Thursday, March 19, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 21

நான் முந்திய அத்தியாயத்தில் கூறிய படி எங்கள் லாட்ஜை அடைந்தோம். லாட்ஜ் என்று நான் குறிப்பிடுவது, மக்காவில் எங்கள் தங்குமிடத்தைத் தான். அதாவது, நாங்கள் ஹஜ்ஜுடைய 5 நாட்கள் மட்டுமே மினாவில் தங்கியிருப்போம். மினா மக்காவில் இருந்து(ஹரமில் இருந்து) சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது. எங்கள் தங்குமிடம் அதாவது லாட்ஜ், மினா செல்லும் வழியில் ஹரமில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருந்தது. அதனால் எங்களுக்கு மினா பக்கம்.

எங்கள் லாட்ஜை அடைந்தோம். காலை டிஃபன் செய்தேன். இந்நேரம் நாங்கள் பணம் கட்டிய நிறுவனத்தில், எங்களுக்கான குர்பானி கொடுக்கப்பட்டிருக்கும். இனி அடுத்ததாக, ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ளணும். பெண்கள் நுனியில் ஒரு இன்ச் அளவுக்கு முடி வெட்டிக் கொள்ளணும். நான் முடிவெட்டி இஹ்ராமில் இருந்து வெளிப்பட்டதும், மச்சானுக்கு ரேசரால் மழித்து விட்டேன். அவர் ஏற்கனவே உம்ராவுக்காக மொட்டை அடித்திருந்ததால், மிக குறைந்த முடியே இருந்தது. அதுவும் அன்று பார்பர் ஷாப்பில் மிகவும் கிராக்கியாக இருக்கும். அதனால், அவர் முடி மழித்ததும், மாமனாருக்கும் மழித்து விட்டார். பின் எல்லாரும் குளித்து, புத்தாடை உடுத்திக் கொண்டோம்.

எங்கள் ரூம்வாசிகள் தாங்களே ஆட்டுப்பண்ணைக்குச் சென்று குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் 2,3 ஆடுகளை தோலுரித்து, எடுத்து வந்திருந்தார்கள். அதை யார் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் கீழ் ஃப்ளோரில் இருக்கும் தமிழ்நாட்டுக்காரர்களான மேனேஜர்கள் சாதிக், தவ்ஃபீக் சகோதரர்களிடம் சென்று வெட்டுக் கத்தி வாங்கி வந்து, கொஞ்சம் இறைச்சியை வெட்டி எடுத்தோம். நானும் மச்சானும் சேர்ந்து, அதை துண்டுகளாக வெட்டி (அன்று கசாப்புகடைகாரர், சலூன்காரர் எல்லாம் நாங்களே) மூன்று பாகமாக பிரித்து, இரண்டு பாகத்தை பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டோம். ஒரு பாகத்தில் அன்று பிரியாணி சமைத்து, 2, 3 நாட்களுக்குப் பின் திருப்தியாக சாப்பிட்டோம்.

சிறிது ரெஸ்ட் எடுத்து மாலை, நாங்கள் ஹரமுக்கு சென்று தவாபும் சயீயும் முடித்துவிட்டு, பின் சைத்தானுக்குக் கல் எறிய செல்ல ப்ளான் போட்டோம். இப்போ, மாமனார், தவாபும் சயீயும் வீல் சேரில் தான் செய்ய முடியும். போன முறை உம்ராவுக்கே, அதற்கு 200 ரியால் கூலியாக கொடுத்தோம். இப்போ ஹஜ் சமயத்தில் இன்னும் கூடுதலாக கேட்பார்கள். வீல் சேர் விலையே 300 ரியால்கள் தான். எனவே ஒரு வீல் சேரே வாங்கிக் கொண்டால் நாமே தள்ளிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அப்படி வீல் சேரில் தவாப் செய்தால், ஹரமின் மாடியில் தான் செய்ய வேண்டும். அது மிகப் பெரிய சுற்றாக இருக்கும். மச்சான் வீல் சேர் தள்ளினால், நான் எப்படி தனியாக அந்த கூட்டத்தில் கீழே தவாப் செய்வது என்று கவலை ஏற்பட்டது. உடனே, எங்கள் ரூம்மேட்ஸ், காலிதும் யாஸரும், ‘நீங்கள் வீல சேர் வாங்கினால், அவருக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்’ என்று சொன்னார்கள். சும்மா சொல்லக் கூடாது, அவர்கள் வயதானவருக்கு சேவை செய்தால் நன்மை கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக, அதை ஏற்றுக் கொண்டார்கள்.

சரி வீல் சேர் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம். இப்போ எல்லாரும் ஹரம் செல்ல வேண்டும். சரி என்று ஈரோடு வாசிகள் எல்லாரும் ஒன்றாக போகலாம் என்று ஒன்றாக டாக்ஸி பிடித்தோம். அப்போ முஸ்தஃபா, தன்னிடம் உள்ள வீல் சேரை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றும், தன்னுடன் வந்திருந்த வயதான அம்மாவை, அடுத்த நாள் தவாப் ஜியாரா செய்வித்து விடுகிறேன் என்றும் சொல்லி அவர் வீல் சேரை எடுத்து வந்து கொடுத்தார். இல்லை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லியும், பிறகு வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள், இப்போது இதை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார்.

11 பேர் ஒரு குரூப்பாக சென்றதால், டாக்ஸிக்கு தலைக்கு 10 ரியால் தான் ஆயிற்று ஹரம் செல்ல. நாங்கள் மூன்று பேர் தனியாக சென்றிருந்தால் தலைக்கு 20 ரியால் கேட்டிருப்பார்கள். இப்படியாக நாங்கள் ஹரமை அடைந்ததும், சொன்னபடி காலிதும், யாஸரும் பொறுப்பேற்றுக்கொண்டு, அவரை வீல் சேரி தள்ளிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டனர். நாங்கள் கீழே காபாவின் அருகில் சுற்ற ஆரம்பித்தோம். 3 நாட்களில் எப்போ வேண்டுமானால் தவாப் ஜியாரா செய்யலாம் என்பதாலும், நாங்கள் சென்றது இரவு நேரம் என்பதாலும் கூட்டம் சற்று குறைவாகத்தான் இருந்தது. நாங்கள் சீக்கிரமே தவாபும் சயீயும் முடித்து விட்டோம். இப்போ, காலிதுடைய செல் நம்பருக்கு ஃபோன் செய்து அவர்கள் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்து அங்கு சென்றால் அவர்கள் இன்னமும் சயீ முடிக்காமல் சும்மா உட்கார்ந்து இருந்தார்கள். காரணம் கேட்டதற்கு, முஸ்தஃபாவின் தங்கை ஆனிஷாவால் நடக்கமுடியவில்லை என்று தள்ளிச்செல்ல சேர் வாங்கி சென்று விட்டனர் என்று கூறினார்கள்.

எங்களுக்கோ, ஒரே கோபம். ஆனிஷா இளவயதுக்காரர். இருந்தால் 27, 28 தான் இருக்கும். வீல்சேர் ஒன்று வாங்குகிறோம் என்று சொல்லியும் எங்களை வாங்க விடாமல் இப்போ இப்படி செய்து விட்டார்களே என்று மனவருத்தம். பிறகு காத்திருந்து, மாமனாரை சயீ செய்வித்து, கிளம்ப இரவு மணி 11.30 ஆகிவிட்டது. இப்போ நேராக மினா சென்று அதிகாலை பஜ்ரு தொழுகைக்கு முன் சைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். அப்படி எறியாவிட்டால் குற்றப் பரிகாரமாக ஆடு ஒன்று அறுத்து ‘தம்’ கொடுக்க வேண்டும். மினா செல்லலாம் என்று பார்த்தால், மீதி யாரையும் காணவில்லை. எல்லாரும் எங்கோ சென்று விட்டார்கள். சரி நாங்கள் தனியாக மூவரும் போய்விடலாம் என்று டாக்ஸி நிற்கும் இடத்துக்குப் போனோம்.

டாக்ஸி ஸ்டேண்டில் மீதி எல்லோரும் இருந்தார்கள். சரி என்று அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அன்று ரொம்ப கிராக்கி எல்லா டாக்ஸிகாரர்களுக்கும். வாய்க்கு வந்த பணம் கேட்கிறார்கள். நாங்கள் இரவு உணவுக்கு மதியம் செய்த பிரியாணியே பார்சலாக கையோடு கொண்டு வந்திருந்தோம். சரி மினா போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

முஸ்தஃபா ஏற்கனவே ஒரு முறை ஹஜ் செய்திருந்ததால், அவரே டாக்ஸி பிடிக்கட்டும் என்று விட்டு விட்டோம். இப்போ நாங்கள் மினாவில் ஜம்ரத் என்னும் சைத்தானுக்குக் கல் எறியும் இடம் போகணும். எல்லாரும் ஜம்ரத் என்று சொல்ல, முஸ்தஃபா மட்டும் எங்கள் லாட்ஜ் இருக்கும் இடமான அஜீஜியா என்று டாக்ஸிக்காரரிடம் பேசிவிட்டார். அது எங்களுக்குத் தெரியாமல் நாங்கள் ஜம்ரத் செல்வதாக நினைத்து ஏறி உட்கார்ந்து கொண்டோம். அது சரக்கு ஏற்றி செல்லும் வண்டி. பெண்கள் எல்லாம் உள்ளே அமர்ந்து கொள்ள பின்னாடி ஆண்கள் நின்று கொண்டார்கள்.

அஜிஜியா அருகில் சென்றதும் தான் தெரிந்தது, ஜம்ரத்துக்கு செல்லாமல் ரூமுக்கு வந்திருக்கும் விஷயம். எங்களுக்கோ பயங்கர கோபம். விடிவதற்குள் கல் எறிய வேண்டுமே. மணி வேறு இரவு ஒன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. டாக்ஸிக்காரன் எங்கள் லாட்ஜுக்கு வழி தெரியாமல், சுற்றோ சுற்றென்று சுற்றுகிறான். அரை மணி நேரம் சுற்றி மீண்டும் அதே இடத்துக்கு வருகிறான். எனக்கு டென்ஷன் ஏறுகிறது. ஏன் இப்படி பண்ணி விட்டீர்கள், லாட்ஜுக்குப் போவதாக சொல்லி இருந்தால் நாங்கள் தனியாகவாவது சென்றிருப்போமே என்று நான் கேட்டேன். அதற்கு அவர், லேடீஸ் எல்லாம் ரொம்ப டயர்டாக இருக்கிறார்கள், அதனால் அவர்களை இறக்கி விட்டு விட்டு போகலாம் என்று இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.

ஒரு வழியாக லாட்ஜ் மேனேஜருக்கு ஃபோன் செய்து, வழி கேட்டு கண்டுபிடித்தான் டிரைவர். நாங்கள் இங்கே இறங்க மாட்டோம் ஜம்ரத் செல்லணும் என்று சொன்னோம். அதற்கு இன்னொரு வாடகை தர வேண்டும் என்று அவன் கேட்க சரி விதியே என்று லாட்ஜுக்குப் போக தலைக்கு 15 ரியாலும் மீண்டும் ஜம்ரத் செல்ல தலைக்கு 10 ரியாலும் கொடுத்துத் தொலைத்தோம். என்ன செய்வது? மாட்டியாகிவிட்டது! இப்போ, எல்லா லேடீஸும் என்னைத் தவிர லாட்ஜில் இறங்கிக் கொண்டார்கள். ஆண்களில் முஸ்தஃபா மட்டும் இறங்கிக் கொண்டார். மீதி எல்லாரும் அவரவருடைய மனைவியிடம் அவர்களின் சார்பாக கற்களைப் பெற்றுக் கொண்டு எங்கள் டாக்ஸியிலேயே ஜம்ரத்துக்கு வந்தார்கள்.

சுமார் 2 மணிக்கு, இது தான் ஜம்ரத்; இங்கிருந்து நேராக சென்றால் ஜம்ரத் வரும்; இதற்கு மேல் வாகனம் செல்ல அனுமதி இல்லை என்று கூறி ஒரு இடத்தில் இறக்கி விட்டு சென்றான் டாக்ஸிகாரன். அது தான் ஜம்ரத்தா? என்ன குழப்பம் நேர்ந்தது, அடுத்த பதிவில்.

-சுமஜ்லா.

1 comment:

Anonymous said...

உங்கள் நிலையை வாசித்ததும் எனக்கே கோபம் வருகின்றது. அப்படியென்றால் அவ்விடத்தில் நீங்கள் எவ்வளவு தூரம் கோபப் பட்டிருப்பீர்கள் என்று என்னால் நன்கு உணர முடிகின்றது. நானும் வெளியில் சென்றால் மற்றவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து செல்வதை/ஏதாவது காரியம் முடிப்பதை கூடுதலாகத் தவிர்த்துக் கொள்வேன். அதன் மூலம் நிறைய அலைச்சல்களைத் தவிர்த்திருக்கின்றோம். இதனால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் நிறையக் குழப்பங்கள் வரும் பின் கூட்டாகச் சென்றவர்கள் அனுபவித்திருக்கும் அலைச்சல்களைக் கேட்டதும் என்னைப் பாராட்டுவார். எனக்குத் துளி கூடப் பொறுமை இல்லை (ஒரு பெண்ணுக்கு முக்கியமான ஒன்று.) ஆனால் திருமணத்தின் பின் கொஞ்சம் மாறியுள்ளேன்.

பல அலைச்சல்கள், அமைதியின்மைகளின் பின் தான் பல முக்கியமான காரியங்கள் நிறைவேறுகின்றன. இவை எல்லாம் இறைவன் எங்களுக்குத் தரும் சோதனைகள். பல சோதனைகள், அலைச்சல்களைக் கொடுத்துக் கடைசி நிமிடத்தில் நாமே எதிர்பார்க்கா வண்ணம் தன் விருப்பத்தை/எம் கடமைகளை நிறைவேற்றி வைப்பான். இது நான் என் வாழ்நாளில் அடிக்கடி அனுபவிக்கும் ஒன்று. எந்த ஒரு சிறு காரியமாக இருக்கட்டும் அல்லது பெரிய காரியங்களாக இருக்கட்டும் என்னை அலைய வைத்து, கோபப் பட வைத்து, அழ வைத்து "இனி என்னால் முடியவில்லையே இறைவா" என்று கெஞ்ச வைத்துப் பின் நான் எதிர் பார்க்காத சமயம் பார்த்து என் தேவையை நிறைவேற்றி வைப்பான். இது எல்லாம் அவனை நாம் விடாமல் நம்புகின்றோமா என்பதை சோதிப்பதற்காகவே தவிர வேறொன்றுமில்லை.

எந்தக் குழப்பம் நேர்ந்தாலும் இறையருளால் நீங்கள் சென்ற காரியத்தை நிறைவேற்றியிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

அன்புடன்
பிருந்தா