Monday, April 27, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 35

அன்று வெள்ளிக்கிழமை. 10 மணிக்கு மதினா புறப்பட வேண்டும் என்று முஅல்லிமின் ஆட்கள் வந்து சொல்லியிருந்தார்கள். நாங்கள் அதிகாலை எழுந்து, ஹரமுக்கு செல்லலாம் என்று இருந்தோம். மச்சான் இன்னும் தவாபு விதா முடிக்கவில்லை. நானும் மாமும் முடித்து விட்டோம்.

காலையில் ஹரமுக்கு கிளம்பினோம். அதற்குள் எனக்கு பெண்களுக்கேயான மாதத்தொந்திரவு ஆரம்பித்து விட்டது. எனக்கு ஒரே அழுகை, ஹரமுக்குள் போக முடியாதே என. சரி, பரவாயில்லை, வெளியிலாவது நின்று பார்த்து வரலாம் என்று கிளம்பி விட்டேன். மச்சான் ஹரமுக்குள் தவாப் செய்யப் போய் விட்டது. நான் 45ம் தலைவாசலுக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு, உள்ளே தெரியும் காபாவைப் பார்த்து, அழுதவாறு, இரு கரமேந்தி துவா செய்து கொண்டிருந்தேன். இங்கு இருந்து பார்த்தால், தங்கக் கதவோடு கூடிய அமைப்பு தெரியும்.

கடைசிப் பார்வையை எனக்கு இப்படி தூரத்திலிருந்து பார்க்கும் படி வைத்து விட்டாயே இறைவா! என்று அழுது புலம்புகிறேன். காணக்கிடைக்காத அழகிய தரிசனம், கோடிப் பேரில் எங்களைத் தேடி வந்ததே! அது இன்றுடன் முடியப் போகிறதே! இனி என்று காண்பேன், என் வாழ்வில்?! என் நேசனுடைய அழகிய வீட்டை, காணும் பாக்கியம், இனி எப்போது கிடைக்கும்? என்னிறைவா, என்னைப் பொருந்திக் கொள். நான் செய்த நல்ல அமல்களை ஏற்றுக் கொள். மீண்டும், மீண்டும் இதைக் காணும் பாக்கியத்தைத் தா! கதறிக் கதறி அழுகின்றேன். இதோ, இதை எழுதும் போது, அந்நினைவுகளின் தாக்கத்தால் அழுது விட்டேன்.

மச்சான் தவாப் முடித்து வந்து விட்டது. கண்களில் தாரை தாரை வழிந்த நீரை, துடைக்கக் கூட தோன்றாமல், கால்கள் துவள தள்ளாடியபடி நடக்கிறேன். காபாவின் உருவத்தை முடிந்தவரை மனதிற்குள் நிரப்பிக் கொண்டேன். மீண்டும் 1ம் நம்பர் வாசல் வந்தவுடன், காபா கண்ணுக்கு தென்படுகிறது. அழுது வறண்டிருந்த கண்களில் மீண்டும் கண்ணீர் குளம் கட்டிக் கொண்டது. ரூமுக்குத் திரும்ப பஸ் ஏற வருகிறோம். பாபுஸ்ஸலாம் வாசல் இருக்கும் பகுதியை அண்ணாந்து பார்க்கிறேன். பெரிய கோட்டையைப் போல தெரிகிறது. இனி, இறைவனின் அந்த கோட்டைக்குள் நுழையும் நாள் எப்போதோ? என்ற ஏக்கப் பெருமூச்சுடன் நடக்கிறோம். கட்டுமானப் பணி நடப்பதால், கிரானுடன் இருக்கும், தூரத்துக் கோட்டை இதோ:



பஸ் ஏறி மஅபஸல் ஜின் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தால், எங்கள் பஸ் இல்லை. கடைசி ஆக ஆக, ஏரியா வாரியாக பஸ் இல்லாமல், எல்லா பஸ்ஸும் எல்லா ஏரியாவுக்கும் சென்று வந்தது. காரணம் பாதி மக்கள் போய் விட்டனர். அதனால், பஸ்ஸின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைத்து விட்டனர். நாங்கள் ஒரு பஸ்ஸில் போய் ஏற, டிரைவர், இந்த பஸ் ஹனூஃப் போகாது என்று சொல்ல, நாங்கள், அங்கிருந்த இந்திய கொடி போட்ட, ஓவர் கோட் அணிந்த பஸ் இன்சார்ஜ் ஆளிடம் போய் சொன்னோம், நாங்கள் மதினா கிளம்புவதால், உடனே போக வேண்டும் என்று. அவர், அந்த டிரைவரிடம் சொல்லி, எங்களை அதே பஸ்ஸில் ஏற செய்தார்.

ரூம் வந்து பார்த்தால், எல்லாம் தலை கீழாக இருந்தது. பொருட்கள் எல்லாம் அலங்கோலமாய். திரைகள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு, பொருட்கள் எல்லாம் குவிக்கப்பட்டு! முஅல்லிமின் ஆட்கள் அவசரப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அவசர அவசரமாக பேக் செய்தோம். மதிய உணவுக்கு கட்டுசாதம் செய்து வைத்திருந்தேன். இப்போ குபூஸ் ரொட்டியும் தாலும் கடையில் வாங்கி வந்திருந்தேன். எல்லாரும் சாப்பிட்டோம். பிறகு, ஃபிரிஜ்ஜில் இருந்த பொருட்களெல்லாம் காலி செய்து, பேக் செய்தோம். எல்லாரும் தலைக்கு 5 ரியால் போட்டு, மொத்தமாக, லாட்ஜ் மேனேஜருக்குக் கொடுத்தோம். மற்றபடி, மதினாவில் 10 நாட்கள் தான் என்பதால், காய்கறி மற்றும் மளிகை என, சற்று அதிகப்படியாக இருந்த பொருட்களெல்லாம், அவர்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.

அன்று வெள்ளிக் கிழமை. மக்காவின் மண்ணில் கடைசியாக ஒரு ஜும்ஆத் தொழ வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை. அதனால் எல்லா ஆண்களும், பொருட்களை மட்டும் பஸ்ஸில் ஏற்றி விட்டு, 12.30க்கு பக்கத்து பள்ளியில் போய் ஜும்ஆ தொழுது விட்டு, பஸ்ஸில் ஏறுவதாக முடிவு செய்தார்கள். நாங்களும் ஒரு வழியாக பேக்கிங்கை முடித்து, ஒவ்வொரு லக்கேஜாக முஅல்லிமின் ஆட்களிடம் ஒப்படைத்தோம். கைப்பை தவிர எல்லாம் பஸ்ஸில் ஏற்றப் பட்டு, கட்டப்பட்டது.

முஅல்லிமின் ஆட்கள் எப்படியாவது எங்களைக் கிளப்பிவிடப் பார்க்க, ஜும்ஆ தொழுகாமல் கிளம்ப மாட்டோம், என்று சொல்ல, பஸ்ஸினும் ஏறிய ஒரு சிலரை, வெளியே விடாமல் கதவை சாத்தி விட்டார்கள். நம்ம ஆட்களிடம் தான் ஒற்றுமை இல்லையே. இப்படியாக ஒவ்வொருவராக ஏறி விட்டார்கள். பிரயாணத்தில் ஜும்ஆ கடமை இல்லை என்று ஒரு சிலரும், ஜும்ஆ தொழுதே ஆக வேண்டும் என்று ஒரு சிலரும் வாக்குவாதம் பண்ண ஆரம்பித்தார்கள். மச்சான், மற்றும் இன்னும் ஒரு மூன்று பேர் மட்டும் பஸ்ஸில் ஏற மாட்டேன் என்று முரண்டு பிடிக்க, பெரிய பெரிய ஆலிம்கள் எல்லாரும் கூட ஏறிட்டாங்க, இவனுக்கு மட்டும் என்ன, என்று மாமனார் சொல்ல, கடைசியில், ஜும்ஆவுக்கு வழியில் இருக்கும் பள்ளியில் நிறுத்துகிறேன் என்று சொல்ல, இவர்களும் ஏறி விட்டார்கள்.

முதலில் காபாவுக்கு, அடுத்தது ஹரமுக்கு, அடுத்தது லாட்ஜுக்கு, அடுத்தது மக்கத்து மண்ணுக்கு, என வரிசையாக பிரியாவிடை கொடுத்தபடி பிரிகிறோம். ‘மண்ணே போய்வரவா? மாமரமே போய்வரவா?’ என்ற பழைய பாட்டை என்னிஷ்டப்படி மாற்றி பாடுகிறேன், துக்கத்துடன். இங்கு, வீட்டுக்கு போன் செய்து, கிளம்பிய விஷயத்தை சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் பேசினேன்.

ஒரு டர்னிங், திரும்பியவுடன், மக்கா எல்லை முடிந்து மதினாவை நோக்கிய பாதை ஆரம்பிக்கிறது. அதை ஒரு படம் எடுத்தேன். அது இதோ.



கனத்த மனத்துடனும் கண்ணில் நீருடனும் ஆரம்பித்த பயணம் நீண்ட நெடும் பயணமாக நீடித்தது. வழியில் எங்க முஅல்லிம் அலுவலகத்தில் பஸ் நின்றது. அங்கு, எங்களுக்கு, பிஸ்கட், ஜெல்லி, குக்கீஸ், கேக், ப்ரூட் டிரிங்க் அடங்கிய மீல்ஸ் கிட் கொடுத்தார்கள். முஅல்லிம் வந்து எங்களுடன் பேசினார். அவரிடம் எல்லாரும் ஜும்ஆ தொழுக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு அவர், ‘பிரயாணத்தில் ஜும்ஆ கடமையில்லை என்று இறைவனே சொல்லி இருக்கிறான். இறைவன் சொன்னதுக்கே நீங்கள் மாறு சொல்கிறீர்களா’ என்று கேட்டார். அதற்கு எங்களுடன் இருந்த ஒரு ஆலிம் எழுந்து சொன்னார், ‘பிரயாணத்தின் நடுவில் தான் ஜும்ஆ கடமையில்லை. ஆனால் நாம் இப்போ தானே புறப்படுகிறோம்’ என்று. அதற்கு அவர் ஏதோ சொல்லி விட்டு, இறங்கி விட்டார்.

ஒரு மணி நேர பிரயாணத்துக்குப் பின், ஒரு மசூதியில் டிரைவர் நிறுத்தினார். சரியாக அப்போது தான் தொழுகை ஆரம்பிக்கிறது. மச்சான் ஒளுவுடன் இருந்ததால், போய் தொழுகையில் சேர்ந்து விட்டது. ஒரு சிலர், ஒளு செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்து விட்டது. யார் யார் ஜும்ஆ தொழுக தேவையில்லை என்று சொன்னார்களோ, அவர்களுக்கெல்லாம் ஜும்ஆ கிடைக்கவில்லை. யார் யார் ஜும்ஆ தொழுதே ஆக வேண்டும் என்று இருந்தார்களோ, அவர்களெல்லாம் தொழுது விட்டார்கள். ஆம்! இறைவன் நம் எண்ணத்தைத் தான் பார்க்கிறான், என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா?

வழியில் சாப்பாட்டுக்கு மோட்டலில் நிறுத்தினார்கள். நாங்கள் பொரித்த சிக்கன் மட்டும் வாங்கி, கட்டு சாதத்தை சாப்பிட்டுக் கொண்டோம். வழியில் ஒவ்வொரு தொழுகைக்கும் நிறுத்தினார்கள். எல்லா பள்ளியிலும் பெண்கள் தொழுக இட வசதி இருந்தது. கடைசியாக, காலை 12 மணிக்கு புறப்பட்டது, வழியெங்கும் சலவாத் ஓதியபடி, இரவு சுமார் எட்டு மணிக்கு மதினா வந்து சேர்ந்தோம்.

மதினாவின் எல்லையைத் தொட்டதும், தூரத்தில், எம்பெருமானாரின் அடக்கஸ்தலமான மஸ்ஜிதுந்நபவி என்ற பெயருடைய புனித ரவ்லா ஷரீபின் மினாரா கண்களுக்கு தென்பட்டது. “அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ், அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்” என்று ஆண்கள் எல்லாரும் பரவசத்துடன் முழங்க, என் கண்கள் மீண்டும் உடைப்பெடுத்துக் கொண்டன, ஆனந்தத்தில். மதினாவில் எவ்வளவு பெரிய கட்டிடங்கள் இருந்தாலும், தூரத்தில் இருந்தே மினாரா கண்களுக்கு தெரிவது ஒரு அற்புதமே.

பஸ்ஸை மதினாவில் ஓரிடத்தில் கொண்டுப் போய் ஒரு மணி நேரம் வெயிட்டிங் போட்டு விட்டான், எங்களுக்கான ரூம் அலாட் செய்து தருவதற்காக! மதினாவில் பிரயாண நேரம் போக எட்டு நாட்கள் தங்குவதால், சுழற்சிப்படி காலியாக காலியாக ரூம் அலாட் செய்கிறார்கள். தூரத்தில் கிடைப்பதும், பக்கத்தில் கிடைப்பதும் அவரவர் அதிர்ஷ்டம். மதினாவில் முழுமையாக 40 நேரத் தொழுகையை (தினமும் 5 நேரம் வீதம் எட்டு நாட்கள்) இமாம் ஜமாத்துடன் தொழ வேண்டும் என்பதைத் தவிர வேறு வேலை இல்லை. அப்படி ஒருவர் தொழுது விட்டால், முனாஃபிக் என்னும் நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலையும், நரகில் இருந்து விடுதலையும் கிடைக்கிறது.

கடைசியாக எங்களுக்கான லாட்ஜை அடைந்தோம். பார்த்தால், லாட்ஜுக்கு நேர் பின்புறம் ஹரம்(ரவ்லா ஷரீப்). இதையும் ஹரம் என்று சொல்வார்கள். எங்கள் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இறைவனுக்கு மனதார நன்றி சொன்னோம். எங்களுக்கான ரூம் 12ம் மாடியில் கொடுத்தார்கள். 6 பேருக்கான ரூம், 8 பேருக்கான ரூம் என்று இருந்தது. நாமே குரூப் சேர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் மூன்று பேர் தான் இருந்தோம். எங்களுடன், வடநாட்டு ஆண்கள் மூன்று பேரை குரூப் சேர்த்தார்கள். நாங்கள் வேண்டாமென்று சொல்லி, மெட்ராஸ்காரர்கள் மூன்று பேரை சேர்த்துக் கொண்டோம். மெட்ராஸ்காரர்கள், அக்கா தங்கை மற்றும் தங்கையின் கணவர். அக்கா தங்கை இருவரும் சிடுமூஞ்சிகள். வேறு வழியில்லாமல் எங்களுடன் இணைத்துக் கொண்டோம். எங்கள் கையிலிருந்த பெயர் பொறித்த கங்கணத்தைப் பார்த்து, எங்கள் நம்பர் எழுதிக் கொண்டு ரூம் அலாட் செய்தார்கள்.

மற்ற விஷயங்கள் அடுத்த அத்தியாயத்தில்.......

-சுமஜ்லா

2 comments:

Biruntha said...

உண்மையிலேயே அந்தப் புனித இடத்தை விட்டு அகல மிகவும் கஸ்டமாக இருந்திருக்கும். உங்கள் நிலையை என்னால் நன்கு உணர முடிகின்றது. நீங்கள் எழுதியதைப் படிக்கும் எனக்கே மனம் கனத்து விட்டது என்றால் நேரில் அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? ஜூம் ஆ தொழுகையைப் பற்றி எழுதியதை படிக்கும்பொழுது இறைசெயலை நினைத்து மெய்சிலிர்க்க வைக்கின்றது.
உங்களின் //‘மண்ணே போய்வரவா? மாமரமே போய்வரவா?’// இந்தப்பாடலைப் படிக்கும்பொழுது சிறுவயதில் என் நாட்டை விட்டுப் பிரிந்து வந்த நினைவு வந்தது. இனி எப்போ அங்கு காலடி வைப்பேனோ?:-(

அன்புடன்
பிருந்தா

சுஹைனா said...

இலங்கைத் தமிழர்களை நினைத்தால் ரத்தக் கண்ணீர் தான் வருகிறது. அதுவும், வருடக்கணக்காக, சொந்த மண்ணை விட்டு பிரிந்து அயல்நாட்டில் வசிப்பவர்கள் தன் நாட்டு மக்களை எண்ணிக் கொள்ளும் மனசஞ்சலம் சொல்லமுடியாதது. அனுபவித்தால் தான் அவ்வேதனை புரியும்.