதற்கு தவாப் ஜியாரா என்று பெயர். அதன் பின் மீண்டும் மினா திரும்பி அங்கு தங்கியிருந்து மூன்று நாட்கள் சைத்தானுக்கு கல் எறிய வேண்டும். அவ்வளவு தான் ஹஜ் முடிந்தது.

நாங்கள் மினாவை நோக்கி நடக்கிறோம். ஒரு பாலம் தாண்டியது, மினா டெண்ட்டுகள் கண்ணுக்கு தென்பட்டன. புர்கா ஜோப்பில் இருந்த மேப்பை எடுத்துப் பார்த்தேன். வழி புரிந்து விட்டது. எனினும், 2 கி.மீக்கு மேல் நடக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆயினும், நான் அதை சொல்லவில்லை. சொன்னால் வீண் பிரச்சினை வந்தாலும் வரும். இதோ பக்கத்தில் தான், என்று சொல்லி சொல்லியே நடந்து கொண்டிருக்கிறோம்.

மீதி அடுத்த பதிவில்.

-சுமஜ்லா.

6 comments:

Anonymous said...

சூப்பர் ஆகா இருக்குபா...உங்கள் கட்டுரை வழக்கம் போல். இந்த அனுபவ கட்டுரையை புத்தக வடிவில் வெளியிடுங்கள் சுஹைனா..நிறைய பேருக்கு பலன் தரும் அல்லவா?

SUMAZLA/சுமஜ்லா said...

கவின் என்னை வெச்சு காமடி கீமடி பண்ணலையே?!
-சுஹைனா

Anonymous said...

உண்மையிலேயே நன்றாக இருக்கின்றது சுஹைனா.

பலருக்கு (ஆனால் கூடுதலாக இஸ்லாமிய உறவுகளுக்குத் தெரிந்திருக்கலாம்) ஹஜ் பயணத்தின்போது என்னென்ன முக்கிய கடமைகள் நிறைவேற்றவேண்டும் என்று சரியாகத் தெரியாமலிருக்கும். அங்குள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அனைவரும் தொழுகை செய்துவிட்டு வருவதாகத்தான் இதுவரை காலமும் நான் எண்ணியிருந்தேன், அதனால் நான் அதனை யாரிடமும் விளக்கமாகக் கேட்டுத்தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்கள் மூலம் அதன் விபரத்தைச் சரியாகத் தெரிந்து கொண்டேன்.
கவின் கூறியது போல் நீங்கள் புத்தகமாக வெளியிட்டாலும் பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன். நீங்களே பல இடங்களில் கூறியுள்ளீர்கள் அங்கு போவதற்கு முன்பும் மற்றும் அங்கிருந்தும் ஏற்கனவே அங்கு சென்று வந்த உங்கள் உறவினர்களிடம் என்ன எப்படி செய்ய வேண்டியுள்ளது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளதாக. அதனால் நீங்கள் இதனை விளக்கமாக புத்தக வடிவில் வெளியிட்டால் முதன்முதல் அங்கு செல்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
பிருந்தா

Anonymous said...

ஹாய் பிருந்தா,
நீங்க என் மேல் பெரும் மதிப்பு வைத்துள்ளீர். நன்றிப்பா. முதலில் என் கட்டுரை முடியட்டும்ப்பா. அப்புறம் இது பற்றி யோசிக்கலாம்.
-சுஹைனா

Anonymous said...

இல்லை சுஹைனா,

நான் பிருந்தா கூறிய கருத்தை தான் கூறியுள்ளேன். கிண்டல் அல்ல. இஸ்லாமியருக்கு மிகவும் பயன்படும்..கூடவே இஸ்லாமியர் அல்லாதவரும் அதை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அனைத்து மத நூல்களையும் படிக்கும் மக்கள் நிறைய இருக்கின்றனர். உதாரணம் எனது மாமா மற்றும் தம்பி. ஆகவே தான் அப்படி சொன்னேன். ஆமாம் இந்த கட்டுரை முடிந்த பின் செய்யுங்கள். ஆனால் அதற்கான எண்ணம் இப்போவே மனதில் இருப்பது நல்லது தானே!

Anonymous said...

அன்பு கவின் நீங்கள் சொல்வது சரி. எனினும், மக்காவிலுள்ள அமைப்புகள், தோற்றம், வருடத்துக்கு வருடம் மாறுகிறது. போன வருடம் வரை இண்டர்நேஷனல் பாஸ்போர்ட் தேவை இல்லை. இந்த வருடம் தேவை என்கிறார்கள். ப்ளாகில் அவ்வப்போது அப்டேட் செய்யலாம். புத்தகத்தில் முடியாது. எனினும், பார்க்கலாம்ப்பா. நாம் புக் வெளியிடும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா என்ன?!உங்கள் அபரிமிதமான அன்பு, என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது.