எங்கள் ரூம்மேட்ஸ் எல்லாம் முதல் நாள் ஆண்களிடம் கற்களை அடிக்கக் கொடுத்துவிட்டு ரூமிலேயே தங்கி விட்டார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரும் இப்போது டெண்ட்டுக்கு திரும்பிவிட்டிருந்தனர். அதில், காமிலாவிடம், நான் ஃப்ரிஜ்ஜில் இருந்த மீதி பிரியாணியை அடுப்பில் சூடுபடுத்தி கொண்டு வரும்படி சொல்லி இருந்தேன். அவர்களிடம் பிரியாணி கொண்டு வந்தீர்களா? என்று கேட்டேன். ”இல்லை அது அப்படியே தான் உள்ளது, இதோ உங்களுக்கும் சேர்த்து நாங்கள் கட்டிசாதம் செய்து எடுத்து வந்துள்ளோம்”, என்று கூறி எங்களுக்கு கொடுத்தார்கள். அதை சாப்பிட்டு பசியாறினோம்.
லுஹர் தொழுத பிறகு, சிறிது நேரம் மீண்டும் ரெஸ்ட் எடுத்து விட்டு, அஸர் தொழுகைக்கு பிறகு, நாங்களும், விருத்தாலத்துக்கார அம்மு ஃபேமிலியும் சைத்தானுக்கு கல் எறியப் போனோம். மாமு தன் கற்களை கொடுத்தனுப்பிவிட்டார். நானும் அம்முவும், எங்க குடும்பக் கதைகளை பேசிக் கொண்டே சென்று வந்ததில், எங்களுக்கு 4 கி.மீ நடந்த களைப்பே தெரியவில்லை. சுலபமாக கற்கள் அடித்து வந்துவிட்டோம்.
என்னுடைய சுடுநீர் வைக்கும் ஹீட்டரில், நான் சுடுநீர் வைத்து, பால் பவுடர் மற்றும் டீ பேக்ஸ் போட்டு, டீ வைத்து எல்லாருக்கும் கொடுத்தேன், மூன்று நாட்களும். அந்த ஹீட்டர் ரொம்ப உபயோகமாக இருந்தது. ஆனா, ப்ளக் பாயிண்ட் ரொம்ப உயரம். ஒருவர் தூக்கிப் பிடித்தபடி இருக்க வேண்டும். ஒரு எக்ஸ்டன்ஷன் கார்டு கொண்டு வந்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.
அன்று நாங்கள் டீ போடலாம் என்று, மச்சான் முஸ்தஃபாவின் மச்சான் காதரிடம் கொடுத்து பிடித்திருக்குமாறு சொல்லிவிட்டு, ஏறுவதற்கு, எங்கள் போர்ட்டபிள் சேரை எடுக்கப் போய்விட்டார். அதற்குள், காதர், அதில் தண்ணீர் ஊற்றாமலே, எம்பி, ப்ளக்கில் சொருகிவிட, ம்... அவ்வளவு தான் அதற்கு ஆயுசு முடிந்து விட்டது. மீண்டும் தண்ணீர் ஊற்றி என்னென்னவோ செய்து பார்த்தோம் ஒர்க் ஆகவே இல்லை. சரி போனால் போகிறது என்று விட்டு விட்டோம்.
இனி, கற்கள் அடிப்பது முடிந்தது, எனினும் அடுத்த நாளும் தங்கி அடிப்பது சிறப்பு. ஹஜ்ஜுக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம், இதில் ஒரு நாள் கூட தங்கினால் என்ன? என்று நாங்கள் அன்றிரவும் மினாவில் தங்க தீர்மானித்தோம். இருப்பவர் இருக்கலாம், போக நினைப்பவர் போகலாம். முஅல்லிமின் பஸ் டெண்ட் அருகேயே வந்தது. அதில் விருத்தாசலக்காரர்கள் ஏறிப் போய் விட்டார்கள். நாங்களும் முஸ்தஃபா குரூப்பில் 11 பேரும் இன்னும் பலரும் டெண்ட்டில் தங்கிக் கொண்டோம். எனினும் பாதி பேர் சென்று விட்டனர்.
அன்றிரவு, அவர்கள் தந்த கட்டி சாதமே இருந்தது. அதை சாப்பிட்டு உறங்கினோம். அடுத்த நாள் காலை நேரமே எங்கள் டெண்ட்டை சுத்தம் செய்ய ஆட்கள் வந்து விட்டார்கள். எங்களைக் காலி பண்ண சொன்னார்கள். நாங்கள் அங்கு கிடைத்த முட்டை ரொட்டியை வாங்கி சாப்பிட்டோம். எங்களுக்குத் தந்த போர்வைகளை ஸ்க்ரீன் கட்ட உதவும் என்று எடுத்துக் கொண்டோம். ஒரு 10 மணி சுமாருக்கு டெண்ட்டை விட்டு வெளியே வந்தோம்.
இப்போ லுஹரில் இருந்து சைத்தானுக்குக் கல் எறியும் நேரம் ஆரம்பிக்கிறது. கல் எறிந்து விட்டு ரூமுக்குத் திரும்பினால் அவ்வளவு தான் ஹஜ் முடிந்தது. இனி நம் ஆசைப்படி, தவாபும், உம்ராவும் நன்மைகளை சேர்க்கும் விதமாக, எப்போ முடியுதோ அப்போ செய்து கொள்ள வேண்டியது தான். செய்யாவிட்டாலும் பாதகமில்லை.
இன்று முஅல்லிமின் பஸ் வரவில்லை. நாங்கள் போக்குவரத்தை பிடிப்பதென்றால் 2 கி.மீ நடக்க வேண்டும். மேலும் ஒரு கி.மீ நடந்தால் ரூம் வந்துவிடும். மாமனாரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருந்தது. என்ன செய்வது? வாருங்கள் கொஞ்ச தூரம் நடந்து சென்று பஸ் பிடிக்கலாம் என்று சொல்லி அழைத்து சென்றேன், சைத்தானுக்குக் கல் எறியும் இடம் நோக்கி. மெதுவாக உட்கார்ந்து உட்கார்ந்து நடந்தோம்.
வழியில் பல நாடுகளின் டெண்ட்டுகளைக் காலி செய்து கொண்டிருந்தார்கள். அதில் இருந்த மீதியான குளிர்பானங்கள், பழவகைகள் மற்றும் உணவுப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். மாமனார் அவற்றை சந்தோஷமாக வாங்கி சாப்பிட்டுக் கொண்டே நடந்தார். எனக்கென்னவோ அவற்றை வாங்கப் பிடிக்கவில்லை. ஏதோ ஒரு ப்ரஸ்டிஜ் தடுத்தது. மாமனார், அவற்றை வாங்கும் போதெல்லாம், நானும் என் கணவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம். வயதாகி விட்டாலே குழந்தையாகி விடுகின்றனர்.
இன்னும் ஓரிரு பர்லாங் நடந்தால் சைத்தானுக்குக் கல் எறியுமிடம் வரும். ஆனால் லுஹருக்குப் பின் தான் அடிக்க வேண்டும். எனவே நிழலான ஒரு இடத்தில், நாங்கள் அமர்ந்து காத்திருந்தோம். சற்று நேரத்தில் பாங்கு சொல்லியதும் தொழுதுவிட்டு, ஒரு ஒன்னரை மணிக்கு மாமை அங்கேயே அமரச் செய்துவிட்டு, நாங்களிருவரும் கல் எறிய சென்றோம். அன்று பயங்கரக் கூட்டம். எல்லாரும் சீக்கிரம் கல் எறிந்து விட்டு, தமது லாட்ஜுக்குத் திரும்ப வேண்டும் என்ற அவசரத்தில் எல்லாரும் ஒரே நேரத்தில் வந்திருப்பதால், மிகுந்த நெரிசல்.
ஒவ்வொரு சைத்தானுக்கும் கற்கள் எறிந்து விட்டு, அடுத்த சைத்தானை நோக்கி முன்னேறுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஒரு வழியாக செய்து முடித்தோம். பின் மாமனார் இருக்கும் இடம் வந்து, அவரை அழைத்துக் கொண்டு, வாகனத்தைப் பிடிக்க சிறிது தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தோம். அங்கு, எந்த கார்களும் அஜீஜியா வர மாட்டேன் என்கிறார்கள். எனக்குத் தெரியும் அங்கிருந்து ஒரு கி.மீ தான் என்று. ஆனால் எங்கே நடக்க விட்டால், மாமனார் டென்ஷன் ஆகிவாரோ என்ற பயம். பழைய அனுபவத்தால் வந்த பயம்.
கார்காரர்கள் 150 ரியால் கேட்டார்கள். அதாவது ஒரு கி.மீ செல்ல, சுமார் 2000 ருபாய். நாங்கள் 50 ரியால் தருவதாக சொன்னோம். ம்...ஹூம். யாரும் வருவதாக இல்லை. சிறிது நேரத்தில் எந்த கார்காரரையும் காணவில்லை. 200 ரியால் கொடுத்தால் கூட வர ஆளில்லை. குகைப்பாதை தாண்டினால் அஜிஜியா. வலது புறம் இரண்டு குகைகளும் இடது புறம் இரண்டு குகைகளும் இருந்தன. எனக்கு எந்த குகை என்று தெரியாமல், நாங்கள் மாமனாரை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, இடது புறக் குகை நோக்கி சிறிது தூரம் நடந்து பார்த்தோம். கேட்டறியலாம் என்றால் யாருக்கும் பாஷை தெரியவில்லை.
மீண்டும் திரும்பி வந்து, காலிதுக்கு போன் செய்து, விவரம் கேட்டோம். அவருக்கு வழி தெரியும். எனினும், வலது குகையா, இடது குகையா என்று கேட்டால் எப்படி? நாங்கள் எங்கே நிற்கிறோம் என்று எப்படி அவர்களுக்குத் தெரியும்? மஸ்ஜிதே கைஃப் என்னும் மசூதி இருக்கும் திசையில் இருக்கும் குகை என்று அவர் கூறினார். அப்போ வலது புறக் குகை. நல்ல வேளை நாங்கள் இடது புறம் செல்ல இருந்தோம். மீண்டும் திரும்பி, நடக்க ஆரம்பித்தோம்.
குகை ஒரு அரைக் கிலோமீட்டர். தாண்டியதும், வழி நன்றாக தெரிந்து விட்டது. நேர் ரோடு. சிறிது நின்று நின்று மாமுக்கு ஆறுதல் சொல்லியபடி, நடந்து சிக்னல் தாண்டி வந்ததும், வலது புறம் திரும்பினால் எங்கள் லாட்ஜ். எங்கள் லாட்ஜ் இருக்கும் ரோட்டின் கார்னரில் நின்று நான் எடுத்த போட்டோ பாருங்கள். தூரத்தில் தெரியும் குகை தாண்டினால் மினா. இப்படத்தைப் பெரிது படுத்திப்பார்த்தால், மினா, ரியாத், முஜ்தலிஃபா மற்றும் அரஃபா செல்வதற்கான போக்குவரத்துக் குறிகள் தென்படும்.
நாங்கள் அலுத்து சலித்துப் போய் ரூம் வந்ததும், விருத்தாசலத்துக்காரர்கள் எங்களுக்கு உணவு தயாராக வைத்திருந்தார்கள். மணி மதியம் மூனரை இருக்கும். பயங்கர பசி. வெள்ளை சாதமும், கருவாட்டு குழம்பும் அமிர்தமாக இருந்தது. அதுவும் வந்ததும், எங்களுக்கு சில்லென ஸ்ட்ராபெரி ஜூஸ் கொடுத்ததை மறக்கவே முடியாது. மினாவில் நான் எல்லாருக்கும் டீ போட்டுக் கொடுத்ததை ஞாபகம் வைத்து, எங்களை உபசரித்து விட்டார்கள்.
நானும் அதை மறக்காமல், அவர்கள் மற்றும் ஒருநாள் விடிய விடிய ஹரமில் இருந்து விட்டு வந்த அன்று, குஸ்கா, கோழி குருமா செய்து கொடுத்து என் நன்றிக் கடனை தீர்த்துக் கொண்டேன். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தானே, நம் வாழ்வை சுவையாக்குகிறது.
அவ்வளவு தான் அலைச்சல் எல்லாம். ஹஜ் முடிந்தது. நாங்கள் ஹாஜியாகிவிட்டோம். இனி நடந்த ஒரு சில சுவையான சம்பவங்களை நான் எழுதுகிறேன்.
-சுமஜ்லா
3 comments:
நம்மவர்களிடம் (தமிழர்கள்) உள்ள சிறப்பு விருந்தோம்பல் தான். தவித்த வாய்க்குத் தண்ணி தருவது தமிழர் குணம். இதை நாம் வெளிநாட்டவர்களிடம் (வெள்ளையர்களிடம்) எதிர் பார்க்கவே முடியாது. ஒருவர் நிலை அறிந்து அவர்களுக்கு வயிறார உணவு அளித்து மகிழ்வதில் எம்மவர் சிறந்தவர்கள் என்று இக்கணத்தில் கூறிக்கொள்வதில் மெருமிதம் அடைகின்றேன். மற்றும் செய்நன்றி மறவாமல் தக்க தருணத்தில் உதவுபவர்களும் நாமே தான்.
நம் நாட்டை விட்டுப் பிரிந்து வந்து வெளிநாட்டில் நாம் எமது வாழ்க்கையை எப்படி மாற்றி வாழ்ந்தாலும் இவ்விடயத்தில் எம்மவர்கள் அப்படியே தான் உள்ளனர் என்பதை நாம் பல இடங்களில் அவதானித்திருக்கின்றேன். அதனையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்திருக்கின்றேன்.
அன்புடன்
பிருந்தா
பெரியவர்களை அழைத்துக்கொண்டு ஹஜ் சென்று திரும்ப மிக்க பொறுமை வேண்டும்.அதற்கான நல்ல பலனை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக!ஒவ்வொரு சூழ்னிலையும் வெளிப்படையாக விளக்கி எழுதி இருப்பது பாராட்டத்தக்கது.
ஆம் பிருந்தா,
நாம் ஒருவருக்கு உதவி செய்தால் நமக்கு ஒருவர் உதவி செய்வார் தக்க தருணத்தில் என்பது பல நேரங்களில் நாம் பார்க்கலாம். அது அவராகவோ, அல்லது வேறொருவராகவோ கூட இருக்கலாம்.
ஆசியா அக்கா, நீங்கள் சொன்னது போல ரொம்ப பொறுமை வேண்டும். நான் நடந்ததை நடந்தபடி முழு உண்மைகளைத் தான் கூட்டாமல் குறைக்காமல் எழுதி வருகிறேன்(ஒரு சில அந்தரங்க விஷயங்களைத் தவிர்த்து).
இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள.
-சுஹைனா.
Post a Comment