நாங்கள் மதினா புறப்பட இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அதனால், இங்கு மக்காவில் ஷாப்பிங் எல்லாம் முடித்து விட்டோம். கையில் பணமும் கரைந்து விட்டது. இருந்தாலும், என் கணவர் ஆர்வமாக பொருள் வாங்கிக் கொண்டே இருந்தார். நான், ’பார்த்து செலவு செய்யுங்கள், பணம் பற்றாமல் போய்விடப் போகிறது’ என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தேன். அதற்கு அவர், பற்றாவிட்டால் கையில் இருக்கும் இந்திய ருபாவை மாற்றிக் கொள்ளலாம் என்றார். எனக்கோ, இந்திய ருபாயை மாற்றி செலவு செய்ய பிரியமில்லை. அது ஒரு எமர்ஜென்ஸிக்காக கொண்டு வந்தது, அதனால், அதை அப்படியே திருப்பிக் கொண்டுப் போய் விடணும், என்று எண்ணிக் கொண்டிருந்தேன். செலவு செய்வதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா?
ஒரு நாள் இரவு நாங்கள் இருவரும் ஹரமுக்கு சென்றோம். இரவு அங்கேயே தங்கும் ஏற்பாடுடன் போயிருந்தோம். எங்கள் கைப்பையை, ஒரு இடத்தில், கம்பியில், நம்பர் லாக் போட்டு பூட்டிவிட்டு, தவாப் சுற்ற ஆரம்பித்தோம். ஒரு தவாப் முடித்து விட்டு, பின் சற்று நடக்கலாம் என்று 1ம் நம்பர் கேட் வழியாக வெளியே வந்தோம். அங்கு ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்துக் கொண்டே, கடையில் இருக்கும் சாமான்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போ ஒரு கடைக்குள், சென்ற என் கணவர், அங்கிருந்த லாபிடஸ் செண்ட் ஒன்றை, விலை பேசலானார். அது நம்ம இந்திய பணத்துக்கு, சுமார் ஆயிரம் ருபாய். நான் இந்த நேரத்தில் இவ்வளவு விலை போட்டு, செண்ட் வாங்கணுமா, கொஞ்சம் பார்த்து செலவு செய்யுங்கள், என்று சொன்னேன். இவ்வளவு தான் சொன்னேன், வந்து விட்டது கோபம்.
வாங்காமல், வேகவேகமாக ஹரமின் வாசலுக்கு வந்தார். அவரிடம், ‘ பணம் பற்றாவிட்டால், இந்தியா ருபாயை முறித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீங்க, இந்திய ருபாய் ஆயிரத்தை முறித்தால் கூட வெறும் 78 ரியால் தானே கிடைக்கும், இன்னும் மதினாவில் வேறு செலவு இருக்கு, பேரிச்சம் பழம் ஒரு 25 கிலோ வாங்கணும்’, என்று நான் சொன்னதைக் கேட்டு, ‘நீ சொல்லித் தான் இதெல்லாம் தெரியணுமா, எனக்கு தெரியாதா? என்று சொல்லிவிட்டு, ஹரமினுள் சென்றவர், டக்குனு ஒரு பெரிய தூண் அருகில் நின்றவர் தொழுக ஆரம்பித்துவிட்டார், இஷா.
நான் ஏற்கனவே தொழுதுவிட்டேனாதலால், தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் திரும்பி பார்த்தால், அவரைக் காணவில்லை. என்னை தனியாக விட்டு விட்டு தவாப் சுற்ற போய்விட்டார். அவர் கோபத்தை காட்டுவதற்காக இவ்வாறு செய்தார் என்று புரிந்துகொண்டேன். அந்த கூட்டத்தில், கண்டிப்பாக கண்டுபிடிப்பது சிரமம். ஆனால், இருவரிடமும் செல் இருப்பதால், பிரச்சினை இல்லை.
சரி, அந்த செண்டுக்காகத் தானே இவ்வளவு கோபம் என்று, நானே தனியாக போய் அந்த செண்டை வாங்கிக் கொண்டேன், 70 ரியால் கொடுத்து. மக்கா போனதிலிருந்து, அது தான் நான் முதன்முறையாக தனியாக செய்யும் பர்சேஸ். வாங்கிய செண்ட்டை கொண்டு வந்து பேகில் வைத்து விட்டு, நானும் தவாப் சுற்ற ஆரம்பித்தேன். மொத்தம் 7 சுற்றில், 4 வது சுற்றின் போது, அவரை பிடித்து விட்டேன். ‘ நான் அந்த செண்ட்டை வாங்கி பேகில் வைத்திருக்கிறேன்’ என்று சொன்னார். சந்தோஷப்படுவார், என்று நான் நினைத்ததற்கு பதிலாக, ‘எனக்கு அந்த செண்ட் வேண்டாம்’ என்று சிறு குழந்தை போல வீம்பு பிடித்தார்.
இதென்னடா, இப்படி சொல்கிறார் என்று, சரி, தவாப் முடித்ததும், திருப்பி கொடுத்து விடலாம் என்று கடைக்குப் போனேன். அப்போ நேரம் விடியற்காலை 3 மணி. கடையைப் பூட்டி விட்டார். இனி என்ன பிரச்சினை வருமோ, என்ற திகிலோடு திரும்பி வந்தேன். நான் கைப்பையை வைத்த இடத்துக்கு வந்து அமர்ந்து கொண்டேன். இருவரும் தனித் தனியாக தவாப் சுற்றுவது, அது தான் முதல்முறை.
கைப்பை வைத்திருக்கும் இடம் அவருக்கு தெரியுமாதலால், பஜ்ரு தொழுதபின், அவர் அங்கே வந்தார். இருவரும் ஹரமை விட்டு, வெளியே வந்தோம். அவர் என்னிடம் கோபமாக, உன்னிடம் இருக்கும் பணம் முழுவதையும் கொடு, என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டார். லேடீஸிடம் இருப்பது தான் சேஃப்டி (மேலே பர்தா அணிந்திருப்பதால்) என்பதால், அதுவரை அதிகம் பணம் என்னிடம் தான் இருந்தது.
நான் மெதுவாக, செண்ட்டை மாற்றணுமே என்றேன். நான் வரவில்லை, நீ வேணா போய் மாற்றிவிட்டு வா, என்றார். கடை இருப்பது 1ம் நம்பர் கேட்டில், நாங்கள் பஸ் ஏறப் போக, இப்போ நிற்பது 24ம் நம்பர் கேட்டில். போய்விட்டு, 11 மணிக்கு திரும்ப வந்து மாற்றிக் கொள்ளலாம் என்றார். விடிய விடிய விழித்திருந்து விட்டு, 11 மணிக்கு திரும்ப வருவதென்பது முடியாத காரியம் என்று எனக்கு தெரியும். நான் தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன், சரி செண்ட்டை நானே வைத்துக் கொள்கிறேன் என்று சொல்ல மாட்டாரா என்ற நப்பாசையுடன். அவரோ, நீ வேணா மாற்றிட்டு வா, நான் ரூமுக்குப் போகிறேன், என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் காத்திராமல், வேகவேகமாக சென்று கூட்டத்துடன் கலந்து பஸ் ஏற போய்விட்டார்.
அந்நிய மண்ணில், இப்படி, கையில் இருந்த பணம் பூராவும் வாங்கிக் கொண்டு, நம்மை அநாதை மாதிரி விட்டு விட்டு போய்விட்டாரே என்று எனக்கு ஒரே ஆத்திரம், கோவம், இயலாமை எல்லாம் சேர்ந்து அழுகையாக மாறிவிட்டது. இறைவனுடைய சந்நிதானத்தில் நின்று அழுகிறேன், கதறுகிறேன், “ இறைவா, நான் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக வாங்கிய அப்பொருளினால், எனக்கு இப்படி ஒரு சோதனையா? யா அல்லாஹ், நீ நிச்சயம்,என்னை பாதிக்காத வகையில் மச்சானுக்கு பாடம் கற்பிக்கணும்” என்று கையேந்தி கதறி துவா செய்துவிட்டு, என் மாமனாருக்கு போன் செய்து விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு, ஒரு நடை பிணம் போல, வாங்கிய கடையை நோக்கி அழுதபடி நடக்கிறேன்.
அந்த கடை, நல்ல வேளை திறந்திருந்தார்கள். தங்கக் கலரில் கூல் ஜக் வாட்டர் கேன்கள் ஏற்கனவே, எங்க சொந்தக்காரர்கள் 7 பேருக்கு வாங்க வேண்டும் என்று நானும் மச்சானும் பேசி வைத்திருந்தோம். இப்போ, அந்த செண்ட்டை கொடுத்து விட்டு, தலா 10 ரியால் என, 7 கூல் ஜக்குகள் வாங்கிக் கொண்டு, பஸ்ஸுக்கு நடக்கிறேன்.
பஸ்ஸுக்கு காசு இல்லை, ஃப்ரீ என்பதால் பிரச்சினை இல்லை. நான் 2 பஸ் மாற்றி, ஒரு வழியாக எங்கள் ரூமுக்கு வந்து சேர்ந்த போது, மணி காலை எட்டாகிவிட்டது. நடந்ததை சுருக்கமாக மாமனாரிடம் சொல்லிவிட்டு, 2 நாட்கள் மச்சானிடம் பேசவே இல்லை. அவர், இந்த கூல் ஜக்கை பார்த்து விட்டு, இது அதை மாற்றி வாங்கியது என்று தெரியாமல், இது வாங்க மட்டும் காசு ஏது, என்று இன்னமும் என்னிடம் கோபமாகி பேசவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பின், ஒரு வழியாக நான் அவரை சமாதானம் செய்து, மனசு விட்டு பேசினதால், கோபம் குறைந்தது. யார் மேல் தப்பு இருந்தாலும் பெண்கள் தான் விட்டுக் கொடுக்கணும் என்பது, பல வீடுகளில் எழுதப்படாத சட்டம் தானே இன்றும். ஆனா, ஆண்டவன் கேட்பான், என்று நான் பலமாக நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை.
இது நடந்து ஒரு நான்கு நாட்கள் இருக்கும். அன்று வெள்ளிக் கிழமை. கடைசி வெள்ளிக்கிழமையதலால், எல்லாரும் ஜும்ஆ (வெள்ளிக்கிழமையின் ஸ்பெஷல் தொழுகை) தொழுகைக்கு, ஹரமுக்குக் கிளம்பினோம். நேரமே போனால் தான் உள்ளே இடம் கிடைக்கும் என்பதால், அன்று சமைக்க நேரமில்லை. சரி கடையில் சாப்பிட்டுக் கொள்ளலாம், என்று முடிவு செய்தோம். என் செருப்பு பிய்ந்து போய் விட்டதால், மஅபஸ் பஸ்ஸ்டாண்டில் ஒரு செருப்பு 6 ரியாலுக்கு வாங்கினோம்.
தொழுதுவிட்டு சாப்பிட ஹோட்டலைத் தேடிப் போனால், அங்கு டோக்கன் சிஸ்டம், அதாவது பே அண்ட் ஈட். நானும் மாமனாரும் மேலே மாடியில் சென்று அமர்ந்தோம், மச்சான் டோக்கன் கவுண்டரில் நின்று கொண்டிருக்கிறார், பணம் செலுத்தி ஆர்டர் பண்ண. நாங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருந்தோம், எல்லாருக்கு நல்ல பசி. மச்சான், பேயறைந்த முகத்தோடு, மாடிக்கு வருகிறார், பணத்தை காணவில்லை, என்ற அதிர்ச்சியான செய்தியோடு.
இடுப்பில் வால்பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துத் தான் எனக்கு செருப்பு வாங்கி தந்தார். அதன் பிறகு யாரோ கூட்டத்தில் அடித்து விட்டார்கள் போலுள்ளது. அல்லது வால்பை ஜிப்பை சரியாக பூட்டாததால், கீழே விழுந்து விட்டதா, அதுவும் தெரியவில்லை. போச்சு, கையில் இருந்த பூரா பணமும் போயிருச்சு. இனி அழுது என்ன பிரயோஜனம். சுமார் ஒரு 5000, 6000 ருபாய் மதிப்பு பணம் இருக்கும்.
எனக்கு என்ன தோணியது தெரியுமா? கவலையை விட, “இறைவா, நீ பாடம் கற்பித்து விட்டாய்” என்று இறைவனின் திருவிளையாடலை எண்ணி எண்ணி வியந்தேன். ’பாருங்க, பணம் என்னிடம் இருந்திருந்தா தொலைந்திருக்காதுல்ல, பூரா பணத்தையும் வாங்கிட்டு, அநாதை மாதிரி தனியா விட்டுட்டு போனீங்கல்ல, அதான், அல்லாஹ் உங்களை சோதிச்சுட்டான்’ என்றேன். அவர் பேசாமல் தலையை குனிந்து கொண்டார். விட்டார் அழுதுவிடுவார் போல் இருந்தது. ஆனா, அவர் உணர்ந்து கொண்டார் தன் தவறை.
இனி சாப்பிட வேண்டும், என்ன செய்வது? மாமனாரிடம் ஒரு 15 ரியால் இருந்தது, என்னிடம் புர்கா ஜோப்பில், பர்சேஸின் போது மிச்சம் வாங்கிப் போட்ட பணம் ஒரு 10 ரியால் இருந்தது. அவரிடம் கையில் இந்திய ருபாய் இருந்தது, நல்ல வேளை. அதை வேறிடத்தில் வைத்திருந்ததால், தப்பி விட்டது. ஆனால் மாற்றி வரணுமே.
இருப்பதைக் கொண்டு என்னவோ சாப்பிட்டோம். என்ன கொடுமை பாருங்க, ரைஸும் சிக்கனும் வாங்கியாச்சு, கிரேவி வாங்க காசில்லை. தாளிச்ச சாப்பாட்டை, கிரேவி இல்லாமயே, கஷ்டப்பட்டு சாப்பிட்டோம், ஒரு வழியா. இறைவன் எல்லாரையும் விட பெரியவன் இல்லையா?
சாப்பிட்டு, பின், பணத்தை ரியாலாக மாற்றிக் கொண்டு, ஹரமில், 24ம் நம்பர் கேட்டுக்கு வெளியே இடது புறமாக இருக்கும், லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் செக்ஷனுக்கு சென்று புகார் கொடுத்தோம். ஒரு வேளை, கீழே விழுந்து, அதைக் கண்டெடுத்தவர் கொண்டு வந்து கொடுத்திருந்தால், கிடைக்குமே என்ற நப்பாசையுடன். 2, 3 நாட்கள் போய் போய் கேட்டோம். கடைசிவரை, கிடைக்கவே இல்லை.
என்ன அழகாக இறைவன் பாடம் கற்பித்து விட்டான் பாருங்கள் ! இப்பொழுது நினைத்தாலும் எனக்கு சிலிர்க்கிறது !!
-சுமஜ்லா.
8 comments:
நீங்கள் எழுதியதை படித்ததும் நிஜமாக ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எல்லாம் அவன் செயல்.
ஆண்கள் சிலவிடயங்களில் யோசிக்காமல் நடந்து கொள்வார்கள், ஏதாவது நடந்த பின் தான் தங்கள் பிழையை உணருவார்கள்.
எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்தாலும் உள்ளுக்குள் கணவன் மேல் ஒரு பாசம் பரிவு கண்டிப்பாக இருக்கும். ஆனால் ஆண்கள் அப்படியில்லை. தங்கள் கோபத்தைக் கடுமையான முறையில்தான் காட்டுவார்கள். "இவருக்கு என்மேல் அன்போ அக்கறையோ இல்லையா" என நானே பலதடவை யோசித்திருக்கின்றேன். சமாதானமான பின் சிறுகுழந்தைகளை விடக் கீழ் இறங்கி வருவார்கள். ஒன்றும் செய்யமுடியாது, பெண்கள் எந்த விடயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது.
அன்புடன்
பிருந்தா
யார் மேல் தப்பு இருந்தாலும் பெண்கள் தான் விட்டுக் கொடுக்கணும் என்பது, பல வீடுகளில் எழுதப்படாத சட்டம் தானே இன்றும்.ஆமாம் சுஹைனா,உண்மையான வார்த்தை.
ஆம் சுஹைணா. கோபத்தை வெளியில் காட்டி புலம்பாமல் இறைவனிடம் முறையிட்டு அழுதுவிட்டால் அதற்குரிய பலன் கிடைத்துவிடும். என்னதான் பாசமான கணவர் என்றாலும் இதுப்போல் வீம்பு செய்யும்போது கோவமாகத்தான் வரும். ஆனால் பிருந்தா சொல்லியிருப்பது போல் பிழையை உணர்ந்ததும் மிகவும் இறங்கிவிடுவார்கள். அப்போதும் நம் மனம் அவர்கள் கவலைபடுவதை தாங்காமல் அவருக்காக இறைவனிடம் கையேந்தி நிற்போம். ஹஜ் பயணங்களில் இது போல் சண்டை சச்சரவு வருவது அதிகம் என்று சொல்வார்கள்.உங்கள் மாமாவோடும் மச்சானோடும் பலவகையில் சமாளித்து பயணத்தை நல்ல முறையில் முடித்துவர மன வலிமை கொடுத்த இறைவனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.
என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.
வீம்பு பிடிக்கும் குழந்தைகள் எல்லாருமே சிறு குழந்தைகள் போலத்தான், கோபம் இறங்கியதும், மன்னிப்பை வார்த்தையால் கேட்க மாட்டார்கள், ஆனால் தன் செயலால் - அதீத அன்பால் வெளிப்படுத்தி விடுவார்கள்.
நாங்க குடும்பத்தோடு கொடைக்கானல் டூர் 2 நாட்கள் போய்விட்டு, இப்போ தான் வந்தோம். சோ, ரொம்ப டயர்டு. பதிவு போட இன்னும் 2 நாட்கள் ஆகும்.
மேலே,வீம்பு பிடிக்கும் குழந்தைகள் என்பதை ‘வீம்பு பிடிக்கும் ஆண்கள் என்று மாற்றி படிக்கவும்.
சுஹைனா, நீங்கள் நல்லா ஓய்வெடுத்தபின் உங்கள் பதிவைப் போடுங்கள். நாங்கள் காத்திருந்து படிக்கின்றோம்.
அன்புடன்
பிருந்தா
சுகைனா நீங்கள் சொல்வதும், ஆசியா சொல்வதும், சரியே யார் மேல் தப்பு இருந்தாலும் பெண்கள் தான் விட்டு கொடுக்கனும் என்பது ஏட்டில் எழுதபடத ஒன்றாகும். நூற்றுக்கு நூறு உண்மை.
இது பற்றி நானே உங்களிடம் கேட்கனும் என்று நினைத்தேன் அங்கு செல்பவர்களை ஷைத்தான் இவ்வாறெல்லாம் தூண்டி சண்டை போட வைக்கும் என்றார்கள்.
நல்ல இருந்த மாதிரி தீடீருன்னு சண்டை வருமாம், பதிலுக்கு நீங்கள் ஒன்றும் சொல்லாததால் நல்லதா போச்சு இல்லை அங்கு எல்லோருககுமே இது போல் சண்டைகள் உண்டு.
அதிலிருந்து நாம் விடுபடுவது தான். நல்ல இருந்த தம்பதிகளுக்கு கூட அங்கு சண்டை வருமாம்.
பிள்ளைகள் விடுமுறை ஆரம்பித்து விட்டதா அதான் கொடைகானல் போய் வந்தீர்களா?
Post a Comment