Sunday, April 12, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 31

நான் குர்பானி இறைச்சியை, 2 பொட்டலத்தில் ஃப்ரீசரில் வைத்திருப்பதாக முன்பு சொல்லி இருந்தேனல்லவா? அதை சமைக்கலாம் என்று போய் பார்த்தால் ஒரு பாக்கிட்டை காணவில்லை. மசாலா எல்லாம் ரெடி செய்து விட்டு போய் பார்த்து இல்லை என்பதால் எனக்கு பயங்கர கோபம். எங்கள் ஃப்ளோரில் இருக்கும் தமிழ் பெண் தான் யாரோ எடுத்து அதை சமைத்திருக்கிறார். அதுவும், நிறைய பேர் புழங்கும் இடத்தில் குழப்பம் வரும் என்று, நான் அதில் அடையாளமிட்டிருந்தேன். அப்படி இருந்தும் யாரோ சமைத்து விட்டார்கள். இன்னொரு பொட்டலத்தில் இருந்தது போன்லெஸ். அதனால் அதை இன்னொரு நாள் சமைத்துக் கொள்ளலாம் என்று வைத்து விட்டேன்.

இது நடந்து ஒரு வாரம் இருக்கும். பார்த்தால், அடுத்த பொட்டலத்திலும் பாதி தான் இருந்தது. எனக்கு ஒரே கோபம், ஆத்திரம். யார் எடுத்தது என்று பொதுவாக கேட்டேன். முஸ்தஃபாவின் மனைவி, அதிபா எடுத்து சமைத்ததாகவும், நான் வந்தால் சொல்லிக்கொள்கிறேன் என்று சொன்னதாகவும், காமிலா சொன்னார். அதிபா அப்போது ஹரம் போயிருந்தார்.

நான் மச்சானிடம் நடந்ததை கோபத்துடன் சொன்னேன். மீதி பாதி இறைச்சியையும் அவர்களையே சமைத்துக் கொள்ள சொல்லிவிடு. நமக்கு அது வேண்டாம், என்று அவர் ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். அதிபா வந்ததும், அவரிடம், இது போல சொல்லி விட்டு, அத்துடன் அவரிடம் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள வில்லை.

நாம் வந்திருப்பது புனிதமான இடத்துக்கு. இவ்விடத்தில், இது போல அடுத்தவர் பொருளை அனுமதியின்றி அநாகரிகமாக எடுக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படி எடுத்து சாப்பிட எப்படி இவர்களுக்கு மனம் வந்தது? என்று எனக்கு ஒரே மன உளைச்சல். அதுவும், பெரிய ஆட்டு தொடையை, நானும் மச்சானுமாக வெட்டுக்கத்தி லாட்ஜ் மேனேஜரிடம் இரவல் வாங்கி கசாப்பு வேலை செய்து, மிக கஷ்டப்பட்டு துண்டுகளாக்கி இருந்தோம். அதனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு ‘வேல்யூ ஆடட் ப்ராடக்ட்’. அதான் ஓவர் கோபம்.

அப்புறம், மீதி பாதி இறைச்சியை கடைசி வரை நான் தொடவில்லை. மக்காவிலிருந்து புறப்பட 3 நாட்கள் இருக்கும் போது, அதிபா என்னிடம் வந்து மெதுவாக, உங்களுக்கு வேண்டாமென்றால், அதையும் நானே சமைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டார். சரி என்று சொல்லி விட்டேன்.

என் பிள்ளைகள் அடிக்கடி ஃபோன் செய்து கொண்டே இருந்தார்கள். ஒரே ஏக்கமாக இருக்கும் என்று, வெப் கேமில் பார்க்கலாம் என்று ஆசைப் பட்டேன். அங்கு ஹரமுக்கு அருகில் ஹில்டன் டவர்ஸ் ஹோட்டலில், பிரவுசிங் உள்ளது. அங்கே சென்றபின் தான் தெரிந்தது, ஸ்டார் ஹோட்டலாக இருப்பதால், ரொம்ப காஸ்ட்லி என்று. ஒரு மணி நேரத்துக்கு 50 ரியால் என்றான். அதாவது 650 ருபாய். இதுக்கு போனிலேயே பேசிவிடலாம். வெளியே தனியார் பிரவுசிங் செண்டர் அஜிஜியாவில் இருக்கு, அங்கு மணிக்கு 10 ரியால் தான் என்று அந்த ஆளே சொன்னார்.

சரி என்று ரூமுக்கு வந்து, லாட்ஜ் மேனேஜரிடம் விசாரித்து, அதைத் தேடி நடந்தோம். போகப் போக போய்க்கொண்டே இருந்தோம். இன்னும் வரவில்லை. 2 கி.மி நடந்திருப்போம். கடைசியாக கண்ணில் தென்பட்டது.

அங்கு போனால், ‘லேடீஸ் மம்நூன்’ என்று சொல்லி விட்டான். அதாவது கேபினுக்குள் லேடீஸ் அலவ்டு இல்லையாம். அந்த ஊர் சட்டம் அப்படியாம். ரிசப்ஷனில் இருந்தவன் ஒரு மலையாளி. மச்சானுக்கு, அவ்வளவு தெரியாது என்பதால், நான் அவனிடம் எவ்வளவோ கெஞ்சினேன். அவன் முடியாது என்று சொல்லிவிட்டான். போலிஸ் ரோந்து வருவார்களாம். வந்தால், அவன் ஃபைன் கட்டனுமாம்.

கடைசியில், ரிஷப்ஷனில் இருந்த கம்ப்யூட்டரில் இருந்து, ஒரு ஈமெயில் மட்டும் கொடுக்க அனுமதித்தான். டெஸ்க்டாப்பில் எல்லாமே அரபியில் இருந்தது. எனக்கு ஒன்னுமே புரியவில்லை. கடைசியில், அவன் யாஹூ மெயில் ஓபன் பண்ணி தந்தான். ஒரே ஒரு மெயில் மட்டும் கொடுத்தேன் மகளுக்கு. அதற்கு பைசா வேண்டாம் என்று சொல்லி விட்டான். நாங்கள் நன்றி சொல்லிவிட்டு, ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த வழியே நடந்தோம்.

இடையில், மாமனாருக்கு சளி தொந்திரவு அதிகமாக இருந்தது. அதற்கு, அருகில் இருந்த இண்டியன் மிஷன் ஹாஸ்பிடலுக்கு, லாட்ஜ் மேனேஜர் தவ்ஃபீக் தன் காரில் அழைத்துச் சென்றார். அப்போ கூட இரண்டு ரூம் மேட்ஸ் ஹஸ்பிடலுக்கு வருகிறேன், என்று கிளம்பி விட்டார்கள்.

தவ்ஃபீக் சொன்னார், இப்படி காரில் அதிகம் பேர் ஏறினால், ஸ்பாட் ஃபைனாம். அதுவும், வெளிநாட்டுக்காரர் என்றால், ஊர் புறப்படும் போது, கஸ்டம்ஸில் தான் சிலருக்கு தெரியுமாம், தன் பேரில் ஃபைன் இருப்பது. கட்டினால் தான் போக முடியும் என்பதால், வேறு வழியில்லாமல், ஊருக்கு கொண்டு போக வைத்திருந்த பணத்தை எடுத்து கட்டுவார்களாம். இப்போ ஹஜ் டைம் என்பதால், ரூல்ஸை கொஞ்சம் தளர்த்திவிடுவார்களாம்.

நாங்கள் ஹாஸ்பிடல் போனால், நம்ம பெருந்துறைக்காரரும் ஒரு டாக்டர் அங்கே. அவரிடம் காட்டி மாத்திரை வாங்கிக் கொண்டோம். எல்லாமே ஃப்ரீ. பின் ஷார்ட் கட்டில் நடந்து ரூம் வந்து சேர்ந்தோம். அப்பா, அந்த எட்டு வழி சாலையை க்ராஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

எல்லாமே ரெடி மேடாக இருப்பதால், சமைப்பது எனக்கு ரொம்ப ஈஸி. கொஞ்சம் தக்காளி பேஸ்ட், புளிபேஸ்ட், தேங்காய் பவுடர், வெங்காயம், புளிக்குழம்புப்பொடி போட்டு தாளித்தால், புளிக்குழம்பு ரெடி. அதிலேயே முட்டை உடைத்து ஊற்றினால், முட்டைக்குழம்பு. டப்பாவில் விற்கும் சாஸுடன் சேர்த்த மீனைப் போட்டால், மீன் குழம்பு ரெடி. இப்படியாக, மிக்ஸி, கிரைண்டர் இல்லாவிட்டாலும், மிக வேகமாக சமைத்து விடுவேன்.

காலை அதிகமாக ரவா தோசை தான். அணில் ரவா தோசை மிக்ஸ் ரொம்ப அருமை. நீர் விட்டு கரைத்து, உடனே சுட வேண்டியது தான். தொட்டுக் கொள்ள இருக்கவே இருக்கு இட்லி பொடி. அப்புறம், மக்ரோனி, சேமியா, நூடில்ஸ் எல்லாமே நன்றாக கைகொடுத்தது. அப்பப்போ கடையில் கிடைக்கும் குபூஸ் என்ற ரொட்டியை வாங்கிக் கொள்வோம். கிரேவி நான் செய்து 2,3 நாட்களுக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்வேன்.

அங்கு ஃப்ராசன் frozen கோழிக்கறி, மற்றும் இரால் அடிக்கடி வாங்கிக் கொள்வோம். ஒரு முறை ஃப்ராசன் கொத்துக்கறி வாங்கினோம். lamb என்று போட்டிருந்தது. அதில் 2,3 தடவை கிரேவி செய்தேன். மற்றபடி ஃப்ரெஷா கோழி மற்றும் ஆட்டுக்கறி எங்குமே பார்க்கவில்லை. கடைசியா புறப்பட 2,3 நாள் இருக்கும் போது ஆட்டிறைச்சி பார்த்தேன். கண்ணாடி கதவு போட்ட ஏ.ஸி. ரூமினுள் தொங்கிக் கொண்டிருந்த உரித்த ஆடு, எனக்கு வியப்பை தந்தது.

நாங்கள் அடிக்கடி இரவு ஹரமில் தங்கிக் கொள்வோம். ஒரு முறை, இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவர் வீல் சேரில் உம்ரா செய்வதைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். கால்களும் கைகளும் இல்லாமல், விரல்கள் மட்டும் உடலில் இருந்து வளர்ந்திருக்கிறது. அவரும் இஹ்ராம் உடுத்தி, இன்னொருவர் உதவியோடு சயீ செய்து கொண்டிருந்தார். அவரின் இறைபக்தி என்னை வியக்க வைத்தது.

வீல் சேர் என்றதும், ஞாபகம் வருகிறது. நாம் மக்கா போய் சேர்ந்தவுடன், நமக்கு வீல் சேர் தேவை என்றால் நம்ம முஅல்லிம் நமக்கு அங்கிருக்கும் வரை பயன்படுத்திக் கொள்ள அதை இலவசமாகவே தருகிறார். ஆனால் அதற்கு 300 ரியால்கள் டெபாஸிட் கட்ட வேண்டும். நாம் திரும்பும் போது, வீல் சேரை பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பி தந்து விடுகிறார்கள். இது முன்பே எங்களுக்கு தெரியாமல் போய் விட்டது. அத்தோடு, ஹரமிலும், நம்ம அடையாள அட்டையை அடமானமாக பெற்றுக் கொண்டு வீல் சேர் தருகிறார்கள். உம்ரா முடித்தவுடன், சேரை ஒப்படைத்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

சுவாரஸ்யம் தொடரும்,

-சுமஜ்லா

8 comments:

Biruntha said...

சிலர் அப்படித்தான், உரியவரிடம் கேட்காமல் தங்கள் இஸ்டப்படி பொருட்களை எடுத்து உபயோகிப்பார்கள். ஏனோ அவர்களுக்கு எவ்வித மனச்சங்கடமும் குற்ற உணர்ச்சியும் வருவதில்லை. இப்படிப் பட்டவர்களின் செயல்களால் நானும் பல தருணங்களில் கோபப்பட்டுள்ளேன். பின் என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்வதுதான். வேறு என்ன செய்வது?!
நீங்கள் இவ்வளவு தூரம் முயற்சிசெய்தும் உங்கள் பிள்ளைகளுடன் வெப்காமில் உரையாட முடியாது போனது மனதிற்கு கஸ்டமான விடயம். ஒன்றும் செய்ய முடியாது, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்கள்.
மற்றும் நீங்கள் கொடுத்திருக்கும் தகவலான "வீல் சேரைப் பற்றியது" அங்கு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். ரெடிமீல்ஸ் கொண்டு செல்வதாலும் வீண்செலவுகளையும் அலைச்சல்களையும் பாசை/இடம் தெரியாததால் வரும் அவதியையும் குறைத்துக் கொள்ளலாம்.

அன்புடன்
பிருந்தா

சுஹைனா said...

பிருந்தா,

என்ன சில நாட்களாக உங்களைக் காணோமே என்று பார்த்தேன். மெயில் கூட அனுப்பலாம் என்று தான் நினைத்தேன். எனினும், லீவுக்கு எங்காவது சென்றிருப்பீர்களோ என்று விட்டு விட்டேன்.

பொறுமையாக எல்லாம் படித்து பதிவு போட்டதற்கு நன்றிப்பா.

அழகான ஊரில் அழுக்கு மனிதர்களைப் பற்றி நீங்கள் எழுதி இருந்தது படிக்க வியப்பாக இருந்தது.

இன்னும் 2, 3 அத்தியாயம் மக்காவைப் பற்றி வரும். அடுத்து மதினாவைப் பற்றி எழுதனும்.

அன்புடன் சுஹைனா.

Biruntha said...

நல்லது, தொடருங்கள் சுஹைனா. நான் எல்லாவற்றையும் படிப்பதற்கு (அறிந்து கொள்வதற்கு) காத்திருக்கின்றேன்.
எம்மில் பலர் வெள்ளைக்காரர்களைப் பல விடயத்தில் பெருமையாகக் கூறுவார்கள். (சினிமாவிலும் அடிக்கடி கவனித்திருக்கின்றேன்.) ஆனால் உண்மையில் அவர்களுடன் பழகிப் பார்த்தால்தான் தெரியும், அவர்களைவிட நாம் எவ்வளவோ மேல் என்று. அவர்களைவிட அன்பு, பாசம், வாழ்க்கைமுறை, ஒழுக்கம், நற்குணங்கள், சுத்தம் இப்படிப் பல விஷயத்தில் நாம் சிறந்தவர்கள். ஆனால் நம்மவர்கள் வெளிநாட்டுக் கலாச்சார மோகத்தால் மாறிவருவது கவலைக்கிடமான ஒன்று.

அன்புடன்
பிருந்தா

queen said...

சுஹைனா,
ஒரு வாரமாக உங்கள் blog பார்க்க இயலாமல் போனது. இன்று பார்த்தால் நிறைய மாற்றங்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
//அழகான ஊரில் அழுக்கு மனிதர்களைப் பற்றி நீங்கள் எழுதி இருந்தது படிக்க வியப்பாக இருந்தது.//
ஆம் சுஹைனா. இந்தியாவில் இருக்கும்வரை நான் கூட வெள்ளையர்கள் பற்றி என்னவோ நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சரியான கோமாளிகள்..
மேலும் ஹஜ்ஜிற்கு பிள்ளைகளை அழைத்து செல்வது பற்றி உங்கள் ஆலோசனை சொல்லுங்கள். மிகவும் சிரமமா அல்லது சமளிக்கமுடியுமா என்பது பற்றியும் சொல்லமுடியுமா. நீங்கள் அங்கு பிள்ளைகளோடு வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். உங்கள் கருத்து என்ன என்று சொல்லவும்.
Aji

கதீஜத் said...

அஸ்ஸாலாமு அலைக்கும் தோழி
ஹஜ்ஜில் விவாதம் பண்ணக்கூடாது என்று தெரிந்து வைத்துயிருந்து செயல்படுத்தி இருக்கிறீர்கள்.அதன் நன்மையும் உன்களுக்கே.

சுஹைனா said...

அஜி, பிள்ளைகளை அழைத்துச் செல்வது பற்றி எனக்கு அனுபவம் இல்லை; என்றாலும், தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்த பிள்ளைகள் என்றால் ஓக்கே. மிகவும் சிறு குழந்தைகள் என்றால், கூட்ட நெரிசலில் மிகவும் கஷ்டம். குடும்பத்தினர் ஒரு குரூப்பாக போகும் போது, ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்ளலாம், தனியாக போகும் போது அழைத்துச்சென்றால், நம்ம அமல்கள் பாதிக்கும்.

நான் சிறு பிள்ளைகளை தன் தோளின் மேல் அமரவைத்து தவாப் சுற்றும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இல்லையென்றால் அக்கூட்டத்தில் நசுங்கி விடுவார்கள். அப்படி நசுங்காமல் பாதுகாக்க நாம் மாடியில் பெரிய சுற்றாக சுற்ற வேண்டி இருக்கும்.

நாம் பெரியவர்கள், நேரத்துக்கு நேரம் உணவு உண்ணாவிட்டாலு சமாளித்து விடுவோம், ஆனால் பிள்ளைகள்? அதுவும் மினாவில் ரொம்ப கஷ்டம்.

என்றாலும், பிள்ளைகளை அழைத்து வரத்தான் செய்கிறார்கள். அதுவும் பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது இரண்டு பையன்களை (3 வயது, 4 வயது) அழைத்து வந்திருந்தார்கள்.

சாது பிள்ளைகளை அழைத்துச் சென்றாலும், சுட்டி பிள்ளைகளை அழைத்துச் செல்லக் கூடாது.

ஆமாம் கதீஜத், ஹஜ்ஜில் விவாதம் பண்ணக்கூடாது. அது நம்ம நிம்மதியையும் ஸ்பாயில் பண்ணிவிடும். ஆனால், சைத்தான் எப்பவும் சண்டை மூட்ட ட்ரை பண்ணிக் கொண்டே இருப்பான். நான் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

கதீஜத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் அமல்களை நாச்ம் செய்யவும்,பொன்னான நேரங்களை வீணடிக்கவும் செய்வதே ஷெய்த்தானின் குறிகோள்.அதுவும் ஹஜ்ஜுடைய நேரத்தில் மிக மிக.....கவனமாக இருக்கனும்.ஹஜ்ஜைப்பற்றிய குர்’ஆன் வசனம் (பாகம்-2,வசனம்-197)இதைப்பற்றித்தானே சொல்கிரது.உங்கள் அநுபவும் படித்ததும் எனக்கு இந்த ”ஜிதால்”வசனம் நினைவில் வந்தது.எதையும் அவன் நுழைத்து விடக்கூடாதே என்று நாங்கள் இதை அதிகம் சொல்லிக்கொண்டே இருப்போம்.இதன் பொருளை உங்கள் பயணக்கடுரையில் இடம் பெறச்செய்தால்.......உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை..மன்னிக்கவும்

Jaleela Kamal said...

சுஹைனா நீங்கள் ரெடி மேட் கொண்டு போய் இருந்ததால் ரொம்ப சுலபமாக போச்சு , இப்ப இத படிக்கும் போது என் கிரான்மா ஞாபகம் வருது.
அந்த காலத்தில் கப்பலில் போய் அங்கு ஸ்டவ் அடுப்பில் எல்லாம் சேர்ந்து சமைத்து அங்கே சாமான்கள் வாங்கி சமைத்ததாக சொல்வார்கள்.
ஜலீலா