Friday, April 10, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 30

நாங்கள் மக்கா நகரை சுற்றிப் பார்க்க, தானாகவே ஒரு ஏற்பாடு ஆனது. எங்கள் லாட்ஜில் இருந்த தமிழர்கள் ஒரு பஸ் அளவில் இருந்ததால், தனியாக ஒரு பஸ் ஏற்பாடு செய்தார்கள். தலைக்கு 10 ரியால் கட்டணம்.

அதன்படி, லுஹர் தொழுததும், மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். சுமார் 2 மணி நேரத்தில் எல்லாம் சுற்றிக் காண்பித்து விட்டு, அஸருக்குள் மீண்டும் எங்கள் லாட்ஜுக்கே கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

நாங்கள் முதலில் சென்றது, தவ்ர் குகை. இங்கு தான் நபிகள் நாயகம் (ஸல்) அடிக்கடி தியானம் செய்ய வருவார்கள். எதிரிகள் துரத்திய போது, இங்கு வந்து தான், அவருடைய தோழர் அபுபக்கர் சித்தீக் (ரலி) உடன் ஒளிந்திருந்தார்கள். அப்போது அவருக்கு உதவும் பொருட்டு, இறைவனின் ஆணைப்படி, உடனே குகை வாசலில் சிலந்தி வலை பின்னிவிட்டது; ஒரு புறா ஒன்றும் அவ்விடத்தில் முட்டை இட்டது. இவ்விரண்டையும் பார்த்த எதிரிகள், உள்ளே யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து திரும்பிச்சென்று விட்டார்கள். அந்த குகை இருக்கும் மலையின் பகுதியை படத்தில் காணலாம்.


அடுத்து, எங்களை மினா வழியாக அழைத்துச் சென்றார்கள். எங்களுக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது. அங்கு, வரிசையாக டெண்ட்டுகள் இருந்தாலும் வெரிச்சென்று இருந்தது. அடுத்து, முஜ்தலிஃபா வழியாக அரஃபா மைதானம் சென்றார்கள். அங்கு இவ்வளவு நாட்களாக அகற்றியும் தீராமல், இன்னமும் குப்பைகள் கிடந்தன.பஸ்ஸிலிருந்து நான் மினாவை க்ளிக்கிய படம் கீழே, பஸ் கம்பிகள் கூட தெரியும்.


கீழே படத்தில் தெரியும் மினாரா, மினாவில் இருக்கும் மஸ்ஜிதே கைஃப் என்னும் பள்ளிவாசலுடையதாகும். மினாவில் இருக்கும் ஒரே மஸ்ஜித் அது தான்.

அரஃபா மைதானத்தில் இருக்கும் குன்றுக்கு ஜபலே ரஹ்மத் என்று பெயர். ஹஜ்ஜின் போது, மிகவும் கூட்ட நெரிசல் இருக்கும் என்று நாங்கள் அங்கு செல்ல வில்லை. இப்போது, அக்குன்றின் மீது ஏறி தொழுது துவா செய்தோம். அங்கு அலங்கரிக்கப்பட்ட ஒட்டகைகள், சவாரிக்காக இருந்தன. 5 ரியால் கொடுத்தால், அவற்றின் மீது சவாரி செய்யலாம். நான் சவாரி செய்ய மிகவும் ஆசைப்பட்டேன். எங்கள் குரூப்பில் வந்தவர் அதன் மேல் சென்று விட்டு, மிகவும் குலுக்குகிறது என்று சொன்னதால், மச்சான் வேண்டாம் என்று சொல்லி விட்டார். கீழே படத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தைப் பார்க்கலாம்.



அரஃபாவில் உள்ள மஸ்ஜிதுக்கு மஸ்ஜிதே நிம்ரா என்று பெயர். அங்கு தான் ஹஜ் பெருநாளன்று, லுஹருடன் அசரையும் குத்பா என்னும் பிரசங்கத்துடன் ஜமாத்தாக தொழுக வைப்பார்கள். அந்த மஸ்ஜிதை நான் பஸ்ஸில் இருந்தபடியே எடுத்த படத்தை கீழே பார்க்கலாம்.



ஜபலே ரஹ்மத் மலையின் மேல் இருந்து, அரஃபா மைதானத்தை ஃபோட்டோ எடுத்தேன். அதைக் கீழே பார்க்கலாம்.


அடுத்ததாக நாங்கள் ஜன்னத்தில் முஅல்லா என்ற கபுருஸ்தான்(graveyard) சென்றோம். அங்கே தான் நபிகளாரின் மனைவி கதீஜா(ரலி) அவர்கள் அடக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சென்று பார்த்த போது, கதீஜா(ரலி) அவர்கள் இஸ்லாத்துக்காக செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து, எங்கள் கண்களில் நீர் துளித்தது.

அவ்விடத்தில், ஆயிரக்கணக்கான புறாக்கள் வசிக்கின்றன. புறாக்களுக்கு தீனியாக கறுப்பினப் பெண்கள் கோதுமை விற்கிறார்கள். கப்ருஸ்தானையும், புறாக்கூட்டத்தையும் கீழே படத்தில் காணலாம்.


கடைசியாக நாங்கள் சென்ற இடம், ஹீரா குகை. இந்த குகையில் முஹமது நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது தான் குர்ஆன் முதன் முதலாக இறங்கியது. இங்கு அவர்கள் பல நாட்கள் தங்கி இறைவனை நோக்கி தியானம் செய்வார்கள். அப்போது, அவர்களுக்கான உணவை, அருமைத் துணைவியார் கதீஜா (ரலி) அவர்கள் மேலே எடுத்துச் செல்வார்கள். தன்னந்தனியாக ஒரு பெண், மின்சாரம் வசதி இல்லாத அந்நாளில் எவ்வளவு கஷ்டப்பட்டு ஏறி இருப்பார்கள் என்று நினைக்கும் போது, மெய் சிலிர்த்தது.

செங்குத்தான அம்மலை மீது, பலரும் ஏறிக்கொண்டிருந்தார்கள். ஏறி இறங்க 2 மணி நேரம் ஆகும் என்பதாலும், எங்கள் பேருந்து அது வரை நிற்காது என்பதாலும், நாங்கள் கீழேயே நின்று துவா செய்து விட்டு திரும்பினோம். படத்தில் ஹீரா குகை இருக்கும் மலைப் பகுதியைக் காணலாம்.


அவ்வளவு தான், பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு, நாங்கள் திரும்பிக் கொண்டிருந்தோம். மக்கா நகரம் பாலை வனம் என்றாலும், எங்கெங்கு திரும்பினாலும், அழகழகான பூச்செடிகள். தண்ணீரை காசு கொடுத்து வாங்கி, இந்த செடிகளை மிக ஆசையாக வளர்க்கிறார்கள். ரோட்டோரங்களிலும், எழில்மயமான பூங்காக்கள். அப்படி ஒரு பூங்காவை நான் எடுத்த ஃபோட்டோ கீழே.


நாங்கள் பஸ் மாற்றிச் செல்லும் மஅபஸல் ஜின் பஸ் ஸ்டாண்டில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரு கட்டிடம் என்னை மிகவும் கவர்ந்தது. முழுவதும் நீல நிற லைட்டுகளால் எக்ஸ்டீரியர் டெகரேஷன் செய்திருக்கிறார்கள். அதன் போட்டோ கீழே.

ஒரு வழியாக நாங்கள் மக்கா நகரை திருப்தியாக சுற்றிப் பார்த்தோம். மீண்டும் எங்க லாட்ஜிலேயே இறக்கி விட்டார்கள்.

சுவாரஸ்யம் தொடரும்...

-சுமஜ்லா

5 comments:

Jaleela Kamal said...

சுகைனா 25 ஆம் அத்தியாயத்தில் நான் போட்ட பதிலை பார்த்தீர்களா?
இது இன்னும் படிக்கல படித்து விட்டு பதில் போடுகிறேன்.

கவின் said...

நபிகள் தியானம் செய்யும் இடம்.

பாருங்கள் சுஹைனா...இப்போத் தான் அவர்கள் தியானம் செய்வார்கள் என எனக்குத் தெரியும். ஞான மார்க்கம் போல் உள்ளது என நான் நினைத்தது சரி தானே?

சுஹைனா said...

ஜலீலாக்கா, நீங்க போட்ட பதிவை, நான் அம்மா வீடு சென்றிருந்த போது பார்த்தேன், அதனால் தான் பதில் போடவில்லை. இப்போது போட்டு விட்டேன்.

கவின், இஸ்லாத்தில் மட்டுமல்ல, எல்லா மார்க்கத்திலும் ஞானமும் ஞானிகளும் இருக்கிறார்கள். ஆனால் சாமானிய மக்கள் எல்லாரும் ஞானவான்கள் ஆக முடியாது.

இறைவனுடைய திருநாமத்தை எவ்வளவும் உச்சரிக்கிறோமோ அவ்வளவு நன்மை என்பது எங்கள் கோட்பாடு. அதற்கு திக்ரு செய்வது என்று பெயர். திக்ரு செய்வதால் நம் ஆத்மா சுத்திகரிக்கப்படுகிறது. நாம் வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட வாயால் திக்ரு செய்யலாம். அதன் ஆழ்ந்த நிலையைத் தான் நான் தியானம் என்று சொன்னேன்.

எல்லா மக்களும் தவ முனிகளாக முடியுமா?

கவின் said...

முடியும் சுஹைனா..தன்னை உணர்ந்தவன் இறைவனை உணர்ந்து விடுகிறான். தானும் அவனும் ஒன்று என உணரும் பொழுது தான் ஞானி ஆகிவிடுகின்றான்.

ஒவ்வொரு ஞானிகளும் அதை மற்றவர்களுக்கு உணர்த்தவே விரும்புகின்றனர். அதைத்தான் நபிகள் அவர்களும் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் சர்க்கரை இனிக்கும் என ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமானாலால் அதற்கு அவர் இனிப்பு என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆகவே இறைவனை உணர்ந்தவர்களால் விளக்க முடிவதில்லை. அதற்காக அவர்கள் விட்டுச் செல்வதில்லை. முடிந்த மட்டும் மக்களுக்கு ஞானம் அடைய வழியை சொல்லிச் செல்கின்றனர்.

கடின முயற்சிக்குப் பிறகே ஞானம் அடைய முடியும் என்பது உண்மை. முயற்சி செய்ய வேண்டும்.

Biruntha said...

உங்களின் படங்களுடன் கூடிய வரலாற்று விளக்கங்கள் என்னைப் போன்றவர்களுக்கு நன்றே புரியும் வண்ணம் உள்ளது. ஒவ்வொரு படங்களையும் என்னென்ன இடங்கள் மற்றும் அதற்குரிய கதைகளைக் கூறி விளக்கம் கொடுத்திருப்பது புரியும்படியாக உள்ளது

அன்புடன்
பிருந்தா