Saturday, May 30, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 38

நான், ஹரமை பல கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது மச்சான் சொன்னார், பாரு, அரை நிலா அழகாக இருக்கிறது. நிலாவுடன் சேர்த்து ஒரு போட்டோ எடு என்று! அவ்வாறே எடுத்தேன். பின் இரண்டு நாட்கள் கழித்து, அப்போது வானில் நிலாவே தென்படவில்லை, ஆனால், நான் எடுத்த புகைப்படத்தில் அழகாக முழு நிலா, அல்லது நிலா போன்ற வடிவம் தெரிந்தது. எப்படி என்றே தெரியவில்லை. இதோ அந்த அற்புதமாக புகைப்படம்,


நான் குளித்து புத்தாடை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருசமூகம் செல்ல புறப்பட்டேன். நபிகளாரின் வழியான முழுக்கை வைத்த சுடிதார் தைத்திருந்தேன். அதில், பச்சைக் கலர் நபிகளாருக்கு உவப்பான கலர் என்பதால் எல்லாரும் பச்சை எடுப்பார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், நான் அப்படி தேடவில்லை. ஆனால், எதேச்சையாக பச்சை நிறமே அமைந்து விட்டது. கண்களுக்கு சுர்மா இட்டுக்கொண்டு, சுன்னத்தான தோற்றத்தில், ஸலவாத் ஓதியவாறு, சென்றேன்.

பெண்களுக்கென்று தனி நேரம் உள்ளது. பஜ்ரு தொழுகைக்குப் பின், காலை ஒன்பதுமணி வரை, பின் லுஹர் தொழுகைக்குப் பிறகு, அஸர் வரை, பின் இஷா தொழுகைக்குப் பிறகு இரவு 10.30 மணி வரை பெண்களுக்கான நேரம் ஆகும். ஆண்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் சென்று ஸலாம் சொல்லி வரலாம்.

நான் இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் சென்றேன். முதன் முதலில், ஹரமுக்குள் செல்வதால், மனித புனிதர், ஈருலக நாயகரின் முன் செல்லப் போகிறோமே என்ற தவிப்பு, உடலில் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஹரமுக்குள் நுழைந்தால், அலங்காரம், அற்புதம் அவ்வளவு அழகாக இருந்தது உள்வேலைப்பாடு. எல்லா விளக்குகளும் தங்க நிறத்தில் ஜொலித்தன. உள்ளே தூண்கள் நிரம்பிய பெரிய பெரிய வளாகங்கள், ஒரே வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக ஆயிரம் தூண்களுக்கும் மேல் இருக்கும். முகப்புத் தோற்றத்தையும் தூண்களின் அழகையும் அலங்கார விளக்கையும் கீழே பார்க்கலாம்.



முதன் முதலில், நாம் பார்க்க போகிறோம். அப்போ, தள்ளு முள்ளும் நெரிசலும் ஏற்பட்டால், அது கண்ணியக்குறைவான செயலல்லவா? அதனால், உள்ளே ஹாலில் எல்லாரையும் அமர வைத்து விடுகிறார்கள். நூறு நூறு பேராக உள்ளே அனுப்புகிறார்கள். எல்லா நாட்டவர்களும் தமது நாட்டுக்கு திரும்பிப் போய் விட்டார்கள். இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தான் கடைசி. அதனால், அங்கு எங்கு பார்த்தாலும், இந்திய முகம். ஒரு சில துருக்கியர்களும் ஈராக்கியர்களும் இருந்தார்கள். தமிழ்நாட்டு மக்களை அதிக அளவில் மதினாவில் தான் சந்திக்க முடிந்தது.

நாங்கள் அமர்ந்து காத்திருந்த இடத்தில், உருது பேசும் வாலண்டியர்கள்(பெண்கள்) உருதுவில், அந்த இடத்தின் மகத்துவத்தைப் பற்றி, மைக்கில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். எனக்குதான் உருது அரை குறை ஆச்சே!

அந்த இடத்தில் இருந்து பார்த்தால், உள்ளே ரவ்லா தெரிகிறது. சுபுஹானல்லாஹ்! மயன் சிருஷ்டித்த மாளிகையோ, மண்ணுலகில் ஒரு மறுவுலகோ என அவ்வளவு பேரழகு, அந்த இடம். கலர் கலராய், உலகத்திலேயே உயர்தரமாய், பெயிண்ட் அடித்துள்ளார்கள். எங்கெங்கு காணினும், ‘லாயிஹா இல்லல்லாஹ்’ ஒரு புறமும், ‘முஹமது ரஸுலுல்லாஹ்’ மறுபுறமுமான, திருக்கலிமா எழுதப்பட்டிருக்கிறது. அதிலும், வெள்ளை நிற விளக்குகளில் கூட, கண்ணாடியிலேயே கலிமா பொறிக்கப்பட்டிருந்தது அற்புதத்திலும் அற்புதம்.

இந்த அழகையெல்லாம், புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. ஏன், உள்ளே கேமரா மற்றும் செல்போன் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. வெளியே நுழைவாசலிலேயே, பையை செக் பண்ணுவதோடு, நம்மையும் தடவிப் பார்த்துத் தான் உள்ளே அனுப்புகிறார்கள். என்றாலும், மச்சான், எப்படியோ, ஆண்கள் பக்கம் உள்ளே எடுத்துப் போய், போட்டோ எடுத்து வந்தார்கள். அது தான் கீழே பார்ப்பது. இவ்விடம் ரவ்லத்துல் ஜன்னா என்னும் சுவர்க்கப் பூங்காவின் ஒரு பகுதியாகும். இதன் அருகில் தான், நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இதைப்படிக்கும், பார்க்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஸலவாத் ஓதிக்கொள்ளுங்கள். காணக் கிடைக்காத அரிய புகைப்படம் இது.


பெருமானார்(ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தில், அவர்களுக்கு அடுத்ததாக, அவர்களின் மார்புக்கு நேராய் தலை வைத்தவர்களாக, முதல் கலிபா, அபுபக்கர் சித்திக்(ரலி) அவர்களும், அடுத்து, இவர்களின் மார்புக்கு நேராய் உமர்(ரலி) அவர்களும் துயில் கொண்டுள்ளார்கள்.

ரவ்லா ஷரீபில், சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பச்சை வண்ண கம்பளம் விரித்திருப்பார்கள். அது, தான் மேலே சொல்லப்பட்ட ரவ்லத்துல் ஜன்னா என்றழைக்கப்படும் சுவர்க்கப் பூங்காவாகும். அது வானுலகில் உள்ள சுவர்க்கத்தின் ஒரு துண்டு என்று சொல்லப்படுகிறது. மறுமை நாளில் அது மீண்டும் வானுக்கு உயர்த்தப்படும், என்பது நம்பிக்கை. அதனால், அவ்விடத்தில், இரண்டு ரக்அத் தொழுது, “என்னிறைவா! சொர்க்கத்துக்குள் நுழைந்தவர்களை மீண்டும் திருப்பி அனுப்ப மாட்டேன் என்று நீ வாக்குறுதி தந்திருக்கிறாய். அதனால் என்னை கண்டிப்பாக நீ சொர்க்கத்தில் சென்று சேர்க்க வேண்டும்” என்று ப்ரார்த்தனை புரியுமாறு, ஊரில் உள்ளவர்கள் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

அபூலுபாபா தூண் உட்பட, ஏழு தூண்கள் உள்ளன. அந்த தூண்களின் அருகெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். அதனால் நாமும் அங்கு தொழுது கொள்வது சிறப்பு. மொத்த கம்பளம் விரித்திருக்கும் இடத்தையும், ஆண்களுக்குப் பாதி பெண்களுக்குப் பாதியாக பிரித்திருப்பதால், ஒரு தூண் மட்டுமே பெண்கள் பகுதியில் வரும். அஸ்ஹாபுஸ்ஸுப்பா, என்ற திண்ணை தோழர்கள் அமர்ந்திருந்த பகுதியும், நபிபெருமானார்(ஸல்) நின்று தொழவைத்த மிம்பர் படியும் ஆண்கள் பகுதியில் உள்ளது.

இது நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்ந்த வீடு மற்றும், அவர்கள் தொழவைத்த பள்ளிவாசல் ஆகும். இங்கு அவர்கள் வாழ்ந்த வீட்டை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உள்ளே செல்ல அனுமதி இல்லை. சுற்றிலும் ஆளுயரத்துக்கு சல்லடை போன்ற வேலைப்பாட்டுடன் கூடிய இரும்பு கிராதி அமைத்துள்ளார்கள். தலையை உயர்த்திப் பார்த்தால், அவர்கள் காலத்தைய மர உத்திரம் ஒன்று தென்பட்டது. அதைப் பார்த்ததும் கண்களில் நீர் கசிந்தது.

ஆண்கள் பகுதிக்கும், பெண்கள் பகுதிக்கும் இடையே பார்ட்டிஸன் கொண்டு பிரித்திருக்கிறார்கள். பெண்கள் பகுதி, நபிகளாரின் சமூகத்துக்கு நேராக இல்லாமல், சைடாக இருக்கும். காரணம், பெண்கள் கோஷா பர்தா முறையில் இருக்க வேண்டும் என்பதாலும், நாயகம்(ஸல்) அவர்கள் இறப்பெய்தி விட்டாலும், உள்ளே மாவுல் ஹயாத்தாக(உயிருள்ள ஆத்மாவாக) இருக்கிறார்கள் என்பதாலும் ஆகும். நபிகள் பெருமானாராக இருந்தாலும், பெண்கள் முன் செல்லக் கூடாது என்பது இதன் கருத்து.

நான் ஸலவாத் ஓதியவளாக முன்னேறி உள்ளே செல்கிறேன்.

“அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலுல்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்!!
அஸ்ஸலாமு அலைக்கும் யா கலிபத்து ரஸூலில்லாஹ், அபுபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு!
அஸ்ஸலாமு அலைக்கும் யா அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு!!”

கண்களில் பெருகிய நீரூற்றை துடைக்கக் கூட தோன்றாமல், நிற்கிறேன். எப்பேர்ப்பட்ட தர்பார் அது?! எத்துணை உள்ளங்கள் காணக் கிடைக்காதா என்று ஏங்கும் காட்சி அது?! இறைவா, எனக்கு நீ இப்பாக்கியத்தைத் தந்தாயே உனக்கே எல்லாப் புகழும்! உள்ளம் அரற்றுகிறது! உயிரும் ஆனந்த மிகுதியில் அழுகிறது! கள்ளமில்லா மனதுடன், நாயகத் திருமேனியின் மீது, காதல் ததும்புகிறது! சொல்ல தெரியவில்லை எனக்கு! சொல்லாமல் இருக்கவும் முடியவில்லையே அந்த இன்பத்தை?!

வெள்ளை நிற தூண் அருகே, பச்சை கம்பளத்தில் இரண்டு ரக் அத் தொழுதேன். இறைவனிடம், ஈருலக மீட்சிக்காகவும், மறுமையில் நபிநாதர்(ஸல்) அவர்களின் சிபாரிசு கிடைக்கவும் துவா செய்தேன். அடுத்து, யார் யாரெல்லாம் பெருமானாருக்கு, சலாம் சொல்லி அனுப்பினார்களோ, அவர்கள் அனைவரின் சலாமையும் எத்தி வைத்தேன். அங்கிருந்து என் தந்தைக்கு செல்லில் போன் செய்து, அவரையும் அப்படியே சலாம் சொல்ல சொன்னேன்.

நிறைந்த மனதுடன் ரூமுக்கு திரும்பினேன்.

மதினாவில் நாங்கள் கண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி அடுத்த அத்தியாயம்...

-சுமஜ்லா.

6 comments:

Biruntha said...

எப்பிடி இருக்கீங்க சுஹைனா? நான் இந்தப் பக்கம் வரவே இல்லை. பிளாக்கை திறந்தால் அடிக்கடி எரர் வந்ததால் வர முடியாமல் போய்விட்டது. இப்போதான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.
மிகவும் அற்புதமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையெல்லாம் எங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் உங்களால் கிடைத்ததையிட்டு இறைவனுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள் பல. அந்தப் புகைப்படங்களைப் பார்த்து நானும் நீங்கள் எழுதிய ஸலவாத் ஓதினேன். தவறில்லையே? இருப்பின் மன்னிக்கவும்.
அந்த வியப்பான முழு நிலா புகைப்படமும் பார்த்து வியந்தேன்.

அன்புடன் பிருந்தா

Asma said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! உங்கள் ஃபோட்டோக்கள் அனைத்தும் அருமை! அந்த நிலாவுடன் கூடிய ஹரம் அவ்வளவு அழகு, மாஷா அல்லாஹ்! அங்கங்கு எதையும் மிஸ் பண்ணாமல் க்ளிக் பண்ணி, எங்களோடு அலுக்காமல் பகிர்ந்துக்கொள்கிறீர்கள். ரொம்ப நன்றி சுஹைனா! உங்களுக்கு மெயில் பண்ணவேண்டும் என்றிருந்தேன். இன்ஷா அல்லாஹ் எனக்கு முடியும்போது மெயிலில் அல்லது மெஸ்ஸெஞ்ஜ‌ரில் கான்டக்ட் பண்ணலாம். உங்களின் கம்ப்யூட்டர் வைரஸ் சரியாகிவிட்டதா? இறைவன் விரைவில் சால்வ் பண்ணித்தருவான். ஓகே சுஹைனா, பிறகு பேசுவோம்!

Jaleela Kamal said...

சுகைனா நாங்க உம்ரா சென்ற போது இந்த அளவிற்கு உற்று நோக்க வில்லை,எங்க‌ளை அங்கு உள்ளே விட்ட‌தே பெரிய‌விஷிய‌மா இருந்த‌து.

சூப்பரா அதை பற்றி ஒன்று விடாமல் எழுதியதும் இல்லாமல், உங்கள் மச்சானை விட்டு போட்டோவும் எடுத்து வந்துள்ளீர்கள், ரொம்ப அருமையான இருக்கு. மறு படி அங்கு போகும் போது தான் இதேல்லாம் பார்க்கனும், இன்ஷா அல்லாஹ்.

julaiha said...

அஸ்ஸமாமு அலைக்கும் ...சுஹைனா நலமா , நானும் தொடர்ந்து முடியும் பொழுதுலாம் படித்துவருகிறேன் சில நேரம் பதிவுகள் போட்டால் வருவதில்லை ஆகையால் நான் போடுவதில்லை இதில் அனைத்து போட்டோக்களும் அருமை எங்களுக்கெல்லாம் எப்பொழுது காணும் பாக்கியம் கிடைக்குமோ என்னவோ அல்லாஹ்தான் அருள்புரியனும் காண கிடைக்காத
நபிகள் நாயகத்தின் (ஸல்) அடக்கஸ்தலத்தின் போட்டோவை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு சந்தோஷம் மற்றதையும் தொடர்ந்து எழுதுங்கள் நிறைய தெரிந்துக்கொண்டோம் இன்னும் அறிய ஆவலாக உள்ளோம்

SUMAZLA/சுமஜ்லா said...

ஆமாம் ஜலீலா அக்கா, நீங்கள் சொல்வது உண்மை தான்.
ஜுலைஹா! இனி ப்ளாகில் கமெண்ட் ஆப்ஷன் பிரச்சினை வராது என்று நினைக்கிறேன். அப்படி வந்தால், முடிந்தால், எனக்கு ஈமெயிலில் தெரிவியுங்கள் யாராவது ப்ளீஸ்!

SUMAZLA/சுமஜ்லா said...

வைரஸ் சரியாகி விட்டது அஸ்மா. நம்ம ஹார்ட் டிஸ்க்கின், காலி இடத்தை, தேவையில்லாத ஃபைல்கள் கொண்டு நிரப்பும் பொல்லாத வைரஸ் அது. பெரும் தலைவலியாகி விட்டது. அத்துடன், VGAவும் போய்விட, வேறென்ன செலவு தான்!

மெஸ்ஸெஞ்சரில் நான் அதிகம் வருவதில்லை. gtalk ல் ஆட் பண்ணிக் கொள்ளுங்கள்.